|
|
![](http://www.tamilonline.com/media/Dec2017/12/eb8223ce-6fec-48ed-98ea-d0df3d9504ed.jpg) |
என்னுடைய நெருங்கிய நண்பனின் விவகாரத்தைப் பற்றிச் சொல்லுகிறேன். நாங்கள் பள்ளி, கல்லூரி இரண்டிலுமே வகுப்புத் தோழர்கள். பேச்சால் எல்லோரையும் பணிய வைத்துவிடுவான். அவன் காலேஜ் சமயத்தில் செய்தது நிறைய ‘அடாவடித்தனமானது’ என்பது இப்போது நான் இரண்டு கல்லூரி செல்லும் பையன்களுக்குத் தந்தையான பின்தான் தெரிகிறது. ஆனால், அந்தக் காலத்தில் எனக்கு ஒரு ‘ஹீரோ’வாகத் தெரிந்தான். அவனுடைய ‘தில்’ எனக்குக் கிடையாது. எங்கள் நட்பு இங்கே வந்தும் தொடர்ந்தது. மாஸ்டர்ஸ் முடித்து வேறு வழியில் வேலை வாய்ப்புகள் தேடிச் சென்றுவிட்டோம். ஆனால் எப்போதுமே தொடர்பில் இருந்தோம். எங்கள் இரண்டு குடும்பமும் ஒரே ஊர். அவன் ரொம்ப வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரே பையன். 3 சகோதரிகள். நடுத்தர வர்க்கம் குடும்பத்துடன் ஒட்டித்தான் இருந்தான். அக்காவின் கல்யாணத்திற்குப் பணம் சேர்த்து அனுப்பினான். போய்விட்டு வந்தான். என்னுடைய கல்யாணம் அப்போது நிச்சயமாகி இருந்தது. ஆகவே நானும் அவன் வீட்டுத் திருமணத்திற்குப் போய்விட்டு வந்தேன். நான் ஒரே பையன். அவர்கள் வீட்டில் இருந்த கலகலப்பு எனக்கு இல்லையே என்று எண்ணியிருக்கிறேன்.
இங்கே திரும்பிவந்து நான் மனைவியுடன் செட்டிலாகி இரண்டு வருடம் இருக்கும். கொஞ்சம் அவனுடன் தொடர்பில்லாமல் இருந்தது. பொதுவான ஒருவர் சொல்லிக் கேள்விப்பட்டேன். அவன் ஒரு கேர்ள் ஃப்ரண்டுடன் வாழ்க்கை நடத்துகிறானாம். என் மனைவி நன்கு படித்திருந்தாலும் மிகவும் ட்ரெடிஷனல். அவளுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஒருநாள் திடீரென்று கூப்பிட்டு செய்தி சொன்னான். தான் கல்யாணம் செய்து கொண்டதாகவும், அவள் பெங்காலி, கிறிஸ்துவப் பெண், தன்னை அப்படிப் பார்த்துக் கொள்வதாகவும் சொன்னான். எனக்கு அதிர்ச்சி. அவ்வளவு நெருங்கிய நண்பன். கூப்பிடாமல், சொல்லிக் கொள்ளாமல் செய்து கொண்டிருக்கிறானே என்று. ஆனால், அவன் யாருக்கும் சொல்லவில்லை. குடும்பத்தினரிடம் கூட. அவர்கள் கண்டிப்பாக எதிர்ப்பார்கள் என்று தெரியும். அவர்களுக்கு விஷயம் தெரிந்தபோது, எதிர்ப்பைவிட அதிர்ச்சிதான் அதிகமாக இருந்தது. Completley cut off. இவன் அதை எதிர்பார்க்கவில்லை. இரண்டு தங்கைகள் படிக்க, திருமணம் என்று இவன் உதவி தேவைப்படும். சமாதானம் ஆகிவிடுவார்கள் என்று நினைத்தான். ஆனால், they had their pride. தன் மனைவியை அழைத்துக் கொண்டு நான் கூப்பிடாமலேயே ஒரு கிறிஸ்துமஸ் சமயம் 2-3 நாள் வந்து தங்கிவிட்டுப் போனான். என் மனைவிக்கு முதலில் பிடிக்கவில்லை. She refused to host, என் நண்பன். அவன் வாழ்க்கையில் நான் ஏன் குறுக்கிடவேண்டும். Plus, he is my hero. அதனால் நான் நன்றாக உபசரித்தேன்.
அவர்களை முதலில் பார்த்தபோது இதுதான் லவ்வா என்று நினைத்தேன். என் நண்பன் மிக அழகாக இருப்பான். கல்லூரிக் காலத்தில் நிறைய இளைஞிகள் அவன்பேரில் கண் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் பெண் சற்றுக் குள்ளமாக, உடல் பருமனாக, சுமாராக இருந்தாள். ஆனால், அந்தக் கண்களில் மட்டும் ஒரு innocenece. குறுகுறுப்பு. என் மனைவிக்கு அவளை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. என் நண்பனுக்கு ஏற்றாற்போல உணவு வகைகளைச் செய்யக் கற்றுக் கொண்டிருக்கிறாள். இறைச்சி சாப்பிடுவதை விட்டுவிட்டாள். மீன்மட்டும் விடமுடியவில்லை என்று தெரிவித்திருக்கிறாள். “இந்த அருமையான பெண்” உங்கள் நண்பரிடம் மாட்டிக்கொண்டு விட்டாளே என்று என் மனைவி புலம்பித் தள்ளினாள்.
எப்படியோ அவர்களும் செட்டிலாகி 15 வருடங்கள் நன்றாக இருந்தாலும் குழந்தை இல்லை. அவள் தத்தெடுக்க ஆசைப்பட்டாள். இவன் மறுத்துவிட்டான். Knowing him, he always had his way. யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும். எப்படியோ சந்தோஷமாக இருந்தால் சரி என்று நினைத்தேன்.
ஆறு மாதங்களுக்கு முன்பு அவன் கூப்பிட்டபோது மிகவும் excited ஆக இருந்தான். அவனுடைய அக்கா பெண் இங்கே மேல்படிப்பிற்கு வருவதாயும், இவன்தான் உதவி செய்வதாகவும் சொன்னான். மறுபடியும் குடும்பங்கள் ஒன்று சேர்ந்துவிட்டதாகவும், எல்லோரும் இவர்கள் வீட்டிற்கு கோடையில் வர இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தான். எனக்கு உண்மையில் சந்தோஷமாக இருந்தது. எல்லோரையும் எங்கள் வீட்டிற்கும் கூப்பிட்டு இருந்தேன்.
FaceBookல் தன்னுடைய சகோதரர்கள், அம்மா, இவளுடைய உறவுகள் என்று படங்களாகப் போட்டுக் கொண்டிருந்தான். பொதுவாக, இவன், இவன் மனைவி, அவர்கள் வீட்டு நாய் என்றுதான் இருக்கும். எல்லோரும் இரண்டு மாத லீவில் வருகிறார்கள். அவன் அம்மா மிகவும் ஆசாரம். பாவம், அந்த பெங்காலிப் பெண். திண்டாடப் போகிறாள் என்று என் மனைவி சொல்லிக் கொண்டிருந்தாள். எனக்கே கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. 11 பேர் எங்கள் வீட்டிற்கு வந்து நான்கு நாள் தங்கப் போகிறார்கள், எப்படி இந்திய முறைப்படி விருந்துபசாரம் செய்யப் போகிறோம் என்று.
சமீபத்தில் அவர்கள் வருகையைப் பற்றி அவனிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவன் தன் மனைவியை மிகவும் கடுமையாக விமர்சித்தான். “சரியான மக்கு. மொழி தெரியவில்லை. அவன் அம்மாவிற்கு ஏற்றாற் போல் சமைக்கத் தெரியவில்லை. சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை. குண்டாகப் போய்விட்டாள்” என்று நிறைய குற்றச்சாட்டுகள். அவளுக்குக் குழந்தை பிறக்க வழியில்லை என்று வேறு குறை! எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதைவிடப் பெரிய அதிர்ச்சி அவன் அவளை விவாகரத்து செய்துவிடப் போவதாகவும், வேறு நல்ல சமைக்கத் தெரிந்த தமிழ்ப் பெண்ணாகத் தேடப்போவதாகவும், வாழ்க்கையில் தவறு செய்துவிட்டதாகவும் வேறு சொன்னான். அவனுக்கு யாரையும் கன்வின்ஸ் செய்யும் கெட்டிக்காரத்தனம் இருக்கிறது. “என்னடா ஆகிவிட்டது? She is a Professional. Very understanding person. எங்களுக்குள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் விட்டுக் கொடுத்துவிடுவாள். ஏற்கனவே 15 வருஷம் என் குடும்பத்தை விட்டுக் கொடுத்துவிட்டேன். எல்லாவற்றையும் விட்டுவிட்டு அம்மாவோடு, அக்கா, தங்கைகளோடு ஊரிலேயே இருக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நான் நினைப்பதில் என்ன தப்பு. அவள் எவ்வளவு குண்டாகிவிட்டாள் தெரியுமா?” என்று நியாயம் கேட்பது போல எதை எதையோ பேத்துகிறான். இதில் என்ன ஜோக் என்றால், அவர்கள் எல்லோரும் என்னுடன் தங்க வரும்போது, நான் இந்த விஷயத்தைத் தொடங்கி, இரண்டு பேருக்கும் சமரசம் செய்து, விவாகரத்து சுமுகமாக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாம். “மனசு ஒத்துக்காதபோது எப்படி போலியாக வாழ முடியும் நீயே சொல்லு. என்னைவிட நீ நேர்மையானவன். முன்பு spark இருந்தது. இப்போது இல்லை. என்னை என்ன செய்யச் சொல்றே?” என்று நியாயம் கேட்கிறான். நான் அவன் முடிவுக்கு ஒத்துப்போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். அவனுடைய இத்தனை வருட நட்பை நான் மதிக்கிறேன். இந்த முடிவு எனக்குப் பிடிக்கவில்லை. அவன் என்னைக் கெஞ்சும் விதம், அவன் என்னை மூளைச்சலவை செய்யும் விதத்தில் நானே “ஆமாம். நீ செய்வது சரிதான்” என்று சொல்லக்கூடிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறேன். என் மனைவி கடுங்கோபத்தில் இருக்கிறாள். She wants to cancel their whole visit to our place. அவர்கள் வந்தால் நான் எப்படிக் கையாளுவது என்று தெரியவில்லை. அவன் மனைவியிடம் அவன் எதுவும் இதுவரை சொல்லவில்லை. What are your thoughts on this?
இப்படிக்கு உங்கள் நண்பன் |
|
அன்புள்ள சிநேகிதரே: ஒரு நல்ல மனைவியைக் காரணம் இல்லாமல் விவாகரத்து செய்ய மனதில் உள்ள குற்ற உணர்ச்சியால், அதைச் சரிசெய்ய உங்களின் ஒப்புதலை நாடுகிறார். அது உங்களுக்கே புரிந்திருக்கும். இது தனிமனிதப் பிரச்சனை. நம்மை யாரேனும் அணுகி உதவிகேட்டால், நம்முடைய ஆழ்ந்த, அழுத்தமான கருத்துக்களை வெளியிடத்தான் முடியும். சுயநலம் உள்ளவர்களும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பத்தான் முடிவெடுப்பார்கள். சுதந்திரப் போக்கு உள்ளவர்கள் நியாயத்தின் எல்லையை அவர்களே தீர்மானம் செய்வார்கள். சுயநலம் உள்ளவர்கள் அவர்கள் நியாயம் என்று நினைப்பதைப் பிறர்மூலம் நிலைநிறுத்தப் பார்ப்பார்கள்.
உங்கள் நண்பர் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். அவரால் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இதனால் பெரிய பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பரின் போக்கு பிடிக்கவில்லயென்றால் ஒதுங்கிவிடுவது நல்லது. அவருக்கு எந்த அறிவுரையும் எடுபடாது. நீங்கள் நல்லது என்று நினைப்பதை எடுத்துச் சொல்லச் சொல்ல, அது நன்மையில்லை என்பதற்குப் பல தரப்பில் வாதங்கள் செய்வார். அவர் மனைவியும் படித்தவர். பண்புள்ளவர். இத்தனை வருடம் அவருடன் பழகியதில் அவர் குணங்கள் தெரியாமல் இருக்கும்படி அப்பாவியாக இருக்க மாட்டார். உங்கள் நண்பரிடம் உள்ள ஏதோ ஒரு ஈர்ப்பில் அவர் வாழ்க்கையில் ஈடுகொடுத்து வந்திருக்கிறார். நண்பர் குடும்பத்தினர் இந்த மனைவியைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் அறிவுரை கூறினால், அதுவும் அவர் அம்மா அறிவுரை சொன்னால், கேட்க இப்போது வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் எல்லோரும் உங்கள் வீட்டிற்கு வந்து தங்கும்போது ஒவ்வொருவருடைய அணுகுமுறையையும் நீங்கள் கூர்ந்து கவனித்தால், அவர்கள் இந்த மனைவியின் மீது அன்போடு அனுசரணையோடு இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியவரும். அதை வைத்துக்கொண்டு அவர்கள் இந்த உறவை மேம்படுத்த, தக்க வைக்க முயற்சி செய்வார்களா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நல்ல நண்பராக, நல்ல மனிதராக இருக்கும் உங்களின் எந்த முயற்சிக்கும் என் வாழ்த்துக்கள்
|
|
|
|
|
|
|
|