| 
											
											
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												 எண்பதுகளுக்குப் பின்னர் தமிழின் கதை சொல்லல் மரபில் புதிய போக்குகள் உருப்பெற்றன. புனைவுகளில் வரும் மனிதர்கள் மிகமிகச் சாதாரணமானவர்கள். இவர்களது வாழ்வியல் மனஇயக்கம் பல்வேறு நிலைப்பட்ட பன்முக இயக்கமாக வெளிப்பட்டது. கதைக் கட்டமைப்பும் மொழிதல் பண்புகளும் புதிதாகப் பிறந்தன. நவீனத்துவத்தின் ஊடாட்டம் பன்முகம் கொண்டதாக முன்னோக்கி நகர்ந்தது.
  இந்தப் பின்புலத்தில்தான் சுரேஷ்குமார இந்திரஜித் என்பவர் படைப்புலகில் உள்நுழைகின்றார். இவர் சிறுகதை எழுத்தாளராக 1981களில் அறிமுகமாகி இன்றுவரை கவனிப்பு மிகு எழுத்தாளராக உள்ளார். 1982களில் இவரது 'அலையும் சிறகுகள்' என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. தொடர்ந்து  இவரது இன்னொரு தொகுப்பான 'மறைந்து திரியும் கிழவன்' 1993களில் வெளிவந்தது. இத்தொகுப்பு மூலம் தீவிர எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் இவர் தனிக் கவனம் பெற்றார்.
  இவர் அதிகமாக எழுதிக் குவிக்கும் எழுத்தாளர் ரகமல்ல. ரொம்பவும் நிதானமாக இயங்கும் நவீன படைப்பாளி. 'நவீனம் என்பது புதியது பழையது அல்லாதது. ஏற்கனவே சொல்லப்பட்ட கோணங்களில் இருந்தும் பார்வைகளில் இருந்தும் வடிவங்களில் இருந்தும் விடயங்களைப் பார்க்காமல் அவையல்லாத வேறு முறைகளில் இருந்து பார்க்கும் போது நவீனம் பிறக்கிறது. பிராந்தியத்துக்கு பிராந்தியம், மொழிக்கு மொழி இந்த நவீனம் வேறுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்நவீனம் பழையதாக மாறும்போது அதனைத் துறக்கக் கூடிய சூழல் உருவாகும். எழுத்து, பார்வை, சிந்தனை, கோணம் இவையெல்லாம் புதியதாகும் போது பழையவற்றை அழித்துக் கொண்டு நவீனம் உயிர்க்கிறது.' இவ்வாறு நவீனம் பற்றிய பிரக்ஞையில் இயங்கிக் கொண்டிருப்பவர் சுரேஷ்குமார இந்திரஜித்.
  தன்னளவில் நவீனத்தைப் புரிந்து கொள்ளல் மூலம் தனக்கான நடை, மொழிதல் பண்புகள் ஆகியவற்றைத் தெளிவாக உணர்ந்து கடந்து செல்லும் முறைமை இவருக்கு இயல்பாகக் கைகூடி வருகிறது. இவரது பார்வையில் தமிழ்ச் சிறுகதை வரலாறு என்பது முதலில் கு.ப.ரா. புதுமைப்பித்தன், மௌனி இவர்களிடமிருந்து தொடங்குகிறது. குறிப்பாக இவர்கள்தாம் சிறுகதைப் பரப்பில் 'புதுத்தரப்பு' என்கிற பார்வைத் தேடல் இவரிடம் உண்டு. இத்தகைய படைப்பனுபவத் தேடல் இவரது கருத்துநிலைப் புலமாகவும் பார்வைக் கோணமாகவும் உருத்திரட்சி பெறுகிறது. இதனால் புலன்களால் அறியப்படும் புறவுலகத்தின் பின்னணியில் அகவயமான உலகத்தை எழுதுதல் இவரிடம் தனிச்சிறப்பாக உள்ளது. இவரது படைப்புலகம் உணர்த்தும் தரிசனம் இவ்வாறுதான் வெளிப்படுகிறது. அதாவது புறவுலகத்தையும் அகவுலகத்தையும் ஒழுங்கே இணைக்கும் பண்பாக உள்ளது. புறவுலக எதார்த்தத்தின் விளைவாக அகத்தில் தோற்றுவிக்கும் காட்சிப் படிமம் அல்லது தோற்றம் மூலம் வெவ்வேறு தளங்களில் படைப்பனுபவங்களை வாசகருக்குள் கடத்தும் உந்துதல் பெற்ற கதையாடல்களை வளர்த்துச் செல்லும் தனிப்பண்பு கொண்டவர் சுரேஷ்குமார இந்திரஜித். | 
											
											
												| 
 | 
											
											
											
												இவரது கதைகள் மனித மனத்தின் நுணுக்கங்களை வெளிப்படுத்துவதில் அவற்றினளவில் தர்க்கரீதியான பின்னல்களைக் கொண்டுள்ளன. சமூக நிகழ்ச்சிகளை மட்டுமல்லாமல், மனித உணர்வுகளின் சுளிப்புகள் ஓட்டங்கள் மோதல்கள் யாவும் அறிவுத் தளத்தில் இயங்கும் வேகத்தின் அழுத்தத்தையும் பதிவு செய்யும் முறைமை சாதாரணமாக உள்ளது. இதுவே இவரது படைப்பாக்கத் திறனின் புதிய அனுபவத் திரளாகவும் மேற்கிளம்புகிறது. பல்வேறு சிக்கல்களும் குழப்பங்களும் நிரம்பிய அகபுற உலகின் ஒத்திசைவு நெருக்கம் கதைகளாக விரியும்போது எத்தகைய மனித பிம்பங்கள் நம்முடன் உரையாடும் என்பதற்கு இவரது படைப்புக் களம் தெளிவான சான்று.
  'நான் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் போதே என்னுடைய காதலியைப் போய்க் கட்டிப்பிடித்துக் கொள்ளலாம். இது இயல்புதான். நிறையப்பேர் இந்தச் சுபாவத்தோடு இருப்பவர்கள்தாம். என்னுடைய கதைகளில் இந்த விடயம் அதிகமாகப் பதிவாகிறது. தண்ணியடித்துக் கொண்டிருக்கும் போதே கல்யாணம் செய்து கொண்டு குழந்தை பெற்று குழந்தையைப் படிக்க வைப்பது வரை நினைத்துவிட்டு மீண்டும் அடுத்த டம்ளரைக் குடிக்கத் தொடங்கும் கதாபாத்திரம் என் கதையில் இருக்கிறது' என்று சுரேஷ்குமார இந்திரஜித் குறிப்பிடுவதில் உள்ள நேர்மை மற்றும் மன இயக்கம் முக்கியம். பொதுவாக மனித சுபாவம் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்யாது; அது பன்முக ரீதியில் குழப்பமாக, ஆனால் அதற்கான ஓர் ஒழுங்கமைவில் ஊடாட்டம் நிகழ்த்திக் கொண்டிருப்பதைக் காணலாம்.
  இவரது படைப்புலகத்துடன் உறவு கொள்ளும் எந்தவொரு தேர்ந்த வாசகரும் அவரவர் வாசிப்பு அனுபவம் சார்ந்து படைப்பனுபவங்களை வாசக அனுபவங்களாக தள மாற்றம் செய்ய முடியும். இது பொதுவான வாசகத்தளம் சார் பண்பாகப் பரிணமித்தாலும் சுரேஷ்குமார இந்திரஜித் போன்ற தலைமுறைப் படைப்பாளிகளது படைப்பனுபவம் வாசகர்களிடையே ஏற்படுத்தும் எதார்த்தமும் அனுபவமும் மிக வித்தியாசமாகவே உள்ளன. தமிழ்ச் சிறுகதை மரபில் இதற்கான அடையாளங்கள் நிறைய உள்ளன. இந்த மரபின் தொடர்ச்சியில் தான் சுரேஷ்குமார இந்திரஜித் எனும் படைப்பாளியின் சிறுகதைகள் அமைந்துள்ளன. அந்தப் படைப்பனுபவத்துடன் நாம் உறவும் ஊடாட்டமும் கொள்வது நமக்குள்ளே மறைந்து திரியும் மனிதர்களைக் கண்டுபிடிக்க உதவும்.
  தெ. மதுசூதனன் | 
											
											
												 | 
											
											
											
												 | 
											
											
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |