| 
											
											
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
	  | 
											
	  | 
											
												எந்த இலக்கியத்திலும் பெண்ணியச் சிந்தனைகளுக்குத் தனித்த இடம் உண்டு. பெண்ணின் வலியை, வேதனையை, சோகத்தை, தேவைகளை என அவர்களது உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டும் இவ்வகை எழுத்துக்கள், வை.மு.கோதைநாயகி காலத்தில் இருந்தே உள்ளன. தற்காலத்தில் கவிதையின் வீச்சும், உரைநடையின் வளமும் கொண்ட எழுத்துக்களைத் தந்து, மிக முக்கிய பெண்ணியப் படைப்பாளியாக அறியப்படுபவர் திலகபாமா. 
 
   ஒலி வடிவத்தில் கேட்க  - Audio Readings by Saraswathi Thiyagarajan
   
  திண்டுக்கல் மாவட்டத்தின் பட்டி வீரன் பட்டியில் பிறந்த திலகபாமா, பள்ளிப்படிப்பை அவ்வூரிலேயே முடித்தார். மதுரை ஃபாத்திமா கல்லூரியில் வணிகவியல் படிப்பு. கல்லூரி காலத்திலேயே  எழுத்தார்வம் துவங்கி விட்டது. கல்லூரி இதழ்களில் வெளிவந்த கவிதைகளும், கவிதைப் போட்டியில் பெற்ற பரிசுகளும், இவருக்குள்ளிருந்த கவிஞரை இனம் காட்டின. தீவிரமாகக் கவிதை வெளியில் இயங்க ஆரம்பித்தார். திருமணத்திற்குப் பிறகு சிவகாசியில் வாசம். அங்கு பாரதி இலக்கியச் சங்கம் என்ற அமைப்பை நிறுவி தமிழ் இலக்கிய வெளியில் பயணத்தைத் தீவிரப்படுத்தினார்.
  "வாழ்வின் முரண்கள் தான் என்னை எழுத வைத்தது. நினைத்தபடி இல்லாத வாழ்வு எழுப்பிய கேள்விகள் வார்த்தைகளுக்குள் பேசத் துவங்கியதுதான் எனது தொடர் கவிதைப் பயணம்" என்று கூறும் திலகபாமா, 'சூரியனுக்கும் கிழக்கே', 'சூரியாள்', 'எட்டாவது பிறவி', 'கண்ணாடி பாதரட்சைகள்', 'கூர்ப்பச்சையங்கள்',      'கூந்தல் நதி கதைகள்' போன்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். இவை வெளியானபோது பரவலாக வாசக கவனத்தையும், குறிப்பிடத்தக்க விமர்சனங்களையும் பெற்றது. "உடல்மொழியைப் பெண் மொழியாக முன்னிறுத்தும் கவிதைகளே மிகுதியான கவனிப்பை பெறும் இக்காலத்தில், திலகபாமாவின் கவிதைகள் பெண்களின் போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் மீட்டெடுக்கும் வகையில் உள்ளது" என்கிறார் பேராசிரியர் சுசீலா. 
 
   |  | கருத்துக்களை சம்பவங்களாலும், பாத்திரப் படைப்பினாலும் நுட்பமான மொழியில், தேர்ந்த உரையாடல் மூலம் சித்திரித்து, வாசக மனங்களில் தொடர் சிந்தனைகளை எழச் செய்வதே திலகபாமா எழுத்தின் பலம். |    |  
   தொடர்ந்து கவிதை வெளியில் இயங்கி வந்த திலகபாமா பின்னர் சிறுகதைக் களத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். வடக்கு வாசல் போன்ற இணைய இதழ்களிலும், இலக்கியச் சிற்றிதழ்களிலும் இவர் எழுதிய கதைகள் பரபரப்பான விமர்சன அலைகளைத் தோற்றுவித்தன. இலங்கையில் இருந்துவரும் 'வீரகேசரி' பத்திரிக்கையும், லண்டனில் உள்ள பூபாள ராக அமைப்பும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை முதல் பரிசைப் பெற்றது.  இவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'நனைந்த நதி', 'மறைவாள் வீச்சு' என்று இரு சிறுகதைத் தொகுப்புகளாக காவ்யா பிரசுரம் மூலம் வெளியாகியுள்ளன.
  இவரது கதைகள் பெண்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், அவலம், ஆணாதிக்கம், சமத்துவத்திற்காக ஏங்கும் பெண்கள் காட்டும் எதிர்ப்புணர்வு இவற்றைச் சொல்வதாக மட்டுமல்லாது வாழ்வின் பல கூறுகளை, நிதர்சனங்களை கவித்துமான நடையில் விளக்கிச் சொல்வதாயும் அமைந்திருக்கின்றன. சில கதைகள் சராசரி வாசகர்களால் எளிதில் உள்வாங்கிக் கொள்ள முடியாத தடுக்கு மொழிநடையில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. கருத்துக்களை சம்பவங்களாலும், பாத்திரப் படைப்பினாலும் நுட்பமான மொழியில், தேர்ந்த உரையாடல் மூலம் சித்திரித்து, வாசக மனங்களில் தொடர் சிந்தனைகளை எழச் செய்வதே திலகபாமா எழுத்தின் பலம் . | 
											
