Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சிறப்புப்பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | நூல் அறிமுகம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
தென்றல் சிறுகதைப் போட்டி 2014
கப்பல் பறவை
காத்திருப்பு…
விசாலி, கார், விருந்தாளி
- எல்லே சுவாமிநாதன்|ஜூன் 2014||(2 Comments)
Share:
சமயலறையில் சமையல் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.

கணேஷ் வியப்புடன் "ஏன் சமைக்கிற பத்மா? வெள்ளிக்கிழமையா இருக்கு, பிட்சா வாங்கி சாப்பிடலாம்னு சொன்னனே. மறந்துட்டியா?" என்று கேட்டான்.

"விருந்தாளி வராங்க. முடிச்சிட்டு வந்து பேசறேன்" என்றாள் பத்மா.

"உங்க உறவுக்காரங்க யாராவதா வரதா போன் வந்துதா?"

"எல்லாம் உங்களுக்கும் உறவுதான், இந்தத் தேங்காயை ஒடச்சிக் கொடுத்துட்டு போய் டேபிள், சோபாவெல்லாம் சுத்தமா இருக்கா பாருங்க"

அவள் ஏவின வேலைகளைச் செய்துவிட்டு ஆவலை அடக்க முடியாமல் கேட்டான், "யார்தான் வராங்க டின்னருக்கு?"

"நம்ம பெண்ணு விசாலிதான். சான் ஃபிரான்சிஸ்கோலேருந்து வரா."

"மெதுவா இப்ப சொல்றே! நான் ஏர்போர்ட் போயி அழச்சிட்டு வரணுமா? எப்ப, எந்த ஃப்ளைட்டாம்?"

"இல்ல. அவ தன் கார்லயே வராளாம்."

"இவளுக்கு லைசென்ஸ் இப்பதான் வந்துது. அதுக்குள்ள எதுக்குத் தனியா ஓட்டிண்டு வந்து கஷ்டப்படணும்?"

"தனியா வரல. ஃபிரண்டு கூட வராப்பல."

"யாரு? கிளாராவா, ஜேனட்டா?"

"இத பாருங்க. நான் சொல்றதப் பொறுமையாக் கேட்டுக்கணும். கிளாரா, ஜேனட்டோட இந்தத் தடவை வரல்ல. தன் கூடப் படிக்கற ஒரு பையனோட வரா."

"பையனா, யாரு அவன்? அவன் அப்பா அம்மா எங்க இருக்காங்க? இதே ஊரா? பேரென்னவாம்?"

"எனக்கு ஒண்ணும் தெரியாது. வந்தப்பறம்தான் தெரியும். பொறுமையா இருப்போமே. நமக்கு அவனை அறிமுகம் செஞ்சு வைக்கறேன்னு சொன்னா."

"அவளுக்கு அவனைப் புடிச்சிருக்காமா? காதலா? இவ படிக்கப் போனாளா இல்ல..."

"எனக்கு ஒண்ணும் தெரியாது."

"எங்கிட்ட முன்னமே சொல்லியிருந்தா அந்தப் பையனைப் பத்தி தீர விசாரிச்சிருப்பேனே."

"இன்னொண்ணும் சொன்னாள். அப்பா அவன்கிட்ட நோண்டி நோண்டி கேள்வி கேட்டு போரடிக்கப்படாதுன்னு சொல்லிடுன்னா. சரின்னேன்."

"என்ன பேசறே நீ. கல்யாணம்கிறது ஆயிரம் காலத்துப் பயிர். கடையில போயி அரைக் கிலோ காப்பிப் பொடி கொடுங்கிற மாதிரியா இது? கண்டவனை எப்படி விசாரிக்காம கல்யாணம் பண்றது? எங்க அப்பா அம்மா பார்த்து விசாரிச்சு ஏற்பாடு பண்ணிதானே உன்னை நான் பெண்பார்க்க வந்தேன். புடிச்சிருக்கா இல்லியான்னுன்னு அப்பா என்னக் கேட்டதும்தானே சரின்னேன். உனக்கும் அப்படி ஒரு சாய்ஸ் கொடுத்தாங்க இல்லியா உங்க வீட்ல?"

"ம்.ம்.. சாய்ஸ் குடுத்தாங்க. இன்னிக்கு உன்னைப் பெண்ணு பார்க்க வராங்க சிகப்பு புடவை கட்டிக்கிறயா, இல்ல நீலமான்னு. உங்களுக்கு என்னைப் பிடிச்சிதுன்னு தெரிஞ்ச உடனே ஒரு இன்னொரு சாய்ஸ் கொடுத்தாங்க. கல்யாணத்தை அந்த மாசமே வெச்சிக்கலாமா, இல்ல அடுத்த மாசம் வெச்சிக்கலாமான்னு!"

"அம்மாவும் பொண்ணும் சேர்ந்து எங்கிட்ட சொல்லாம ஏதோ திட்டம் போடறிங்கடீ..." என்று கோபத்துடன் அவன் சொல்லி முடிக்குமுன் வாசல் அழைப்பு மணி ஒலித்தது.

"வந்துட்டாங்க போல. போய்க் கதவைத் திறங்க. முகத்தில கொஞ்சம் சிரிப்பு தெரிஞ்சா ஒண்ணும் குறைஞ்சு போயிடாது."

"ஹாய் மாம், டாட்" என்று சொல்லிக்கொண்டே விசாலி கையில பெட்டியுடன் உள்ளே வந்தாள். கூடவே ஒரு பையனும்.

"மீட் ஸாம், மை ஸ்கூல்மேட். ஸாம் திஸ் ஈஸ் மை டாட். தட் ஈஸ் மை மாம் இன் த கிச்சன்."

அப்பளம் பொரித்துக்கொண்டே புன்னகையுடன் பத்மா கையசைத்தாள்.

"கம் இன், ஸிட் ஹியர் ஸாம்" என்று சோபாவைக் காட்டினான் கணேஷ்.

"அப்பா ஸாம் நல்லா தமிழ் பேசுவான்... ஸாம் பேசுடா எங்கப்பாகிட்ட. நான் போயி டிரஸ் மாத்திட்டு வரேன்"

(ஸாமாமே ஸாம். என்ன மதமோ, செக் பண்ணணும்)

"நீ கத்தோலிக்கா? ப்ராடெஸ்டன்டா ஸாம்?"

அவன் விழித்தான். (தந்திரமாக் கேட்டுப் பார்க்கணும்..)

"ஸாம்.... குட் ஃப்ரைடே சர்ச் சர்விசுக்குன்னு வந்தியா?"

"நோ"

"ஸாம் காப்பி தரவா" என்றாள் பத்மா.

"நோ ஆன்ட்டி, நான் ஒரு நாளக்கி அஞ்சு தடவை..."

(ஒரு வேளை... சம்ஷுதீனோ. முஸ்லிமா இருக்குமோ. அவங்கதான் ஒரு நாளைக்கு அஞ்சு தடவை தொழுகை. ஏழில் சனியுண்டாகில் எம்மதமும் சம்மதமாம் சாதகர்க்குன்னு சோதிட சிந்தாமணி சொல்றது சரியாய்டுமோ.....எதுக்கும் கேட்டுட்டா...)

"தினம் அஞ்சு தடவை நீ தொழுகை செய்வியா ஸாம்"

"இல்ல. அஞ்சு தடவைதான் காப்பி சாப்பிடுவேன்னு சொல்ல வந்தேன். இன்னிக்கு அஞ்சு தடவை காப்பி குடிச்சாச்சு."

"ஸாம் உன் முழுப்பேரு என்ன?"

"ஸாம் வாரன்."

"வாரன் உங்க அப்பாவா?"

"எஸ்."

"அமெரிக்கரா?"

"எஸ். நேச்சுரலைஸ்டு யு எஸ் சிட்டிசன்."

"எங்க பொறந்தார்?"

"சென்னையில சேத்துப்பட்டுல."

"ஓ.. அம்மா இருக்காங்களா?"

"எஸ்."

"பேரு."

"விமலா வாரன்"

"உங்க அப்பா முழுப்பேரு என்ன?"
"வெங்கி வாரன்."

"இந்தியப் பேரா தெரியலயே"

"அப்பா பேரு வெங்கடேஸ்வரன். அதை அவர் சுருக்கி வெங்கி வாரன்னு வெச்சிட்டார்."

"அப்பா அம்மா எங்க இருக்காங்க?"

"அட்லாண்டால."

"அப்பா எங்க படிச்சார்."

"விவேகானந்தால எம்.எஸ். மேத்ஸ். பிஎச்.டி. சிக்காகோல."

"விவேகானந்தாவா. கிரேட். எந்த வருஷம்?"

"சரியா தெரியாது. சார். சிக்ஸ்டி சிக்ஸ்... செவன்?"

"உனக்கு ஸ்காலர்ஷிப் வரதா? இல்ல அப்பாதான் காலேஜ் ஃபீஸ் கட்டறாரா?"

"அப்பாதான் அப்பப்ப தருவார். ஒரு பார்ட் டைம் வேலையும் செய்யறேன்."

"எவ்வளவு வரும் வேலையில?"

"நூறு, நூத்தம்பது.... கைச்செலவுக்குத் தேறும்"

(போச்சுரா. விசாலி ஒரு ஹேர்கட்டுக்கே இருநூறு டாலர் செலவு பண்றா.)

"உனக்கு ஏன் ஸாம்னு பேர் வெச்சாங்க?"

"என் பேரு சம்பத்குமாரன் வெங்கடேஸ்வரன்னுதான் இருந்துது. ஃஃப்ரெண்ட்ஸ் ஸாம்னு கூப்பிட்டாங்க. ஸாம் வாரன்னு சொல்ல சுலபமா இருக்குனு..."

"உங்க பர்ஸ்ல ஒரு டாலர் காசு இருக்கா. பூஜைக்கு வேணும்" என்றாள் பத்மா.

""அங்க இருக்கு போய் எடுத்துக்கோ. நேத்திக்கு இருநூறு டாலர் மாத்தி வெச்சிருந்தேன் இன்னிக்குப் பாத்தா நூறுதான் இருக்கு. யாரு எடுத்தா?" என்று கேட்ட கணேஷ் ஸாம் பக்கம் திரும்பி, "நெள ஸாம்.." என்று தொடங்க, ஸாம் விருட்டென்று எழுந்து "ஸார், சத்தியமா சொல்றேன் நான் அதை எடுக்கல. என்னை விட்டுருங்க" என்றான்.

"ஸாரி. ஸாரி. தப்பா நெனச்சுக்காத. நீ எடுத்தேன்னு சொல்லல. நான் என்ன சொல்ல..."

"போதும்பா..அவனை அறுக்காதீங்க... நீங்க அவன்கிட்ட பேசறச்சயே நினைச்சேன். இன்னிக்கு செத்தாண்டா ஸாம்னு. கமான் ஸாம், கெட் அப்."

"எல்லோரும் சாப்பிடலாம் வாங்க" என்று பத்மா அழைத்ததும் சாப்பிட அமர்ந்தார்கள்.

"ஸாம் வெக்கப்படாம சாப்பிடு. உனக்குன்னு எங்கம்மா ஸ்பெஷலா பண்ணிருக்காங்க."

"எல்லாம் சூப்பர் ஆன்டி. விசி, உன் அழகு உங்கம்மாகிட்டேருந்து வந்திருக்கு. அதேபோல அவங்க சமயலும் உனக்கு வந்திட்டா..."

பத்மா முகம் சிவந்து ஸாமுக்கு கூடுதலாய் ஒரு கரண்டி பாயசம் போட்டாள்.

"மீ குக்கிங்? தட் வில் பி த டே. ஷட் அப் அண்ட் ஈட் ஸாம்" என்றாள் விசாலி.

(இவளானா ஸாம்ஸாம்னு குழையறா..அவனானா விசிவிசின்னு கொஞ்சறான். இன்னும் முறையா ஒரு நிச்சியதார்த்தம் கூட ஆகலே.)

சாப்பிட்டு முடிந்ததும் ஸாம் கைகழுவப் போனான்.

"அம்மா. நான் ஸாண்டா மோனிகா வரைக்கும் போய் ஸாமை டிராப் பண்ணிட்டு வரேன்" என்றாள் விசாலி.

"ஓ! ஸாண்டா மோனிகால அண்ணா இருக்காரா..அவர் நம்பர், ஈமெயில் தரச்சொல்லு. அவன் அப்பா அம்மா நம்பரும் தரச்சொல்லு" என்றான் கணேஷ்.

"எதுக்கு அவங்க நம்பரெல்லாம் உங்களுக்கு?"

"எல்லாம் உன் கல்யாண விஷயமாத்தான். ஸாமோட ஜாதகம் கேட்டு வாங்கிடலாம். ஜாதகம் இல்லாட்டியும் பிறந்த நாள், நேரம், இடம் தெரிஞ்சா ஜோசிய சாஃப்ட்வேர் வெச்சு கணிச்சிடலாம். அப்புறம் திருவிடமருதூர் ஜோசியன்கிட்டே காட்டி பொருத்தம் பார்த்திட்டா, சம்மர் லீவுலயே உங்க கல்யாணம் வெச்சிக்கலாமே?"

"யார் சொன்னா ஸாமை எனக்குப் பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு? அவன் காலேஜ்ல ரெண்டு கிளாஸ்ல என்கூடப் படிக்கறான். தட்ஸ் ஆல். நான் எல்.ஏ. போறேனு தெரிஞ்சதும், நானும் எங்க அண்ணா வீட்டுக்குப் போகணும் உன்கூட கார்ல வரவான்னு கேட்டான். பேச்சுத் துணையா இருக்கும்னு, சரி வாடான்னேன். இங்க வந்து சாப்பிட்டாச்சு. அவனை டிராப் பண்ணிட்டு வரேன். நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காதே. ஒரு பையனோட கார்ல வந்தது பெரிய குத்தமா?"

"அப்ப உன் கல்யாணம்!"

"நான் இப்ப ரெடியில்ல. முதல்ல நான் படிப்பை முடிக்கறேன். அப்புறம் வேலை கிடச்சு செட்டிலானப்பறம் பார்த்துக்கலாம். இதோ ஸாம் வந்துட்டான். கமான் ஸாம், ரெடியா? லெட் அஸ் ஹிட் த ரோட்!"

எல்லே சுவாமிநாதன்
More

தென்றல் சிறுகதைப் போட்டி 2014
கப்பல் பறவை
காத்திருப்பு…
Share: 
© Copyright 2020 Tamilonline