Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
ஜாண் வயிறு
உயர்ந்த உள்ளம்
ஜெட்லாக்
பாப்பாக்கு ஸ்கூல்!
- பிரதிபா பிரேம்குமார்|நவம்பர் 2012|
Share:
இந்த வாரம் முழுக்க தொலைபேசியில் என்னோட ஹாட் டாபிக், "ஆமாம் வர்ற திங்கள்கிழமை தான் ஸ்கூல், அவகிட்ட ஸ்கூல்பத்தி எல்லாம் சொல்லியிருக்கோம், பாப்பாவும் ஸ்கூல் போணும் போணும்னு சொல்லிட்டே இருக்கா" இதே புராணம்தான். குட்டிம்மா வழக்கம் போல எதையோ ஆராய்ச்சி பண்ணிட்டு வந்து சமர்த்தா என் பக்கத்தில நின்னா. அம்மா, "யாரு ஃபோன்ல?" என்றாள். "ப்ரியா ஆன்ட்டி மா" என்று சொல்லிவிட்டு, "ஓகே ப்ரியா, பசி வந்துட்டுபோல பாப்பாக்கு நான் அப்புறம் பேசறேன்" என இணைப்பைத் துண்டித்துவிட்டு சமையலில் கவனமானேன்.

"அம்மா என் வயிறு பசிக்குது சொல்லுதும்மா" என்ற அந்த பிஞ்சுக் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு "இன்னும் 5 நிமிசம்தாண்டா கண்ணு!" எனச் சாப்பாடு கொடுப்பதற்குள் காலையே கட்டிக்கொண்டு வந்தது குழந்தை.

பாப்பாவுக்குப் பள்ளிக்குக் கொடுக்க வேண்டியதை வாங்குவதிலேயே இந்த வார இறுதி நாட்கள் பறந்து போயின. திங்கள் காலை வேகமாக எழுப்பி, பல்துலக்கி, பாலைக் கொடுத்தேன். உட்கார்ந்து கொண்டே தூங்க ஆரம்பித்த குழந்தையைப் பாவமாக பார்த்துவிட்டு, தொலைக்காட்சியில் அவளுக்கு பிடித்த பொம்மை படத்தைப் போட்டேன். ஒருவழியாகத் தயார் செய்துவிட்டு, இந்தியாவுக்குப் பேச தொலைபேசியை எடுத்து, இரண்டு தாத்தா பாட்டிகளிடமும் ஆசிர்வாதம் வாங்கி முடித்து, காரில் போய் அமர்ந்து கொண்டோம் .

இவளுடைய பள்ளியில் சொன்ன வழக்கப்படி முதல் நாள் விளையாட்டு மைதானத்தில் விட்டுவிட்டு வந்துவிடவேண்டும் என்பதால் "உள்ளே சென்று விளையாடு பாப்பா!" எனக் கூறி நின்றேன். எல்லாக் குழந்தைகளும் அம்மா அப்பா போனவுடன் அழுவதைப் பார்க்க மனம் கசிந்தது. ஆசிரியை வந்து "யு கேன் லீவ். வீ வில் டேக் கேர்" என்றதும் மெதுவாக நகரத் தொடங்கினேன். இதுவரை சமர்த்தாக நின்று கொண்டிருந்த பாப்பா காலைக் கட்டிக்கொண்டு "அம்மா போகாத; நானும் வரேன்" என கதற ஆரம்பித்தாள். நானும் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு "இல்லடா கண்ணா. பாரு எவ்ளோ ஃபிரண்ட்ஸ் உனக்கு. ஜாலியா விளையாடு தங்கம்!" எனக் கூறுகையிலே என் குரலும் தழுதழுத்தது. அவளை வலுக்கட்டாயமாக விலக்கி விட்டு நகர்கையிலே எனக்கும் அழுகை வெடித்தது. ஓடிவந்து காரில் ஏறிக்கொண்டேன். தேம்பி அழுத என்னைப் பார்த்துக் கதறிக் கொண்டிருந்தாள் குழந்தை. வீடு வந்தும் மனதில்லை. அம்மாவிடம் பேசி அழ ஆரம்பித்துவிட்டேன், குழந்த ரொம்ப அலர்றாம்மா என.

அழுது முடித்தவுடன் அம்மா சொன்னாள் "நீ முதல்ல பள்ளிக்கூடம் போனப்ப உனக்கு ஐந்து வயசு. அப்பவே நீ ரொம்ப அழுத. பாரு, இவ்வளவு வயசு ஆகியும் அழற. அவளுக்கு இரண்டரை வயசுதான். அவ என்ன பண்ணுவா? ஆடி, ஓடி விளையாட வேண்டிய வயசு இது. இன்னும் கொஞ்ச வருஷம் ஆனா நீயே நினச்சா கூட அவ உன்கூட இருக்க மாட்டா. ஆனா என்ன பண்றது இப்ப உள்ள காலத்திற்கு நாமளும் மாறணுமே...." என ஆறுதல் கூறினாள். இப்போ மனது கொஞ்சம் லேசானது. அம்மா சொன்னதின் அர்த்தம் எனக்குப் புரியாமல் இல்லை ஆனாலும் மனது ரொம்பவே பாரமாக இருந்தது. கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். மணி பன்னிரெண்டு.
அடுத்தது பசி வந்திருக்குமே, என்ன பண்ணுவாளோ? அவசரமா இருந்தா சொல்லுவாளா? டயபர் வேற போடலையே என ஆயிரம் எண்ணங்கள் மண்டையைக் குடைந்தன. எனக்கு வீட்டில் நிற்க முடியவில்லை. "வாங்க, எப்ப வரீங்க?" என நான் செய்த தொல்லையில் அரைமணியில் வந்து சேர்ந்தார் கணவர். இருவரையும் பார்த்ததும் பாப்பாவைத் தூக்கி வந்தார்கள். அவர்களுடைய கட்டுப்பாடுகளையெல்லாம் மறந்து கார்க் கதவைத் திறந்து கொண்டு ஓடிப்போய் பிள்ளையைக் கேட்டேன். அந்த ஆசிரியையோ "ப்ளீஸ் வி வில் புட் ஹேர் இன் கார் சீட்" எனக் கொடுக்க மறுத்துவிட்டார். மனதிற்குள் கருவியபடியே வந்து சீட்டில் அமர்ந்துக் கொண்டேன். குழந்தை அழுது கொண்டே என் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். "அம்மா எனக்கு ஸ்கூல் வேண்டாம் நீதான் வேணும்" என்றாள் என் குட்டி தேவதை தேம்பியபடியே.

"சரிடா கண்ணா" என வாரி அணைத்துக் கொண்டேன். "எவ்ள சொல்லி கூட்டிட்டு வந்தேன் இறங்காத அவங்களே வருவாங்கன்னு, போனியே என்ன ஆச்சு? காலையில என்னடான்னா, அவளுக்கு மேல நீ அலற, எல்லாரும் உன்னையே பார்க்கிறாங்க. நாளையிலேர்ந்து நானே பாத்துக்கறேன். நீ வேண்டாம்" என அவர் கத்தினதெல்லாம் நாங்கள் கொஞ்சிக் கொண்டதில் எங்கள் காதில் ஏறவே இல்லை!

பிரதிபா பிரேம்குமார்,
அட்லாண்டா, ஜார்ஜியா
More

ஜாண் வயிறு
உயர்ந்த உள்ளம்
ஜெட்லாக்
Share: 




© Copyright 2020 Tamilonline