Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Feruary 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
"உன் குடும்பம் அழகானது!"
கனவு மெய்ப்பட வேண்டும்
இரைச்சலே வாழ்க்கையாக...
- அபர்ணா பாஸ்கர்|பிப்ரவரி 2014|
Share:
இந்து முடிவு பண்ணிவிட்டாள். இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் மதன், மேதினி, மாதவ் எல்லோருடனும் வெளியூருக்குப் போய்விட வேண்டும். பின்ன என்ன? இந்து ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மானேஜராய் இருக்கிறாள். வேலைப் பளுவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மதனோ ஸ்டாக் மார்க்கெட், இன்வெஸ்ட்மன்ட்ஸ் என்று எப்போதும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு திரியும் பிஸினஸ் அனலிஸ்ட். மேதினி பத்தாம் வகுப்புக்கே உரிய படிப்புச் சுமையும், பதினாறு வயதுக்கான பருவச் சுமையும் சேர்ந்து தன் உலகில் இருக்கிறாள். எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்டு வாதாடும் பதிமூன்று வயதில் மாதவ். எல்லோரும் சூப்பர் பிஸி.

குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து பேச நேரமே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என்று இந்துவுக்கு ஒரே ஆதங்கம். வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஆளுக்கொரு கம்ப்யூட்டரைக் கட்டிக் கொண்டு, ஃபோனை வைத்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளதே என்று பெரிய வருத்தம். நான்கு பேரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடக்கூட முடியலையே என்று தன் மனதுக்குள்ளேயே மாய்ந்து மருகிக் கொண்டிருந்தாள். தான் வளரும்போது அப்பா, அம்மா, அண்ணா,அக்கா எல்லோருடனும் செலவழித்த நாட்களை தினம் தினம் அமெரிக்காவில் தேடிக்கொண்டே இருந்தாள்.

ரொம்ப நாள் ஆசைப்பட்டபடி ஹவாய்க்கு புக் பண்ணச் சொல்லி மதனைப் பிடுங்கி அவனும் ஃப்ளைட், ஹோட்டல், கார் ரென்டல் எல்லாம் புக் செய்துவிட்டான். இந்துவுக்கு இரண்டாவது ஹனிமூனுக்குப் போவதுபோல ஒரே சந்தோஷம்.

"வேலை, வேலை, ஆம்பளைக்கும் வேலை, பொம்பளைக்கும் வேலை, ஷண்முகா" என்று பாட்டை முணுமுணுத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் இந்து. மேதினி புத்தகங்களின் தீவுக்குள் மூழ்கியிருந்தாள். ஃபோன் அடித்தது. "மேதினீ. ப்ளீஸ், ஃபோனை எடு." என்றபடி பாத்ரூமுக்குள் நுழைந்தாள் இந்து. "மாதவ், ஃபோன் மேலதான இருக்கு, நீ எடு" என்று தம்பிக்கு ஆணையிட்டாள் மேதினி. "ஹலோ டாட், யெஸ், யெஸ், ஓகே" என்று பேசிவிட்டு ஃபோனை வைத்தான் மாதவ்.

குளித்துவிட்டு வெளியே வந்த இந்து, "ஃபோன் பண்ணது அப்பாதானே, என்ன சொன்னார்?" என்றபடி சமையலறைக்குள் நுழைந்தாள். ஃப்ரீஸரில் இருந்த நறுக்கிய காய்கறிகளை எடுத்து மைக்ரோவேவில் வைத்து பட்டனை அமுத்தினாள். "டாட் வில் பீ லேட் டுடே" என்று மாடியிலிருந்தே மாதவ் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் சென்றான். வாழ்க்கை எப்படி பிரேக் இல்லாத கார் மாதிரி அசுரவேகத்தில் பறக்கிறது. மேதினி இன்னும் இரண்டே வருடங்களில் காலேஜுக்குப் போய்விடுவாள். நேற்றுதான் பிறந்த மாதிரி இருக்கு. மாதவ் அடுத்த வருடம் ஹைஸ்கூல் என்றால் நம்ப முடியவில்லை.

காஃபி மேக்கரில் கொலம்பியன் காப்பி வாசனை இழுத்தது. சூடாகக் காப்பியை கோப்பையில் ஊற்றிக்கொண்டே லேப்டாப்பை டாக் செய்தாள். வேலையிலிருந்து வீட்டுக்கு வருவதற்குள் இத்தனை மின்னஞ்சலா? அலுப்புடன் பார்த்தாள். "மேதினீ, மாதவ் வந்து பாலக் குடிங்க" என்று உரத்த குரலில் சத்தம் போட்டு மீண்டும் சலாட் பையிலிருந்து காய்கறிகளைக் கொட்டி, டிரெஸ்ஸிங்கைச் சேர்த்து, க்ரூடான்ஸையும் போட்டாள். மைக்ரோவேவில் வெந்த காய்கறிகளுக்கு உப்பும் மிளகும் சேர்த்தாள். கார்லிக் பிரெட்டை அவனிலிருந்து எடுத்தாள்.

ஐந்துநாள் லீவில் போவதால் எல்லா வேலையையும் தன்னோடு வேலை பார்க்கும் மரியாவுக்குச் சொல்லிவிட்டு, பேக் அப் ஏற்பாடு பண்ணிவிட்டு லேப்டாப்பை மூடும்போது பத்து மணியாகியிருந்தது. அப்பாடா, இத்தோட வேலைக்கு ஒரு வாரம் கும்பிடு என்று பெருமூச்சு விட்டாள்.

மேதினி ஐபாடை பேன்ட் பாக்கெட்டிலும், இயர் ஃபோனை காதிலும் சொருகிக் கொண்டுதான் ஏர்போர்ட்டுக்கே கிளம்பினாள். மாதவ் அவன் பங்குக்குக் கையில் கொண்டுபோகும் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தான். மோசமான தட்பவெப்பம் காரணமாய் விமானம் 2 மணி நேரம் லேட்டாகக் கிளம்பும் என்றார்கள். மாதவ் ஐஃபோனில் ஸ்டாக் மார்க்கெட் நிலவரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்து பொறுத்து பொறுத்துப் பார்த்தாள். ஒருத்தரும் எலெக்ட்ரானிக்ஸை விடுவதாக இல்லை. பையிலிருந்து எடுத்து எலெக்ட்ரானிக் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தாள். ஒருவழியாக ஃப்ளைட் கிளம்பியது. "மாதவ், கல்யாணமான புதுசுல ஹொகேனக்கல் போனோமே. ஞாபகம் இருக்கா? அத்தை, மாமா, எங்கம்மா, அப்பா, அண்ணா, அக்கா, சீனு தாத்தா எல்லோரும் சேர்ந்து போன ஹனிமூன் எப்படி இருந்தது? அவ்வளவு கூட்டத்திலும் நிறைய சந்தோஷம், நிறைய கலாட்டாவா இருந்ததில்ல?" என்றாள்.

"ஹனிமூனுக்குத் தனியாக போகலைங்கறதுதான் உன்னுடைய பெரிய குறையா இருந்தது அப்போதுங்கறதும் ஞாபகம் இருக்கு" என்றான். "அவ்வளவு கூட்டத்தில் நமக்கிருந்த ப்ரைவசி, யாருமே இல்லாத இங்க இல்லையே. ப்ரைவசிங்கறது என்ன? நினைத்தபோது மனசுவிட்டு பேசமுடியறதே பெரிய ப்ரைவசிதானே. இங்க ஒரே வீட்டில் நான் மாடியிலும் நீங்க கீழேயும் இருக்கும்போதே ஈமெயிலோ, டெக்ஸ்ட் பண்ணியோதான் பலமுறை பேசிக்கறோம்" என்று மதனைத் திரும்பிப் பார்த்தாள். தூக்கம் கண்ணைக் கவ்விக் கொண்டிருந்ததில் நீ என்ன சொன்னாலும் சரிதான் என்பதுபோல் திரும்பிக் கொண்டான்.

ஹோனலூலு ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்து ரென்ட்டல் காரில் ஏறியவுடன் ஹோட்டல் அட்ரெஸை ஜிபியெஸ்ஸில் மதன் உள்ளிட்டான். "வாவ்! ஊர் எவ்வளோ அழகா இருக்கு" என்று இந்து ரசிக்கத் தொடங்கினாள். வழி முழுவதும் ஜிபியெஸ்ஸின் பேச்சுதான் பிரமாதமாய் இருந்தது. "டேக் த நெக்ஸ்ட் ரைட் டர்ன், டேக் த நெக்ஸ்ட் லெஃப்ட் டர்ன்" என்று பேசிக்கொண்டே வந்தது... "பேசாமல் டிரெக்‌ஷனைக் குடுக்கும்படி இந்த ஜிபியெஸ்ஸை செட் பண்ண முடியாதா மதன்?" என்றாள். "கார் ஓட்டும்போது ரோடுலேர்ந்து கண்ணெடுக்காம ஓட்டதான் வாய்ஸோட வருது. அப்புறம் சத்தமில்லாம வேணும்னா எப்படி?" என்று மதன் லேசாய்ச் சிடுசிடுத்தான்.
ஹோட்டலில் செக்கின் பண்ணிவிட்டு ரூமுக்கு வந்ததும் முகம் அலம்பி உடை மாற்றச் சென்றாள் இந்து. பத்து நிமிடத்தில் வெளியே வந்து பார்த்தால் முதல் வேலையாய் மதன் ஐபேடில் நீந்திக் கொண்டிருந்தான். ஃப்ரீ வயர்லெஸ் இருக்கும் ஹோட்டலா என்று கேட்ட பிறகுதான் ரூமே எடுத்திருந்தான். மேதினி ஐடச்சில் டெக்ஸ்ட் செய்து கொண்டிருந்தாள். மாதவ் டிவியைப் போட்டு ஸ்போர்ட்ஸ் சேனலை உருட்டிக் கொண்டிருந்தான். "ஆரம்பிச்சாச்சா? இங்க வந்துமா? எல்லாரும் போய் உடை மாத்திகிட்டு வாங்க. வெளியில போகலாம். எத்தனை அழகான ஊரு. சுத்திப்பார்க்க வேண்டாமா?" என்று எல்லாரையும் கிளப்பினாள்.

பேர்ள் ஹார்பரைச் சுற்றும்போதும், கோகோ க்ரேடர் ஹைக் போகும்போதும், மனோவா ஃபால்ஸ் போகும்போதும் சரி இன்ஸ்டாக்ராமிலும் ஃபேஸ்புக்கிலும் புகைப்படங்கள் உலகத்துக்கே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. நிக்கானின் டிஜிடல் காமிராவிலிருந்து புகைப்படங்களும் வீடியோக்களும் ஸ்கை ட்ரைவுக்கு தினந்தினம் ஏறிக்கொண்டிருந்தன. மதனுடைய ட்வீட் கமெண்ட்களுக்கு பதில் கமெண்ட்டும் லைக்குகளும் குவிந்தவண்ணம் இருந்தன. நிஜமாவே நம்ம நாலு பேர்தான் வெளியூருக்கு வந்திருக்கோமா என்று சந்தேகம் வந்துவிட்டது.

அமெரிக்காவுக்கு வந்த புதிதில் இந்தியாவுக்கு ஃபோன் பேச ஒரு நிமிடத்துக்கு ஒரு டாலர் என்பதால் ஒரு வாரம் முழுவதும் வெயிட் பண்ணி அப்பாவிடமும், அம்மாவிடமும் பேசியது ஞாபகம் வந்தது. எல்லா தடவையும் வீட்டில் எல்லாரிடமும் அந்த ஐந்து பத்து நிமிடங்களில் பேசிவிட முடியாது. இந்த வாரம் அப்பாவிடமும் அண்ணாவிடமும் பேசினால் அடுத்த வாரம் அம்மாவிடமும் சீனு தாத்தாவிடமும் பேச டர்ன் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். சில சமயம் அம்மாவிடமிருந்து நீளமான கடிதங்கள் வரும். அதைப் படித்துப் படித்து கண்களின் ஓரம் ஈரமாகிவிடும்.

இப்போதெல்லாம் அப்பாவே வொனாஜில் தினம் கூப்பிட்டுவிடுகிறார். சில சமயம் நேரம் மறந்து இரவு பன்னிரெண்டு, ஒரு மணிக்கெல்லாம் ஃபோன் வந்துவிடும். அடித்துப் புரண்டு எழுந்து பேசிய நாட்களுண்டு. எத்தனை பேசினாலும் செலவில்லை. ஆனால் பேச நேரம் இருப்பதில்லை. “எல்லாரும் ஃபைன்மா. மேதினியோட டான்ஸ் ப்ரொக்ராம் கோயில்ல இருக்கு நாளைக்கு. மாதவ் சயன்ஸ் ப்ராஜக்ட்ல ஸ்டேட் லெவெல்ல செலக்ட் ஆயிருக்கான்பா. ஒரே குளிரு. புதுக் கார் மாத்தியிருக்கோம், ஆமாம். நல்ல மைலேஜ்தான். ஆஃபீஸ் வந்தாச்சு. அப்பறம் பேசலாம்" இதுதான் உரையாடலே!

லனாய்க்கு உள்ளூர் ஃப்ளைட்டில் போய் இறங்கினோம். இரவு பத்து மணிக்கு ஆள் அரவமற்ற இடத்தில் இருந்த எங்கள் காட்டேஜ்ஜுக்குப் போய்ச் சேர்ந்தோம். உள்ளே சுத்தமாக மூன்று பெட்ரூமுடன் அடக்கமாக இருந்தது. எல்லா பெட்டியையும் போட்டது போட்டபடி தூங்கிவிட்டோம். காலை ஏழு மணிக்குக் காதுக்குள்ளே அலையடித்தது போல இருக்கவும் கண் விழித்துப் பார்த்தேன். மதன், பசங்க யாரையும் காணுமே என்று நினைத்துக் கொண்டே கதவைத் திறந்து பார்த்தால், கைக்கெட்டும் தூரத்தில் நீல சாமரம் வீசிக்கொண்டிருப்பது போல கடல்.

மேதினி அப்பாவுடன் கைகோர்த்தபடி கால்களை நனைத்து நடந்து கொண்டிருந்தாள். மாதவ் "மாம், யூ ஷுட் கம் அண்ட் சீ திஸ்" என்று என்னை இழுத்துக்கொண்டு அலையை நோக்கி ஓடினான். கோபால்ட் நீலத்தில் தண்ணீரின் அழகு வர்ணிக்க முடியாத அற்புதம். ஈ காக்கா இல்லாமல் எங்களுடைய ப்ரைவேட் பீச் போல இருந்தது. அடுத்த மூன்று நாட்களும் வைஃபை, 4ஜி என்று டெக்னாலஜி பின்னால் அலையாமல் அந்தச் சின்ன ஊருக்குள் சென்று புத்தம் புதுசாகக் காய்கறி, பழங்களெல்லாம் வாங்கி வந்து சாப்பிட்டதும், ஹைக் போனதும், காலாற கடலில் நடந்ததும், மணல் வீடு கட்டினதும், சீட்டுக்கட்டு விளையாடினதும், மேதினியும் மாதவும் சண்டை போட்டுக் கொண்டதும் எல்லாமே சுகமாக இருந்தது.

காலை ஆறு மணிக்கு விழிப்பு வந்து காட்டேஜுக்கு வெளியில் வந்தாள் இந்து. இன்னும் சூரியன் உதிப்போமா வேண்டாமா என்று முடிவெடுத்திருக்கவில்லை. அலைக் காற்று கொஞ்சம் பழகியிருந்தது. மதனும் பிள்ளைகளும் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். நிசப்தம்! மௌனம்! தியானம்! இதெல்லாம் மறந்து போய் எத்தனை வருஷங்கள் ஆகிவிட்டன. ஒரு மனுஷன் ஒண்ணுமே பண்ணாமல் சும்மாகூட இருக்க முடியுமா? கடலையும் காற்றையும் மட்டும் பார்த்துக்கொண்டே இருக்க முடியுமா? பச்சைக் குழந்தை அப்பாவின் தோளில் சாய்ந்து தூங்குவதைப் போல எதையுமே யோசிக்காத நிச்சிந்தையாக இருக்க முடியுமா?

வாழ்க்கையின் பேரிரைச்சல் பழகிப் பழகி இரைச்சல்தான் இயல்பு என்றாகிவிட்டதோ? நினைத்துக்கொண்டே மூன்று நாட்களாய்த் தொடாத செல் ஃபோனைத் பையிலிருந்து துளாவி எடுத்தாள். சார்ஜ் சுத்தமாய் இல்லை. "ப்ச்" என்றபடி காஃபியைத் தேடி கிச்சனுக்கு போனால் காஃபி பாக்கெட்டில் கடைசி அரை ஸ்பூன்தான் இருந்தது. மீண்டும் ஒரு "ப்ச்”சுடன் கிண்டிலைத் தட்டினாள். ஏற்கனவே படித்த புத்தகங்கள்தான் இருந்தது. வைஃபை இல்லாமல் புதுசும் டவுன்லோட் பண்ண முடியவில்லை. இன்டர்நெட்டும் செல்ஃபோனும் இல்லாமல் எப்படி வாழ்ந்தார்கள் என்று வியப்பாக இருந்தது.

நேத்திக்கு சுந்தரி அத்தையோட செல்லப் பெண் சங்கவிக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிருக்குமே, ஃபேஸ்புக்கில் ஃபோட்டோ போட்டிருப்பாளோ? மரியா ஏதாவது சந்தேகம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருப்பாளோ, பெட் கெனலில் விட்டுவிட்டு வந்த சார்லி ஒழுங்காய்ச் சாப்பிடுமோ இல்லியோ, சீனு தாத்தாவுக்கு கபம் கட்டியிருக்குன்னு அப்பா சொன்னாரே, சரியாச்சான்னு தெரியலையே! இப்படி ஆயிரம் கேள்வியும் கவலையுமாய் அலையுடன் அலையாய் அலை பாய்ந்தது இந்துவின் மனசு. “மதன், கிட்ஸ் எழுந்திருங்கோ, எல்லாரும் டவுன்டவுனுக்குப் போய் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம், கமான் கெட்டப்” என்று சுறுசுறுப்பாய் எழுப்பினாள்.

வீட்டுக்கு வந்து எல்லாச் சாமானையும் எடுத்து வைத்து, துணிகளைத் துவைக்கப் போட்டு, பெட்டிகளை எடுத்து வைத்து, சார்லியை கூட்டிக்கொண்டு வந்து என்று வேலை சரியாக இருந்தது. நாளைக்குத்திங்கள் கிழமை. பழைய குருடி கதவத் தெறடின்னு வேலை, ஸ்கூலுன்னு ஓட வேண்டியதுதான். என்று நினைத்தபடியே லேப்டாப்பில் மெயில்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மதன் மாடியில் மேக்புக்கில் இருந்தான். "தாங்க் யூ ஃபார் த ஒன்டர்ஃபுல் வெகேஷன்" என்று சாட் விண்டோவில் மதனுக்கு அடித்தாள். "ஷால் ஐ புக் ஒன் மோர் வெகேஷன்?" என்றான் மதன். " நாட் டில் நெக்ஸ்ட் கிறிஸ்துமஸ்" என்றாள் இந்து.

பிடித்தோ பிடிக்காமலோ அந்த இரைச்சலே இயல்பான வாழ்வாக மாறியிருந்ததை மறுக்க முடியவில்லை, மாற்றவும் முயலவில்லை!

அபர்ணா பாஸ்கர்,
அட்லாண்டா, ஜார்ஜியா
More

"உன் குடும்பம் அழகானது!"
கனவு மெய்ப்பட வேண்டும்
Share: 
© Copyright 2020 Tamilonline