Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அஞ்சலி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சாதனையாளர்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
குணங்குடி மஸ்தான் சாஹிப்
- பா.சு. ரமணன்|ஜூன் 2023|
Share:
மகான்கள் மதம் கடந்தவர்கள். குறிப்பிட்ட மதத்தில், சமூகத்தில் பிறந்திருந்தாலும், அவர்கள் எல்லா மானுடர்களுக்கும் பொதுவான அறங்களை உபதேசித்தார்கள். மக்களை நல்வழிப்படுத்தினார்கள். மானுடம் உய்ய வழிகாட்டினார்கள். அவர்களுள் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாஹிப். இஸ்லாமிய மதத்தில் தோன்றிய இம்மகான், சூஃபி ஞானியாகவும், தமிழ்ச் சித்தர் மரபைச் சேர்ந்தவராகவும் அறியப்படுகிறார்.

தோற்றம்
குணங்குடி மஸ்தான் சாஹிபின் இயற்பெயர், சுல்தான் அப்துல் காதிர். இவர், ராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு அருகில் உள்ள குணங்குடி என்ற சிற்றூரில் 1792-ல், நயினார் முகம்மது - பாத்திமா இணையருக்குப் பிறந்தார். இளவயதிலேயே மஸ்தான் சாஹிப் இறைநாட்டம் உடையவராக விளங்கினார். செய்கு அப்துல் காதிரி லெப்பை ஆலிமிடம் இஸ்லாமிய மறைகளைக் கற்றார். ஆலிம் ஆக உயர்ந்தார்.



திருமண முயற்சி
குணங்குடி மஸ்தானுக்கு அவரது மாமன் மகளான மைமூனை மணமுடித்து வைக்கக் குடும்பத்தார் முடிவு செய்தனர். இல்லறத்தில் நாட்டமற்று இருந்த குணங்குடியார் வீட்டை விட்டு வெளியேறினார். 1813ல் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்த மௌல்வி ஆலிம் ஷாம் சாஹிபிடம் இஸ்லாமிய யோக நெறியில் தீட்சை பெற்றார். பல இடங்களுக்கும் பயணித்துத் தனித்தமர்ந்து தவத்தில் ஈடுபட்டார். திருப்பரங்குன்றதில் உள்ள சிக்கந்தர் மலையில் 48 நாட்கள் தவம் செய்தார். காதிரிய்யா தரீக்காவின் முஹியத்தீன் அப்துல்காதிர் ஜீலானியை ஞானகுருவாக ஏற்றுக்கொண்டார். காடுகளிலும், நதிக்கரைகளிலும் அலைந்து திரிந்து தவ வாழ்க்கை வாழ்ந்தார்.

தவத்தின் விளைவால் உலகப் பற்றுக்களை ஒழித்த ஞானியாகப் பரிணமித்தார். நாடோடியாகப் பல ஊர்களுக்கும் சென்றார். அதிகம் பேசாமல் எப்போதும் இறை நிலையில் ஒன்றி இருந்த இவரை மக்கள் 'மஸ்தான்' (பித்தர்) என்று அழைத்தனர். நாளடைவில் அந்தப் பெயரே நிலைத்து 'குணங்குடி மஸ்தான் சாஹிப்', 'குணங்குடி மஸ்தான் சாமி' என்றெல்லாம் அழைத்தனர்.



சென்னை வாழ்க்கை
குணங்குடி மஸ்தான் சாஹிப், வடஇந்தியாவுக்குச் சென்று பலருக்கு ஞான வழி காட்டினார். ஞான உபதேசம் செய்தார். இந்தியா முழுவதும் யாத்திரை செய்தவர் மீண்டும் தமிழகம் வந்தார். தமிழகத்தின் பல ஊர்களிலும் அலைந்து திரிந்தார். இறுதியில் சென்னைக்கு வந்தார். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் ராயபுரம் அருகே இருந்த 'லெப்பைக் காடு' என்ற காட்டுப் பகுதியில் தங்கினார். தனித்தமர்ந்து தவம் செய்தார்.

அப்பகுதியில் வாழ்ந்த பாவா லெப்பை என்பவர், குணங்குடி மஸ்தானின் உயர்நிலையை அறிந்தார். மஸ்தான் சாஹிப் தங்குவதற்கு ஒரு நிலையான இருப்பிடத்தை அமைத்துக் கொடுத்தார். அங்கு இருந்துகொண்டு தமது தவத்தைத் தொடர்ந்தார் குணங்குடி மஸ்தான். அவர் 'தொண்டி'யில் இருந்து சென்னைக்கு வந்தவர் என்பதால் அவர் பெயரால் அந்தப் பகுதி 'தொண்டியார் பேட்டை' என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் 'தண்டையார்பேட்டை' ஆனது.



சீடர்கள்
குணங்குடி மஸ்தான் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் அவர் சமரச ஞானியாக இருந்தார். சூஃபி ஞானியாகப் போற்றப்பட்டார். தாயுமானவரது பாடல்களின் தாக்கங்கள் மஸ்தானின் படைப்புகளில் உண்டு. இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது இந்துக்கள் சிலரும் குணங்குடி மஸ்தானுக்குச் சீடர்களாக இருந்தனர். அவர்மீது பல பாடல்களை இயற்றினர். அவர்களுள்,

திருத்தணிகை சரவணப்பெருமாளையர் (மஸ்தான் சாஹிபு நான்மணிமாலை)
ஐயாசாமி முதலியார் (குணங்குடி நாதர் பதிற்றுப் பத்தந்தாதி)
கோவளம் சபாபதி முதலியார் (பஞ்சரத்தினம் - தோத்திரப் பாடல்கள்)
காயற்பட்டினம் ஷெய்கப்துல் காதிர் நயினார் லெப்பை (ஒருபா ஒருபஃது, தோத்திரப்பா, வாயுறை வாழ்த்து)
வேங்கடராயப் பிள்ளை (தோத்திரப்பா)

- போன்றோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

திருத்தணிகை சரவணவப் பெருமாள் ஐயர், தான் பாடிய நான்மணி மாலையில், "குருவாய் அடுத்தோர்க்கு அருள் சுரக்கும் கோதில் குணஞ்சேர் குணங்குடியா" என்று புகழ்ந்துரைக்கிறார்.

குணங்குடி மஸ்தானின் நூல்கள்
குணங்குடி மஸ்தானின் பாடல்கள் எளிமையும் கவிச் சிறப்பும் வாய்ந்தவை. சித்தர் இலக்கியத்தில் வரும் நாயக நாயகி பாவத்தில் பாடப்படும் 'மனோன்மணி'யை முன் வைத்துப் பல பாடல்களை எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள 'பராபரக் கண்ணி' முக்கியமானதொரு நூலாகும். தாயுமானவரது பாடல்களைப் போன்ற செய்யுள் அமைப்பும் தத்துவப் பின்புலமும் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது.

அகத்தீசர் சதகம்
ஆனந்தக் களிப்பு
நந்தீசர் சதகம்
நிராமயக் கண்ணி
பராபரக் கண்ணி
எக்காலக் கண்ணி
மனோன்மணிக் கண்ணி
முகியத்தீன் சதகம்
ஞானப் புதையல்

- போன்றவை குணங்குடி மஸ்தான் இயற்றிய நூல்களாகும்.

பாடல் சிறப்பு
குணங்குடி மஸ்தான் பாடல்கள் சொற்சுவையும், பொருட்சுவையும், ஞான வேட்கையும், தத்துவப் பின்னணியும் நிறைந்தவை.

பராபரக்கண்ணியில்,

அண்ட புவனமென்றும் ஆடுதிருக் கூத்தினையான்
கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே.

ஆதியாய் ஆண்டவனாய் அஃததுவாய் நின்றபெருஞ்
சோதியாய் நின்மலமாய் சூழ்ந்தாய் பராபரமே.

வேத மறைப்பொருளை வேதாந்தத் துட்கருவை
ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே.

- என்று சமயப் பொது நோக்கில் பாடியுள்ளார்.


முகியித்தீன் சதகத்தில்,

நீக்கமற எங்கெங்கும் நின்றுநிறை கின்றபொருள்
நேரில் என் முன்னிற்கவே

போக்குவரவு அற்ற பரிபூரண ஆனந்தமெப்
போதும் என் முன்னிற்கவே

- என்று பாடியுள்ளார்.


மறைவு
குணங்குடி மஸ்தான் சாஹிப் ஆகஸ்ட் 6, 1838 அன்று, 47ம் வயதில் இறையுடன் கலந்தார். அவர் வாழ்ந்த இடத்திலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. வடசென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் அவரது நினைவிடம் (தர்கா) அமைந்துள்ளது.
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline