| 
											
											
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												 தமிழில் கரிசல் காட்டு மக்களின் வாழ்வியல் எல்லாம் அந்த மண்ணின் மணத்தோடு வெளிப்பட்டது. இதுவே 'கரிசல் இலக்கியம்" என்ற தனியான வகையாகவும் வளர்ந்தது. கரிசல் இலக்கியம் தோன்றி வளர்வதற்குக் காரணமாக இருந்த மூலவர்களுள் ஒருவர் வீர. வேலுசாமி. இவர் கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் எனத்தொடரும் மரபில் தனித்து நிமிர்ந்து நிற்கிறார்.
  இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் இராஜபாளையத்துக்கும் இடையில், பி. இராமச்சந்திரபுரம் என்ற சென்னாக்குளத்தில் வீர. வேலுசாமி வசித்து வந்தார். அந்தக் கிராமம் போக்குவரத்து வசதியோ மருத்துவ வசதியோ அற்றது. ஆரம்பத்தில் இவர் பள்ளி ஆசிரியராகவும் பின்னர் மாணவர் விடுதிக் காப்பாளராகவும் அரசுப் பணியில் இருந்தார். வேலுசாமி 1970களுக்குப் பின்னர் சிறுகதை உலகில் பிரவேசித்தார். 'நிறங்கள்' என்ற இவரது சிறுகதைத் தொகுதி முக்கியமானது. அத்தொகுதி குறித்தும் படைப்பாளி குறித்தும் ஒருவித மௌனம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. "என்னை விட அவருடைய சிறுகதைகள் லட்சண சுத்தமாக அமைந்திருக்கும். கதைகள் வடிவமைப்பதில் தேர்ச்சி மிக்கவர்" என கி.ரா. குறிப்பிடுவது கவனத்திற்குரியது.
  குழந்தைகளின் களிப்புக்காக நாட்டுப்புறக் கதைகளைத் தேடிச் சேகரித்து 'தமிழ்நாட்டு சிறுவர் நாடோடிக்கதைகள்' என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார். சிறுவர் இலக்கியம் நாட்டார் மரபுகளைப் பின்பற்றி வளர்வதற்குச் சாத்தியமான வகையில் இத்தொகுதி அமைந்திருந்தது. | 
											
											
												| 
 | 
											
											
											
												கி.ரா.வின் நாட்டுப்புறக் கதைகள் தொகுப்புக்குக் கூடத் தனது வட்டாரத்துக் கதைசொல்லிகளிடம் இருந்து பலவற்றைச் சேகரித்து அனுப்பியுள்ளார். நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பில் அவை இடம் பெற்றுள்ளன. கதை உதவி வீர. வேலுசாமி என்று கி.ரா.வும் குறிப்பிட்டுள்ளார். இது போல் கி.ரா. தொகுத்த கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதிக்கும் தனது வட்டாரத்து வழக்குச் சொற்களைக் கணிசமாகச் சேகரித்துக் கொடுத்துள்ளார்.
  வேலுசாமி அதிகம் எழுதவில்லை. அவரது உடல்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. நோய் தவிர, தனக்கு சரியான அங்கீகாரம் இல்லை என்ற குறையும் அவரை வாட்டி வந்தது. எவ்வாறாயிலும் பரபரப்பான இலக்கிய அரசியல் மோசடித்தனங்கள் எவற்றின் பாதிப்புக்கும் உட்படாமல் ஒதுங்கியே வாழ்ந்துவிட்டார். 'நிறங்கள்' தொகுதி அவரது நிறம் எதுவென்ற கேள்விக்கான பதிலாகும். மௌனம் உடைபட்டு வேலுசாமியின் நிறம் பிரகாசிக்கட்டும்.
  தெ. மதுசூதனன் | 
											
											
												 | 
											
											
											
												 | 
											
											
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |