| 
											 
											
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                             
                                            
	  | 
 
											
	  | 
 
											
												புதினங்களில் வரலாற்று நாவல்களுக்கென்று தனித்த ஓர் இடமுண்டு. தி.த. சரவணமுத்துப்பிள்ளை தொடங்கி கல்கி, அரு. ராமநாதன், அகிலன், நா. பார்த்தசாரதி, மீ.ப. சோமு, ஜெகசிற்பியன், விக்கிரமன், கோவி. மணிசேகரன், ஸ்ரீவேணுகோபாலன், கௌதம நீலாம்பரன் வரை பலர் வரலாற்று நாவல் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர். இந்த வரிசையில் குறிப்பிடத்தகுந்தவர் சாண்டில்யன். 
  பாஷ்யம் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் நவம்பர் 10, 1910 அன்று திருக்கோவிலூரில், சடகோபன் ஐயங்காருக்கும், பூங்கோதைவல்லி அம்மையாருக்கும் பிறந்தார். துவக்கக் கல்வி நன்னிலம் பண்ணை நல்லூர் திண்ணைப் பள்ளியில். சென்னை பச்சையப்பா, நேஷனல் மாடல் பள்ளிகளில் பள்ளி இறுதி வகுப்பு. திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும்போது ராஜாஜியின் தாக்கத்தால் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். சுதந்திரப் போரட்டம் அவரை ஈர்த்தது. சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டார். 1929ல் ரங்கநாயகியுடன் திருமணம். 1930ல் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். திரு.வி.க.வின் வார இதழான நவசக்தியில் பணியாற்றிய வெ. சாமிநாத சர்மாவுடன் தொடர்பு ஏற்பட்டது. சாண்டில்யனின் எதிர்வீட்டுக்காரர் கல்கி. 'திராவிடன்' இதழாசிரியர் சுப்பிரமணியமும் சாண்டில்யனுக்கு நண்பரானார். அவர்கள்அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். முதல் சிறுகதையான 'சாந்தசீலன்' திராவிடன் பத்திரிகையில் வெளியானது. கல்கி, தாம் ஆசிரியராகப் பணியாற்றிய ஆனந்த விகடனில் கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை வெளியிட்டு ஊக்குவித்தார். தொடர்ந்து சிறுகதைகளையும், கட்டுரைகளையும் சாண்டில்யன் எழுத ஆரம்பித்தார். பள்ளியில் சம்ஸ்கிருதத்தைப் பாடமாக எடுத்துப் பயின்றிருந்ததால் முறையாக, முழுமையாகத் தமிழ் பயில வேண்டும் என்ற ஆர்வத்தில் திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் தமிழ் கற்றார். 
  சாண்டில்யனின் எழுத்துத் திறமையை அறியவந்த சுதேசமித்திரன் ஆசிரியர் சி.ஆர். சீனிவாசன், அவரை தமது பத்திரிகையின் நிருபராக்கினார். மகாத்மா காந்தி உட்படப் பலரைப் பேட்டி கண்டு எழுதித் திறமையை வளர்த்துக் கொண்ட சாண்டில்யன், உதவி ஆசிரியராக உயர்ந்தார். சுமார் எட்டாண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' இதழில் துணையாசிரியர் பொறுப்பேற்றார். சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சுதேசமித்திரனில் சேர்ந்தார். பிரபல இதழ்களில் தொடர்ந்து கதை, கட்டுரை, நாவல்கள் வெளியாகத் துவங்கின. முதல் சிறுகதைத் தொகுப்பு 'ராணியின் கனவு' 1963ல் வெளியாகியது. முதல் நாவல் ‘பலாத்காரம்'. காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி அதற்கு முன்னுரை அளித்துப் பாராட்டினார். தமிழகத்தின் முதல் அரசியல் நாவலாகக் கருதப்படும் அது பின்னர் புரட்சிப் பெண் என்ற தலைப்பில் மீண்டும் வெளியிடப்பட்டது. 
  விஜயா-வாஹினி ஸ்டூடியோ அதிபர் பி. நாகிரெட்டி மூலம் சாண்டில்யனுக்கு திரைப்படத்துறை வாய்ப்பு வந்தது. 'ஸ்வர்க்க சீமா', 'என்வீடு' போன்ற படங்களுக்குக் கதை-வசனம் எழுதினார். பல படங்களின் கதை விவாதத்திலும், தயாரிப்பு நிர்வாகத்திலும் பங்கு பெற்றார். வி. நாகையா, கே. ராம்நாத் ஆகியோர் சாண்டில்யனின் நெருங்கிய நண்பர்களாயினர். அமுதசுரபியில் சாண்டில்யன் எழுதிய வரலாற்றுச் சிறுகதைகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதனால் வரலாற்றுப் புனைவுகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்த தீபம், ஜீவ பூமி, மலைவாசல் போன்ற வரலாற்றுப் புதினங்கள் குமுதம் வார இதழில் தொடர்களாக வெளிவர ஆரம்பித்தன. கன்னி மாடம், கடல் புறா, யவன ராணி, ராஜமுத்திரை, மன்னன் மகள், பல்லவ திலகம், ஜலதீபம், ஜலமோகினி, கடல்ராணி, கடல்வேந்தன், விஜய மகாதேவி எனப் பல வரலாற்றுப் புதினங்களை எழுதிக் குவித்தார். ஒவ்வொரு வாரமும் அவரது நாவல் வெளியாகும் இதழுக்காக மக்கள் காத்திருந்து வாசித்தனர். அவரது நாவல்கள் வெகுஜன மக்களின் வாசிப்பு ஆர்வத்துக்குத் தீனி போட்டதுடன், இதழ் விற்பனைக்கும் உதவியது. அதனால் சாண்டில்யன் நாவல் வெளியாகிறது என்றாலே கூடுதல் பிரதிகளை அச்சிட்டு வெளியிட்டனர்.
  தனது 'கடல்புறா' நாவல் முன்னுரையில் சாண்டில்யன், "பழந்தமிழர்கள் கடல் கடந்து செல்வதும், அந்நாடுகளின் வாணிபத்தில் மட்டுமின்றிப் போர்களில் கலந்து கொள்வதும் சர்வ சகஜமாக இருந்ததென்பதை அறிந்தேன். ஆகவே அவர்கள் சென்ற கடல் மார்க்கங்கள், அவற்றுக்கு உதவிய மரக்கல வகைகள், போர் முறைகள், இவற்றைப் பற்றிய பல நூல்களைப் படித்தேன். தமிழர் பரம்பரை எத்தனை வீர பரம்பரை, எத்தனை நாகரிகம் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது, எத்தனை அபாயங்களைத் தமிழர்கள் சமாளித்திருக்கிறார்கள் என்பதையறிந்தேன். அவற்றையெல்லாம் எனது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அந்த ஆசையின் விளைவுதான் 'கடல்புறா'. 'கடல்புறா'வைக் கலிங்கத்துப் பரணியின் சம்பவங்களுக்கு அடிகோலும் நூல் என்று கொள்ளலாம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். 
  சாண்டில்யன் நாவல்களில் வர்ணனை மிக அதிகமாக இருக்கும். வரலாற்று நாவல் என்பதால் வர்ணனைகளின் மூலம் பாத்திரத்தைக் கண்முன் நிறுத்துவதை வாசகனை வசப்படுத்தும் ஓர் உத்தியாக அவர் பயன்படுத்தினார். வரலாற்றுச் சம்பவங்களுடன் கற்பனை கலந்து, சிறப்பான நடையில் மனதைக் கவரும் வகையில் எழுதி வாசகர் மனதில் இடம்பிடித்தார். அவரது நாவல்களை ரா.பி. சேதுப்பிள்ளை, பேராசிரியர் கே.வி.ரங்கஸ்வாமி ஐயங்கார், டாக்டர் என். சுப்பிரமணியம் உட்படப் பல அறிஞர்கள் பாராட்டியிருக்கின்றனர். முன்னுரை எழுதித் தந்திருக்கின்றனர். | 
											 
											
												| 
 | 
											 
											
											
												"நல்ல கதைக்கோப்பும், கதை வேகமும், சொல்லாட்சியுமுள்ள கதை எத்தனை பெரிதாயிருந்தாலும் மக்கள் அதனைப் படிப்பார்கள். இந்த அம்சங்கள் இல்லாத கதை, எத்தனை சிறியதாக இருந்தாலும் மக்களின் மனத்தை ஆட்கொள்ளமுடியாது" என்று கூறும் சாண்டில்யன், "நல்ல எழுத்துக்கு வேண்டியது முதலில் உணர்ச்சி வேகம்; இரண்டாவது ஆழ்ந்த படிப்பு" என்கிறார். மேலும் அவர், "சிலர் 'சரித்திரக் கதைகள் இலக்கியமல்ல' என்று கூறுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இலக்கியம் எது என்பதிலுள்ள அறிவுக்குறைவே. சரித்திரக் கதைகளில் வீர, காதல் ரசங்கள் காரணமாக அவை இலக்கியமல்லவென்றால் புராணங்களும், இதர பெருங்காவியங்களும் அடிபட்டுப் போகும். இராமாயணம், மகாபாரதம், தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்கள் எல்லாவற்றையுமே தள்ளி விடும்படியாக இருக்கும். சாரமில்லாத, விரசமான கதை எழுதுவதல்லாமல் 'இதுதான் இலக்கியம்' என்று எழுதுபவர்களே சொல்லிக்கொள்ளும் கதைகள் தாம் மிஞ்சும்" என்கிறார்.   தனது எழுத்துப் பற்றி, "ஒரு நூலை எழுதும்போது யாரைத் திருப்தி செய்யவும் எழுதக் கூடாது. நல்லதை எழுத வேண்டும். கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எழுத வேண்டும். நமது நூல்களைப் படிப்பவர்கள் அலுப்புத் தட்டாமால் படிக்கவும், படித்த பின்பு அவர்கள் எண்ணங்களும் அறிவும் உயரவும் விசாலப்படவும் எழுத வேண்டும். இந்த நோக்கங்களுடன்தான் நான் எழுதுகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கும் சாண்டில்யன், மிகமிக எளிமையானவர். தான் ஒரு பெரிய எழுத்தாளர் என்ற பந்தாவோ அகம்பாவமோ அவரிடம் இருந்ததில்லை. பொது இடங்களில் 'தான் ஒரு பெரிய எழுத்தாளர்' என்று காட்டிக் கொள்ளவும் அவர் விரும்பியதில்லை. எல்லோருடனும் அவர் மிக இயல்பாக, சாதாரணமாக, எளிமையாகவே பழகினார். தமிழின் மிகவும் புகழ்பெற்ற நாவலாசரியர்களுள் சாண்டில்யனும் ஒருவர் என்று பேராசிரியர் கமில் சுவலபில் பாராட்டியிருக்கிறார். 
  சாண்டில்யன் எழுதியுள்ள 50க்கும் மேற்பட்ட நூல்களில் 42 சரித்திர நாவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனமோகம், செண்பகத் தோட்டம், நங்கூரம், மதுமலர் போன்றவை சமூக நாவல்கள். 'பொம்மை' பத்திரிக்கையில் ‘சினிமா வளர்ந்த கதை' என்ற பெயரில் அவர் எழுதிய சினிமா வாழ்க்கை அனுபவங்கள், பின்னர் விஜயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தாரால் நூலாக வெளியிடப்பட்டது. 'கமலம்' என்ற வார இதழின் ஆசிரியர் பொறுபேற்றுச் சிலகாலம் நடத்தியிருக்கிறார். தனது வாழ்க்கை வரலாற்றை 'போராட்டங்கள்' என்ற தலைப்பில் நூலாக்கியிருக்கிறார். 'பர்த் ஆஃப் நியூஸ்பேப்பர்' என்ற தலைப்பில் செய்தித் தாள்கள் வரலாறு குறித்த ஆவணப்படத்தைத் தந்திருக்கிறார். சாண்டில்யன் எழுதிய ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று நூலும், 'கம்பன் கண்ட பெண்கள்' என்ற இலக்கியத் திறனாய்வும் குறிப்பிடத்தக்கன. தியாகப்பிரம்ம சபா, கிருஷ்ண கான சபா என்ற இரு சங்கீத சபாக்களின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். உழைக்கும் பத்திரிகையாளர்களுக்காக இவர் தொடங்கிய தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கமே பின்னர் தென்னிந்தியப் பத்திரிகையாளர் சம்மேளனமாக மாற்றமடைந்தது.
  நோய்வாய்ப்பட்ட சாண்டில்யன் 1987, செப்டம்பர் 11 அன்று காலமானார். அவரது நூல்களைத் தொடர்ந்து வானதி பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. தமிழக அரசு சாண்டில்யனின் நூல்களை நாட்டுடைமையாக்குவதாக அறிவித்து, பின்னர் சாண்டில்யனின் வாரிசுகள் அதனை ஏற்காததால் கைவிட்டுவிட்டது. சாண்டில்யனின் மூத்த மகன் சடகோபன் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இளைய மகன் கிருஷ்ணன், வைஷ்ணவக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர். வேதவல்லி, புஷ்பவல்லி, விஜயவல்லி, பத்மா, லக்ஷ்மி என ஐந்து மகள்கள். பத்மா சாண்டில்யன் சிறந்த இசைவாணராவார்.
  பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, வரலாற்று நாவலாசிரியர் என்று பல துறைகளிலும் சாதனை படைத்த சாண்டில்யன், தமிழின் தனித்துவமிக்க வெகுஜன எழுத்தாளர்களுள் முக்கியமானவர்.
  அரவிந்த் | 
											 
											
												 | 
											 
											
											
												 | 
											 
											
											
												 | 
											 
                                            
												| 
												
												
												 | 
											 
                                            
											
											
                                            
												 | 
											 
											
												| 
													
													
																											
												 | 
											 
											
												| 
													
												 | 
											 
                                         
									 |