Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | பயணம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புதுமைத்தொடர் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சிறுகதை
முக்கோணங்கள்
வெங்கலமடையாளின் சாபம் (நாட்டுப்புறக் கதை)
- சித்ரா மஹேஷ்|டிசம்பர் 2005|
Share:
Click Here Enlargeஎனது சொந்த கிராமம் உடுமலை அருகே உள்ள தளி. பல ஆண்டுகளுக்கு முன்பு பாளையப்பட்டின் ஆட்சிக்குட்பட்டதாய் இருந்தது அது. அந்தக் காலத்தில் பஞ்சம் பிழைக்கவேண்டி ஊர்விட்டு ஊர் செல்வது வழக்கம். அது போன்றே ஆவுடையா குடும்பனும் அவனது மனைவி வெங்கல மடையாளும் மதுரை மாடக்குளத்திலுருந்து தளிக்கு வந்தனர். தளியருகே தினைக்குளம் என்ற ஊரில் தங்கி அரண்மனைக்குட்பட்ட மதகு ஒன்றைக் காவல் புரிவது, நீர் பாய்ச்சுவது மற்றும் மதகில் மீன்களைப் பிடித்து அரண்மனைக்குக் கொடுத்து வருவது போன்ற வேலைகளைச் செய்து வந்தனர். இருவரும் மிக மகிழ்வோடு வாழ்ந்து வந்தனர்.

ஒரு சமயம் ஆவுடையானின் மனைவி கருவுற்றிருந்தாள். எப்போதும்போல் மீன்பிடிக்கச் சென்ற ஆவுடையப்பனுக்கு வலையில் ஒரு மீன் மட்டுமே சிக்கியது. அரண்மனையில் ஒரு மீனை மட்டும் எப்படிக் கொண்டுபோய்க் கொடுப்பது என்று எண்ணினான். அப்போது தன் மனைவி மீன் வேண்டுமென்று ஆசையாகக் கேட்டது நினைவுக்கு வந்தது. அம்மீனை அவளுக்கு எடுத்துச் சென்றான். அதைக் கொடுத்து சமைக்கச் சொல்லிவிட்டு மதகுக்குக் காவல்புரியச் சென்றான்.

வெங்கலமடையாள் சமையல் செய்து தனது கணவனுக்கு மதிய உணவை எடுத்துச் சென்றாள். அவ்வழியே அரண்மனையார் தினமும் ஆவுடையான் மீன் கொண்டு வருவானே இன்று வெகுநேரமாகியும் காணவில்லையென்று தேடிக்கொண்டு வந்து ஆவுடையானிடம் கேட்க, அவன் "இன்றைக்கு மீன் ஒன்றும் விழுகலை சாமி" என்று சொன்னான்.

அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்த அரண்மனையார் எதிர்ப்பட்ட வெங்கல மடையாளிடம் "என்ன சாப்பாடு?" என்று கேட்டார். அவள் "மீன் குழம்புங்க சாமி" என்றாள். "நம்மை ஏமாற்றி மோசம் பண்ணிட்டானே ஆவுடையான்" என்ற ஆத்திரத்தில் குறுக்கு வழியே மதகிற்குச் சென்று ஆவுடையானைத் தன் வாளால் வெட்டிப் போட்டுவிட்டு அரண்மனைக்குத் திரும்பிவிடுகிறார். செய்தியறிந்த வெங்கலமடையாள் தன் சுற்றத்தார்களிடம் சந்தனப்பட்டை, குங்குமப்பட்டை போன்ற வற்றால் அரண்மனைக்கு எதிரில் ஒரு எரிகுழி ஒன்றைத் தயார்செய்யச் சொல்லி அதில் தீமூட்டி, அந்த எரிகுழியை மூன்றுமுறை சுற்றிவந்து அனைத்துத் தெய்வங்களையும் வணங்கி அழுது புலம்பியவாறு,

“சிறுமீன் பெருக பெருமீன் அருக,
அரண்மனை அழிய ஆமணக்கு விளைய”
என்ற சாபத்தை அளித்தவாறு தீயினுள் பாய்ந்து விடுகிறாள். வெங்கலமடையாள் கர்ப்பமாக இருந்ததால் குழந்தை ஒரு புறமும் அவள் ஒரு புறமாகவும் வெடித்துச் சிதறினர். அக்குழந்தையைக் காணி மள்ளன் என்பவன் எடுத்து வளர்த்து வரும்போது, அக்குழந்தையை எப்படி வளர்ப்பது என்று அவன் புலம்ப “நாங்கள் இருக்கிறோம் கவலைப்படாதே” என்று வெங்கலமடையாள் காட்சி கொடுத்துக் கூறியதாகக் கதை நிலவுகிறது.

இக்கோவிலில் குடும்பர் இனத்தவரே பூசாரியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆடி மாதத்தில் ஆடிப் பதினெட்டு கழிந்த பிறகு வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வழிபாடு நடைபெறுகிறது. அப்போது தினைக்குளம் என்ற ஊரிலிருந்து சாமி பொருட்கள் அடங்கிய ஓலைப்பெட்டி - போளை முடி - மேளதாளத்துடன் எடுத்துச் சென்று சுத்தம் செய்து பின்னர் சந்தனப் பொட்டுவைத்து வழிபடுகின்றனர். நோன்பின் போது படையலாக முதல் ரெண்டு நாள்கள் அசைவ உணவில் முட்டை வைத்த கருங்கோழி சமைத்தும், மீன் குழம்பு, முட்டை, கஞ்சா, சுருட்டு, சாராயம் போன்றவையும் படையல் செய்யப்படுகிறது.

கடைசிநாள் சைவப்பூசை நடைபெறுகிறது. இப்பூசையில் அவல், பொரிகடலை, தேங்காய், பழம், பால், இளநீர் போன்றவை படைக்கப்பகின்றன. அருகில் உள்ள கன்னிமார் கோவிலில் 7 ஊற்றுக்களில் தீர்த்தம் எடுத்து கும்பம் தாளித்து சக்தி அழைத்து பின்னர் கும்பத்தினையும் போளை முடியையும் எடுத்து வந்து கோவிலில் வைத்து வழிபடுகின்றனர்.

இன்றும் அரண்மனையிருந்த இடத்தில் நீண்ட காலம் செழித்து வாழமுடியாது என்ற வெங்கலமடையாளின் சாபம் உண்மையாக நிலவிவருகிறது.

சித்ரா மஹேஷ்
More

முக்கோணங்கள்
Share: 
© Copyright 2020 Tamilonline