Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சிறப்புப்பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | நூல் அறிமுகம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
விசாலி, கார், விருந்தாளி
தென்றல் சிறுகதைப் போட்டி 2014
காத்திருப்பு…
கப்பல் பறவை
- பட்டம்மாள்|ஜூன் 2014||(2 Comments)
Share:
(தென்றல் சிறுகதைப் போட்டி-2014 யில் முதல் பரிசு பெற்ற கதை)

திருச்சி விமான தளம். கணேசமூர்த்தி சோர்வாக ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான். பசித்தாலும் சாப்பிடும் மனம் இல்லை. அம்புலிமாமா காட்டி சாதம் ஊட்டிய அன்னையை முதியோர் இல்லத்தில் விட்டு வந்தான். இறுதியில் அந்தக் கண்கள் நோக்கிய பார்வை இதயத்தைப் பிளந்தது. தன் வினை தன்னைச் சுடும்! நாளை எனக்கும் இதே கதிதான்.

பெற்றவர்களைச் சுற்றி வந்து கனிபெற்ற "கணேச" என்பதைப் பெயரிலிருந்து அகற்றி, இன்று ஜி. மூர்த்தி என்பதே நிலையானதும் மிகப் பொருத்தம். "நான்கு பிள்ளையைப் பெற்றவருக்கு நடுச் சந்தியில் உணவு. ஒரே பிள்ளையைப் பெற்றவருக்கு உள் அறையில் உணவு" என்பாள் அம்மா. எனக்கு ஒரே மகன்; என்னை கவனித்துக் கொள்வான்" பெருமையாகச் சொல்வாள். நான் அமெரிக்கா சென்றபோது ஏன் தடுத்து நிறுத்தவில்லை? வாழ்த்தி வழியனுப்பினாள்! கணேசமூர்த்தியின் உள்ளம் பொங்கியது.

"ஏய் கணேச மூர்த்தி... எப்படா திருச்சி வந்தாய்? நம்ம வீட்டுக்கு ஏன் வரல? கண்டோன்மெண்டுக்கு வந்தவன் அம்மா மண்டபம் வர முடியலியா?" குரலில் இவ்வுலகிற்கு வந்தான். நண்பன் சுந்தரலிங்கம்! புன்னகையை முகத்தில் தேக்கினான். இந்த 'இன்ஸ்டன்ட் புன்னகை' அமெரிக்க ட்ரேட் மார்க்.

"ஹாய் சுந்தரலிங்கம்... நீ எப்ப திருச்சி வந்தே?"

"கணேசா, உன் அம்மாவை வைகுண்ட ஏகாதசியன்று கோயிலில் பார்த்தேனே. ரொம்ப நேரம் பேசிண்டிருந்தோம். அவங்க சொல்லலியா?"

"மறந்திருப்பாங்க" மனது சொல்லியது. "கணேசா" அடிக்கொருதரம் சொல்றானே!

"ஒரு வருடம் முன்னால் வரை நைஜீரியாவுலதான் இருந்தேன். அண்ணனுக்கு உடம்பு முடியலன்னு ஃபோன்ல அம்மா சொன்னாங்க. பொள்ளாச்சியிலதான் இருந்தாங்க. நான் பதறி ஓடி வந்தேன். கோயம்புத்தூர் பெரியாஸ்பத்ரியில சேர்த்தோம். ஆனா காப்பாத்த முடியலை. அண்ணி எப்படி தனியா குடும்பத்தைச் சமாளிப்பாங்க? நான் வேலையை விட்டுட்டு வந்துட்டேன். இங்கேயே வேற வேலைல சேர்ந்துட்டேன். பழைய வீட்டை அடுக்கு மாடி ஆக்கிட்டோம். ஒரு தளம் பூராவும் எங்க குடும்பம்தான். அம்மாவுக்கும் திருப்தி. இப்ப நீ உன்னப் பத்தி சொல்லு, கணேசா..."

சுந்தரலிங்கம் முகம்மலர, மனம் நெகிழ்ந்து தாயைப்பற்றிச் சொல்லவும் கணேசமூர்த்தி இதயத்தில் முள்தைத்த வேதனை அழுத்தியது.

மைக் அலறியது. "பங்களூர் செல்பவர் கேட்டிற்குச் செல்லுங்கள்..."

"சுந்தரலிங்கம்... அமெரிக்காவுலதான் இருக்கேன். அம்மாவைப் பார்த்தாச்சு. என் மனைவியின் அம்மா, அப்பா பெங்களூர்ல இருக்காங்க. அங்கே போய்ட்டு நாளை அமெரிக்கா புறப்படறேன். ஒன்னப் பார்த்தது ரொம்ப சந்தோஷம். ஸீ யூ.. பை பை."

அன்று அம்மா சொன்னது சரியில்லை. நான்கு பிள்ளைகளைப் பெத்தவளை நான்கு பேரும் கவனிக்கிறார்கள், சுந்தரலிங்கம் போல. ஒரே மகனான நான் தாயை விடுதியில் விட்டு சுகம் தேடி அமெரிக்கா போறேன்.

"சார்.. முன்னே போங்க," பின்னால் இருந்தவர்.

சின்னப்பையன், விமானப் படியில் ஏற முயன்றான். உடன் சென்ற தாய் அதன் கை பிடித்து ஏற்றினாள். இப்படித்தானே என் தாயும் என்னை வளர்த்து ஆளாக்கத் தன்னை வருத்திக் கொண்டிருப்பாள்.... அவள் செய்த தியாகங்கள்.. கண்கள் நீர் சுமந்தன.. ஜன்னல் பக்க இருக்கையில் முகம் புதைத்தான்.

"சார்.. ஆர் யூ ஆல்ரைட்?" விமானப் பணிப்பெண்.

"யெஸ், தேங்க்யூ."

திருமணமாகிச் சில வருடங்கள் குழந்தை இல்லை. உச்சிப் பிள்ளையாரை உளமார வேண்டிப் பிறகு கணேசமூர்த்தி பிறந்தான். தாய் அதட்டக்கூட மாட்டாள். சுந்தரலிங்கம் கணேசமூர்த்தியின் வகுப்புத் தோழன்.

"அம்மா.. சுந்தரலிங்கத்தை அவன் அம்மா நன்னா அடிச்சுட்டாளாம்."

"அவ ராக்ஷஸி... குழந்தையை அடிச்சிருக்கா. என் செல்லம் சமத்து..." அணைத்து முத்தம் கொடுத்தாள்.

"அடிச்சு வளர்த்தா புள்ள உருப்படும். ஒடிச்சு வளர்த்தா கறிவேப்பிலை வளரும்," சுந்தரலிங்கத்தின் தாய் சொல்வார். அவர் வாக்கு உண்மை.

கணேசமூர்த்தி பலதடவை அழைத்தும் தாய் அமெரிக்கா வரவில்லை. மருமகளை நன்கு தெரிந்து வைத்திருந்தாள். எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. "மாமியாருக்குப் பல ஆசைகள் — மருமகள் அழகாக, படித்தவளாக, மகனின் மனமறிந்து நடப்பவளாக செல்வத்துடன் வரவேண்டும். மருமகளுக்கோ ஒரே ஆசைதான் — மாமியார் ஃபோட்டோவில் மட்டுமே இருக்க வேண்டும்..."

சிறுவயதில் கணேசமூர்த்தி நோஞ்சான். எப்பொழுதும் ஏதாவது உடம்புக்கு வரும். தாயின் முந்தானையில்தான் முகம் பதித்திருப்பான். எப்பொழுதும் இடுப்பில் மகனைச் சுமந்தபடிதான் வேலை செய்வாள். இன்று தாய்க்கு வயதாகி உடம்பு முடியவில்லை. ஆஸ்த்மா வேறு. உயர்நிலைப்பள்ளி படிக்கும்பொழுதும், கல்லூரியில் படிக்கும்பொழுதும் தாய்க்குக் கூடமாட எல்லா உதவிகளையும் செய்வான். கிருஷ்ண ஜயந்திக்கு சீடை கூட உருட்டுவான். தந்தை காலமான பிறகு தாய் ஸ்ரீரங்கத்தில் தனியாகவே இருந்தாள். பக்கத்து வீட்டில் மாமாவும், மாமியும் இருந்தார்கள். அம்மாவையும் கவனித்துக் கொண்டார்கள். இப்பொழுது மகனிடம் சென்னைக்குச் சென்றுவிட்டார்கள். அம்மா எவ்வளவு துன்பப்பட்டாளோ! தனக்கென்று அவள் எதுவுமே கேட்டதில்லை. சிந்தனைகள் கருமேகங்களாய் உள்ளத்தைச் சூழ்ந்து படுத்தின. பங்களூரும் வந்து விட்டது.

பங்களூரில் எங்கோ வீடு வாங்கி மாமனார் குடி புகுந்திருப்பதாக ராஜி சொன்னாள். செல்ஃபோனில் பதிவாக்கியிருப்பாள். முதலில் ஒரு காஃபி சாப்பிடலாம். காபி ஸ்டாலுக்கு நடந்தான். காஃபி குடித்துக்கொண்டே செல்ஃபோனில் முகவரி தேடினான். இந்த இடம் எங்கிருக்கிறதோ? டாக்ஸி வேண்டுமா, ஆட்டோ போதுமா? நிமிர்ந்தான். சாட்சாத் மாமனாரே எதிரே.
"வாங்கோ மாப்பிள்ளே... உங்களுக்கு இடம் கண்டுபிடிப்பது சிரமமாயிற்றே என்று நானே வந்தேன்."

"ரொம்ப சந்தோஷம்."

கணேசமூர்த்தியால் இயல்பாய் இருக்க முடியவில்லை. மனது உளைந்தது. கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தை பதில்தான்.

வீடு சென்றார்கள். கணேசமூர்த்தி முகம் சுத்தம் செய்து உடுப்பு மாற்றி வந்தான். சாப்பிட அமர்ந்தார்கள்.

மாமியார் விசாரித்தார். "அம்மா சௌக்யமா? நல்ல ஏற்பாடு செய்தீர்களா?"

கேள்விகளுக்கு பதிலாக "உம்."

பாயசம், வடையுடன் சாப்பாடு. கணேசமூர்த்திக்கு ரசிக்கவில்லை. உள்ளத்தில் இயலாமை உணர்வு பொங்கிக் கொண்டிருந்தது. ஹாலில் வந்தமர்ந்தான். தொலைக்காட்சியில் யாரோ மாமியார் மருமகளுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள். மாமனார் எதிரே வந்தமர்ந்து இந்திய அரசியலை அலசினார். கணேசமூர்த்தி காதில் ஏதும் வாங்கவில்லை. பதிலும் கூறவில்லை. அமுக்குப் பிள்ளையாராக இருந்தான்.

மாமனாரின் பொறுமை தளர்ந்தது. "மாப்பிள்ளை! ராஜி ஃபோனில் சொன்னாள். நீங்கள் பணம் கொண்டு வந்திருந்தால் இப்போதே போய் ஃப்ளாட் புக் செஞ்சுட்டு வந்துடலாம்."

கணேசமூர்த்தி நரசிம்ம மூர்த்தியானான். "நீங்களும் குழந்தை பெற்றவர்கள்தானே! நாளை உங்கள் கதி என்னவாகும் யார் கண்டார்கள்? கை, கால் உதவாமல் போய் முதுமையும் சேர்ந்து கொண்டால்தானே தெரியும்! என் தாயின் வீட்டை விற்று இங்கு ஃப்ளாட் வாங்க நான் என்ன முட்டாளா? இந்த வீட்டை விற்று ஃப்ளாட் வாங்க வேண்டியதுதானே! கேட்டுக்கொள்ளூங்கள். எங்க அம்மா வீட்டை விற்றேன். அதில் சீனியர் கேர் கன்ஸ்ட்ரக்‌ஷனில் வில்லா வாங்கினேன். அம்மாவை அதில் வசதியாகக் குடியேற்றி வைத்திருக்கிறேன். பழகிய சூழல் மாறாமலிருக்க அவர்கள் உபயோகித்த பொருள்களையும் அங்கு விட்டிருக்கிறேன். உதவிக்கு வேலையாளும் அமர்த்தியிருக்கிறேன். பெண்ணுக்கு புத்தி சொல்லி நல்ல வழி திருப்ப வேண்டியது உங்கள் கடமை இல்லையா? 'அப்பனுக்கு இட்ட பாத்திரம் ஆரச் சுவத்துல கவுத்திருக்கு' — வாக்கு ஒருக்காலும் பொய்யாகாது" குமுறிக் கொண்டிருந்த உணர்ச்சியைக் கொட்டித் தீர்த்தான்.

மாப்பிள்ளைக்குள் இப்படி ஒரு தீப்பொறி இருப்பது கண்டு மாமனார் நடுங்கி விட்டார். பதில் கூறாமல் வார்த்தை வராமல் தடுமாறினார்.

"காலை எட்டு மணிக்கு எனக்கு ஃப்ளைட்" சொன்ன கணேசமூர்த்தி படுக்கச் சென்றுவிட்டான்.

மறுதினம் காலை கிளம்பிவிட்டான். "போய் வருகிறேன்" இரண்டே வார்த்தைகள். மூன்று நாட்களாக அலைகடலாகப் பொங்கிய, ஆர்ப்பரித்த உள்ளம் அமைதியானது. விமான நிலையம்வரை உடன் வந்த மாமனார் வாய் திறக்கவில்லை.

அமெரிக்கா வந்து சேர்ந்தான்.

நான் கூறியதை அப்படியே அட்சரம் பிசகாமல் மகள் காதில் ஓதியிருப்பார் தந்தை, கணேசமூர்த்திக்குத் தெரியும்.

ராஜி அலுவலகம் சென்றிருந்தாள். குளித்து உடல், மனதைக் குளிரச் செய்துகொண்டான். ஃபிரிட்ஜிலிருந்து சாப்பாட்டை அவனில் சுடவைத்தான். சாப்பிட்டான். காரில் சுற்றி வந்தான். சுரேஷ்—நரேஷ் பள்ளியிலிருந்து வந்தார்கள். பாடங்களையும், நடந்தவைகளையும் விசாரித்தான். டீயுடன் லானில் அமர்ந்தான். அலுவலகத்திலிருந்து ராஜி வந்தாள். உடுப்பு மாற்றி முகம் அலம்பிக் கையில் குளிர்பானத்துடன் வந்தாள்.

"என்னங்க ட்ரிப் எப்படி இருந்தது?"

தலை மட்டுமே அசைந்தது.

"சுரேஷ், நரேஷ் ஒரு கதை சொல்லட்டுமா?"

"சொல்லுப்பா" உற்சாகமாக இருவரும்.

"துறைமுகத்தில் கிளம்பத் தயாராக ஒரு கப்பல் நின்று கொண்டிருந்தது. கப்பலில் நிறைய தானியங்கள் சிதறிக்கிடந்தன. ஒரு பறவை பார்த்தது. அதுக்கு ரொம்பப் பசி. வயிறு நிறையத் திங்கலாம்னு ஆசையோட தின்ன ஆரம்பிச்சது. சாப்பிடற சுகத்துலே பறவை கவனிக்கலே. கப்பல் கிளம்பிடுச்சி. ரொம்ப தூரம் போனப்புறம்தான் பறவைக்குப் புரிந்தது. 'ஐயையோ தனியா அகப்பட்டுக் கொண்டேனே!' அது ரொம்ப பயந்திடுச்சி. கரை எந்தப் பக்கம்னு அதுக்குத் தெரியலை. எல்லாப் பக்கமும் அதுக்கு தண்ணிதான் தெரிஞ்சது. கரையும் தெரியாம, தன் கூட்டுப் பறவைகளுடனும் சேரமுடியாம அது தவிச்சது. கப்பல்லயும் இருக்கப் பிடிக்கல. மனசு கஷ்டப்பட்டது."

"அப்பா, அது என்னப்பா பண்ணும்?" சுரேஷ்.

"புது ஊருக்குப் போகுமா அப்பா?"

"என்ன பண்ணனும்னும் அதுக்குத் தெரியாதே, பாவம்பா!"

"அதுதான் என்னைப் போன்ற அம்மா கோண்டுகளுக்குத் தண்டனை."

"புரியலியே அப்பா."

"புரிய வேண்டியவங்களுக்குப் புரிஞ்சா சரிதான்"

அம்மா சொன்னது கணேசமூர்த்தியின் காதுகளில் ரீங்கரித்தது. "கணேசா, எனக்கு எந்த வருத்தமும் இல்ல. நீ சந்தோஷமா இருந்தாலே போதும். கல்யாணத்துக்கு முன்னாலே அப்பா, அம்மாவுடன் தாத்தா வீட்ல இருந்தேன். வீடு நெறைய மனுஷா. கல்யாணத்துக்கப்புறம் உன் தாத்தா வீட்ல இருந்தேன். அதுவும் பெரிய வீடுதான். அடையவளஞ்சான்லே உன் தாத்தாவின் கூடப் பிறந்தவா, அப்பாவின் கூடப் பிறந்தவான்னு கலகலப்பான சூழல். உன் அப்பா ரிடையரானபோது நீ, நான், அப்பான்னு மூவராகிப் போனோம். அடையவளஞ்சான் வீட்டை வித்துட்டு கண்டோன்மெண்டில் வீடு வாங்கினார். அங்கயும் சரிப்படாம ரங்கு, ஸ்ரீரங்கம் வந்ததும், அவாத்துக்குப் பக்கத்தாத்துல இருந்தேன். உறவும் சுற்றங்களும் எப்பவும் கூட இருந்தது. இப்பவும் நீ நல்ல மனசோட இந்த வில்லாவை வாங்கி நிறைய சுற்றங்களையும், உறவுகளையும் கொடுத்திருக்கே. எனக்கு எந்தக் குறையும் இல்ல. உன் குழந்தைகளை ஒருமுறை அழைச்சிண்டு வந்து காட்டு. அதுகள் என்னைப் பாட்டின்னு கூப்டுட்டா, அதை என் காது குளிரக் கேட்டுட்டேன்னா என் ஜன்மம் சாபல்யமாகிடும். இனி, எனக்கு என்னடா வேணும்? இறைவன் திருவடிதான் வேணும். உனக்கு பகவான் அமெரிக்காவுல பொழப்பு கொடுத்திருக்கான். நீ கவலைப்படாமப் போயிட்டுவா! உனக்கு, ராஜிக்கு, குழந்தைகளுக்கு என் ஆசிர்வாதங்கள் எப்பவும் உண்டு."

வாழ்வை அதன் போக்கில் தைரியமாக ஏற்றுக் கொண்டு மகனை வாழ்த்தும் அந்த உயர்ந்த பண்பு கணேசமூர்த்தியை உருகவைத்தது. "அம்மா... என் அனந்தகோடி நமஸ்காரங்கள் உனக்கு" இதயம் விம்மித் திணிந்தது. கைகள் தன்னிச்சையாகக் குவிந்து வணங்கின.

எஸ். பட்டம்மாள்,
அட்லாண்டா, ஜார்ஜியா
More

விசாலி, கார், விருந்தாளி
தென்றல் சிறுகதைப் போட்டி 2014
காத்திருப்பு…
Share: 
© Copyright 2020 Tamilonline