											
												| 
 | 
											
											
											
												பயணம் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட திலகபாமா, ஐரோப்பா உட்பட உலகநாடுகள் பலவற்றுக்கும் சென்றிருக்கிறார். அங்கு கருத்தரங்குகளில் கலந்து கொண்டு சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருப்பதுடன், விவாதக் களங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார். இவரது இலங்கை, இலண்டன், துருக்கி, பாலித்தீவு ஆகிய வெளிநாடுகளில் மேற்கொண்ட பயண  அனுபவங்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் 'திசைகளின் தரிசனம்' (காவ்யா வெளியீடு) பயண நூல்கள் வரிசையில் குறிப்பிடத்தக்கது.
  கவிதை, சிறுகதை, கட்டுரை என்னும் நிலைகளைக் கடந்து சிறந்த படைப்பாளியாகச் செயல்பட்டு வரும் இவர், தமிழ் புதுக்கவிதை வரலாற்றின் முன்னோடிகளில் ஒருவரான சி. கனகசபாபதியின் கட்டுரைகள் நூலாக வெளிவர மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறார். 'வெற்றிகளின் மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு' என்ற தலைப்பில் 'இலக்கிய வரலாறு' பட்டம் பெற்ற திருமதி லக்ஷ்மி அம்மாள் பற்றி இவர் தயாரித்து இயக்கி வெளியிட்டுள்ள குறும்படம் மிகுந்த கவனத்தைப் பெற்ற ஒன்று.
  தனது முன்னோடியாகத் தான் கருதுவது பாரதியைத்தான் என்று கூறும் திலகபாமா, சமகாலப் படைப்பாளிகளில் தன் மனம் கவர்ந்தவர்கள் அனார் மற்றும் கீதாஞ்சலி என்கிறார். இவர் இசை, புகைப்படம் எடுத்தல் ஆகிய கலைகளிலும் தேர்ந்தவர். ஓவியம் அறிந்தவர். பரத நாட்டியம் தெரிந்தவர். பல்வேறு சிந்தனைகளை உள்ளடக்கிய 'புதுமைப்பித்தனில் பூமத்தியரேகை' என்ற இவரது கட்டுரைத் தொகுதி முக்கியமான ஒன்று. சிற்பி இலக்கிய விருது, கவிதை உறவு விருது, திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது, புஷ்கின் இலக்கிய சங்க விருது உட்படப் பல விருதுகளை வென்றுள்ளார் திலகபாமா. 
  தனது பாரதி இலக்கியச் சங்க அமைப்பின் மூலம் பல்வேறு தமிழ் இலக்கிய வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வரும் இவர், தமிழ்பால், இலக்கியத்தின்பால் ஆர்வமுள்ளவர்களை ஒன்று திரட்டி, பிரபல இலக்கியவாதிகளை வரவழைத்து, தமிழ் இலக்கிய விவாதங்களை, உரையாடல்களை நிகழ்த்தி வருகிறார். பல படைப்பாளிகளை ஒன்றிணைத்து பல்வேறு இலக்கியக் கருத்தரங்குகளை நடத்தி வருவதுடன், கவிதைகளுக்கு சி. கனகசபாபதி நினைவுப் பரிசும், சிறுகதைகளுக்கு சி.சு. செல்லப்ப்பா நினைவுப் பரிசும் வழங்கி வருகிறார். 
  தனது கருத்துக்களை www.thilagabama.com என்ற இணையதளத்தில் தொடர்ந்து பதிவு செய்து வரும் இவர், தற்போது  சிவகாசியில் இயங்கி வரும் மதி மருத்துவமனையின் நிர்வாகியாக இருக்கிறார்.
  அரவிந்த் | 
											
											
												 | 
											
											
											
												 | 
											
											
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |