|  | 
											
											
												| 
                                                        
	                                                        | தென்றல் பேசுகிறது... |    |  
	                                                        | - ![]() | ![]() நவம்பர் 2019 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
	|  | 
											
												| கனடாவில் மக்டேலன் தீவுகள் என்று ஒன்றுள்ளது. அதைச் சுற்றி இருக்கும் உறைபனிக் கடல் அதை இயற்கையின் சீற்றங்களிலிருந்து பாதுகாத்துக்கொண்டிருந்தது. ஆனால், இயல்பைவிட 2 டிகிரி வெப்பம் அதிகரித்துவிட்ட காரணத்தால் பனிக்கடல் உருகியது. விளைவு, ஒவ்வோராண்டிலும் 555 சதுரமைல் பரப்பளவைக் கடல் விழுங்கிக் கொண்டிருக்கிறது. இது ஒரு லாஸ் ஏஞ்சலஸைவிடப் பெரிய பரப்பு! இந்தியாவிலும் கர்நாடகத்தின் மங்களூரில் கடல் மட்டம் அடுத்த 100 ஆண்டுகளில் 15.98 செ.மீ. உயர வாய்ப்புள்ளது என்கிறது நாசா (NASA). மும்பையை ஒட்டி 15.26 செ.மீ., நியூ யார்க்கை ஒட்டி 10.65 செ.மீ. என்ற அளவுகளில் கடல்மட்டம் உயர்ந்து நிலப்பகுதியை விழுங்கும் வாய்ப்பு பலமாக உள்ளது. இவையெல்லாம் புவி வெப்பமயமாதலின் விளைவுகள். எத்தனை மாநாடுகள் கூட்டினாலும், தற்போதைய அரசுகளின் நடவடிக்கைகள் போதவில்லை என்பதையே காண்பிக்கிறது. ஒவ்வொரு குடிமகனும் விழிப்புணர்வு பெற்று, தன்னாலானதைச் செய்தாலொழிய இந்தப் போக்கைத் தடுக்க முடியாது. விழித்துக் கொள்வோம், தற்காத்துக் கொள்வோம். 
 ★★★★★
 
 அதிபரின் அதிசுயநலச் செயல்களை, தொடர்ந்து நாம் இங்கே விமர்சித்து வருகிறோம். தான் வகிக்கும் பதவியின் மாட்சிமைக்குச் சற்றும் பொருந்தாத, வணிக நோக்கம் மட்டுமே தூக்கிநிற்கும் இவரது நடவடிக்கைகள், இறுதியாக இவரைப் பதவிநீக்குவதற்கான செயல்பாடுகளின் வாசலுக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதில் சற்றும் ஆச்சரியமில்லை. இதை எழுதுகிற சமயத்தில் பதவிநீக்க வழிகாட்டல் விதிகளை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை அங்கீகரித்துவிட்டது. பதவிநீக்க விசாரணை நடவடிக்கைகளை உலகமே பார்க்கும்படியாகப் பொதுவில் நடத்தப்படும். தனது அரசியல் எதிரியை வெளிநாட்டு அரசாங்கத்தைக் கொண்டு மானபங்கம் செய்ய முற்பட்டது, ஜி7 மாநாட்டைத் தனது சொந்த நட்சத்திர ஹோட்டலில் நடத்த முயன்றது, அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு அரசு விருந்தினர்களைத் தனது ஹோட்டலில் தங்கவைப்பது, அமெரிக்க உற்பத்தித் துறையை விக்கித்து நிற்கவைத்தது, நடுத்தர மக்களை வரியேற்றச் சம்மட்டியால் தாக்கியது, அடித்தட்டு மக்களின் கைக்கு எட்டாத தூரத்தில் மருத்துவக் காப்பீட்டை வைத்தது என ட்ரம்ப் செய்த, மன்னிக்க முடியாத, தேச நலனுக்குப் புறம்பான செயல்கள் எண்ணற்றவை. Impeachment எனப்படும் இந்தப் பதவிநீக்க நடவடிக்கைகள் நாட்டுக்கு ஒரு நல்ல விடியலைக் கொண்டுவரும் என நம்புவோம்.
 
 ★★★★★
 
 இளையவர், இசைப் பாரம்பரியத்தில் வந்தவர், வயலின் நரம்புகளால் நம் இதய நரம்புகளைச் சுண்டியிழுக்கும் வல்லமை கொண்டவர், புகழேணியில் ஏறிக்கொண்டிருப்பவர் துரை ஸ்ரீனிவாசன். அவரது நேர்காணல் உங்களுக்கு உற்சாகமூட்டும். வீர சுதந்திரத்துக்காக எண்ணற்ற தியாகங்களைச் செய்த வ.உ. சிதம்பரனாரின் நெஞ்சைத் தொடும் வாழ்க்கை, இளையோரின் சாதனைகள், சிறுகதை எனப் பல அம்சங்களோடு நவம்பர் இதழ் உங்களை வந்தடைகிறது.
 
 வாசகர்களுக்கு மிலாடி நபி, நன்றி நவிலல் நாள் வாழ்த்துக்கள்.
 | 
											
												|  | 
											
											
												| தென்றல் நவம்பர் 2019
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |