| 
											
											
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												 தமிழ்ச்சூழலில் வ.வே.சு. ஐயர் என்று அறியப்பட்டவர் தான், வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர். இவர் அந்நிய ஆங்கில ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்துப் போராடிய தலைமுறையினருடன் தன்னையும் இணைத்துக் கொண்டவர். அரசியலில் தீவிரமாக உள்நுழைந்தாலும் இலக்கிய எழுத்துப்பணியிலும் தன்னை வெளிப்படுத்தியவர். விடுதலை வீரர் என்பதற்கும் அப்பால் அவரது இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய வரலாற்றில் பின்னிப்பிணைந்துள்ளது.
  நவீன தமிழ் இலக்கியப் பிரக்ஞையின் முகிழ்ப்புக் காலத்தில் உருவான ஆளுமை வ.வே.சு. ஐயர் எனலாம். பாரதியார், மாதவையா, வ.வே.சு. ஐயர் என்ற தலைமுறை தமிழில் சிறுகதை உருவாக்கத்தின் முக்கியமானவர்கள். முன்னைய இருவரைவிட வ.வே.சு. ஐயருடைய கதைகளிலே சிறுகதை உருவம் பூரணமாக வெளிப்படும் தன்மையைக் காணலாம்.
  வ.வே.சு. ஐயர் திருச்சி வரகனேரியில் 2.4.1881இல் பிறந்தார். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பிஏ பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் பயின்று வழக்கறிஞராகவும் தொழில் புரிந்தார். மேலும் பாரிஸ்டர் படிப்புக்காக 1907இல் லண்டன் சென்றார். அங்கு விநாயக தாமோதர சாவர்க்கரின் அறிமுகம் கிடைத்தது. இதன் பின்னர் தீவிர அரசியலில் நாட்டம் கொண்டவராக மாறினார். 1908 இல் அண்ணல் காந்தியை சந்தித்தார். லண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் 'இந்தியா' பத்திரிகைக்குக் கட்டுரைகள் எழுதிவந்தார். 
  ஐயர் தீவிரக்குணம் கொண்டவர். பல இளைஞர்கள் ஆயுதப்பயிற்சி பெறுவதற்கும் இவர் காரணமாக இருந்துள்ளார். பிரெஞ்ச், ஆங்கிலம், லத்தீன், பஞ்சாபி, வடமொழி ஆகிய மொழிகளில் தேர்ந்தவர். 1910இல் புதுச்சேரி வந்தார். தொடர்ந்து 'இந்தியா'வில் கட்டுரைகள் எழுதி வந்தார். பல மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். கம்பராமாயணப் பாலகாண்டப் பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார்.
  ஐயரின் 'குளத்தங்கரை அரசமரம்' சிறுகதைத் தொகுப்பு 1917இல் புதுச்சேரியில் வெளி வந்தது. அத்தொகுதி வ.வேசு. ஐயரின் படைப்பு மனோபாவத்தை, அதன் ஆழங்களை நுட்பமாகத் தமிழுக்கு வெளிப்படுத்தியது. 
  படைப்பாளியும் விமரிசகருமான தொ.மு.சி. ரகுநாதன், ஐயர் பற்றிக் குறிப்பிடுவது நமது கவனத்திற்குரியது:
  "இன்றைய சிறுகதை வளர்ச்சிக்கு வ.வே.சு. ஐயர்தான் சரியான வழிகாட்டி. அவருடைய நடைத்தெளிவு ஒருபுறம் இருக்க, கதாம்சம் பிறந்த மேனியுடனேயே காட்சியளிக்கிறது. வ.வே.சு. ஐயரின் அடிச்சுவட்டிலே சென்று, பின் தனக்கென புதுவழி ஏற்படுத்திக் கொண்டவர் கள் தான் இன்றைய கதாசிரியர்கள். வ.வே.சு ஐயர்தான் இருபதாம் நூற்றாண்டின் சிறுகதை வளர்ச்சிக்கு மூலபுருஷர். வ.வே.சு.ஐயர் பாரதி முதலியவர்களின் தமிழ்த் தொண்டினால் எழுந்த ஆர்வமும், நாட்டின் தேவையும் தமிழை இலகுவாக்கிக் கொடுத்தது''.
  ரகுநாதன் மட்டுமல்ல, க.நா. சுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள்கூட ஐயரின் இலக்கிய ஆளுமையைப் பெரிதாகவே மதிப்பிடுகின்றனர். பாரதியார் மகள் செல்லம்மாள்பாரதியும் ஐயரின் கதைகள் மீது ஈர்க்கப்பட்டவர். அவர் குளத்தங்கரை அரசமரம் கதை குறித்து பாரதியார் சரித்திரத்தில் எழுதியிருக்கிறார்.
  ''ஸ்ரீ வ.வே.சு.ஐயர் சோகரசமாகக் கதைகள் எழுதுவதிலேயே பிரியங் கொண்டவர். 'குளத்தங்கரை அரசமரம்' என்ற கதையைப் பாதி எழுதியவுடன் எங்களிடம் படித்துக் காண்பித்தார். மறுநாள் பாரதியார் மட்டும் அவர் வீட்டுக்குப் போயிருந்தார். திரும்ப வீடு வந்ததும் ''அப்பா, ஐயர் கதையை எவ்விதம் முடித்திருக்கிறார்?'' என்று தங்கம்மாள் கேட்பானேன்? அந்தப் பேதைப் பெண் ருக்மணியைக் குளத்தில் தள்ளியாயிற்று என்று சிறிது வருத்தத்தோடு சொன்னார்.'' | 
											
