Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | முன்னோடி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம்–1)
- கதிரவன் எழில்மன்னன்|செப்டம்பர் 2014|
Share:
(பின்புலம்: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு உதவுகின்றனர். கிரண் வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகமானாலும் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்ட் மருத்துவமனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். மூவரும் துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர். இனி இந்தக் கதைக்கு வருவோம்).

*****


ஷாலினி வாசல் அழைப்பு மணியை அழுத்திக் காத்திருந்தும் பலனில்லாததால், தன்னிடமிருந்த சாவியால் கிரணின் வீட்டு வாசல்கதவைத் திறந்து, சமையலறைக்குச் சென்று அங்கு நடுமேடையில் கிடந்த பாத்திரங்களை தள்ளி வைத்துவிட்டு, கையிலிருந்த பையை வைத்தாள். கிரண் வீட்டில் இல்லையென்று எண்ணி வெளியேற ஆயத்தமானாள். ஆனால் கிரணின் பொழுதுபோக்குக்காக ஒதுக்கப்பட்டிருந்த பின்னறையிலிருந்து எதோ சத்தம் வரவே அங்கு சென்று பார்த்தாள்.

புயலடித்து ஒய்ந்ததுபோல் தரையெல்லாம் பலவிதமான பொருட்கள் சிதறி களேபரமாகக் காட்சியளித்தது. ஒரு மூலையில் ஓர் இசைப்பெட்டி எதோ ஒரு பாடலைப் பிளிறிக் கொண்டிருந்தது. அந்த இசையும் ஓசையளவும் தாங்க இயலாமல், பொருட்களை மிதிக்காமல் தாவியபடிச் சென்று ஷாலினி இசையை அணைத்து நிறுத்தினாள்.

கிரண் அவள் வந்ததைக்கூட கவனிக்காமல் குனிந்து ஒரளவு பெரியதான ஒரு பெட்டிபோன்று காட்சியளித்த சாதனத்துக்குள் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான். இசை நின்றதும் நிமிர்ந்து பார்த்தவன், "ஹை ஸிஸ்! நீ வந்ததை நான் கவனிக்கவேயில்லையே" என்றான்.

முகத்தை சுழித்த ஷாலினி அலுத்துக் கொண்டாள். "சாதனங்களையும், அழகான இளம்பெண்களையும் பாத்துட்டா போதுமே, உலகமே மறந்துடுமே ஒனக்கு? நான் என்ன வெறும் அக்காதானே, கண்டுப்பயா என்ன?"

கிரண் முறுவலித்தான். "ஹே ஷாலு! இது அம்மா டயலாக். நீ அடிக்க இன்னும் வயசு பத்தாது, அடக்கி வாசி. சரி சரி, என்ன இந்தப் பக்கம்? நீ இப்பல்லாம் அடிக்கடி வரதில்லயே, ரொம்ப பிஸி போலிருக்கு!"

ஷாலினி முறுக்கிக் கொண்டாள். "ஹுக்கும். நான் பிஸியா, நீ பிஸியா? வரதுதான் இல்லை, சரி, ஒரு கால், ஒரு டெக்ஸ்ட்... அதுகூட இல்ல. சரி போகட்டும் விட்டுத்தள்ளு, இத நீட்டிக்கிட்டு போனா, நான் அம்மாவாவே மாறிடப் போறேன் போலிருக்கு! இப்ப வந்தது எதுக்குன்னா, அம்மா தன் செல்லப் பிள்ளைக்கு இடியாப்பம் அனுப்பிச்சிருக்கா கிச்சன்ல வச்சிருக்கேன் மறக்காம சாப்பிடு. அங்கிருக்கற பாத்திர கும்பலோட டிஷ்வாஷருக்கு போட்டுடப் போறே!"

கிரண் சிலாகித்தான். "ஆஹா இடியாப்பம்! மை ஃபேவரைட்!"

ஷாலினி அறையின் களேபரத்தையும் அந்தப் பெட்டி போன்ற சாதனத்தையும் காட்டி, "இதெல்லாம் என்ன கிரண்?! வழக்கத்தை விட களேபரமா இருக்கு, அதோட, இதென்ன குண்டான க்யூப் மாதிரி கருப்பா ஒரு பொட்டி? ப்ளாஸ்டிக் சூடாகற மாதிரி ஒருவிதமான வாசனை வேற!"

கிரண் குதூகலித்தான். "ஹாஹா, இதுதான் என் புது டார்லிங்... 3D ப்ரிண்ட்டர்!"

ஷாலினி குழப்பத்துடன், "3D ப்ரிண்ட்டரா?! அதுல ப்ரிண்ட் பண்ண காகிதத்தை 3D கண்ணாடி போட்டு பாத்தா அவதார் படம் மாதிரி கண்ணுக்குக்கிட்ட வரா மாதிரி 3D-ல தெரியுமா?"

கிரண் கலகலவெனச் சிரித்தான். "அதுவும் நல்ல ஐடியாதான்! யாராவது செய்யறாங்களான்னு பாக்கலாம். ஆனா இது அப்படி இல்லை. 3D-ன்னா, காகிதத்துல ரெண்டு பரிமாணத்துல பதிக்கறத்துக்கு பதிலா, மூணு பரிமாணமுள்ள முழுப்பொருளை உருவாக்கறது. இதுல நான் தயாரிச்ச விந்தையைப் பார்!" என்று எக்காளத்துடன் ஒரு ப்ளாஸ்டிக் பொருளை நீட்டினான்.

ஷாலினி நம்பிக்கையின்றி அப்பொருளை வாஙகிக்கொண்டாள். "முழுப்பொருளை உருவாக்கறதா! நம்பறமாதிரி இல்லயே!" என்றவள், கிரண் தந்த பொருளை மேற்கொண்டு பார்த்ததும் இன்னும் அதிக அவநம்பிக்கையுடன், "ஏய்! என்ன என் காதுல பூ வக்கறயா? இது உன்னோட போர்ஷா ஸ்போர்ட்ஸ் காரை ஒரு மாடலா செஞ்சிருக்காங்க. அதுவும் இவ்வளவு தீர்க்கமான மில்லிமீட்டர் அளவு துல்லியமான அம்சங்களோட செஞ்சிருக்காங்க. ஸ்டியரிங் வீல சுத்தினா, அதுக்கேத்த மாதிரி சக்கரம்கூட சரியா சுத்துது! இதை எங்கயோ வாங்கிட்டு 3D ப்ரிண்ட்டர் தயாரிச்சதுன்னு கதை விடறயா?"

கிரண் பெருமூச்சு விட்டான். "சரிம்மா சந்தேகப் பிராணி, நான் எவ்வளவு சொன்னாலும் நீ நம்பப் போறதில்லை. நான் செஞ்சே காட்டறேன் சரியா? உனக்கு இங்க இன்னும் எவ்வளவு நேரம் இருக்க முடியும்?" என்றான். ஷாலினி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "ஹூம், இன்னும் ஓண்ணரை மணி நேரத்துல என் லேபுக்கு திரும்பிப் போகணும். ஒருமணி நேரம் ஒன்னோட உழலலாம். ஆனா நீ என் டயத்தை வேஸ்ட் பண்ணினேனா டங்குன்னு தலைல குட்டுவேன், ஓகே?" என்றாள்.
கிரண் அலட்சியமாக, "அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. ஆன்னு நீ பிளக்கற வாயைத் திரும்பி மூடிக்கத்தான் என் உதவி தேவைப்படப் போவுது பாரு! அதுவும் அரைமணி நேரந்தான்!" என்று கூறிவிட்டுத் தன் ஆப்பிள் ஐபேடின் திரையை ஷாலினிக்குக் காட்டினான். அதில் கிரணின் போர்ஷா காரின் மாடல் பிரமாதமாகக் காட்சியளித்தது. கிரண் கைவிரலால் திரைமேல் அப்படியும் இப்படியும் தடவவும், போர்ஷா திரையில் பலவிதமாகத் திரும்பி தன்னைப் பல கோணங்களிலும், முப்பரிமாணப் போஸ்கள் கொடுத்தது.

ஷாலினி உதட்டைச் சுழித்து அலுத்துக் கொண்டாள். "ஹூம்! இவ்வளவுதானா? நானும் இந்தமாதிரி கம்ப்யூட்டர் திரையில நிறைய 3D படம் பாத்தாச்சு, மனித உடம்புக்குள்ள இருக்கற பல அங்கங்கள் உட்பட. இதுல என்ன பெரிய அதிசயம்?" கிரண் கையை உயர்த்தி அவளை அடக்கினான். "என் அருமை அக்காவே, கொஞ்சம் பொறுமை தேவை! இதோ இப்ப பார்! என்று கூறித் திரையில் இருந்த PRINT பட்டனை அழுத்தினான். சில நொடிகள் ஒன்றும் ஆகாதிருக்கவே, ஷாலினி பொருமினாள். "என்னடா கிரண்? ஒண்ணுமே ஆகல, அவ்வளவுதானா, உன் 3D ப்ரிண்ட்டர் மகாத்மியம்?"

கிரண் மீண்டும் வேண்டிக்கொண்டான். "பொறுமை, பொறுமை! இது பெரிய சைஸ் மாடல் இல்லயா? ப்ரிண்ட்டருக்கு அனுப்பக் கொஞ்ச நேரமாவது வேணாமா. ஓ! இதோ பாரு ஆரம்பிக்குது!" என்று சுட்டிக்காட்டினான்.

ஷாலினி அவன் காட்டிய திக்கில் பார்த்தாள். அங்கு அந்தக் கருப்புப் பெட்டி பளிச் பளிச் என்று சில LED விளக்குகளைச் சிமிட்டிவிட்டு விர்-விர் எனச் சில சத்தங்களை எழுப்பியது. கிரண் மண்டையில் அடித்துக்கொண்டு, "அய்யய்யோ, நான் ஒரு மடையன் ..." என்றதும் ஷாலினி இடை மறித்து "அதான் எனக்கு நல்லாத் தெரியுமே!" என்று சிரித்தாள்.

கிரண் "சொல்லுவேம்மா, சொல்லுவே, இருக்கட்டும், எனக்கும் ஒரு சான்ஸ் கிடைக்காதா என்ன!" என்று பழித்துவிட்டு ஓடிச்சென்று ஒரு பளபளவென்ற கருப்புப் ப்ளாஸ்டிக் தட்டை ப்ரிண்ட்டருக்குக் கீழே செருகிவிட்டு "அப்பாடா! ஜஸ்ட் இன் டைம்!" என்று பெருமூச்சுடன் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, "உம், இப்ப பாரு, என் ப்ரிண்ட்டர் திறமையை!" என்று அறைகூவினான்.

ஷாலினி பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே, அந்தக் கருப்புப் பெட்டியின் அடியில் பொருந்தியிருந்த ஒரு வட்டமான கருவி திரும்பி, தனக்குள் பொருத்தப் பட்டிருந்த பல பீச்சுக் குழாய்களில் ஒன்றைத் திருப்பி கிரண் வைத்த ப்ளாஸ்டிக் தட்டின் மேற்புறம் இருக்கும் படி நகர்த்தியது. அந்தக் குழாய் தட்டின் ஒரு கடைசிக்குச் சென்று முன்னும் பின்னும் நகர ஆரம்பித்தது. அங்கங்கு கொஞ்சம் வெண்மஞ்சளாகச் சில துளிகளை படியச் செய்தது.

சில நொடிகள் இவ்வாறு கழிந்ததும் கிரண் ஷாலினியை அழைத்து அந்தத் தட்டின்மேல் பதிக்கப் பட்டிருந்ததைக் காட்டினான். அங்கங்கு தட்டையாக வெண்மஞ்சள் ப்ளாஸ்டிக் பதிக்கப் பட்டிருந்தது.

ஷாலினி குழப்பத்துடன் வினவினாள். "இது என்ன? அந்தப் போர்ஷா கார் மாதிரி இல்லயே!"

கிரண் சிரித்தான். "அப்பாடா! பொறுமையின் சிகரமே! இதுதான் முதல்முதல் அடுக்கு. அந்தக் கார் மாடலில் கீழ்மட்டத்துல இருக்கறா மாதிரி பதிஞ்சிருக்கு போகப்போக இன்னும் நூற்றுக் கணக்கான அடுக்குகள் செய்ய வேண்டியிருக்கு. அப்புறந்தான் நாம அந்த கார் மாடலைப் பார்க்கலாம். வேணுன்னா இங்க பார்" என்று முதலில் காட்டிய போர்ஷா கார் மாடலை எடுத்துக் காட்டினான்.

ஷாலினி முனகினாள். "டேய்! அததான் முதல்லயே காட்டியாச்சே! ஒரே மாடலைக் காட்டியே என்னை ஏமாத்திடலான்னு பாக்கறயா? அதுக்கு வேற ஆள பாத்துக்கோ."

கிரண் கிண்டலாக உறுமினான். "அடடா, ஒரு செகண்ட்கூட பொறுத்துக்க மாட்டேங்கறயே அருமை அக்காவே? உன்னைக் கட்டிகிட்டு அந்த சூர்யா பாவம் என்ன பாடு படப்போறாரோ தெரியலயே!" என்று அவன் கூறிய கணத்திலேயே ஷாலினி உச்சி குளிர்ந்து தான் சூர்யாவுடன் வாழ ஆசைப்படும் வருங்கால இன்ப வாழ்க்கைக் கனவுலகில் ஆழ்ந்து போனாள்!

இன்பக் கனவில் கிரண் இடைமறித்தான். "ஹேய், ஷால், ஆகாசக்கோட்டை கட்டினது போதும். இன்னும் சூர்யாவே கிரீன் ஸிக்னல் கொடுக்கலை, சரி நனவுலகுக்கு மீண்டுவந்து, இங்க கொஞ்சம் கூர்ந்து பாரு" என்றான். சிலிர்த்துக் கொண்டு காதல் கனவிலிருந்து விலகிய ஷாலினி நாணப் புன்னகை மலர, " சரி சரி ரொம்பச் சீண்டாதே, என்ன பாக்கணும் இப்ப பாத்துத் தொலைக்கிறேன்" என்று கிரண் காட்டியதைக் கவனித்தாள்.

கிரண் விளக்கினான். "இந்த பழைய மாடல் அடியில இருக்கற சில பாகங்களைப் பாரு. இந்த அடித்தகடு மேல பதிச்சிருக்கற புது ப்ளாஸ்டிக் மில்லி மீட்டர் கணக்கில அதே அளவு, அதே வடிவத்துல இருக்கு இல்லயா? அது மேல மேல இன்னும் பதிக்கப்பட்டு இந்த முழுக்கார் வடிவத்துக்கு உருவாகும்!" என்றான். ஷாலினி இன்னும் நம்ப முடியாமல் "ஹூம், சரி பாக்கலாம்" என்றாள். கிரண் "ஒகே, இன்னும் சில நிமிடங்கள் ஆகும் அதுக்கும். வா அதுக்குள்ள ஒரு காப்பி குடிச்சுட்டு வரலாம்!" என்றான்.

இருவரும் சமையலறைக்குள் சென்றனர். கிரண் தன் எஸ்ப்ரஸ்ஸோ காப்பி இயந்திரத்தில் காப்பிக் கொட்டைகளை இரு கோப்பைகள் கிடைக்குமாறு அளந்து கொட்டிவிட்டு ஒரு சிறு குப்பியைக் காப்பி இயந்திரத்தின் வெளியிடும் குழாய் கீழ் வைத்து, பட்டனைத் தட்டிவிட்டான். இயந்திரம் கடக் முடக் என்று சில சத்தங்கள் செய்துவிட்டு அறை முழுவதும் புதுக்காப்பி மணம் கமழ திடமான திரவத்தால் குப்பியை நிரப்பியது. குப்பியைப் பெரிய கோப்பையில் நிரப்பிய கிரண் இன்னொரு முறை குப்பியில் காப்பி தருவித்து மற்றொரு கோப்பையில் நிரப்பி, நீராவியில் பால்நுரை பெருக்கி, கோப்பைகளில் சேர்த்து ஷாலினியிடம் நீட்டினான்.

ஷாலினி எதையோ நினைத்துக் கொண்டு களுக்கெனச் சிரித்தாள். கிரண் விளையாட்டாகச் சிணுங்கினான், "ஹேய், நான் ஸீரியஸா காப்பிப் போட்டுக் குடுத்தா, பாக்கத் தமாஷா இருக்கா உனக்கு?"

ஷாலினி சிரித்துக்கொண்டே சமாதானம் கூறினாள். "சே, சே, எனக்கு நம்ம அப்பா போடற பழைய சினிமா பாட்டு ஒண்ணு ஞாபகம் வந்துடுச்சு அதான் சிரிப்பு."

"பழைய தமிழ்ச் சினிமா பாட்டா?! யப்பா, அதுக்கும் எனக்கும் ஆயிரம் மைல் தூரமாச்சே?! சரி, அப்படி சிரிக்கறா மாதிரி என்ன பாட்டு எடுத்து விடு பாக்கலாம்."

ஷாலினி தன் இனிய குரலில் அபிநயத்துடன் பாடினாள். "பட்டனைத் தட்டிவிட்டா ஒரு தட்டில இட்டிலியும், பக்கத்துல காப்பியும் வந்துடணும்..."

கிரண் சிரித்தான். "ஹாஹா, சரியான பாட்டுதான். இந்த மாதிரி எஸ்ப்ரஸ்ஸோ மிஷினோட ஒரு இட்டிலி 3D ப்ரிண்ட்டரையும் சேத்துட்டா கூடிய சீக்கிரமே, அந்தப் பாட்டு மாதிரியே ஆயிடும்."

ஷாலினி சிரித்துக்கொண்டே மறுத்தாள். "வந்தாலும் வரும், ஆனா, அம்மா செய்யற பூ மாதிரி இட்டிலியா இருக்காதே, அதுவும் டேஸ்ட் எப்படி இருக்குமோ!" என்று மூக்கைச் சுழித்தாள்.

கிரண் சிரித்துவிட்டு, "ஹே, டேஸ்ட் ப்ரிண்ட்டர் மாடல் தயார் பண்றவங்களை சேர்ந்தது. அவங்க சரியான உட்பொருட்களை வச்சு சரியானபடி சமையல் குறிப்பை 3D மாடல்ல செஞ்சுகுடுத்தா, அது சரியாதான் வரும். கிகோ, கார்பேஜ் இன் கார்பேஜ் அவுட்!" என்றான்.

ஷாலினி திட்டினாள். "சரியான கொரங்குடா நீ! சாப்பிடற விஷயத்துக்கு எடுத்தவுடன் கார்பேஜ்னு சொல்ற பாத்தியா?"

அப்போது பின்னறையிலிருந்து பீப் என்று ஒரு சத்தம் கேட்கவும், கிரண் "சரி வா ப்ரிண்ட்டர் எந்த அளவுக்கு செஞ்சிருக்குன்னு பாக்கலாம்" என்றான்.

கிரண் பதித்த முப்பரிமாண மெய்ப்பதிவு ஒரு முடிச்சுக்கான ஆரம்பம் என்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை. அம்முடிச்சின் சிக்கல்களையும், சூர்யா அதனை எவ்வாறு அவிழ்த்தார் என்பதை வரும் பகுதிகளில் காண்போம்!
(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline