|
நக்கீரர் கவித்திறன் |
   |
- | ஜூலை 2025 |![]() |
|
|
|
 |
'நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே' என்ற தமிழ்ப்பெருமகனார் நக்கீரர் என்று தமிழ்மக்கள் அறிந்துள்ள அளவு அவருடைய செய்யுட்களின் திறனை அறிந்திலர் என்று கூறுவது புனைந்துரை ஆகமாட்டாது. நக்கீரர் திருமுருகாற்றுப்படையே யன்றியும் நெடுநல்வாடை போன்ற அரிய தொடர்நிலைச் செய்யுட்களை இயற்றியவர் என்பதையும் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை முதலிய தொகைநூல்களில் வரும் அருமையான செய்யுட்கள் சிலவற்றின் ஆசிரியர் என்பதையும் இன்னும் பலர் அறிந்துகொள்ளவில்லை. காரணம், நக்கீரருடைய நயமுடைய செய்யுட்கள் எளிய நடையில் யாவருக்கும் விளங்கக்கூடிய முறையில் அதிகமாக எடுத்து விளக்கப் படாமையே ஆகும்.
நக்கீரர் இக்காலப் பொதுவுடைமையர் கருத்தை யொத்த கருத்தினை ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே இயம்பிவிட்டார். உலகில் மக்களாய்ப் பிறந்தார் எல்லாம் ஒத்தவர்கள் என்ற கருத்தினையும் அவரவருக்கு இயன்ற வகையில் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டுமென்பதையும், அவரவருடைய தேவைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் பொருள்கள் கிடைக்கப்பெறுதல் வேண்டுமென்பதையும் நக்கீரர் அன்றே அறிந்திருந்தார். பேரரசு நடாத்திய பெருமையுடையோருக்கும் உறக்கமின்றித் தொழிலை உன்னிப்போடு செய்த தொழிலாளருக்கும் உண்பதற்கு நாழி அரிசியும் உடுப்பதற்கு இரண்டு உடுப்பும்தானே தேவை எனக் கேட்டார் அவர். மற்றன எல்லாம் ஒக்குமல்லவோ என்றார். நாமே அனைத்தையும் தின்று உடுத்தித் துய்த்து மகிழ்வோம் என்று உள்ளவர்கள் உலகில் இழக்கின்றவை பலவல்லவோ என்றார். இக்கருத்து அவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றிற் காணப்படுகிறது.
அவர் காலத்தில் வாழ்ந்த மக்களது செல்வச்செழிப்பினையும் அவர் சிற்சில பாடல்களில் உணர்த்தியுள்ளார். எடுத்துக்காட்டாக அகநானூற்றில் வரும் பாடல்களைக் குறிப்பிடலாம். அச்செய்யுட்களில் ஒன்றனுள் அவர் பாண்மகள் ஒருத்தியைப் பற்றிய சொல்லோவியம் தந்துள்ளார். அவள் தன்னுடைய தந்தையார் காலைநேரத்திற் பிடித்து வந்து தந்த பெரிய கொம்பினையுடைய வாளைமீனை விற்கச் செல்கிறாள் என்றும், விற்ற வகையில் கிடைக்கவேண்டிய பணத்தைப் பெருந்தொகையாக்கிப் பெறுகிறாள் என்றும் அவர் கூறியுள்ள கருத்திலிருந்து பல்வேறு இனக்கருத்துக்கள் கிளைக்கின்றன. அவளோ அழகிய சொற்களைச் சொல்லும் பாண்மகள். அவள் தெருவே செல்லும்பொழுது அவள் உந்தி தெரியும்படி ஆடை சரிந்து கிடக்கிறது. அவ்வுந்தியின் அழகிலிருந்து அவள் அழகினை ஓர்ந்துகொள்ளுதல் கூடும். அவள் செல்லும் தெருவோ நீண்ட கொடிகள் அசையும் பெரிய தெரு. அந்தத் தெருவில் கள் விற்போர் நிறைய உண்டு. அந்தத் தெரு வழியே செல்கிறவள் வாளை மீனை விற்றுக் கள்ளைக் கொள்ள விரும்பாமல் மேலே கடந்து செல்கிறாள் என்ற குறிப்பு பாட்டின்கண் உள்ளது. அத்தெருவிற் பழைய செந்நெல்லைக் குவித்து நிறைய வைத்திருப்பவர்கள் உண்டு. அவர்களிடம் வாளைமீனை விற்று நெல்லைத் தன் அன்றைய தேவைக்கு என வாங்காமல் திரும்புகிறாள் என்ற குறிப்பும் இங்கே இருக்கிறது. அதனால் அவள் இயல்பாகவே செல்வம் ஓரளவுடைய குடி ஒன்றினைச் சார்ந்தவள் என்பதும், அன்றன்றைய தேவைக்கு நெல்லைப் பெற்று வரவேண்டிய நிலையில் உள்ளவள் அல்லள் என்பதும் குறிப்பிக்கப்படுகின்றன. இவற்றிற்கு மாறாக அவள் அரும்பெறல் முத்துக்களைப் பெற்றுத் திரும்புகிறாள். ஒவ்வொரு முத்தின் விலையோ அதிகம். எனினும், ஒரு முத்தைப் பெறுதற்குரிய அளவு வாளைமீனை அவள் நாடோறும் விற்கவில்லையாயினும், சில நாட்கள் வாளைமீனை ஒரே வீட்டிற் சேர்த்து சேர்த்துக் கொடுத்துப் பணத்தை நிறுத்தி வைத்திருக்கிறாள். ஆதலால், சில நாட்கள் கழித்துப் பிற்பாடு முத்துக்களோடு நல்ல அணிகலனைப் பெறக்கூடிய அளவிற் சேமிப்பு செய்யக் கூடியவாறு தகுதியும் மனவுறுதியும் அவள் உடையவள் என்பது எத்துணை நயம்படக் கவிஞர் நக்கீரராற் காட்டப்பட்டுள்ளதென்பது அடியில் வரும் அகநானூற்றுப் பகுதியால் தெரியவரும்:
"............................................................தன்ஐயர் காலைத் தந்த கனைக்கோட்டு வாளைக்கு அவ்வாங்கு உந்தி அஞ்சொற் பாண்மகள் நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி மறுகிற் பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள் கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம் பயங்கெழு வைப்பு............................"
சில சொற்களாற் பல அரிய கருத்துக்களைப் பெருங்கவிஞர்கள் அமைத்துத் தந்துவிடுவார்கள் என்பதன் உண்மை இப்பாடற் பகுதியால் நன்கு விளங்குகிறது. "அவ்வாங்கு உந்தி அஞ்சொற் பாண்மகள்" என்ற சில சொற்களால் ஓர் அழகிய, தேனூறுஞ் சொல் பேசுகின்ற ஒரு வடிவத்தை நம் கண்முன்னே கவிஞர் உருவாக்கி விட்டார். "நெடுங்கொடி நுடங்கும் மறுகு” என்றமையால் இன்னின்ன பொருள் இந்த இந்தக் கடையில் விற்கப்படுகிறது என்பதை விளக்கிக்காட்டும் பெருந்தெரு ஒன்றனுள் அவள் செல்கிறாள் என்பது குறிக்கப்பட்டுள்ளது. “நறவு மறுகில்” என்றமையால் பலர் தாளாற்றிய பொருள் கொண்டு கள் குடித்துச் சென்றார்கள் ஆக, அவள் உரநெஞ்சுடன் அக்கடைகளுள் எதனையும் எட்டிப்பாராமல் நெடுகச் சென்றாள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. "பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளா" என்று கூறிய வகையால் நகர மாந்தரின் செல்வச் செழிப்பும் பற்றாக்குறையின்மையும் எடுத்து இயம்பப்பட்டது. கழங்கினை ஒத்த ஆணிமுத்துக்களையும் நல்ல அணிகலன்களையும் அவள் பெறக்கூடிய அளவு பயன் நிரம்பிய ஊர் அது என்பதை எவ்வளவு இனிமையாக இப்பகுதியினுள் இக்கவிஞர் மொழிந்துள்ளார் என்பதை நினைத்து நினைத்து இன்புறுதல்கூடும்.
அக்கால மக்கள் எதற்காக உடலுழைப்பு உடையவர்களாக இருந்தார்கள் என்பதை இவர் ஒரு பாட்டில் விளக்கி உள்ளதை நாம் இன்றும் கண்டு பின்பற்றிச் செயலாற்றுதல் கூடும். ஒருவர் தொழிலைச் செய்வது எதற்தாக? உறவினர்கள் வறுமை உடையவர்களாய் இருப்பின், அவர்களுடைய வறுமையைப் போக்கி அவர்களைத் தாங்கும் பொருட்டும், உற்றார் உறவினர் குடும்பத்தார் அனைவரும் வயிறார உண்ணும்பொருட்டும், நட்பும் பகையும் கொள்ளாமல் நொதுமலராய் உள்ளவர்களைத் தன்வயப்படுத்தி நண்பர்களாக ஆக்கிக் கொள்ளும்பொருட்டும் ஒருவர் பொருள் ஈட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தினை அகநானூற்றுச் செய்யுள் ஒன்றனுள் அமைத்து அவர் பாடியுள்ளார்.
அப்பாட்டினுள் தலைவி ஒருத்தியது நெற்றியின் மணத்திற்கு உவமையாக அவர் கூறியதொன்று நினைக்கத்தக்கது. பகல் அங்காடியின் நறுமணம் போல அவள் நுதல் மணம் இருந்ததென்று குறிப்பிட்டுள்ளார். பாண்டிய மன்னனுடைய மதுரையம்பதியிலுள்ள நாளங்காடியின் நறுமணம் போல அவள் நெற்றியின் விரை உள்ளது என்று கூறியிருப்பதன் மூலம் எவ்வளவு துப்புரவாக அங்காடி வீதியை அக்காலத் தமிழக மக்கள் பேணினர் என்பது எண்ணத் தக்கது.
நெடுநல்வாடையில் ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களாகிய கூதிர்காலத்தைப் பற்றி இக்கவிஞர் வருணித்துள்ள பகுதி இன்றும் ஒத்திருக்கக் காண்கிறோம். பெரும்பனி நலிய வாட்டுதலையும், பலர் கொள்ளிக்கட்டை கொண்டு தீக்காய்வதையும், மக்களுடைய தாடை புடைத்துக்கொண்டு அடித்துக்கொள்வதையும், விலங்குகள் மேய்ச்சலைக்கூட மறந்து கிடப்பதையும், பறவைகள் செயலற்று மடிந்து வீழ்வதையும், கறவைப்பசுக்கள் கன்றுகள் முட்டிப் பால் கொள்வதைத் தவிர்க்க முற்படுவதையும் கவிஞர் அழகுற எடுத்து இயம்பியுள்ளர். குன்றே குளிர்ந்து வந்தால் ஒத்த கூதிர்காலம் அது என்று இவர் கூறியுள்ளார். அப்பகுதி நேரிற் கண்டு இன்புறத்தக்கது. தலைவனைப் பிரிந்துள்ள தலைவி தன் பிரிவுத் துயரால் வருந்துகிறவளுடைய கண்களிலிருந்து தோன்றும் நீர்த்துளிகளைச் செவ்விய விரல்களால் அழித்துத் தெறிக்கின்ற நிலையையும், செயல் மேற்கொண்டு வினைக்களம் சென்றுள்ள தலைவன் நள்ளிரவிலும் பள்ளி கொள்ளாமல் ஆர்வத்தோடு செயலாற்றிய திறத்தினையும் கவிஞர் வருணித்துள்ள விதத்தை நெடுநல்வாடை நூலைக் கொண்டே அறிதல் வேண்டும்.
நக்கீரர் செய்யுட்களைப் படிக்கப்படிக்கத் தமிழின்பத்தில் ஒருவர் திளைப்பர் என்பது திண்ணம்.
(டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் எழுதிய 'செங்கோல் வேந்தர்' என்ற நூலில் இருந்து) |
|
டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் |
|
|
|
|
|
|
|