Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
குறுநாவல்
சில மாற்றங்கள் (மாற்றம்-2)
- சந்திரமௌலி|ஜூலை 2011||(1 Comment)
Share:
Click Here Enlargeமாலை ஐந்து மணி சுமாருக்கு எழுந்து, குளித்து, உணவருந்தி (பிரம்மச்சாரி சமையல்) ஜெட்லாகைப் புறந்தள்ளி, தினேஷ் வீட்டு வசிப்பறையில் பே என்று கால் நீட்டி உட்கார்ந்தேன். தினேஷ் லேப்டாப்பைத் தூக்கிக்கொண்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

"இதுதான் ராஜ் ரெஸுமே. என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். போன வாரம் பிங்க் ஸ்லிப் குடுத்துட்டாங்க. இன்னும் மூணு வாரத்துல வேலை போயிடும். இப்போ இருக்கிற எகனாமிக் சிடுவேஷனுக்கு வேற வேலை உடனே கிடைக்கிறா மாதிரி இல்லை. அவனுக்கு குடும்ப நிலைமையும் சரியில்லை. சம்பளம் இல்லாமல் ஒருநாள்கூடக் காலம் தள்ளமுடியாது. வெண்ணெய் மாதிரி வழுக்காம, என் ஃப்ரெண்டா லட்சணமா தயவு பண்ணு," உரிமையோடு கண்டிப்பாகவும் கேட்டான்.

மேலெழுந்த வாரியாக ராஜின் படிப்பு, தகுதி, அனுபவம் ஆகியவற்றைப் பார்த்தேன். எங்கள் புது ப்ராஜெக்ட் மேனேஜருக்கு வேண்டிய அனைத்துத் தகுதிகளும் இருந்தன. அந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்த மற்றவர்களைவிட ராஜ் சற்று கூடுதல் தகுதி பெற்றவனாயிருந்தான். நேர்முகத் தேர்வும், சம்பள எதிர்பார்ப்பும் சரியாக இருந்தால் நிச்சயமாக அந்த வேலைக்கு இவனைத் தேர்ந்தெடுப்பதில் எந்த சிரமமும் இராது. இப்படி யோசித்து, "ரெஸுமேவை என் ஆஃபீஸ் இமெயிலுக்கு அனுப்பு. அடுத்த வாரம் இண்டர்வியூ ஏற்பாடு பண்ணறேன். ஒழுங்கா பண்ணா நல்ல சான்ஸ் இருக்கு. அப்புறம் அவன் சாமர்த்தியம்" என்றேன்.

"அவன் இன்னிக்கி சாயங்காலம் வருவான். வேறே ஏதாவது கேட்டு கிளாரிஃபை பண்ணிக்கணும்னாலும் இன்னிக்கே முடிச்சுடலாம். ரொம்ப தேங்ஸ்டா. இவ்வளவு சீக்கிரம் முடியும்னு நினைக்கலே."

இத்தோடு நான் ராஜின் ரெஸுமேவை மூடியிருந்தால், இந்தக் கதை நான் ஒரு வாரம் அமெரிக்காவில் என்ன செய்தேன் என்ற பயணக்கதையாக முடிந்திருக்கும். ராஜின் போதாத வேளையோ, என் வேண்டாத வேலையோ நான் அவனுடைய சொந்த விவரங்களைப் பார்க்கத் தொடங்கினேன்.

பிறந்த தேதி.... என்னை விட நான்கு மாதங்கள் பெரியவன்.
பிறந்த ஊர்... கண்ணனூர்....மண்டையில் ‘சொரேல்’ என்று அடித்த மாதிரி இருந்தது.
பரபரவென்று கர்ஸரை நகர்த்தி, மேலே படித்தேன்.
முழு பெயர்... ரங்கராஜ்....இருக்காது, இருக்கக்கூடாது. ரங்கனாக இருக்கக்கூடாது...
அப்பா பெயர்... குப்புராஜ். ஓ காட்... என் இதயத்துடிப்பு எனக்கே கேட்டது.

கர்ஸரை மேலும் நகர்த்தி அவனுடைய புகைப்படத்தைப் பார்த்தேன். அவன் அப்பாவை உரித்து வைத்திருந்தான். சந்தேகமே இல்லை. இது ரங்கன் தான். என் வாழ்க்கையில் நான்கு ஆண்டுகளே குறுக்கிட்டாலும், இன்றும் மறக்க முடியாத குறையையும், வடுவையும் ஏற்படுத்தியவன். இப்போது இவன் குடும்பத்தைக் காப்பாற்ற நான் மனதுவைக்க வேண்டும். ஒரு நொடியில் அவனுக்கு வேலை தேடித்தரும் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.

அப்போதெல்லாம் வருஷா வருஷம் புதுக் கேலண்டர் வருமோ வராதோ, என் அப்பாவுக்கு புது ஊருக்கு டிரான்ஸ்பர் வந்துவிடும். நானும், அம்மாவும் அவரோடு குடிபெயர்ந்து கொண்டேயிருந்தோம். ஏழாவது படிக்கும்போது அப்படித்தான் கண்ணனூருக்கு மாற்றலாகிப் போனோம். என் மாமா அதே ஊரில் இருந்ததால் கொஞ்சம் கலகலப்பாகவே உணர்ந்தோம். இதனாலேயே அடுத்த வருஷம் அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆனபோது, நானும், அம்மாவும் கண்ணனூரிலேயே மாமா வீட்டில் இருக்க முடிவு செய்துவிட்டோம்.
கண்ணனூர் பெரிய கிராமத்துக்கும் சின்ன ஊருக்கும் இடைப்பட்ட குழப்பக் கலவையான ஒரு ‘கிராவூர்’. ஒரு பக்கம் தென்னந்தோப்புகளும், நெல் கரும்பு வயலும் வரப்பும், அங்காளம்மன் கோவிலும், பஞ்சாயத்துப் பெருசுகளும் இருந்தாலும், இன்னொரு பக்கம் உள்ளூர் எம்.எல்.ஏ. தயவில் தாலுகா ஆஃபீஸ், டூரிங் டாக்கீஸ், சின்ன ‘ஆசுபத்திரி’, என் அப்பா வேலை செய்த வங்கி, பாரதமாதா உயர்நிலைப் பள்ளி இதெல்லாமும் இருந்தன. இந்த மேற்படி பள்ளிக்கூடத்தில்தான் நான் பத்தாவதுவரை படித்தேன். ரங்கனை முதலில் சந்தித்ததும், அந்த ஆறாத காயம் ஏற்பட்டதும் இந்த இடத்தில்தான். நான் படித்த இந்த இடத்தைப் பள்ளிக்கூடம் என்று சொன்னால் நிஜப் பள்ளிக்கூடங்கள் கோபித்துக் கொள்ளும். நாலு கிரவுண்ட் சதுரத்தில் மொத்தமாக ஒரு கூரைக் கட்டிடம். கூரை சுவரைத் தாங்குகிறதா, சுவர் கூரையைத் தாங்குகிறதா என்று தெரியாத குழப்பம். இதற்குள் ஆறாவதிலிருந்து பத்தாவது வரை வகுப்புக்கு மூன்று செக்‌ஷனாக, தட்டி வைத்துப் பிரித்து ஒப்பேற்றப்பட்டிருக்கும். இது ஒரே நேரத்தில் பக்கத்து வகுப்புப் பாடங்களும் மாணவர்களின் காதில் விழுந்து அதிபுத்திசாலிகளாக்கும் சாத்தியக் கூறோடு, இந்தத் தட்டிகளின் ஓட்டை வழியே காம்பஸ் குத்தல், கோலிகுண்டு பரிமாற்றம் போன்ற எல்லை தாண்டிய ஊடுருவல்களுக்கும், ‘வகுப்பு’க் கலவரங்களுக்கும் உதவியது.

இந்தக் கட்டிடத்துக்குச் சற்று தள்ளி சவலைக் குழந்தைபோல இன்னொரு சிறிய கூரைக்கட்டிடம். அதில்தான் ஆசிரியர் ஸ்டாஃப் ரூம், ரெகார்ட் ரூம், தலைமை ஆசிரியர் அறை எல்லாம். இந்த ஏற்பாட்டை ஒட்டி சோனிக்கால் பையன்களும், தொப்பை பிடி மாஸ்டரும் டிரில் பழக, சுதந்திரதின மிட்டாய் தின்ன, கொடிக்கம்பத்தோடு, கொஞ்சமே போல சரளை கொட்டிய பள்ளி மைதானம். விடுமுறை நாட்களில் கல்யாண சத்திரமாகவும், இரவு நேரத்தில் முதியோர் பள்ளியாகவும், தவிர தேர்தலின்போது ஓட்டுச்சாவடி, புயல் காலத்தில் ஷெல்டர் என்று ஓவர்டைமில் கண்ணனூரின் ‘மல்டிபிளெக்ஸ்’ இந்தப் பள்ளிக்கூடமே.

ரங்கன் இந்தப் பள்ளி கரஸ்பாண்டண்ட் வீட்டுப் பையன். எல்லாப் பள்ளி நிகழ்ச்சிகளிலும் அவனே மாணவமுகமாக முன் நிற்பான். கலெக்டர் பள்ளி விஜயத்தில் மாணவர் சார்பில் அவன்தான் மாலை போடுவான். தமிழ்த்தாய் வாழ்த்தும் அஃதே. இருந்தாலும் பெரும்பான்மையான மாணவர்கள் இதை ஆட்சேபிக்காத வண்ணம் படிப்பிலும், விளையாட்டிலும் முதன்மையாக இருந்தான். சற்றே கர்வமும், வசதியான வீட்டுப்பிள்ளை என்ற திமிரும் காட்டி அவன் நடந்தாலும், உள்ளே கடுப்பில் இருந்தாலும், அவனைத் தன் நண்பன் என்று சொல்லிக்கொள்ள ஏறக்குறைய எல்லா மாணவர்களும் அலைந்தார்கள். ஆசிரியர்களும் அவனைச் செல்லப் பிள்ளையாகவே பாவித்தார்கள். "புளிய மிளாறாலேயே" பேசும் "முசுடு" கந்தசாமி வாத்தியார்கூட அவனிடம் கடிந்து கொண்டதில்லை. கடும் சேட்டைகள் செய்தாலும் எதிலும் மாட்டிக் கொள்ளாமல் கிட்டத்தட்ட ராஜாவீட்டுக் கன்னுக்குட்டிபோல் வளைய வந்தான்.

இங்கு என் படிப்பைப் பற்றியும் சில வார்த்தைகள். நான் ஓரளவு நன்றாகவே படிப்பேன், முதல் மூன்று ரேங்க்கில் வந்துவிடுவேன். கண்ணனூரில் வேறு கவனக்கலைப்புகள் இல்லாததாலும் இன்னும் முனைப்போடு படிக்க முடிந்தது. நான் இந்தப் பள்ளியில் சேர்ந்தபோது, நானும், ரங்கனும் வேறு வேறு செக்‌ஷன். ஆனால் பத்தாம் வகுப்பில் எனக்குச் சிக்கல் தரும் மாற்றமாக இருவரையும் ஒரே செக்‌ஷனில் போட்டுவிட்டார்கள்.

(மாற்றங்கள் தொடரும்)

சந்திரமௌலி,
ஹூஸ்டன்
Share: 




© Copyright 2020 Tamilonline