| 
											
											
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												 நவீன தமிழ் இலக்கிய சிந்தனையிலும் அதன் பயில்விலும் 'கநாசு' என்ற பெயர் தவிர்க்க முடியாது. சுமார் ஐம்பது ஆண்டுகளாக கநாசு என்ற பெயரில் அவர் எழுதி வந்த எழுத்துக்கள், அதன் வழியே அவரது சிந்தனையும் விமர்சனமும் பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகி வந்தவை.
  க.நா.சு. என்று அறியப்பட்ட க.நா. சுப்பிரமண்யம் கும்பகோணத்துக்கும் மாயவாரத்துக்கு மிடையே இருந்த திருவாலங்காடு என்னும் இடத்தில் கந்தாடை எனும் சிறப்புப் பெயர் பெற்ற பிராமணக் குலத்தில் பிறந்தவர். இவரது தந்தை யார் நாராயணசாமி ஐயர் எ·ப் ஏ படித்துவிட்டு அரசு உத்தியோகத்தில் மத்திய அரசு ஊழியராக தபால் தந்தி இலாகாவில் தபால்துறை அதிபராக சுவாமிமலைக்கு மாற்றலானார்.
  சுவாமிமலையில் தான் 31.1.1912 இல் க.நா.சு. பிறந்தார். அங்கேயே தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். ஆங்கிலக் கல்வி வழியே கற்க தந்தையார் ஒழுங்குகள் செய்து கொடுத் தார். தந்தையார் ஆங்கில மோகம் கொண்டவர். தனது மகனும் ஆங்கிலம் கற்று, அதில் எழுதி பேரும் புகழும் அடைய வேண்டும் என்பதையே தந்தையார் விரும்பி இருந்தார்.
  தமிழ் இலக்கியத்தில் கொண்ட ஈடுபாடு, அக்கறை தமிழில் எழுத வேண்டுமென்ற உந்து தலை க.நா.சுவுக்கு கொடுத்தது. இருப்பினும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்று நன்கு தேர்ச்சி மிக்கவாராகவும் இருந்தார். ஆங்கில இலக்கியத் தில் தாடனமிக்கவராகவே வளர்ந்து வந்தார். ஆன்மீக அனுபவத்திற்காக தமிழில் எழுதத் தொடங்கினார்.
  1928-34 காலகட்டத்தில் ஒரு இலக்கில்லாமல் ஆங்கிலக் கட்டுரைகளை எழுதி வந்தார். 1936 நவம்பரில் மணிக்கொடி இதழில் இவரது 'ரங்கம்' என்ற கதை வெளியானது. தொடர்ந்து சூறாவளி, சந்திரோதயம், தேனீ முதலிய பத்திரிகைகளில் எழுதி ஐம்பதுகளில் சரஸ்வதியிலும் தொடர்ந்து எழுதினார். தொடர்ந்து 'எழுத்து' , 'இலக்கிய வட்டம்' என க.நா.சுவின் படைப்புகள் வெளியா யின. 1965 வரை கலைமகள் காரியாலயம் க.நா.சுவின் பல நூல்களை வெளியிட்டது.
  'பொய்தேவு' என்ற நாவலை 1946ல் எழுதி வெளியிட்டார். இந்த புனைகதை க.நா.சுவின் படைப்பாளுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. தொடர்ந்து நாவல் எழுதுவதில் அலாதிப்பிரியம் உடையவராகவே இருந்துள்ளார். சுமார் 20 நாவல்கள் வரை எழுதி வெளியிட்டுள்ளார். ஆயினும் அச்சில் வராமல் இருக்கும் எழுத்துப் பிரதிகளும் அதிகம் உள்ளன.
  நாவல் மட்டுமல்ல சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு போன்ற முயற்சிகள்கூட இன்னும் நூலுருப் பெறாமல் எழுத்துப் பிரதி களாகவே உள்ளன. எழுத்தும் வாசிப்பும் கநாசுவின் உயிர்மூச்சாகவே  இயங்கி உள்ளது. ஒவ்வொரு நாளும் இத்தனை பக்கம் எழுத வேண்டுமென்பதில் பிடிவாதமிக்கவராகவே இருந்துள்ளார்.
  கநாசு சென்னை வாழ்க்கை, டில்லி வாழ்க்கை பின்னர் சென்னை வாழ்க்கை என வாழ்ந்துள்ளார். டில்லியில் வாழ்ந்த போது அவர் ஆங்கில பத்திரிகை யாளராகவே வாழ்ந்துள்ளார். எழுத்தை நம்பி வாழ்க்கை நடத்தவேண்டுமென்பதாகவே கடைசி வரை இருந்துள்ளார்.
  இலக்கியத்தை நேரடியாகவே உணர்ந்து அனுப விக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். எந்தக் கட்சி இலக்கியப் போக்குகளுக்கும் ஆட்படாதவர். அத்தகைய இலக்கியப் போக்கு களுடன் கடுமையான அபிப்பிராயங்களை விமரிசனங் களை முன்வைத்தார். 'ரசனை வழி விமரிசனம்' சார்ந்து இயங்கியவர். தமிழ் இலக்கியத்தின் போக்குகளை ஆங்கிலம் வழியே உலகுக்கு எடுத்துக் காட்டியவர். ஆங்கில இலக்கிய மூலங்களை போக்குகளை தமிழுக்கு கொண்டு வந்தவர். 
  தமிழ் இலக்கியத்தை உலக இலக்கியப் போக்கு களுடன் பரிச்சயம் கொள்ளச் செய்ய வேண்டும். அதன் வளங்கள் தமிழுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டு செயற்பட்டவர். இவரது மொழிபெயர்ப்பு நூல்கள் இதற்கு நல்ல உதாரணம். | 
											
											
												| 
 | 
											
											
											
												தமிழின் பழைய இலக்கியங்கள் தொடங்கி நவின இலக்கியம் வரை அவற்றின் 'கலை நுட்பங்கள்', 'இலக்கிய விசாரம்' செய்வதில் கடுமையாகவே முயற்சி செய்துள்ளார். ''முரண்களும் அழகாகத் தான் இருக்கின்றன'' . ''இலக்கியத்தில் மட்டும் எந்த ஒருவனது பார்வையும் சரியானது என்று அடித்துச் சொல்லிவிட முடியாது''. ''இலக்கியாசிரியன் சொல்லாமல் விடுகிற அனுபவம் உண்டு'' இது போன்ற சிந்தனைகளை தனது கலைநுட்பம் எனும் நூலில் இழையோட விடுகிறார்.
  இடதுசாரி மரபிலிருந்து கநாசு அதிகமாகவே தாக்கப்பட்டார். ஆனாலும் கநாசு தனது நோக்கில், பார்வையில் கலை இலக்கியம் பற்றிய மதிப்பீடுகளை அபிப்பிராயங்களை விமரிசனங் களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிக் கொண்டே இருந்தார்.
  நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தின் நோக்கும் போக்கும் குறித்து தனது சிந்தனை வழியே விமரிசனங்களை முன் வைத்து வந்தவர்.
  தனது நாவல்களில் வாழ்க்கை பற்றிய அவரது விமரிசனம் கருத்து வடிவில் இல்லாமல் மனிதர்களையும் அவர்களது யதார்த்த வாழ்க்கை சூழல்களையும் படம் பிடித்தன. மேலும் இவற்றுக் கிடையில் ஏற்படும் முரண்பாடுகளை இலக்கிய மாக சித்தரிக்கும் பொழுது வாழ்க்கை பற்றிய விமரிசனம் அதற்குள் அடங்கும் என நம்பினார். பொய்த்தேவு முதலிட்ட நாவல்கள் இதை நன்கு மெய்ப்பிக்கும்.
  தமிழில் படைப்பிலக்கியவாதியாக கநாசு அறியப்பட்டதைவிட ஒரு விமரிசகராகவே நன்கு அறியப்படுகிறார். அந்தளவிற்கு அவர் எழுதிக் குவித்துள்ள கட்டுரைகள் அடங்கும். அவர் மறைவு வரை (16.12.1988) கநாசு எழுதிய எழுத்துக்கள் இன்றுவரை கநாசுவின் பன்முக ஆளுமையை எடுத்துக் காட்டும்.
  கநாசு வாழ்ந்த போதும் சரி, இன்றும் சரி கநாசு வழி வந்த இலக்கியத் தடம், சிந்தனைத் தளம், தமிழ் கலை இலக்கியப் பயில்வில் முனைப்பான இடம் வகிக்கிறது.
  படைப்புகள்
  நாவல்கள்
 - சமூக சித்திரம்
 - ஏழு பேர்
 - நளினி
 - பெரிய மனிதன்
 - பொய்த்தேவு
 - தாமஸ் வந்தார்
 - பித்தப்பூ
 - அவரவர்பாடு
 - ஒருநாள்
 - தந்தையும் மகளும்
 - சிறுகதை
 - அழகி
 - தெய்வ ஜனனம்
 - கநாசுவின் சிறுகதைத் தொகுப்பு 1,2,3
 - விமரிசனம்
 - விமரிசனக்கலை
 - இலக்கிய விசாரம்
 - நாவல்கலை
 
  மற்றும்
 -  நோபல் பரிசு பெற்ற மொழிபெயர்ப்பு நூல்கள் சுமார் 15க்கு மேல்
 - படித்திருக்கிறீர்களா? மூன்று பாகங்களில் 36 நாவல்களை அறிமுகம் செய்கிறார்
 - உலக இலக்கியம் (10 அறிமுகம்)
 - உலகத்து சிறந்த சிறுகதைகள் தொகுப்பு - அறிமுகம்
 - முதல் ஐந்து தமிழ் நாவல்கள்
 
 
  தெ. மதுசூதனன் | 
											
											
												 | 
											
											
											
												 | 
											
											
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |