Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அஞ்சலி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சிறுகதை
போதை தெளிந்தது
பகையும் நட்பும்
- பிச்சுமணி கிருஷ்ண மூர்த்தி|ஜூன் 2023|
Share:
பத்து வருடங்களுக்குப் பிறகு பிறந்த மண்ணை மிதிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி உணர்வை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எவ்வளவு பெரிய நகரத்தில் வளர நேரிட்டாலும், பிறந்த மண்ணின் காற்றை சுவாசிப்பதற்கு இணையாகாது. அரசாங்கப் பேருந்தில் சிவகாசி வந்தடைந்த உடனேயே என்னுள் ஒரு புத்துணர்ச்சி ஒடியது. அதே பேருந்து நிலையம் பத்து வருட கால இடைவெளியில், மாற்றங்களுக்கு வளைந்து கொடுத்து புதுப் பொலிவுடன் தோற்றமளித்தது. அங்காடிகள் அலங்கார மின் விளக்குகளுடன் அழகாகக் காட்சி அளித்தன. ஒரு ஆட்டோவில் ஏறி ஊருக்குச் சற்று வெளிப்புறத்தில் இருந்த என் மாமா வீட்டிற்கு வந்தேன்.

மாமாவையும் அத்தையையும் பார்த்ததில் மனிதர்களின் உருவத்தில், கால இடைவெளி எவ்வளவு மாற்றத்தைச் செய்கிறது என்பதை எங்களது பார்வைப் பரிமாற்றங்கள் அறிமுகம் செய்தன. முதுமையின் முழு ஆக்கிரமிப்பு அவர்களை அதுவரை அணுகாவிட்டாலும், அதன் முன்னோட்ட அடையாளங்கள், அத்தையைவிட மாமாவிடம் நன்றாகவே பதிவாகியிருந்தன.. என்னிடமோ அவர்கள் பார்த்து வியந்தது என் இளமை வளர்ச்சியின் பரிமாணங்கள். இரு குடும்பங்களின் நலன்கள் பற்றிப் பேசிய பிறகு, அத்தை வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள். அது சிறியதாய் இருந்தாலும் அழகாக எல்லா சௌகரியங்களையும் கொண்டிருந்தது.

பயணக் களைப்பில் சிறிது கண் அயர்ந்த என்னை, அத்தையின் அன்புக் குரல் ஒரு அதட்டலுடன் எழுப்பியது. "உன் பழைய பள்ளி சினேகிதிகளை எப்பொழுது பார்க்கப் போகிறாய்" என்ற அத்தையின் கேள்விக்கு "அவர்களைப் பார்க்கத்தான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்" என்ற பதிலைக் கூறிவிட்டு வெளியே நின்றிருந்த ஆட்டோவில் ஏறி, நான் படித்த பள்ளிக்குச் சென்றேன். அன்று விடுமுறை. வாசலில் வாட்ச்மேன் வேலுவிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, பள்ளியின் உள்ளே செல்ல அனுமதி பெற்று, என் பழைய வகுப்பிற்குச் சென்றேன். எந்தவித மாற்றமும் இல்லாமல் அந்த வகுப்பு அன்றுபோல் அப்படியே இருந்தது. முதல் வரிசை இருக்கைகளில் நானும் என் நெருங்கிய சிநேகிதிகளான மஞ்சுவும் புவனாவும் எப்பொழுதும் சேர்ந்து உட்கார்ந்திருப்போம். மலரும் நினைவுகளாக நாங்கள் வகுப்பில் மற்ற மாணவிகளைச் செய்த நையாண்டி, சிறு குறும்புகள் போன்றவை என் கண் முன்னால் காட்சி அளித்தன.

மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குறுக்கு வழியில் இருந்த மாந்தோப்பில் திருட்டுத்தனமாய் மாங்காய் அடித்துத் தின்ற அனுபவங்கள், எந்தவித குடும்பப் பொறுப்பும் இல்லாத விளையாட்டு வாழ்க்கை இவையெல்லாம் நினைவலைகளாக மனதில் மோதின. அந்த சிநேகிதிகளை உடனே பார்க்க, ஆவலைத் தூண்டின..

காலச்சக்கரம் இந்த பத்து வருட இடைவேளையில் எப்படிப்பட்ட மாற்றங்களை அவர்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கும் என்று கற்பனை செய்தேன். இயற்கை அன்னை தன் பணிகளில் என்றுமே யாருக்குமே பாரபட்சம் காட்டியதில்லை. இளமையின் பரிமாணங்களை என்னைப் போலவே அவர்களுக்கும் கொடுத்திருப்பாள். மஞ்சு எங்கள் இருவரைக் காட்டிலும் அழகாக இருப்பாள். மயக்கும் கண்கள், வசீகர முகம், புத்திசாலித்தனமான நகைச்சுவை கலந்த பேச்சு, இவையெல்லாம் அவளின் அடையளங்கள்.

புவனா அவளுக்கு நேர்மாறானவள். அமைதியான முகம், தன்னடகத்தின் முழு உருவம். மூவருமே படிப்பில் முன்னணியில் இருந்தவர்கள். மஞ்சுவின் அப்பா முத்துலிங்கம் ஒரு தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். தன் சிறு வயதில் அம்மாவைத் தீராத நோய்க்குக் காவு கொடுத்தவள். வசதி கொஞ்சம் குறைந்திருந்தாலும் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையைப் புரிந்து கொண்டவள். புவனாவின் அப்பா ரத்னவேலு அரசியல்வாதி. ஒரு கட்சியின் தொகுதித் தலைவரும்கூட புவனா தாயின் அரவணைப்பில் செல்லமாக வளர்ந்தவள்.

வாட்ச்மேன் வேலு கொடுத்த விலாச விவரங்களிலிருந்து மஞ்சுவும் புவனாவும் அரசாங்க மகளிர் விடுதியில் தங்கி இருப்பதுபற்றி மிகவும் குழம்பிப் போயிருந்தேன். ஏன் அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து இருக்கவில்லையா? இந்த கேள்விக்கு நேராக அவர்களைச் சந்தித்தால் பதில் கிடைக்கும் என்று மகளிர் விடுதி வந்தடைந்தேன். முதல் மாடியில் அறை இருபதில் அவர்கள் இருப்பதாகத் தெரிந்து, அறைக் கதவைத் தட்டினேன். கதவைத் திறந்த புவனாவைப் பார்த்தவுடன் என் தலை சுற்றியது. அவளுடய அமைதியும் அழகும் கொண்ட பழைய முகத்திற்கு பதில், மெலிந்த உடலில் குழி விழுந்த கண்கள், சுருங்கிப் போன கன்னங்களுடன் புவனா நின்று கொண்டிருந்தாள். "நான்தான் பவித்திரா" என்றேன். என் தோள்மேல் சாய்ந்து விம்மி விம்மி அழுதாள். அவள் மன அழுத்தத்தை என்னால் உணர முடிந்தது. அவள் அடக்கி வைத்திருந்த வேதனைச் சுமை, எரிமலையாய் வெடித்தது. அவளுக்கு ஆறுதல் சொல்லி உள்ளே சென்று இருவரும் பேசினோம். "என்ன நடந்தது?" என்று கேட்டேன், புவனா விவரித்தாள்.

"எங்கள் அமைதியான வசதியான வாழ்க்கையில் அப்படி ஒரு சூறாவளி வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்பா ஊரில் பல வருடங்களாகச் செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதி. அவர் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரைச் சுற்றியிருந்த கூட்டம் அவரை உள்ளாட்சித் தேர்தலில் போட்டிபோட வைத்தது. அவரும் அரசியலில் அடுத்த கட்டத்திற்குப் போக ஆசைப்பட்டு, களத்தில் இறங்கினார். சுயேச்சை வேட்பாளரானதால் தேர்தல் செலவு முழுவதும் அவரே செய்ய வேண்டியதாயிற்று. இதனால் எங்கள் வீடு, நகைகள் எல்லாம் அடமானத்தில் போயின. தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்றதால், அவருடைய செல்வாக்கை வைத்து மேலும் அரசியலில் முன்னேறி விடுவார் என்று பயந்து, ஒருநாள் மாலை அவர் கோவிலில் இருந்து திரும்பி வரும்பொழுது, எதிர்க்கட்சிகள் சேர்ந்து, கூலிப்படை வைத்து அவரைத் தீர்த்துக் கட்டின. அப்பாவின் மரணத்தால் அம்மாவின் உடல்நிலை மிக மோசமாகி இறந்து போக, நான் அநாதையாகி நடுத்தெருவுக்கு வந்தேன். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் உதவியால் தீப்பெட்டித் தொழிற்சாலை ஒன்றில் எனக்கு ஒரு வேலையும், தங்குவதற்கு இந்த மகளிர் விடுதியில் இடமும் கிடைத்தது" என்றாள். கேட்டு நான் நெகிழ்ந்து போனேன்.

வெளியே சென்றிருந்த மஞ்சு அப்போது உள்ளே நுழைந்தாள். இந்தப் பத்து வருட கால இடைவேளையில், மஞ்சுவிடமும் நிறைய மாற்றங்கள். அவள் மெலிந்து காணப்பட்டாலும், அவளுடைய தன்னம்பிக்கை அவளை விட்டுப் போகவில்லை. அவளின் அடையாளமான நகைச்சுவை கலந்த புத்திசாலித்தனமான பேச்சை மட்டும் காணவில்லை. பார்த்தவுடனேயே அவள் என்னை அடையாளம் கண்டுகொண்டாள். ஆனால் புவனாவைப் போல் உணர்ச்சி வசப்படாமல், என் நலனைப் பற்றியும், நகர வாழ்க்கை பற்றியும் விசாரித்தாள். "மஞ்சு! உன்னுடைய குடும்பத்திற்கு என்ன ஆயிற்று. நீயும் ஏன் இந்த விடுதியில் இருக்கிறாய்?" என்ற என் கேள்விக்கு, மஞ்சு சொன்ன பதில் என்னைக் கதி கலங்க வைத்தது.

"என் அப்பா இறந்து ஆறு மாதமாகிறது." இதை சொல்லிவிட்டு மஞ்சு மெளனமானாள். அதில் அவளுடய மன வலியையும் சோகத்தையும் புரிந்து கொண்டேன். "அவர் உடல் நலமில்லாமல் இருந்தாரா?" என்ற என் கேள்விக்கு, "அவர் செய்த பாவத்திற்கு பலியானார்." அவளுடைய இந்த சுருக்கமான பதில் எனக்குப் பெரும்புதிராக இருந்தது. தொடர்ந்து மஞ்சு "எந்த நோயும் அணுகவே பயப்படும் கட்டு மஸ்தான உடம்பு.. தான் வேலை பார்த்த தீப்பெட்டித் தொழிற்சாலையில் அவர் பணம் கையாடவே, அவரை வேலையிலிருந்து நீக்கினர். முடிவில் எந்த வேலையும் கிடைக்காமல், குடிக்கு அடிமையாகி, சேராத கூட்டத்தில் சேர்ந்தார்" என்றாள்.

அப்பொழுது புவனா தன் கண்களால் மஞ்சுவிடம் எதோ சைகை காட்டினாள். மஞ்சு சொல்லப் போகும் ஒரு உண்மையை புவனா சொல்லவிடாமல் தடுக்கிறாள் என்பதை மட்டும் யூகித்துக் கொண்டேன். சில விநாடிகள் இருவரும் பார்வையில் ஏதோ பரிமாறிக் கொண்டனர். "உலகத்திற்கே தெரிந்த உண்மை பவித்ராவுக்குத் தெரிந்தால் என்ன? எப்படியும் மற்றவர்கள் மூலம் தெரியத்தான் போகிறது" என்ற விளக்கத்தை மஞ்சு கொடுத்தபொழுது, மெளனமாக அதற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டு, மஞ்சு சொல்லப் போவதைக் கேட்க, பயம் கலந்த பார்வையுடன் புவனா காத்திருந்தாள். அவர்கள் உரையாடல் வியப்பாக இருந்தாலும், அதில் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது. முடிவில் "அவர் தூக்கு தண்டனையால் இறந்தார்" என்று மஞ்சு சொன்னதும் என்னையே நம்ப முடியவில்லை. "அவர் ஒரு ரவுடிக் கூட்டத்தில் சேர்ந்து, கூலிப்படைத் தலைவன் ஆனார். எதிர்க் கட்சியினர் திட்டமிட்ட புவனா அப்பாவின் கொலையை அவர்தான் செய்தார். அதனால் அவருக்குத் தூக்கு தண்டனை கிடைத்தது" என்று சொன்னபோது புவனா தன் செவிகளை மூடிக்கொண்டு இருந்தாள். அவள் அந்த இரண்டு மரணங்களைப் பற்றிய சோகக் கதையைத் திரும்ப கேட்க விரும்பவில்லை. மஞ்சுவின் பேச்சில் எந்தத் தடுமாற்றமும் இல்லை. "உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துதானே ஆகவேண்டும்!" என்று முடித்தாள்.

கொலைச் செய்தி ஊரில் காட்டுத் தீபோலப் பரவ, இறந்தவரின் செல்வாக்கினால், காவல்துறை வேகமாக நடவடிக்கை எடுத்து கொலையாளியைத் தேடியது. அப்பாவின் கொலையும் அம்மாவின் மோசமான உடல்நிலையும், புவனாவை நிலைகுலைய வைத்தன புவனா விசாரணைக்கு காவல் நிலையத்தில் இருக்க, ஆஸ்பத்திரியில் இருந்த அம்மாவுக்கு உதவியாக மஞ்சு இருந்தாள். வீட்டில் புவனா தனியாக இருப்பதை விரும்பாத மஞ்சு அவளுக்குத் துணையாக வீட்டிலும் இருந்தாள். காவல்துறையின் அதிவேக நடவடிக்கையில், கொலையாளி முத்துவேல் என்பதைச் சாட்சியங்களோடு கண்டுபிடித்தவுடன், தலை மறைவாகியிருந்த அவரைத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். இது தெரிந்தவுடன், மஞ்சு, புவனா வீட்டிற்குச் செல்வதை நிறுத்தி, குற்ற உணர்ச்சியால் புவனாவைச் சந்திக்க மறுத்தாள்.

தன் நெருங்கிய சிநேகிதியே, தன் முதுகில் குத்திவிட்டதாக புவனா எண்ணுவாளோ என்று மஞ்சுவின் ஆதங்கம். புவனாவோ மஞ்சுவின் வீட்டிற்கு வந்து அவள் அப்பா செய்த குற்றத்திற்காக அவள் எப்படிப் பொறுப்பாவாள் என்று வாதாடினாள். தன்னைப் போல் மஞ்சுவும் ஒரு அநாதையாகி நடுத்தெருவுக்கு வரக்கூடாது என்று அவள் வேலை பார்க்கும் தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை வாங்கி கொடுத்து, தன்னுடன் விடுதியிலும் தங்க வைத்தாள். புவனா பலமுறை சொல்லியும் சிறைச்சாலையில் ஒருநாள்கூட மஞ்சு அப்பாவைப் பார்க்கப் போகவிலை. குற்றம் நிரூபணமாகி நீதிமன்றம் தூக்கு தண்டனை கொடுத்தபோது கூட, மஞ்சு வேதனைப்பட்டாளே தவிர வருந்தவில்லை.

மஞ்சு-புவனாவின் இணைபிரியா நேசம், நட்பின் இலக்கணம். சூழ்நிலையின் சூழ்ச்சியால் அந்த நட்பு ஒரு பெரும் சோதனைக்கு ஆளானது. பெற்றவர்களின் பகையும் வாரிசுகளின் பாசமும் மோதிக்கொண்டன. ஆனால் வெற்றி பெற்றது வாரிசுகளின் நட்புதான். "தோள் கொடுக்கத் தோழியும் தோள் சாயத் தோழனும் கிடைத்தால் அவர்கள் கூட நம் தாய் தந்தைதான்" என்று எங்கோ படித்த வரிகள் என் நினைவில் ஓடின. இவர்களின் நட்பு எனக்கும் கிடைத்தில் மிகப் பெருமிதம் அடைந்தேன்.
பிச்சுமணி கிருஷ்ண மூர்த்தி,
ஜெர்சி நகர், நியூ ஜெர்சி
More

போதை தெளிந்தது
Share: