கலிஃபோர்னியாவில் உள்ள கலாஞ்சலி இந்திய நடனப்பள்ளியின் நிறுவனரும் இயக்குனருமான கேத்தரைன் குஞ்ஞிராமன் அவர்கள் இந்தியக் கலைகள்மேல் கொண்ட ஆர்வம், அவரை 'கலாஞ்சலி இந்திய நடனப் பள்ளி'யைத் தொடங்க வைத்தது. கணவருடன் சேர்ந்து அவர் கலாஞ்சலி இந்திய நடனப் பள்ளியை துவங்கி ஐம்பது வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. நடனப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயின்று வரும் நிலையில் அதைக் கொண்டாடும் வகையில் இதோ அவர்களுடன் ஒரு நேர்காணல்:
★★★★★
கே: வணக்கம். உங்கள் கலாஞ்சலி நடனப்பள்ளி பொன்விழா காணுகிறது. அது எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள்? பதில்: மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். பல்வேறு விதமான கலை அனுபவங்களுடன் நீண்ட காலப் பயணத்திற்குப் பிறகு என் அனுபவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இயக்குநர்களும் நிறுவர்களுமான என் கணவர் குஞ்ஞிராமனும் நானும் மிகவும் வித்தியாசமான பின்னணிகளைக் கொண்டவர்கள். எனினும், உலகின் மறுபுறத்தில் ருக்மணிதேவி அவர்களின் கலாக்ஷேத்ராவின் தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரே கனவின்மூலம் நாங்கள் ஒன்றிணைந்தோம்.

கே: தங்களுக்கு இந்தக் கலையில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது? ப: என் பள்ளி நாட்களில் எனது ஆர்வம் மற்றும் பின்னணி நாடகத்துறையிலேயே இருந்தது. மேலும், பழமையான வரலாறு, மதம், ஆடை வடிவமைப்பு, நுண்கலைகள் ஆகியவற்றில் எனக்கு ஆர்வம் இருந்தது, இப்படி எல்லா ஆர்வங்களும் இந்தியப் பாரம்பரிய பரத நாட்டியத்தில் நிறைவேறியதை நான் கண்டேன்.
கே: தாங்கள் எப்போது இந்தியாவிற்குச் சென்றீர்கள்? உங்கள் குடும்பம் உங்களது கலையார்வத்தை அனுமதித்ததா? ப: பதினெட்டாவது வயதில், என் குடும்பம் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தது, அப்போது ஃபோர்டு அறக்கட்டளையின் இந்திய அரசுத் திட்டத்தில் வேலை செய்யச் சென்றோம். இந்தியாவை அடைந்த சில நாட்களுக்குப் பிறகு நான் கண்ட நடன நிகழ்ச்சியே எனக்கான சரியான பாதையைக் கண்டுபிடிக்க உதவியது. இது ஒரு தற்காலிக ஆர்வமாக இருக்கும் என என் குடும்பத்தினர் எண்ணினர். ஏனெனில் அதற்கு முன்பே பல்வேறு ஆர்வங்கள் எனக்கு இருந்தன. என் ஆரம்ப ஆண்டுகளில் எனக்கு எகிப்தியவியல், மறுமலர்ச்சி இசை, அனைத்து வகையான கலைகள், மத்தியக் கிழக்கு கலாச்சாரம் போன்ற பலவற்றில் ஆர்வம் இருந்ததால், இதுவும் ஒரு தற்காலிக ஆர்வம் என்று குடும்பத்தினர் நினைத்தனர். இது பல வருடங்கள் தொடர்ந்தபோது அவர்கள் சிறிது கவலைக்கு உள்ளானார்கள்.
என் தந்தை ஒரு புகழ்பெற்ற வணிகரீதியான ஓவியர். அவர் வடிவமைத்த புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்று 'மிஸ்டர் கிளீன்'. பின்னர் 'அமெலியா பெடெலியா' புத்தகங்களின் முதல் மூன்று பகுதியையும் படமாக வரைந்தார்.
கே: எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசித்தீர்கள்? பரதக் கலையை எங்கு கற்றீர்கள்? ப: நாங்கள் மூன்று வருடங்கள் கொல்கத்தாவில் வாழ்ந்தோம். முதலில் தனிப்பட்ட வகுப்புகளில் பயின்றேன், பின்னர் ரபீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். குடும்பம் டெல்லிக்கு மாறியதும், நான் சென்னைக்குச் சென்று கலாக்ஷேத்ராவில் சேர்ந்தேன். அங்குதான் நான் குஞ்ஞிராமனைச் சந்தித்தேன். பின்னர் தனஞ்சயன் சொந்தமாக 'பரத கலாஞ்சலி' என்ற நடன குழுவைத் தொடங்கியபோது, அவர்களுடன் நான் ஆறு ஆண்டுகள் தங்கிப் பயின்றேன். இந்த அனுபவமே பின்னர் சொந்த நடனப்பள்ளி மற்றும் நடனக் குழுவைத் தொடங்க எனக்கு வித்திட்டது.

கே: தங்களுடைய நடனக் கல்வி பயிலும் அனுபவம் எப்படி இருந்தது? உங்களுடைய குருக்கள் உங்களை எப்படி நடத்தினார்கள்? ப: இந்தியப் பாரம்பரியக் கல்வியில், என் ஆசான்கள் அனைவரும் மிகவும் கண்டிப்பானவர்கள், எனினும் அவர்கள் என் பெற்றோரைவிட அதிக ஊக்கமும் ஆதரவும் வழங்கினர். சிலர் கலாக்ஷேத்ராவை பயங்கரமான நிறுவனம் என்று சொல்வார்கள், "இது உன்னை உருவாக்கவோ, உடைக்கவோ செய்யும்" எனக் கூறுவர். என்னைப் பொறுத்தவரையில் அது என்னை உருவாக்கியது!
சென்னை நகரில் நான் ஒன்பது ஆண்டுகள் வசித்தேன்; முதலில் விடுதி மாணவியாக, பின்னர் என் ஆசான்களின் பள்ளியில் மாணவியாக, திருமணத்திற்குப் பிறகு நடனம் பயிற்றுவிக்கும் தாயாக. கலையை வாழ்க்கைப் பணியாக மாற்ற முடியும் என்ற உறுதிப்பாடு எனக்கிருந்தது. ஒரு ஆசிரியராகவும், கலைஞராகவும் வாழமுடியும் என்பதில் என் மனதில் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை
கே: அரங்கேற்றம் எப்பொழுது நடந்தது? ப: என் அரங்கேற்றம் 1969ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்றது. அது பாரத கலாஞ்சலியின் முதல் அரங்கேற்றமாக இருந்தது. தனஞ்செயன் அவர்கள் எனக்காக எல்லாவற்றையும் எடுத்துச் செய்தார். எனது பிரசுரத்திற்கான புகைப்படங்களை அவரே எடுத்தார்; அவை என் வாழ்க்கையின் சிறந்த படங்களாக அமைந்தன. அக்கா (சாந்தா தனஞ்செயன்) எதிர்காலத்தில் என் சந்ததியினருக்குச் சரியாகக் கற்பிக்க வேண்டும் என்பதற்காக எனக்கு கவனமாகக் கற்பித்தார். ஐரோப்பாவில் இருந்த ருக்மணி தேவியைத் தவிர, முழு கலாக்ஷேத்திரமும் மெட்ராஸ் மியூசியம் தியேட்டரின் 19ஆம் நூற்றாண்டு பெஞ்சுகளில் அமர்ந்திருந்தது நினைவில் இருக்கிறது. அதன் பிறகு, செய்தித்தாள்கள் நிகழ்ச்சியைப் பற்றிச் சாதகமாக எழுதியபோது, அமெரிக்கத் தூதரகம் என்னைத் தென் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நிகழ்ச்சி நடத்த அனுப்பியது. அடையாறு கே. லக்ஷ்மண் போன்ற அற்புதமான கலைஞர்கள் உட்பட அதே இசைக் குழுவினரும் தனஞ்செயன் அவர்களும் எங்களுடன் வந்தார்கள்! அது ஒரு மகத்தான வெற்றி. எனது கலைப் பயணத்திற்கு ஒரு மங்களகரமான தொடக்கம்!
கே: உங்கள் திருமணம் மற்றும் பரதம் மற்றும் கதக்களி நடனத்தில் சிறந்து விளங்கிய குஞ்ஞிராமனைப் பற்றி… ப: குஞ்ஞிராமனுக்கும் எனக்கும் 1970 ஆகஸ்டில் ஒரு நண்பரின் வீட்டில் பாரம்பரிய கேரள முறையில் எளிய திருமணம் நடந்தது. எங்கள் வாழ்க்கை எப்பொழுதும் நடனத்திற்கே முக்கியத்துவம் அளித்தது. 1970 முதல் 2014ஆம் ஆண்டு என் கணவர் மரிக்கும்வரை பல சவால்களைச் சந்தித்தோம். ஆனால் இருவரும் ஒரே குரலில் பேசுவோம்.
கலாஞ்சலி என்றால் கடின உழைப்பு, 1975ஆம் ஆண்டு முதல் இன்றுவரை!

கே: ஓ! கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள். ப: 1977ஆம் ஆண்டு முதல் கலாஞ்சலியுடன் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தோம். கலாக்ஷேத்ராவின் மூத்த கலைஞரான குஞ்ஞிராமன், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மதிப்புமிக்க விழாக்கள் மற்றும் நாடகங்களில் பங்கேற்றுள்ளார். இங்கு வந்து மறுபடியும் தொடங்குவது என்பது அவரளவில் ஒரு பெரிய தியாகமாகும். அவர் வந்த மூன்றாம் நாளே எங்கள் முதல் நிகழ்ச்சிக்கு மிகவும் புரிதலுடனும் அன்புடனும் என்னுடன் வந்தார். நாங்கள் அமெரிக்கா முழுவதிலும் நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகளை நடத்தினோம். கற்பித்தல் எங்கள் வாழ்க்கை முறையாக மாறியதால், நாங்கள் பெரும்பாலும் மூத்த மாணவர்களை எங்கள் நிகழ்ச்சிகளில் சேர்த்துக் கொண்டோம்.
1977இல் 'சான் பிரான்சிஸ்கோ பாரம்பரிய நடன விழா'வின் முதல்நாள் மாலை, கலாஞ்சலியின் கதக்களி நிகழ்ச்சிக்காக மேடையின் மையத்திற்கு எரியும் திரியுடன் கூடிய பெரிய வெண்கல விளக்கை நான் சுமந்து செல்வதன் மூலம் தொடங்கியது. மேலும் விழாவில் எங்கள் மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்தினோம்.
கலாக்ஷேத்ராவில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் பணியாற்றிய குஞ்ஞிராமன், இந்தியா தவிர, ஆஸ்திரேலியா, ஃபிஜி, சிங்கப்பூர், கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பா முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தினார். 1975 ஆம் ஆண்டு நான் அமெரிக்கா திரும்பியதும், லெபனான், எகிப்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தினேன்.
முதல் சில ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு குளிர்காலத்திலும் அவர் கலாக்ஷேத்ராவின் வருடாந்திர விழாவில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார், 1985ஆம் ஆண்டு பொன்விழா உட்பட, ராமாயணத் தொடரில் தசரதன், குஹன், விஸ்வாமித்திரர், ராவணன் போன்ற தனது பழைய வேடங்களில் மீண்டும் தோன்றினார். 2014இல் 'வாழ்நாள் சாதனையாளர்' விருதைப் பெற்றோம். குஞ்ஞிராமன் நிகழ்ச்சியை நடத்த நியமிக்கப்பட்டார், ஆனால், எண்பது வயதை எட்டிய பிறகு ஓய்வுபெற்று இந்தியாவிலிருந்து திரும்பி வருவதற்குச் சற்று முன்பு அவர் இறந்தார்.
கே: வரும் தலைமுறைக்கு கூறும் அறிவுரை என்ன? ப: எந்த நேரத்திலும் நாம் இந்தியப் பாரம்பரியத்தை கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். ஒரு மேடையில் நடனமாடுவதைவிட அதிக முக்கியத்துவம் எதற்கென்றால், நம் கலாச்சாரத்தைப் பாதுகாத்துக் கொண்டுசெல்லக் கூடிய தூதராக விளங்குவதே! அதற்கு உங்கள் ஆர்வம் சிறப்பாகத் தொடர வேண்டும், இந்தியாவின் பாரம்பரியக் கலாச்சாரத்தையும் மேற்கத்தியக் கலாசாரத்தையும் புரிந்துகொள்ளும் அறிஞராக மாறுங்கள் என்பதே என் அறிவுரை.

கே: அந்த காலக் கற்றலுக்கும் இன்றைய குழந்தைகள் பரத நாட்டியம் கற்பதற்கும் என்ன வித்தியாசம்? ப: விஷயங்கள் எவ்வாறு மாறிவிட்டன என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தியாவிலும் வெளிநாட்டிலும், மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகள் உள்ளன, அதனால் 'நாட்டியம்' பெரும்பாலும் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை என்று குறைக்கப்படுகிறது. எங்கள் நாட்களில், முழுநேர நடன மாணவர்களுக்கு தினந்தோறும் பல வகுப்புகள் நடத்தினோம், பகுதிநேர மாணவர்கள் மதியம், வாரத்தில் 5 நாட்கள் வந்தனர். "நான் உன்னை மீண்டும் பார்ப்பதற்கு முன்பு இந்த அடியை நூறு முறை பயிற்சி செய்!" என்று ஆசிரியர் சொன்னால், குழந்தைகள் கீழ்ப்படிந்து செய்வார்கள். கலாக்ஷேத்திராவின் தீவிரப் பயிற்சி 'ஒருவித நடனக் கலைஞராக' உங்களை மாற்றிவிடும்! எல்லோரும் கலைஞராகிவிட முடியாது, ஆனால் அனைவரும் முயற்சி செய்வது நல்லது! அதை நேசிக்கக் கற்றுக்கொள்வது, அது என்ன என்பதை அறிந்து கொள்வது, இந்திய கலாச்சாரத்தின் தொன்மையைப் புரிந்துகொள்வது, அதில் உள்ள அறிவியல் - இவைதான் பாடம்! நீங்கள் மேடையில் நடனமாடி, கலைக்கும் உங்கள் முயற்சிகளுக்கும் பெருமை சேர்க்க முடிந்தால் நல்லது, ஆனால் அதுமட்டும் போதாது, அதற்கும் மேலும் இருக்கிறது.
கே: அரங்கேற்றத்தை பற்றி தங்கள் கருத்து… ப: எங்கள் அனைத்து அரங்கேற்றங்களிலும் பார்வையாளர்களிடம் நான் சொல்வது போல், "இந்தச் சான்றிதழ் நடனத்தை நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ மாற்றாது, கலையில், நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் விளைவாகும்." ஓர் அரங்கேற்றத்தின் மூலம், ஒரு மாணவரின் பலவருடப் படிப்பு, பலமாதத் தீவிரப் பயிற்சியின் விளைவைப் பகிர்ந்து கொள்கிறார். ஆர்வம் முற்றிலும் மங்கிவிடாது.
கே: பரத நாட்டியத்தில் தொடர விரும்பும் இளைய தலைமுறைக்கு நீங்கள் என்ன பரிந்துரைப்பீர்கள்? ப: பல கல்லூரிகளில் இப்போது பரதநாட்டிய கிளப்புகள் உள்ளன. எனவே, அரங்கேற்றம் என்பது ஒரு கொண்டாட்டம், ஒரு திருப்புமுனையை விட அதிகம். அது இல்லாமலும் நடனத்தைத் தொடரலாம். மிக முக்கியமாக, தொடர விரும்புவோர் அமெரிக்காவின் தொலைதூர மூலையில் சில வகுப்புகளைத் தொடங்கலாம். கர்நாடக இசையையும், கவிதைகளையும் காட்சிப்படுத்த நாம் பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான முத்திரைகளின் பயன்பாடுகளையும் படிப்பது பயனுள்ளதாக இருக்கும். இந்தியப் பாரம்பரிய நடனம் குறைந்தது 50 சதவிகிதம் நாடகத்தைத் தழுவியே இருக்கும். நாடகப் பள்ளி மாணவர்கள் அதை முயலவேண்டும். பண்டைய இந்தியக் கலாச்சாரத்தின் தூதர்களாக உங்களை வளப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த மேற்கத்திய கலாச்சாரத்திலும் இந்தியக் கலாச்சாரத்திலும் ஆழ்ந்த அறிவு கொண்டிருங்கள். |