											
												| 
 | 
											
											
											
												ஐயரின் கதைகள் பற்றி புதுமைப்பித்தன் கூறுகையில் "அவருடைய கதைகளில் பாலையின் வெக்கை நம்மைப் பொசுக்கும் முகலாய நந்தவனத்து அந்தப்புரங்களின் வைபவம் நம்மைக் களிப்பூட்டும். கிரேக்க தேசத்துக் கடவுளர் நம்முடன் உறவாடுவர். பிரெஞ்சுப் போர்க்கள ரத்தப் பயங்கரம் நம்மை மிரட்டும். பிறநாட்டு மரபுகளையும் பெயர்களையும் நம்மால் ரசிக்க முடியாது என இன்றைய விமரிசகர்கள் சிலர் சொல்லிக் கொண்டிருப்பதற்குத் தகுந்த பதில் அவர் கதைகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
  ஐயர் எழுதியனவாக இன்று நமக்கு கிடைத்துள்ள கதைகள் எட்டு (மங்கையர்க் கரசியின் காதல் - அல்லயன்ஸ் கம்பெனி சென்னை - 1953). அவற்றுள் நான்கு கதைகள் மேனாட்டு இலக்கியப் பரிச்சயம் காரணமாகத் தோன்றியவை. அழேன் ழக்கே, எதிரொலியாள், அனார்க்கலி, லைலா-மஜ்னூ என்பவையே அவை. மற்றைய கதைகளுள் ஒன்று வரலாற்றுக் கதை. ஏனைய மூன்றும் தழுவல் கதைகள்.
  ஆழமான தமிழ் இலக்கியப் பயிற்சியும், மேனாட்டு இலக்கியப் பயிற்சியும், பன்மொழி அறிவும், அவரது சிந்தனையையும் படைப்பு மனநிலையையும் பண்படுத்தியது எனலாம். இதனால் தமிழில் எழுதும் அதேநேரம் தமிழுக்குப் புதுவளங்கள் கொண்டு வந்து சேர்க்க மொழிபெயர்ப்பு முயற்சியிலும் ஈடுபட்டார். மேலும் தமிழின் வளத்தை, பெருமையை, தமிழர் அல்லாதோர் புரிந்து கொள்ளவும் சில நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்தார். குறிப்பாக, தமிழ் இலக்கியத்தை ஆங்கில மக்களுக்கு அவர்களது இலக்கிய மரபுகளுக்கிசைய அறிமுகம் செய்தவர். திருக்குறள் மொழிபெயர்ப்பும், Kamba Ramayanam - A study  என்னும் நூலும் தமிழின் வளத்தை ஆங்கில மக்களுக்கு உணர்த்துவன. நமக்கும்தான்.
  ஐயர் எழுதிய சிறுகதைகள் அவரது இலக்கியக் கொள்கையை முழுமையாக வெளிப்படுத்துவன. கதைகள் "கவிதைகள் நிரம்பியனவாய் ரஸபாவோ பேதமாய் இருக்க வேண்டுமென்பது எனது அபிப்பிராயம்" என ஐயர் மங்கையர்க்கரசியின் காதல் தொகுதிக்கு எழுதிய முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். சிறுகதை என்னும் மேனாட்டு இலக்கிய உருவத்தை, புதியதோர்  இலக்கிய வகையைப் படிக்கிறோம் என்ற உணர்வு எழாது, தமிழுக்கு இயல்பான ஒன்றையே படிக்கிறோம் என்னுமாறு படைத்துள்ளார்.
  குளத்தங்கரை அரசமரம் தமிழ்நாட்டுப் பிரச்சனைகளையே பேசுகின்றது. தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் வ.வே.சு. ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் கதை குறிப்பிடத்தக்க கதையாகவே இன்றும் விளங்கும். தமிழ்மக்கள் ஏற்கும் வகையில் கதைசொல்லும் திறன் ஐயரிடம் இயல்பாகவே பீறிட்டு வெளிப்பட்டது. தமிழில் பின்னர் வரப்போகும் கதையாக்கச் செழுமைக்கும் நடைக்கும் ஐயர் தளம் அமைத்துச் சென்றுள்ளார்.
  தெ. மதுசூதனன் | 
											
											
												 | 
											
											
											
												 | 
											
											
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |