Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
பாப்பாக்கு ஸ்கூல்!
உயர்ந்த உள்ளம்
ஜெட்லாக்
ஜாண் வயிறு
- அபர்ணா பாஸ்கர்|நவம்பர் 2012||(1 Comment)
Share:
ஆறு வருஷம் மூணு மாசம் இருபத்தி நாலு நாளுக்கப்புறம் கையில கிரீன் கார்டோட இந்தியாவுக்குப் போகப்போறேன். மனசு மட்டுமில்லாம வயிறும் என்னமா ஏங்கிக் கெடக்கு. காலைல ஏழு மணிக்கு ஒரு பவுலில் சக்கரையே கண்ணுல காட்டாத கார்ன் ஃப்ளேக்ஸ் அல்லது ரெண்டு ரொட்டித் துண்டம். பத்து மணிக்கு ஆபீசில் கழனித் தண்ணியாட்டம் ஓட ஓட ஒரு காப்பி, மதியம் உடலுக்கு ஆரோக்கியமானதுன்னு சொல்லி தட்டு நிறைய மாட்டுக்குப் புல் வைக்கிறாப்போல சாலட். அதுக்கு ஃபேட் இல்லாத ட்ரெஸ்ஸிங் வேற. மதியம் மீதி தண்ணிக் காப்பிய குடிச்சுட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்தா குழந்தைங்க இதத்தான் விரும்பி சாப்பிடறாங்கன்னு சாக்கு சொல்லி பாதி நாள் குழல் குழலா உறைப்பே இல்லாத பாஸ்தா. மீதி நாள் பீட்சா. ஒரு நாள் வெள்ளரி சாலட், மறுநாள் முள்ளங்கி சாலட், அதற்கடுத்த நாள் தக்காளி சாலட், பிறகு வெண்டக்காய் சாலட்(!) என்று வெரைட்டியாய் செய்யும் என் தர்மபத்தினியையும் குறைசொல்ல முடியாது. அப்புறம் அதுவும் கிடைக்காது.

சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கெட் டுகெதர் என்ற பேரில் நடக்கும் கூத்தைக் கேட்கவே வேண்டாம். "ஏய் மாலினி, திரும்பத் திரும்ப இந்தியன் சாப்பாடு போரடிக்குதுப்பா. இந்தத் தடவை எதியோபியன் சாப்பாடு பண்ணலாம்" என்பாள் என் அவஸ்தை தெரியாமல். எதியோபியா என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது நரம்பும் எலும்பும் வெடித்துவிடுவது போல ஊட்டச்சத்து இல்லாத என்புதோல் போர்த்திய உடம்புதான். சரிதான் நமக்கு சாப்பாடு சிங்கிதான் டோய் என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டேன்! ஆச்சரியமாக இஞ்செரா, மிஸ்ர வோட், சாம்பூசா என்ற பூதாகாரமான பெயரில் நம்முர் தோசையும் சாம்பாரும் சமோசாவும் கிடைத்தன. இந்தியாவிலிருந்து மூட்டை கட்டிக்கொண்டு எதியோபியாவுக்குச் சென்று நம்மூர்ச் சாப்பாட்டைச் சொல்லிக் கொடுத்த புண்ணியவான்களுக்கு வந்தனம்.

ஊருக்குப் போறேன்னு சொன்ன உடனே பட்டாபி வந்து ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்தான். என்ன லிஸ்ட்ன்னு கேட்டா சென்னைல எந்த இடத்தில எந்த ஹோட்டலில் என்ன பிரமாதமாய் கிடைக்கும்னுதான். அதைப் பார்த்தவுடனே மசக்கைல மாங்காயத் தேடறாப்போல அலைய ஆரம்பிச்சேன். அடையாறு கிராண்ட் ஸ்நாக்ஸில நெய் விட்டு மொறுமொறுன்னு அடையும் அதுக்கு அவியலும் கெடக்கும் பாருன்னு அவன் ஆரம்பித்தால், நமக்கே நம்மேல கழிவிரக்கம் பிறக்கும். சங்கீதாவுல பொடி தோசையை மறந்தா நானே மன்னிக்க மாட்டேன் என்பான். காரசாரமான செட்டிநாடு சாப்பாட்டுக்கு உசிலம்பட்டின்னு ஒரு ரெஸ்டாரண்ட் வந்திருக்குடா என்று ஜொள்ளு கொட்ட வைப்பான். இப்படியே அவன் நாக்கில் தடவிய தேனுடன் ஃப்ளைட் ஏறி சென்னை மாநகரத்துக்கு வந்திறங்கினேன். யப்பா! ஏர்போர்ட்டே இவ்வளவு மாறிடுச்சே! என்று வியந்தபடி வெளியே வந்தால் எங்கு பார்த்தாலும் ஃப்ளை ஓவரும், பல மாடிக் கட்டிடங்களும், முக்கியமாய் பளபளக்கும் போர்டுடன் உணவகங்களும், ஹோட்டல்களும், ரெஸ்டாரண்டுகளும், மெஸ்ஸுமாய் ‘ஆஹா, வேட்டைதான் இனி மவனே’ என்றது குதூகலமாய் மனசு.

தாத்தாவுடைய வீட்டுக்குள் நுழையும்போதே தேங்காய் எண்ணையில் கைமுறுக்கு செய்யும் வாசனை மூக்கைத் துளைத்தது. "தாத்தா, எப்படி இருக்கே? அப்பா எங்கே?" என்றபடி வீட்டுக்குள் நோட்டம் விட்டேன். "வாடா வா. நாங்கள் எல்லாரும் ஃபைன். நீதான் ரொம்ப எளச்சு போய்ட்ட, சரியா சாப்பிடறதில்லையா?" என்றபடி வாக்கிங் ஸ்டிக்குடன் தாத்தா வந்தார். "என்ன தாத்தா, சமையல் மாமி அசத்தலா சமைக்கிறா போலிருக்கு. முறுக்கு வாசனை தெருக்கோடி வரைக்கும் வரதே" என்றபடி சமையலறை நோக்கி நடந்தேன். "நீ ஒண்ணுடா, அந்த மாமிக்கு வந்த வாழ்வு, மாசம் ரெண்டாயிரம் டாலர் சம்பளம் கொடுத்து கலிஃபோர்னியாவுக்கு அழைச்சுண்டு போயிட்டா நம்ம போஸ்ட் ஆஃபீஸ் ராமாமிருதத்தோட நாட்டுப்பெண். பத்து நாளா லட்சுமின்னு ஒரு பொண்ணு வரது. அதுக்கே நான்தான் பயத்தம் பருப்புக்கும், கடலப் பருப்புக்கும் வித்யாசம் கத்துக் கொடுத்திண்டிருக்கேன். நம்மாத்துக்குப் பின்னாடி இருக்கிற முறுக்கு கம்பெனியிலேர்ந்து அந்த வாசனை வருது" என்று என் தலையில் கல்லைப் போட்டார். பட்டாபியோட லிஸ்டை சட்டை பாக்கெட்டுக்குள் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். லட்சுமியின் சமையலை(!) சாப்பிட்ட பின் என் மனைவி பிரபாவின் சமையலே தேவலாம்போல இருந்தது. உப்பு, புளி, காரம் எல்லாம் இருந்தது, ஆனால் ஒன்றுக்கொன்று டூ விட்டுக் கொண்டிருந்தது. சாதம் குழைந்து போயிருந்தது பல்லில்லா தாத்தாவின் கொடுப்பினையோ, என் கர்ம வினையோ தெரியவில்லை.

ஜெட் லாகெல்லாம் தீர்ந்த பின், சாயங்காலம் நாலு மணிக்கு பட்டாபியின் லிஸ்ட்டை எடுத்துக் கொண்டு சந்தோஷமாய் கிளம்பினேன். அப்பா ஈசிசேரில் சாய்ந்தபடி பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். "என்னடா, வெளில கிளம்பிட்டயா? உங்கத்தை ஈஸ்வரி ரெண்டு நாளாய் ஃபோன் பண்ணிண்டே இருக்கா. மருமானை கண்ணால பாக்கணுமாம். ஒரு எட்டு போய்ட்டு வந்துடேன்" என்றார். அப்பா பேச்சிற்கு மறுபேச்சு பேசி பழக்கமில்லை. "சரிப்பா" என்றேன். அதில் ஒரே ஒரு சிக்கல். தாத்தா வீடு தாம்பரம். அத்தை வீடோ வில்லிவாக்கத்தின் சந்து பொந்துகளில். நானோ டிக் அடிக்க நினைத்தது அடையாறில். ம்ஹூம் என்று பெருமூச்சு விட்டபடி கிளம்பினேன். சுத்தமாய் எனக்குப் பிடிக்காத அந்த இடத்துக்கு பஸ்ஸை பிடித்து ஆட்டோ பிடித்து தேடிப்பிடித்து போய்ச் சேரும்போது மணி எட்டரை.

"வாடா சுந்தா! எத்தனை வருஷமாச்சு பார்த்து. இந்த அத்தையை மறந்தே போச்சா? இளைச்சுட்டயே" என்றபடி வரவேற்றாள். "சிந்தூ, சுந்தா வந்திருக்கான் பாரு. அவனுக்காக ஸ்பெஷலாய் ஏதோ பண்ணினியே, கொண்டு வா." சிந்தூ ரெட்டை நாடி உடம்புடன் பாப் கட்டும் ஜீன்ஸ் பேன்ட்டுமாய் வந்து நின்றாள். அத்தைக்கு லேட்டாய் பிறந்த அருமை மகள். "உனக்குப் பிடிக்குமேன்னு பால் பேணி பண்றேன்னு சொன்னா கேக்காமல் பாஸ்தாவை பண்ணியிருக்கா. இதுக்காக கிளாசுககெல்லாம் போய் கத்துண்டிருக்காடா. நீயும் அமெரிக்காவிலேயே ரொம்ப வருஷமாய் இருந்துட்டியா. உனக்கும் இதெல்லாம்தான் பிடிக்கும்னு தோணித்து. சாப்பிடு" என்றாள். வெறுப்புடன் பாஸ்தாவைப் பார்த்தால் இதாலியனும் இல்லாமல் இந்தியனும் இல்லாமல் வெறித்துக் கொண்டிருந்தது! "சிந்தூ எத்தனை கெட்டிக்காரி பார்த்தியா. அமெரிக்காவில் அவளுக்கு ஒரு நல்ல வரனைப் பாரேன். நானும் அவளோட அங்கேயே வந்து செட்டில் ஆயிடலாம்னு பாக்கறேன்" என்றாள் அத்தை. பசி மயக்கத்தில் கொஞ்சம் கொரித்துவிட்டு சிந்தூவுக்கு வரன் பார்ப்பதாக பொய் வாக்குக் கொடுத்துவிட்டு ஒரு வழியாய்த் திரும்பி வந்து படுத்தேன்.
காலையிலிருந்து பத்து தடவை கொல்லைக்குப் போயாச்சு. வயறு தனியாவர்த்தனம் செய்வதை நிறுத்துவதாய் இல்லை. தாத்தா "என்னடா, பொண்ணுக்கு அமெரிக்கா வரன் வேணும்ணு தடபுடல் பண்ணிட்டாளா ஈஸ்வரி? நீயும் காணாததை கண்டாப்போல சாப்பிட்டையா? இப்ப கெடந்து அல்லாடற" என்று கிண்டல் பண்ணினார் என் அவஸ்தை தெரியாமல். ஜீரா கஷாயம் போட்டு கொடுத்தார் அப்பா. நாலு நாள் நீராகாரம்தான். வெள்ளத்துக்குப் பின் அமைதியாய் வெள்ளிக்கிழமை வயிறு கொஞ்சம் கட்டுப்பட்டது.

மணியிடமிருந்து ஃபோன் வந்தது. இந்த ஊரிலேயே கொட்டை போட்டவன். அவனுக்கும் எது எங்க கிடைக்கும்னு அத்துப்படி. இதுதான் சாக்கென்று மணியைப் பார்க்க கிளம்பினேன். குசலம் விசாரித்துவிட்டு, பழங்கதையெல்லாம் பேசி ரெண்டு மணி நேரமாச்சு. "மணி, வாடா நல்லதாய் ஒரு ஹோட்டலுக்குப் போய் வெட்டு வெட்டலாம். உள்ளூரில என்ன புதுசு, ஸ்பெஷல் சொல்லேன்" என்றேன். "மனுஷன் கெடறதே இந்த நாக்காலதாண்டா. ஒண்ணு பேசிக் கெடறோம். இல்ல சாப்பிட்டுக் கெடறோம். அதனால கன்னா பின்னான்னு சாப்பிடக் கூடாதுடா. குப்பத்தொட்டியாட்டம் வயிற்றை நினைக்கக் கூடாது. நான் தினம் சாப்பிடற எடத்துக்குப் போலாம். சுத்தமான சாப்பாடு. சத்தான சாப்பாடு" என்றான். மாம்பலத்தின் சந்து பொந்துக்களில் ஜன இரைச்சலில் அவனுடைய ஸ்கூட்டி சுலபமாய் நழுவிச் சென்றது.

அமைதியான ஒரு வீடு. வாசலில் பல கார்கள் வரிசை கட்டியிருந்தன. பிரேயர் ஹாலைப் போலிருந்த அந்த இடத்தில் எல்லோரும் தரையில் உட்கார்ந்து இருந்தனர். நானும் மணியும் இடம் பார்த்து அமர்ந்தோம். சொம்பில் பச்சையாய் ஒரு திரவம். "குடிடா, இது அருகம்புல் ஜூஸ். உடம்புக்கு ரொம்ப நல்லது" அருகம் புல்லுக்கு இவனென்ன அம்பாசடரா என்று எண்ணியபடி குடித்தேன். "இங்க செவென் கோர்ஸ் மீல்டா. கேட்டு வாங்கி சாப்பிடு " என்றான். வேப்பம்பூ பச்சடி, முளைவிட்ட பயறு சாலட், பாகற்காய் குழம்பு, கொள்ளு ரசம், மட்ட அரிசியில் ஒரு கப் சாதம், பிரண்டைத் துவையல் என்று வரிசையாக ஏழு விதமான சாப்பாட்டென்னமோ வந்தது. சாப்பிட்ட நாக்கும் மனசும்தான் செத்து சுண்ணாம்பாகிப் போனது. சாமியார் மடத்துக்குப் போனது போல ஒரு ஃபீலிங்குடன் மணிக்குக் கும்பிடு போட்டுவிட்டு வந்து சேர்ந்தேன். ஊருக்கு கிளம்ப நாலு நாள்தான் பாக்கி.

"சுந்தா, எனக்கு கண்ணுல காடராக்ட் இருக்குன்னு சொல்றார் டாக்டர். நீ இருக்கும்போதே கண் ஆபரேஷன் பண்ணிட்டா சௌரியமா இருக்கும். நீ என்ன சொல்ற?" என்றார் அப்பா. "சரிப்பா. நானே அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்ணறேன்." என்றேன். அடுத்த ரெண்டு நாளில் ஆபரேஷனை முடிந்து அப்பாவுக்கு தெளிவாக பார்வை திரும்பியதும் ஊருக்கு மூட்டை கட்டத்தான் சரியாக இருந்தது. "சுந்தா, அம்மா இருந்தால் உனக்கு வகைவகையா சமையல் பண்ணி போட்டிருப்பாடா. நீ அமெரிக்கா போனதிலிருந்து சுந்தாவுக்கு இது பிடிக்கும், சுந்தாவுக்கு அது பிடிக்கும்னு உன் நினைப்பில் விதவிதமாய் சமைச்சுண்டே இருந்தாள். அவளுக்கென்னவோ உலகத்திலேயே சந்தோஷமான, திருப்தியான விஷயம் உனக்குத் தன் கையால மணக்க மணக்க சமைச்சுப் போடறதுதான். அவளோட அன்பெல்லாம் ஒரு கவளம் சோற்றில் போட்டு பெசஞ்சுடுவா. இந்த தடவை அம்மா இல்லாமல் நீ வாடிப் போனதை நானும் பார்த்தேன். அம்மா இருந்தால் உன்னோட அனுப்பி வச்சிருப்பேண்டா. நீ கூப்பிட்ட போதெல்லாம் சுயநலமா அனுப்பி வைக்காம இருந்துட்டேன். மன்னிச்சிக்கோடா" என்றார் அப்பா. கண்கள் ஈரமாயிருந்தது. மனம் கனத்துப் போயிருந்தது. நான் ஓடி வந்தது அம்மாவுடைய நினைவுகளை தேடித்தான் என்று உணர்ந்தேன். நெய் விட்ட அடையிலும், பொடி தோசையிலும், காரசாரமான மிளகு ரசத்திலும் அம்மாவைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். துக்கத்தில் பேச முடியாமல் அப்பாவை அணைத்தபடி ஏர்போர்ட்டுக்குக் கிளம்பினேன். சான் ஃப்ரான்சிஸ்கோவில் இறங்கியவுடன் கன்னமெல்லாம் கண்ணீர்க் கோடுகள், காய்ந்திருந்தன.

"உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்" என்றபடி பிரபா வரவேற்றாள். அதில் நாட்டமே இல்லாமல் "என்ன சொல்லு" என்றேன். "நீங்களே வீட்டுக்கு வந்து பாருங்கள்" என்றாள். வீட்டுக்குப் போனதும் அசந்து போய் சோபாவில் உட்கார்ந்தேன். சுடச்சுடக் காப்பி நுரைபொங்க வந்தது. "இந்த மாமியை இந்தியாவிலேந்து சமையலுக்கு அழைச்சிண்டு வந்து ஒரு வாரத்திலேயே ராஜுக்கு வேலை போயிடுத்துன்னு திருப்பி அனுப்பறதா சொன்னா லீலா. நான்தான் நமக்கு ஹெல்பா இருக்குமேன்னு கூட்டிண்டு வந்துட்டேன். காஃபி எப்படி?" என்றாள். சமையலறை வாசலில் மாமி அமைதியாய் சிரித்துக் கொண்டிருந்தாள். காப்பி நுரைக்க நுரைக்க ஆவி பறக்க பேஷாக இருந்தது.

அபர்ணா பாஸ்கர்,
அட்லாண்டா, ஜார்ஜியா
More

பாப்பாக்கு ஸ்கூல்!
உயர்ந்த உள்ளம்
ஜெட்லாக்
Share: 
© Copyright 2020 Tamilonline