|  | 
											
											
												| 
                                                        
	                                                        | யார் சரணடைந்தாலும் ஸ்ரீராமர் ஏற்பார் |    |  
	                                                        | - ![]() | ![]() ஏப்ரல் 2023 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
	|  | 
											
												| கடவுள் எத்தனை கருணை உள்ளவரென்றால், நீ ஒரே ஒரு அடி எடுத்து வைத்தால் போதும், அவர் உன்னை நோக்கிப் பத்து அடி நடந்து வருவார். ராவணனின் தம்பியான விபீஷணன் ஹனுமானிடம், "நான் தாள் பணிந்து வணங்கினால் ஸ்ரீராமர் என்னைத் தனது பாதுகாப்புக் குடைக்குக் கீழே ஏற்றுக்கொள்வாரா?" என்று கேட்டான். அவன் மேலும், "நான், அவர் அழிப்பதாகச் சபதம் ஏற்ற மோசமான எதிரியின் சகோதரன். ராட்சஸ குலத்தைச் சேர்ந்தவன். எனக்கு வேதங்களோ சாத்திரங்களோ சடங்குகளோ தெரியாது" என்று கூறினான். அதற்கு ஹனுமான், "ஓ முட்டாளே! அவர் சடங்குகளை, அல்லது குடும்ப அந்தஸ்தை அல்லது பாண்டித்தியத்தை எதிர்பார்க்கிறார் என்று நினைத்தாயா? அப்படியானால் என்னைப் போன்ற வானரத்தை அவர் எப்படி ஏற்றார்?" என்று விடையளித்தார். இதில் பிரச்சனை தீர்ந்தது. விபீஷணனுக்குக் கருணை கிடைப்பது உறுதி ஆயிற்று. 
 விபீஷணன் சென்றபோது, ஸ்ரீராமர் தன்னருகில் இருந்த மூத்த வானரங்களிடம் விபீஷணனைத் தமது கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாமா என்று கேட்டார். அவருக்கு யாரிடம் இருந்து எந்த அறிவுரையும் தேவையில்லை. அவர் மற்றவர் கருத்துக்களால் ஒருபோதும் பாதிக்கப்பட்டதில்லை. ஆனால் அவர்களுக்கும் அந்தச் சந்தர்ப்பத்தில் வாய்ப்புத் தர எண்ணி, கலந்து ஆலோசிப்பது போலவும், தாம் இன்னும் எந்த முடிவும் எடுக்காதது போலவும் நடித்தார். "கூடாது" என்று சுக்ரீவன் சொன்னபோது, அவனும் தனது அண்ணனை விட்டுவிட்டுதான் தன்னிடம் முதலில் வந்தான் என்பதை நினைவூட்டினார்! "அவனை மீண்டும் இலங்கைக்குள் துரத்திவிடுவதுதான் அவனுக்குச் சரியான பாடம்" என்று லக்ஷ்மணன் கூறியபோது, "ஆமாம், ராவணன் இறந்தபின், விபீஷணனை இலங்கைக்குச் சக்ரவர்த்தியாக முடிசூட்டி அனுப்பத்தான் தீர்மானித்திருக்கிறேன் என்றார் ராமர்.
 
 யார் சரணடைந்தாலும் அதே கணத்தில், எந்தத் தயக்கமும் இன்றி ஸ்ரீராமர் ஏற்பார். ஒருவேளை ராவணன் மனம் திருந்தி ஸ்ரீராமரின் பாதங்களில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்கலாம், அதனால் விபீஷணனுக்கு இலங்கை சிம்மாசனத்தைத் தருவதாக வாக்களிக்கக் கூடாது என்று ஒருவர் கூறியபோது, ராமர், "அப்படி நடக்குமானால், எங்கள் பரம்பரை ராஜ்ஜியமான அயோத்திக்கு விபீஷணனைச் சக்ரவர்த்தி ஆக்கும்படி பரதனின் இரண்டு கைகளையும் பிடித்துக் கெஞ்சுவேன். பரதனும் நானும் மகிழ்ச்சியாகக் காடுகளில் காலம் கழிப்போம்" என்று கூறினார் ஸ்ரீராமர்.
 
 நன்றி: சனாதன சாரதி, ஜனவரி 2023
 | 
											
												|  | 
											
											
												| பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |