| பரதநாட்டியம்: பிரியங்கா ரகுராமன் ஸ்ருதிஸ்வரா இசைப்பள்ளி: பாரதியார் பிறந்த நாள் விழா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| நவம்பர் 19, 2023 அன்று அக்ஷதா சேஷமணி மற்றும் தன்ஷிகா விஜயராஜின் அரங்கேற்றம் வாஷிங்டன் மாகாணம் ரென்டன் நகரில் ஐக்கியா கலையரங்கத்தில் விமரிசையாக நடைபெற்றது. செல்வி அக்ஷதா (14 வயது )செல்வி தன்ஷிகா (19 வயது) தம் நாட்டியத்தை அரங்கேற்றம் செய்தனர். இருவரும் இவ்விளம் வயதில் நேர்த்தியுடன் மணிக்கணக்காக நாட்டியம் ஆடியது காண்போரைக் கவர்ந்தது. 
 அக்ஷதாவும் தன்ஷிகாவும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர். இவர்களின் குரு திருமதி சந்தியா ராஜகோபால் (பார்கவி பரத நாட்யாலயா) அவர்களின் தலைமையில் அரங்கேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியைத் திருமதி மாதங்கி சேஷமணி அழகாகத் தொகுத்து வழங்கினார். திருமதி வீணா கிரிஷ், திருமதி சுஷீலா நரசிம்மன், திருமதி சந்தியா ராஜகோபால், செல்வன் அனிருத் பார்த்தசாரதி, செல்வி சம்யுக்தா கௌசிக் ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக அக்ஷதா விநாயகர் துதி ஒன்றைப் பாடினார். அதன்பின் குரு திருமதி சந்தியா அவர்கள் சலங்கை பூஜை செய்து மாணவிகளை ஆசிர்வதித்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
 
 
  
 புஷ்பாஞ்சலிக்குப பிறகு தில்லை அம்பல நடராஜரைப் போற்றி இருவரும் சுழன்று நர்த்தனம் ஆடினர். அதன்பின் கண்ணனைப் பற்றி இருவரும் ஆடியது பிருந்தாவனத்தைக் கண்முன் கொண்டு வந்தது. கண்ணன் வெண்ணை திருடியது பிருந்தாவனத்திலா இல்லை வாஷிங்டனிலா என்று நமக்குச் சந்தேகமே வந்துவிட்டது! அதன் பின்னர் மஹிஷாசுர மர்த்தினி நடனத்தின் பொழுது இருவரும் கோர தாண்டவம் ஆடினர். காளியின் கோபத்தில் அரங்கமே நிசப்தம் ஆனது.
 
 இடைவேளைக்கு பிறகு இரண்டாவது பகுதியில் மதுரையை ஆண்ட மீனாட்சி அம்மனின் வரலாற்றை அழகாக ஆடி ஆனந்தப்படுத்தினர். சீதையின் சுயம்வரத்தைத் தத்ரூபமாக கொண்டு வந்தனர். அக்ஷதா "தேவி நீயே துணை" என்ற பாடலையும் தன்ஷிகாவின் நடனத்திற்குப் பாடினார். ஆடலுடன் பாடலும் அருமை.
 
 முருகனின் காவடி ஆட்டத்தை இருவரும் இரண்டு மயில்கள் தோகை விரித்து ஆடுவதுபோல் ஆடினர். அதற்காக சியாட்டில் மழைகூடச் சிறிது நேரம் நின்றது! சிதம்பரம் கோவிலில் தில்லை நடராஜரை நந்தனார் தரிசித்ததை அவர்கள் கண்முன்னே கொண்டு வந்தனர். இறுதியாக அக்ஷதாவும், தன்ஷிகாவும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருந்து "வீர ராஜ சோழா" என்ற பாடலை நவரசம் ததும்பத் தோழியருடன் நடனமாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
 
 நாட்டிய மங்கையர் தம் கலையில் மென்மேலும் உச்சிகளைத் தொட வாழ்த்துகள்.
 | 
											
												|  | 
											
											
												| தெய்வநாயகம் மெய்யப்பன், ரென்டன், வாஷிங்டன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பரதநாட்டியம்: பிரியங்கா ரகுராமன்
 ஸ்ருதிஸ்வரா இசைப்பள்ளி: பாரதியார் பிறந்த நாள் விழா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |