Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
குறுநாவல்
சில மாற்றங்கள் (மாற்றம்-6)
- சந்திரமௌலி|நவம்பர் 2011|
Share:
Click Here Enlargeஇதுவரை:
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து தவிக்கும் தன் மற்றொரு அமெரிக்க நண்பன் ராஜுக்கு வேலை கேட்கிறான். ராஜின் தகுதிகளில் திருப்தியுறும் ஸ்ரீ அவனுக்கு வேலை தருவதாக வாக்களிக்கிறான். மேற்கொண்டு ராஜின் விவரங்களைப் பார்க்கும்போது அவன் தன்னோடு சிறுவயதில் ஒன்றாகப் படித்துத் தன் வாழ்வில் ஆறாத தழும்பை ஏற்படுத்திய ரங்கராஜ் என்பதை அறிந்தபின் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறான். பழிவாங்கும் எண்ணத்தோடு தன் பள்ளி நாட்களையும் ரங்கராஜோடு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் அசை போடுகிறான். இது எதையும் அறியாத ரங்கராஜ், தன் மனைவி கவிதாவைப் பணியிடத்தில் விட்டுவிட்டு, குழந்தை நித்யாவோடு தினேஷ் வீட்டுக்கு, ஸ்ரீயைச் சந்திக்கக் கிளம்புகிறான். நடுவழியில் மழையில் மாட்டிக் கொள்கிறான். ஸ்ரீக்கு ஏற்பட்ட காயம் என்ன? ராஜுக்கு வேலை கிடைக்குமா? அவன் கஷ்டம் தீருமா? அவனது மறுபக்கம் என்ன?...

*****


மாமா பையன் நாணா (நாராயணன்), மைனர் சிவசு, பெட்டிக்கடை தரணி, போஸ்ட்மாஸ்டர் பையன் சம்பத்! நான் தயக்கத்தோடு அவர்களிடமிருந்து ஐந்து அடி தள்ளி நின்று விட்டேத்தியாக "என்னதுக்கு கூப்பிட்ட? எனக்குப் படிக்கணும், வேலையிருக்கு" என்று சொன்னேன். அதை லட்சியமே பண்ணாமல், நாணா அன்யோன்யமாக என் தோள்மீது கைபோட்டு "வாடா. ரொம்ப பிகு பண்ணாதே. தனலட்சுமியோட வீட்டுக்குப் போயி அரட்டையெல்லாம் அடிக்க நேரம் இருக்கு, எங்களோட பேச டைம் இல்லியா" என்று சொல்லிக்கொண்டே, என்னை அந்த கும்பலின் மத்தியில் இருத்தினான். பத்ம வியூகத்தில் அகப்பட்ட அபிமன்யு மாதிரி நான் என்னைச் சுற்றி நின்ற அந்தக் காலிகளை நோக்கி பேந்த பேந்த விழித்தேன். நான் படிப்பில் கெட்டியே தவிர, நெஞ்சில் தைரியம் குறைவு. முடிந்தவரை வீண் சண்டை, வெட்டி சகவாசங்களைத் தவிர்ப்பேன். மீறி அப்படி ஏதாவது இக்கட்டில் மாட்டிக் கொண்டால், இப்போது மாதிரி, என் இதயம் படபடப்பது எனக்கே கேட்கும், வெள்ளமாக வியர்வை ஊற்றி, முட்டிக் கால்கள் இரண்டும் ஒன்றையொன்று அடித்துக் கொள்ள ஆரம்பித்துவிடும். என்னுடைய இந்தக் கோழைத்தனத்தையும், மென்மையான போக்கையும் மாற்றிக் கொள்ள முயன்றும் முடியாததால், கூடியவரை வம்பு தும்புகளைத் தவிர்த்து வந்தேன். இன்று என்ன ஆகுமோ என்று நினைத்தவாறே "தனலட்சுமியோட அரட்டையெல்லாம் இல்லை. நாங்க பப்ளிக் எக்ஸாமுக்கு சேந்து படிக்கறோம்."

தரணி "சே...ந்...து படிக்கறாங்களாம்" என்று அதை இழுத்து திருப்பி சொன்னதோடு, கைகள் இரண்டையும் கோத்து ஏதோ ஜாடை காட்டி, கண்ணடித்தான். மற்றவர்கள் புரிந்தாற்போல் கொல் என்று சிரித்தார்கள்.

நாணா என் சட்டைக் காலரை சரி செய்தவாறே "தனம் என்னல்லாம் சொல்லித் தரா உனக்கு?" என்றான். தனம் எதுவும் சொல்லித் தரதில்லை. அவ கணக்குல வீக். நான்தான் அவளுக்கு கணக்குப் போட சொல்லித் தரேன், அப்படியே சேந்து மத்த பாடமெல்லாமும் படிப்போம்" என்று விகல்பமில்லாமல் சொன்னேன். சம்பத் "சார்தான் எல்லாம் சொல்லித்தராறாம். சேந்து கணக்கு பண்றாங்களாம்...சீ...போடறாங்களாம்" என்றதும் மறுபடி மற்றவர்களெல்லாம் கொல் சிரிப்பு. இப்போது எனக்கு அங்கிருந்து ஓடவேண்டும் போலிருந்தது. என்னை நாணாவின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டேன்.

சிவசு "ரெண்டு பேரும் சேந்து ஸ்கூலுக்கு போறாங்க, அதை விசாரி" என்று தூபம் போட்டான். "ஏதோ ரெண்டு நாள் தற்செயலா நடந்துது, நீங்க நெனைக்கிறா மாதிரி தப்பாலாம் எதுவும் இல்லை. இப்ப நான் போகணும், வழி விடு" என்றேன்.

"டேய் போலாம்டா, தப்பாலாம் ஏதும் இல்லைனு நீ சொல்றத ஒத்துக்கறேன். ஆனா இப்ப சொன்ன பாரு தற்செயலா நடந்துதுனு, இதேமாதிரி தற்செயலா ஏதாவது ஏடாகூடம் பண்ணிடுவியோனு நெனைக்கறேன். உன்னை நம்பறேன், நீ சரியான சாமியார். ஆனா உன் வயசையும், தனலட்சுமியோட அழகையும் நெனச்சு பயப்படறேன்" என்றான் நாணா.

உனக்கேண்டா இவ்வளவு அக்கறை, நான் என்ன பண்ணினா உனக்கென்ன" என்று வாய்வரை வந்துவிட்ட வார்த்தைகளை பயத்தின் காரணமாக முழுங்கிக்கொண்டேன். என் மனதைப் படித்தவன் போல் "உனக்கென்னடா வந்ததுனு நெனக்கிறியா?" என்றான், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. மறுபடி என் தோளின் மீது கைபோட்டு எங்கோ வானத்தை சீரியஸாக அண்ணாந்து பார்த்தவாறே "சீனு, உன்கிட்ட சொல்றதுக்கென்ன. எனக்கும் தனலட்சுமிக்கும் இருக்கறது ஒரு மாதிரி.. ஒரு மாதிரி ஜன்ம ஜன்ம பந்தம். அதான் எனக்கு அவ்வளவு லவ் அவ மேல. அவ அதை புரிஞ்சுக்காதது எங்க விதி. காரமடை ஜோசியர்கிட்ட ஜாதகத்தைக் காட்டிக் கேட்டுட்டேன். வர்ற ஐப்பசி பவுர்ணமி வரைக்கும் ஒண்ணும் தேறாது, நேரடியா எதுவும் மூவ் பண்ணாதன்னு சொல்லிட்டார். அதுக்கப்பறம் அவளே என்னைத் தேடி வருவான்னு சொல்லியிருக்கார்."

எனக்குக் குமட்டிக் கொண்டு வந்தது, அவன் விடாமல் "இது தெரிஞ்சு இப்ப மத்த எல்லாரும் எனக்காக தனலட்சுமியை விட்டு ஒதுங்கியாச்சு. இப்ப புதுசா நீ கதையில பூந்து காரியத்தைக் கெடுத்துடாத, இப்ப புரியறதா எதுக்கு உன்னை மடக்கினோம்னு" என்று தன் விளக்க உரையை முடித்தான். இத்தோடு முடிந்ததே என்று நிம்மதியோடு "மறுபடியும் சொல்றேன் நாங்க எக்ஸாமுக்காகப் படிக்கிறோம் அவ்வளவுதான். எக்ஸாம் முடிஞ்சதும் அவங்க அவங்க வழியை பாத்துட்டு போகப் போறோம். இல்லாதது பொல்லாததெல்லாம் நீங்களா கெளப்பி விடாதீங்க. அப்பறம் தனலட்சுமி தப்பா நெனச்சுப்பா," என்றேன்.

என் தலை முடியை பரபரவென கோதிவிட்டு, கன்னத்தையும் செல்லமாக ஒரு இடி இடித்து விட்டு "சீனுனா சீனுதான். தங்கம் டா" என்று சொல்லிவிட்டு, திடீரென ஏதோ நினைத்தவனாக "நீ தனலட்சுமி தப்பா நெனச்சுப்பானு சொன்னதும் ஒரு யோசனை தோணித்து. அவளுக்கு உன்மேல நல்ல அபிப்ராயம். நீ என்ன பண்ற, தெனமும் படிக்கறதோட, அப்பப்ப அவகிட்ட என்ன பத்தி ஒசத்தியா, நல்லதா சொல்லிட்டே வா. அவ என்னைப் பத்தி என்ன நெனக்கிறானு எனக்கு அப்பப்ப ரிப்போர்ட் பண்ணு. எல்லாம் சாதகமா இருந்தா, ஒரு மூணு நாலு வாரத்துல, நான் உன் மூலமா என் மனசுல இருக்கறதெல்லாம் கொட்டி லவ் லெட்டர் தரேன், அதை அவகிட்ட குடுத்துட்டு அவ அதுக்கு தர்ற பதில் லவ் லெட்டரை என்கிட்ட கொண்டு வந்து குடு, ராமருக்கு அனுமார் மாதிரி, எனக்கு நீ. எங்க தெய்வீகக் காதலை சேத்து வை" என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான். "மேல கேட்டுக்க, இதை நீ எனக்கு செய்யாம, அப்பா, அம்மா கிட்ட சொல்றது, இல்ல இதுக்கு கேடு பண்றதுனு எதான பண்ணினா, அப்ப நாங்கள்ளாம் சேந்து நீ தனலட்சுமியை தெனம் பாக்கறது படிக்க இல்லை, காதல் பண்ணத்தான்னு முடிவே பண்ணிடுவோம். நல்ல புள்ளையா லட்சணமா இப்ப வீட்டுக்கு போயி முகம் அலம்பி காபி சாப்பிடு, போ" என்று என்னை அத்தோடு விட்டான்.

நான் பயந்தது நடந்து விட்டது, ஆனால் இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு வகையாக மாட்டுவேன் என்று எதிர் பார்க்கவில்லை. இனிமேல் இவர்கள் தினமும் என்னை வழி மறிப்பார்கள், தொந்தரவு செய்வார்கள். பரிட்சைக்கு படித்தாற்போலத்தான். தனலட்சுமி வீட்டுக்கே போகமல் இருந்து விடலாம், ஆனால் சேர்ந்து படிப்பதில் பரிட்சைக்கு நன்றாகத் தயார் செய்ய முடிந்தது. அதிலும் தனலட்சுமி கணக்குப் பாடத்துக்கு என்னை நம்பியிருக்கிறாள். இவர்களுக்கு பயந்து அவளை நட்டாற்றில் விட மனம் இடம் கொடுக்கவில்லை. முகம் வெளிறி, உடல் சோர்ந்து வீட்டுக்குப் போனேன். அந்த மன உளைச்சலில் அன்று இரவே பயங்கர காய்ச்சல் வந்து விட்டது. மூன்று நாட்கள் வீட்டில் முடங்க வேண்டி வந்தது, கஞ்சி, மாத்திரை, ஹார்லிக்ஸ் சாப்பிட்டு காய்ச்சலை சரி பண்ணிக் கொண்டேன். ஸ்கூலுக்குப் போக முடியவில்லை, அதைவிட தனலட்சுமியோடு படிக்க முடியவில்லை. அவளே வீடு தேடி வந்துவிட்டாள். "என்ன சீனு எக்ஸாம் கிட்டவர்ற சமயத்துல இப்படி விழுந்து படுத்துட்ட, சீக்கிரம் சரி பண்ணிக்கோ. காலைல பனியில மொட்டை மாடிக்குப் போய் படிக்காத" என்று அனுசரணையாக, கிட்டத்தில் உட்கார்ந்து பேசினாள். முருகன் கோயில் விபூதியை அவள் நெற்றியில் வைத்து விடும்போது, அவள் விரல் ஐஸ் மாதிரி ஜில் என்று இருந்தது. உடனே, அவள் என் நெற்றியில் கை வைத்துவிட்டு "ஐய்யோ இன்னும் காய்ச்சல் இறங்கலையே" என்று பதறினாள்.
தனலட்சுமி வீட்டுக்கு வந்ததை எப்படியோ மோப்பம் பிடித்து, அறைக்கு வெளியிலிருந்து எங்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த நாணா, அங்கிருந்தே சுட்டு விரலை ஆட்டி, என்னைக் கறுவினான். ஒருவழியாக, தனலட்சுமி எனக்கு ஸ்கூலில் தவறிய பாட நோட்ஸை தந்து விட்டுக் கிளம்பினாள். நாணா "சீனு கண்ணா. என்னடா விழுந்து படுத்துட்ட. சீக்கிரம் குணமாகி, தனலட்சுமியோட படிக்க ஆரம்பிடா" என்று சொல்லி, சிலுமிஷமாகக் கண்ணை சிமிட்டினான். எனக்கு குணமாகி ஸ்கூலுக்குப் போகவே பிடிக்கவில்லை. இன்னும் என் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று சோர்ந்து போய் ஸ்கூலில் மதியவேளை வாதாம் மரத்தடியில் உட்கார்ந்திருந்த போது, செந்தில் வந்தான். அவன் என் பிரச்சனைக்குத் தீர்வாக வருவான் என்று அப்போது நான் கொஞ்சமும் நினைக்கவில்லை.

செந்தில் வகுப்பில் ரொம்ப பின்தங்கிய பையன். படிப்பில் மட்டும் இல்லை, வகுப்பில் உட்காருவதிலும் எப்போதும் கடைசி பெஞ்சுதான். அவன் ஸ்கூலுக்கு வருவதே அவன் அப்பாவின் அடி உதைக்கு பயந்துதான். அவன் ஸ்கூலுக்கு வந்தாலோ வாத்தியார்களுக்கு பயம். இது இரண்டுக்கும் நடுவே அவன், ஸ்கூலுக்கு வந்தது போலவும், வராதது போலவும் ஒரு மாதிரி கண்ணா மூச்சி ஆடுவான். வாத்தியார்களும் அவன் மத்தப்படி தொல்லை பண்ணாமல் இருந்தால் போதும் என்று, அவன் வந்தாலும், வராவிட்டாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். அர்ஜுனன் காண்டீபம் மாதிரி, எப்போதும் அவன் டிரவுசரில் உண்டி வில் கண்டிப்பாக இருக்கும். தேங்காய் பத்தை, பொட்டுக்கடலை என்று எதையாவது டிரவுசர் பாக்கெட்டிலிருந்து தின்றுகொண்டே கேட்கும் கேள்விக்கெல்லாம் அலட்சியமாக ஒரு பதில் சொல்வான்.

"ஏண்டா எப்பவும் லாஸ்ட் பெஞ்சில உக்கார்ற, முன்னாடி உட்கார்ந்தா என்ன?"
"எல்லாருமே முன் பெஞ்சில உக்காரணும்னு பாத்தா யாராவது பின் பெஞ்சிலயும் உக்கார வேணுமில்ல."
"ஏண்டா, படிப்புல அக்கறை காட்ட மாட்ற? ஒழுங்கா படிச்சாதான உருப்பட முடியும்?"
"காமராசர் படிக்காதவர், நெல்ல தலைவராயில்லியா. இப்ப அடுத்த சி.எம். நம்ம வாத்தியாருதான். அவரு மூணாப்புதான் படிச்சுருக்காரு. படிக்காம உருப்படலாம்."

பாடவேளையில் மாங்காய், புளியம்பழம் அடிப்பது, நரிக்குறவர்களோடு சேர்ந்துகொண்டு அணில், ஓணான், காடை, நரி வேட்டையாடுவது, பெருமழைக்குப் பின் தேங்கும் ஓடைகளில் மீன் பிடித்து, வயலிலேயே சுட்டுத் தின்பது என்று மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவான். தப்பித் தவறி ஏதாவது வாத்தியார் இவன் வழியில் குறுக்கிட்டால், ஸ்கூலிலிருந்து அவர் வெளியில் வந்ததும், அவன் பேச மாட்டான், அவன் உண்டி வில் மறைவிலிருந்து பேசும். அவன் உண்டி வில்லுக்கு அணில், நரி, வாத்தியார் என்று என்றும் பேதம் இருந்ததில்லை.. இதனாலேயே, பத்தாம் வகுப்புவரை தர்மத்தில் பாஸ் பண்ணி வந்துவிட்டான்.

"சீனு, உனக்கு உடம்பு சரியில்லையாமே, இப்ப எப்படியிருக்க? பரவாயில்லையா. சரியாகலீன்னா சொல்லு, நரிப்பல் காசிக்கயருல கட்டி மந்திரிச்சு தர்ரேன், கட்டினீன்னா காய்ச்சல், காத்து, கருப்பு எல்லாம் போயிரும்."
"சாதாரணக் காய்ச்சல்தான், சரியாப் போயிடுச்சு. பப்ளிக் எக்ஸாம் வருதே ஒழுங்கா படிக்கிறியா?"
"அதை நெனச்சாத்தான் பயமாயிருக்கு. இத்தினி நாளு அலட்சியமா இருந்துட்டேன். எங்க அப்பா தெனைக்கும் என்னைய வறுக்கறாரு. பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ணு உன்னை ஐடிஐல ஃபிட்டர் ட்ரெயினிங்குல சேக்கறேன், பிற்காலத்துல இந்த அடிதடி, விவசாயமெல்லாம் உனக்கு கஞ்சி ஊத்தாது. பாஸ் பண்ணல உன் முதுகுத்தோலை பெல்டாலயே உரிச்சிருவேன்னு மெரட்டறாரு."

செந்தில் பயந்து அப்போதுதான் நான் பார்த்தேன். அவன் அப்பா ஒரு முரட்டு விவசாயக் கூலி. தான் படும் கஷ்டம் தன் மகனாவது படக்கூடாது என்று நினைத்திருப்பார். "சரி அப்ப ஒழுங்கா படிச்சு, பாஸ் பண்ற வழியப் பாக்க வேண்டியதுதானே?"

"இத்தினி நாளு ஒரு பாடமும் படிக்காம, நோட்ஸும் எழுதாம இன்னும் கொஞ்ச நாள்ல என்னமா எல்லாத்தையும் எழுதிப் படிக்கிறது? நான் என்ன காளிதாசனா, காளி நாக்குல எழுதினதும் அறிவு வர்ரதுக்கு? அதுக்குதான் உன்கிட்ட பேச வந்தேன்."
"நான் என்ன செய்யமுடியும் இதுல?"
"நீ எல்லா பாடமும் அழகா எழுதியிருப்ப. இப்ப நீ, தனலட்சுமியோட சேந்து தெனமும் படிக்கிற இல்லை. அப்ப நானும் உங்களோட பாடம் படிச்சுக்கிறேன். எல்லா முக்கியமான கேள்வி பதிலும் நீ உன் நோட்ல எழுதியிருக்க இல்லயா? நீங்க படிக்கும்போது அதெல்லாம் மட்டும் நான் படிச்சுக்கறேன். நான் என்ன உன்னமாதிரி தொண்ணூறு, நூறுனு வாங்கப் பாக்கறேனா? முப்பத்தஞ்சு வாங்கினா போதும். இருக்கற நேரத்துல இதுதான் எனக்குத் தெரிஞ்சது, அதான் உன்னண்டை கேக்கலாம்னு வந்தேன்."

அவன் சொன்னதில் நியாயம் இருந்தது, ஆனாலும் என் உள்ளுணர்வு என்னவோ எச்சரித்தது. "ஆமா, நீ ரங்கனுக்கு ரொம்ப தோஸ்த் ஆச்சே, நீ ஏன் ரங்கனோட படிக்காம என்கூட படிக்கணும்னு பாக்கற? ரங்கன் என்னைவிட நல்லா பாடம் எல்லாம் எழுதியிருப்பான். நான் முதல்ல ரங்கன்கிட்டதான் கேட்டேன், அவன் முகத்துல அடிச்சாப்பல, முடியாதுன்னுட்டான். உன்கூட படிச்சா, நான் நல்ல மார்க் வாங்க முடியாது, நீ எப்படியோ போனு வெரட்டிட்டான்" கைகளைப் பிசைந்து கொண்டு என் பதிலுக்காகக் காத்திருந்தான்.

அப்போதுதான், எனக்கு மூளையில் அந்த மின்னல் தோன்றியது. செந்திலையும் சேர்த்துக் கொண்டு தனலட்சுமியோடு படித்தால் யாரும் எங்களைப் பற்றித் தப்பாகப் பேச முடியாது. தவிர செந்திலைக் கண்டால் எல்லாருக்கும் பயம், அவன் விஷயத்தில் நாணாவும், அவன் குட்டிச்சுவர் கோஷ்டியும் கண்டிப்பாக வால் ஆட்ட மாட்டார்கள். தொடர்ந்து தனலட்சுமியோடு படிக்கலாம், செந்திலுக்கும் உதவலாம்.

உடனே என் முகம் பிரகாசமடைந்தது. "சரிடா செந்தில் நீ இன்னைக்கு சாயங்காலமே எங்ககூட படிக்க ஆரம்பிக்கலாம். உனக்கு தனலட்சுமி வீடு தெரியும் இல்லை. வேணாம். நீ அஞ்சு மணிக்கு என் வீட்டுக்கு வந்துரு. நாம சேந்து போகலாம்" என்றேன்.

"செந்தில் வாயெல்லாம் பல்லாக, இவ்வளவு சுலபத்துல நீ ஒத்துக்குவனு நெனக்கல, ரொம்ப நன்றி" என்றான். நான் கீழே குனிந்து எழுந்திருக்கும் போது, செந்திலின் சிரிப்பு ஏனோ விகாரமாக மாறுவதை என் பிரமை என்று நினைத்துக் கொண்டேன்.

செந்தில் எங்களோடு ஒழுங்காகப் படித்தான். விஷயம் கேள்விப்பட்ட வாத்தியார்களுக்கெல்லாம் ஏதோ கொடுங்கோலன் இடி அமீன், மகாத்மா பக்தனாகிவிட்டதைக் கேள்விப்பட்டாற் போல் வாய் பிளந்தார்கள். தனலட்சுமிக்கு முதலில் இந்த ஏற்பாட்டில் இஷ்டமில்லாவிட்டாலும், ஓரிரு நாட்களில் செந்தில் முனைப்பாக படிப்பதைப் பார்த்து ஒத்துக்கொண்டாள்.

இன்னும் பரீட்சைக்கு இரண்டு நாள் இருக்கும்போது, அத்தோடு சேர்ந்து படிப்பதை நிறுத்திக் கொண்டு, அவரவர் வீட்டிலேயே படிக்க ஆரம்பித்தோம். செந்தில் அன்று இரவு என் வீட்டுக்கு வந்து, முக்கியமான கணக்குப் பாடக் குறிப்புகள், சமன்பாடுகளை எழுதித் தரச்சொல்லி வாங்கிக் கொண்டான். "உன் கையெழுத்து மணியா இருக்கு, இதை நான் பரீட்சைக்கு முன்ன நல்லா படிச்சுக்கிட்டேன்னா எப்படியாவது தேறிடுவேன்" என்றான்.

மூன்று பரீட்சைகள் ஒழுங்காக எழுதிவிட்டேன். இன்னும் இரண்டு பாக்கி. கணக்கு, அறிவியல். இதுவரை எல்லாம் நன்றாக எழுதியிருந்தேன், நிச்சயம் நல்ல ரேங்க் வாங்குவேன் என்ற நம்பிக்கை அதிகமானது. தனலட்சுமியும் நன்றாக எழுதியிருந்தாள், அவளுக்கு கணக்கு பரீட்சையை நினைத்து உதறல் இருந்து கொண்டுதான் இருந்தது. அன்று கணக்கு பரீட்சை. அம்மாவும், அத்தையும் ஸ்பெஷலாக வேண்டிக்கொண்டு, பக்கத்து முண்டகக்கண்ணி அம்மன் கோயில் பிரசாதம், குங்குமம் எல்லாம் கொடுத்து பரீட்சைக்கு அனுப்பினார்கள். நூற்றுக்கு நூறு வாங்கவேண்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டே, ஸ்கூலுக்கு போனேன். முதல் மணி அடித்து பரீட்சை ஹாலுக்கு போகும் முன்பு தனலட்சுமியைப் பார்த்தேன்.

"ரொம்ப பயமாயிருக்கு சீனு. எல்லாம் படிச்சிருந்தாலும் என்னவோ பயம்."
"பயப்படாதே, உனக்கு தெரிஞ்ச கேள்விகளை முதல்ல எடுத்துக்க. அப்ப உனக்கு பயம் போயிரும்."
"நேத்து, இந்த செந்தில் வேற வீட்டுக்கு வந்து அவனோட பயத்தையெல்லாம் என்கிட்ட சொல்லி என்னை இன்னும் பயமுறுத்திட்டான்" என்றாள்.
"என்ன, செந்தில் உன் வீட்டுக்கு நேத்து வந்தானா? எதுக்கு?"
"உன் கையெழுத்து மணியா இருக்கு, முக்கியமான கணக்குப் பாட குறிப்புகள் எழுதி வெச்சிருக்கியே அதை எனக்குக் குடுன்னு வாங்கிட்டு போக வந்துட்டு, கணக்கு எப்படி அவனை பயமுறுத்தும்னு ஒரு வண்டி அழுதுட்டு போனான்" என்றாள்.
"என்கிட்டேயும் வாங்கிட்டு போனானே. உங்கிட்ட எதுக்கு மறுபடி வாங்கினான்" என்று நான் கேட்டது, இரண்டாவது மணி அடித்த சப்தத்தில் அமுங்கிப் போனது. குழப்பத்தோடு, நான் பரீட்சை ஹாலில் நுழைந்தேன். மனதை இந்தக் குழப்பத்திலிருந்து விலக்கி, தெளிவோடு பரீட்சை எழுத நினைத்தேன். அப்போது, செந்திலும், ரங்கனும் சேர்ந்து ஹாலுக்குள் நுழைந்தது என் குழப்பத்தை மேலும் உசுப்பி விட்டது.

முருகேசன் வாத்தியார், கேள்வித்தாளை என் மேசைமீது வைத்தார். என் வாழ்க்கையே இன்னும் இரண்டு மணி நேரத்தில் தலை கீழாக மாறப் போவதை அறியாமல், நான் மறுபடி மனதை நிதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டேன்.

சந்திரமௌலி
Share: 
© Copyright 2020 Tamilonline