| 
											
											
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
	  | 
											
												முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.
  ★★★★★
  கேள்வி: நான் ஒரு நல்ல நிறுவனத்தில் உயர்நிலை மேலாண்மைப் பதவியில் சௌகரியமாக வேலை பார்த்து வருகிறேன். ஆனால் என் நண்பர்கள் சிலர் தாமே நிறுவனங்களை ஆரம்பித்து வெற்றிபெற்று, செல்வந்தர் ஆகியுள்ளார்கள். எனக்கும் ஒரு நல்ல யோசனை உள்ளதால் நானும் ஆரம்பநிலை நிறுவனக் களத்தில் குதிக்கலாமா என்று தோன்றுகிறது. ஆரம்பித்தால் எவ்வளவு சீக்கிரம் வெற்றி கிடைக்கும்? அதைப்பற்றி உங்கள் பரிந்துரை என்ன? கதிரவனின் பதில்: கேட்டீர்களே ஒரு கேள்வி, ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து விட்டால் எவ்வளவு சீக்கிரம் வெற்றி கிடைக்கும் என்று! நிறுவனம் ஆரம்பித்து வெற்றி காண்பது என்பது உள்ளங்கையிலேயே இருக்கும் ஒரு ஜாமூனை லபக் என்று விழுங்கி விடுவது போன்ற சுலபமான விஷயமில்லை! நீங்கள் எதிர்பார்ப்பதை விடக் கடினமானது. பலப்பல தடங்கல்களைத் தாண்டி, பலப்பல திருப்பங்களில் திரும்பி... இதுமாதிரி பலப்பல விஷயங்களை நீங்கள் அனுபவித்து, கடும் முயற்சி செய்து சமாளித்த பின்பே வெற்றிகாண இயலும்!
  என்னடா இது, ஆரம்பத்திலேயே பயமுறுத்துகிறானே என்கிறீர்களா? அப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டுமா என்று சந்தேகிக்கிறீர்களா? கிட்டத்தட்ட இருபது ஆரம்பநிலை நிறுவனங்களில் சொந்த முயற்சியில் பெற்ற அனுபவ பூர்வமாகக் கூறும் உண்மைதான் இது. மேற்கொண்டு விவரிக்கிறேன், அதற்கப்புறம் நன்கு விளங்கிவிடும்.
  சரி, அப்படியானால் எதற்காக நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும். குஷியாக இப்போதிருக்கும் பெரு நிறுவன வேலையிலேயே இருந்து விடலாமே என்று தோன்றுகிறதா! அதைப்பற்றி முன்பே ஒரு யுக்தியில் விவரித்திருந்தேன். இப்போது சுருக்கமாகக் கூறுகிறேன். நிறுவனத்தை ஆரம்பிப்பது செல்வம் பெறுவதற்கு மட்டுமல்ல. உங்கள் சொந்த யோசனையை, சொந்த முயற்சியால் வெற்றிபெற வைக்கும் மனத்திருப்தி என்பது ஒரு மிக முக்கியமான பலன். மேலும், அது பரபரப்பான வாழ்வு, ஒரே மாதிரி வேலையைத் தினமும் செய்து சோர்வடைவதல்ல. பல விதமான அனுபவங்களை எதிர்கொள்வதால் மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும்.
  அது மட்டுமல்ல, உங்கள் தொழிலை நீங்களே தலைமை வகித்து நடத்துவதும் திருப்தியளிக்கும். நிறுவனத்தை ஆரம்பித்து, பல இடர்களைக் கடந்து ஒவ்வொரு நிலையாக வளர்க்கும்போது நீங்கள் பெறும் அனுபவத் திறன்களும் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குப் பெரும் உதவியளிக்கும். மனக்கண்ணைத் திறந்து, எதிர்நோக்கும் பாதையைப் பற்றிய உண்மையை உணர்ந்து, ஆரம்பிப்பதால் கிடைக்கும் பலன்களையும் உணர்ந்து மன உறுதியுடன் ஆரம்பிப்பது நல்லது.
  குஷியான வேலையில் உள்ள நீங்கள் அது எவ்வளவு கடினம் என்பதை முதலில் விவரமாகப் புரிந்துகொண்டு செயலில் இறங்க வேண்டும் என்பதால்தான் அப்படி முதற்கண் ஆரம்பநிலை நிறுவனத்தில் வெற்றி காண்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல என்று கூறினேன். இப்போது அதைப்பற்றிய விவரங்களைக் காண்போம்.
  முதலில் ஆரம்பநிலை நிறுவனத்தில், வெற்றியடையும் முன்பு எதிர்கொள்ள வேண்டிய இன்னல்களைப் பட்டியலிடுவோம். அதன் பிறகு, பட்டியலின் ஒவ்வோர் அம்சத்தையும் விவரிப்போம். 
  இதோ அந்த இன்னல் பட்டியல்: * சொந்த/குடும்ப நிதி நிலைமை மற்றும் தியாகங்கள் * நிறுவனர் குழுவைச் சேர்த்தல் * உங்கள் யோசனையைச் சோதித்துச் சீர்படுத்தல் * முதல்நிலை நிதி திரட்டல் * முதல்நிலை திசை திருப்பல் (initial pivoting) * முதல் சில வாடிக்கையாளர்கள் * விதைநிலை நிதி திரட்டல் * வருடம் மில்லியன் டாலர் விற்பனை நிலை * சந்தை மெத்தனம், சந்தை மாற்றம், அதனால் திசை திருப்பல் * முதல் பெருஞ்சுற்று நிதி திரட்டல் * குழு கோளாறு அல்லது கருத்து வேறுபாடு; குழு பிரிவு * வெற்றிக் கோட்டைத் தாண்டத் தடங்கல்கள்
  முதலாவதாக, சொந்த மற்றும் குடும்ப நிதிநிலை பற்றி விவரிப்போம். நீங்கள் ஒரு பெருநிறுவனத்தில் உயர்நிலை மேலாண்மைப் பதவியில் இருப்பதாகக் கூறினீர்கள் அல்லவா? அந்த வேலையில் வரும் சம்பள வரவால் குடும்பம் மிக வசதியான வாழ்க்கையில் திளைத்திருக்கும். ஆனால் ஆரம்பநிலை நிறுவனம் என்றால் முதல் சில மாதங்கள், ஏன் ஓரிரு வருடங்கள்கூட சம்பள வரவே இல்லாமல் செயல்பட வேண்டியிருக்கக் கூடும். அதற்கு நீங்களும் உங்கள் குடும்பமும் தயாராக இருக்க வேண்டும்.
  எனக்குத் தெரிந்த நிறுவனர் ஒரு சிலர் மட்டும், ஏற்கனவே நிறைய சேமித்திருந்தனர். ஸிஸ்கோ போன்ற நிறுவனங்களின் பங்குகள் வேலையில் பெற்று அவை பலமடங்கு விலை மதிப்பு அதிகரித்ததால் அவற்றை விற்று நிதி திரட்டும் நல்ல நிலையில் இருந்தார்கள். அல்லது ஏற்கனவே ஒரு ஆரம்பநிலை நிறுவனத்தில் இருந்து, அது பொதுச் சந்தைக்குப் போயோ, அல்லது எதாவது பெரும் நிறுவனத்துக்கு விற்கப் பட்டோ, அந்த வரவில் அவர்களுக்குக் கிடைத்த பங்கால் இருக்கும் வசதியோ இருக்கக்கூடும். இப்படி ஏற்கனவே நிதிநிலை நல்ல வசதியாக இருந்தால் கவலையே இல்லை. கவலைப்படாமல் வேலையை விட்டுவிட்டுப் புது நிறுவனம் ஆரம்பிக்கலாம். நான் கூறியபடி சிலர் அப்படிச் செய்ததை நான் அறிவேன். (அடியேனின் சொந்த அனுபவமும் இந்த வகையில் அடங்கும்)
  ஆனால் எல்லா நிறுவனர்களின் நிலையும் அத்தனை வசதியானதல்ல. சில நிறுவனர்களின் குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலையில் இருப்பார்கள். அப்படியானால் நிலைமை ஓரளவு சரிதான். இருவரில் ஒருவர் வேலையை விட்டு நிறுவனம் ஆரம்பித்தால் மற்றவரின் சம்பளத்தையும், அவரது மருத்துவத் திட்டத்தையும் வைத்து ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் அதுகூட விட்டதோ தொட்டதோ என்பதுபோல் இருவரும் சம்பாதிக்கும் போது இருந்த வசதிகள் சிலவற்றைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கலாம். உதாரணமாக, விடுமுறைப் பயணங்கள், அடிக்கடி வெளியில் உண்பது போன்ற செலவுகளைப் பெருவாரியாகக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கலாம்.
  நிறுவனத்தை ஆரம்பிப்பவர் ஒருவர் மட்டுமே குடும்ப வருவாய்க்கு ஆதாரம் என்றால் நிலைமை மிகவும் கடினமாகிவிடும். முதலிலேயே ஒரு வருடத்துக்கான குடும்பச் செலவுக்கு நிதி சேர்த்து வைத்திருந்தால்தான் வேலையை விட்டு உதறிவிட்டு நிறுவனத்தை ஆரம்பிக்க இயலும். குடும்பத்தினர் அனைவரின் மருத்துவத் திட்டச் செலவு இதில் ஒரு பெரும் அம்சம் என்பது குறிப்பிடத் தக்கது.
  இந்த நிலையில் செலவு செய்யும் ஒவ்வொரு காசையும் எண்ணிச் செலவிட வேண்டியிருக்கக் கூடும். பெரும்பாலும் இந்த நிலையென்றால் குடும்பத்தில் கணவன் மனைவி இருவர் மட்டுமே இருந்தால்தான் முடியலாம். அது அவர்கள் குடும்பத்தின் ஆரம்ப காலமாக இருக்கலாம், அல்லது மிகப்பல வருடங்களாகி, அவர்களது மக்கள் பெரியவர்களாகி இவர்கள் மட்டும் தனித்து வாழும் பருவமாகவும் இருக்கலாம். இரண்டும் இல்லாமல் அவர்களது மக்கள் படித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வரவுகூட இல்லாமல் இருப்பது மிகவும் கடினம்.
  இந்த முதல் இன்னலைப் பற்றி யோசித்து விட்டுச் செயல்படுவது நல்லது. அடுத்து மற்ற ஆரம்பநிலை இன்னல்களைப் பற்றி விவரிப்போம்.
  (தொடரும்) | 
											
											
												| 
 | 
											
											
											
												| கதிரவன் எழில்மன்னன் | 
											
											
												 | 
											
											
											
												 | 
											
											
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |