Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | அமெரிக்க அனுபவம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
நேர்காணல்
இந்திரா சௌந்தர்ராஜன்
டாக்டர் பத்மினி சர்மா
- அபர்ணா பாஸ்கர், தீபா சிவகுமார்|மார்ச் 2011|
Share:
பேடி சர்மா (Paddy Sharma) என்று அழைக்கப்படும் டாக்டர் பத்மினி சர்மாவைத் தெரியாதவர்களே அட்லாண்டாவில் இருக்க முடியாது. பிரபல தொழிலதிபர், இந்திய அமெரிக்கப் பண்பாட்டுக் கழகத்தின் முக்கியத் தலைமைப் பொறுப்பாளர், க்ளேடன் மாநிலப் பல்கலைக் கழகத்தின் அறங்காவலர், சனாதன மந்திரின் அறங்காவலர், அட்லாண்டாவின் ரிவர்டேலிலுள்ள இந்துக் கோயிலின் நிதிக் குழுவுக்குத் தலைமைப் பொறுப்பாளர், டேடா பாயின்ட் சிஸ்டம்ஸ் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் CEO, குளோபல் டீச்சர்ஸ், ரிஸர்ச் அண்டு ரிசோசர்ஸ் நிறுவனத்தின் CEO, எமரி பல்கலைக் கழகத்தின் போர்ட் ஆஃப் விசிடர்ஸ் குழு உறுப்பினர் என்று இவர் வகிக்கும் முக்கியப் பதவிகளின் பட்டியல் நீள்கிறது. தென்றலுக்காக அட்லாண்டாவின் அபர்ணா பாஸ்கர் இவரை நேரில் சந்தித்து உரையாடினார். உரையாடலையும் படத்தையும் பதிவு செய்தவர் தீபா சிவகுமார். அந்த உரையாடலிலிருந்து.....

*****


"எத்தனையோ பேர் தொழில் செய்கிறார்கள். உனக்குத் திறன் உள்ளது. நீ ஏன் ஒரு கம்பெனியை ஆரம்பிக்கக்கூடாது?" என்று ஊக்குவித்து குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜீஸ் என்னும் நிறுவனத்தை நிறுவி நடத்தப் பக்க பலமாக இருந்தார்.

- டாக்டர் பத்மினி சர்மா
அபர்ணா: கோவில் நகரமான காஞ்சிபுரத்திலிருந்து பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு வந்து விட்டீர்கள். உங்கள் குடும்பப் பின்னணி குறித்துச் சொல்லுங்கள்....
பத்மினி: நான் காஞ்சிபுரத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். அம்மா தலைமை ஆசிரியர். அவருக்கு இப்பொழுது வயது 98. இன்றும் கேல்குலஸ், டிரிக்னாமெட்ரி, அல்ஜீப்ரா எல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவார். அவர் ஒரு கலைக்களஞ்சியத்தைப் போல இன்றும் கற்றதை, அறிந்ததை நினைவில் வைத்துள்ளார். அவர்தான் என்னுடைய வாழ்வில் ஒரு பெரிய வழிகாட்டி. என் அக்காவும் கல்வித்துறையில் பணியாற்றியவர். வாழ்க்கையின் முதல் 20 வருடம் என் தாய் தந்தையரின் அரவணைப்பில் வளர்ந்தேன். அப்பா காஞ்சிபுரத்தில் உள்ள பல கோவில்களுக்கும் டிரஸ்டியாக இருந்தார். பொதுநல சேவையில் மிகுந்த ஈடுபாடு. காமராசர் முதல் அண்ணாதுரை வரை பலரும் அவருக்கு நண்பர்கள். காஞ்சிபுரம் முனிசிபாலிடியில் துணை சேர்மனாக இருந்தார். இந்திரா காந்தியைப் போல் துணிவுடன் இருக்க வேண்டும் என்று சொல்லி வளர்த்தார். வினோபாஜியுடைய சர்வோதய மாநாட்டிலும் மேலும் பல மேடைகளிலும் என்னைப் பேச வைத்துள்ளார்.

கே: உங்கள் பணி வாழ்க்கை தொடக்கம், அட்லாண்டாவுக்கு வந்தது ஆகியவற்றை நினைவுகூர முடியுமா?
ப: சென்னை வானொலியில் ஐந்து வருடங்கள் இளைய பாரதம் நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினேன். தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினேன். பி.வி. கிருஷ்ணமூர்த்தி தூர்தர்ஷன் டைரக்டர் ஜெனரலாக இருந்தார். அவர் என்னை ஊக்குவித்தார். அதன் பிறகு டென்னசியிலுள்ள வேன்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி. பண்ணுவதற்காக அமெரிக்கா வந்தேன். பத்து வருடங்கள் மாணவியாகப் பல போராட்டங்களைச் சந்தித்தேன். பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டே படிப்பை முடித்தேன். இன்டஸ்ட்ரியல் மற்றும் ஆர்கனைசேஷனல் சைகாலஜி பயின்ற பின் பதினைந்து வருடங்கள் டென்னசி டெம்பிள் பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் மனநலத்துறையில் பணியாற்றினேன். சிட்னியில் வருகைப் பேராசிரியாக அழைத்துள்ளார்கள். அடுத்த வாரம் செல்லவுள்ளேன். அந்தப் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு அட்லாண்டாவுக்கு வந்து இவ்வூரையே வாழ்விடமாக்கிக் கொண்டேன்.

கே: கல்வித்துறையிலிருந்த நீங்கள் தொழிலதிபரானது எப்படி?
ப: என் கணவர் சேண்ட்லர் ஷர்மாவை இங்கு சந்தித்து மணந்தேன். என் கணவர் ஒரு வக்கீல். பல நிறுவனத்தினரும் சட்ட ஆலோசனைக்காக அவரிடம் வருவார்கள். "எத்தனையோ பேர் தொழில் செய்கிறார்கள். உனக்குத் திறன் உள்ளது. நீ ஏன் ஒரு கம்பெனியை ஆரம்பிக்கக்கூடாது?" என்று ஊக்குவித்து குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜீஸ் என்னும் நிறுவனத்தை நிறுவி நடத்தப் பக்க பலமாக இருந்தார். இப்படித்தான் என்னுடைய தொழில் வாழ்க்கை ஆரம்பித்தது.

கே: ஜார்ஜியாவின் சிறுபான்மையினருக்கான சிறந்தத் தொழிலதிபர் விருது வாங்கியுள்ளீர்கள். அதற்கு எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்?
ப: தொழில்நுட்பத் துறையில் இந்த விருதுக்காக அறுநூறு பேருக்கு நடுவில் மூன்றில் ஒன்றாக என்னைத் தேர்ந்தெடுத்தனர். எங்களுடைய குளோபல் சாஃப்ட்வேர் சிறிய கம்பெனியாக இருந்தாலும் குறுகிய காலத்தில் அதிகம் வளர்ந்து சாதித்ததால் இந்த விருது.

கே: இந்திய அமெரிக்கக் கலாசாரச் சங்கத்தின் முதல் பெண் தலைமைப் பொறுப்பாளராக இருந்துள்ளீர்கள். இன்றும் இதில் இயக்குனராக உள்ளீர்கள். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்.
ப: கிட்டதட்ட நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்தச் சங்கம் அட்லாண்டாவில் ஆரம்பிக்கப்பட்டது. நான் பொதுப் பணிகளில் செயலாற்றுவதை அறிந்து, இச்சங்கத்தில் சேர்மனாகப் பொறுப்பேற்கும்படிக் கேட்டுக் கொண்டனர்.

கே: SA4U என்ற தெற்காசிய அமெரிக்கக் கழகத்தின் உறுப்பினரான நீங்கள் இதன் மூலம் ஆசிய மக்களுக்கு எவ்வாறு உதவுகிறீர்கள்?
ப: South Asian for You எனப்படும் SA4U என்ற அமைப்பு, தெற்கு ஆசிய மக்களை அரசியல், இன, மத வேற்றுமைக்கு அப்பாற்பட்டு இணைக்கும் பாலமாக ஆரம்பிக்கப்பட்டது. பாகிஸ்தானில் நிலநடுக்கமானாலும் சரி, பங்களாதேஷில் புயல் வெள்ளமானாலும் சரி, மனிதாபிமான அடிப்படையில் உதவுவதே இதன் நோக்கம்.

கே: உங்களுடைய குளோபல் டீச்சர்ஸ் நிறுவனம் மூலம் இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்து வந்து வேலை அளிக்கிறீர்கள். அதற்கு வரவேற்பு எப்படியுள்ளது?
ப: இந்த நிறுவனத்தை ஆரம்பித்து 10 ஆண்டுகள் ஆகின்றன. ஃபுல்டன் கௌன்டி பள்ளிகளுக்காகக் கடினமான துறைகளான கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் பல ஆண்டுகள் இந்தியாவில் அனுபவம் பெற்ற ஆசிரியர்களை எங்கள் கம்பெனி மூலம் அழைத்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் எங்கள் ஆசிரியர்கள் பள்ளியின் சிறந்த ஆசிரியருக்கான விருதுகளைப் பெறுகின்றனர் என்பதில் பெருமை கொள்கிறோம்.
கே: உங்களது கணவருடைய சட்டத் தொழிலில் உங்கள் பங்கு என்ன?
ப: வக்கீலான என் கணவரிடம் கணவன் மனைவியர் விவாகரத்துக்காக வருவார்கள். நான் உளவியல் பட்டம் பெற்றுள்ளதால், கௌன்ஸலிங் எனப்படும் அறிவுரை வழங்குவேன். முறையான விசா அனுமதி இல்லாமல் எப்படியாவது இங்கேயே தங்கிவிட வேண்டும் என்று வருபவர்களுக்கு அதனால் ஏற்படும் பின்விளைவுகளை விளக்கிக் கூறுவதோடு சட்டப்படி தொடர்ந்து வசிக்க வாய்ப்பிருந்தால் அதையும் எடுத்துச் சொல்லுவேன்.

கே: அட்லாண்டாவில் தேர்தல் நிதி திரட்டலில் பலமுறை பெரும்பங்கு வகித்துள்ளீர்கள். அதைப்பற்றிக் கூறுங்கள்.
ப: நான் வசிக்கும் க்ளேடன் கௌன்டியில் எந்தக் கட்சியாக இருந்தாலும், தொகுதிக்கு நல்லது செய்பவரை, தொகுதியை மேம்படுத்துபவரை ஆதரித்துள்ளோம்.

கே: அட்லாண்டாவில் அருமையான தென்னிந்திய உணவகமான சரவணபவனை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். உணவுத் துறையில் ஈடுபடும் எண்ணம் எப்படி வந்தது?
ப: நான் நன்றாகச் சமைப்பேன் என்பதைத் தவிர, உணவுத் துறைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. சரவணபவன் என்ற பெயரில் ஒருவர் உணவகம் நடத்திக் கொண்டிருப்பதை அறிந்து என்னுடைய கணவரிடம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி சரவணபவனின் உரிமையாளர்கள் வந்தனர். அந்த வழக்கு முடிந்த பின்பு அவர்களே எங்களை இந்த உணவகத்தை எடுத்து நடத்தும்படிக் கேட்டனர். இந்தியாவிலிருந்து அவர்களுடைய அனுபவமிக்க ஆட்களை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறோம். அட்லாண்டாவில் இரண்டு கிளைகள் உள்ளன. ஃப்ளாரிடாவின் ஒர்லாண்டோவில் இந்த வாரம் ஒரு கிளையை ஆரம்பிக்கப் போகிறோம்.

நாம் வசிக்கும் சமூகத்துக்கு நாம் கண்டிப்பாக ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணுகிறேன். Finish High School Hope Fund என்ற அறக்கட்டளை ஒன்றை நடத்துகிறோம். இங்கு ஆப்பிரிக்க அமெரிக்க மாணவர்கள் பலருக்குத் தங்கள் பெற்றோரிடமிருந்து ஆதரவு கிடைப்பதில்லை.

- டாக்டர் பத்மினி சர்மா
கே: இந்தியாவில் நிலநடுக்கமாக இருந்தாலும் சரி, சுனாமியாக இருந்தாலும் சரி, நிறைய நிதியுதவி செய்துள்ளீர்கள். சமீபத்தில் மதுரை அக்ஷயா ட்ரஸ்டுக்கு மனநலம் குன்றியோருக்கான இல்லம் கட்டுவதற்காக உங்கள் ரோடரி சங்கத்தின் மூலம் அறுபதாயிரம் டாலர் அளித்துள்ளீர்கள். இதுபோன்ற உங்கள் சமூகப் பங்களிப்புப் பற்றிச் சொல்லுங்கள்.
ப: நாம் வசிக்கும் சமூகத்துக்கு நாம் கண்டிப்பாக ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணுகிறேன். Finish High School Hope Fund என்ற அறக்கட்டளை ஒன்றை நடத்துகிறோம். இங்கு ஆப்பிரிக்க அமெரிக்க மாணவர்கள் பலருக்குத் தங்கள் பெற்றோரிடமிருந்து ஆதரவு கிடைப்பதில்லை. இங்குள்ள பள்ளிகளில் கடைநிலை மாணவர்கள் பள்ளி செல்வதை நிறுத்துவதையும் போதைப் பொருளுக்கு அடிமையாவதையும் தடுப்பதற்காக மாதத்தில் இரண்டு சனிக்கிழமை அவர்களை அழைத்து வந்து எந்தப் பாடத்தில் அவர்களுக்கு உதவி தேவையோ அதை இலவசமாகக் கற்பிக்கிறோம். அது மட்டுமல்லாமல் இந்த ஃபௌண்டேஷன் மூலம் அவர்களுக்கு நூறு டாலர் கொடுப்பதுடன் காலை மற்றும் மதியம் உணவளிக்கிறோம். மாணவரின் பெற்றோர் யாராவது ஒருவராவது சனிக்கிழமைகளில் கூட வரவேண்டும். இந்தப் பணத்தை அவர்கள் தவறான வழியில் செலவழிக்காமல், சினிமா பார்ப்பது, உணவு வாங்குவது போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர்களை ஜெயிலுக்கு அழைத்துச் சென்று "தவறு செய்தால் இங்கு வாழ வேண்டிவரும்" என்று காண்பித்து வருகிறேன். முதல் ஆறு மாதங்களில் C கிரேடு வாங்குபவர்கள் B வாங்க வேண்டும், F வாங்குபவர்கள் C கிரேடு வாங்க வேண்டும். இப்படி ஏதாவது ஒரு முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும். இது ஆரம்பித்து இரண்டு வருடங்களாகின்றன. இதன்மூலம் பட்டம் பெற்றுப் போன மாணவர்கள் சனிக்கிழமைகளில் திரும்ப வந்து வழிநடத்துவோராக, ஆசிரியராகப் பணியாற்றுகிறார்கள்.

கே: நீங்கள் வந்த கடினமான வழியில் பூக்களோடு, முட்களையும் தாண்டி வந்திருப்பீர்கள். இன்றைக்குப் பெரிய பொக்கிஷமாகக் கருதுவது எதை?
ப: இந்தியாவில் முப்பது குழந்தைகளை முதல் வகுப்பிலிருந்து பொறியியல் கல்லூரிவரை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். அந்தக் குழந்தைகள் ஒவ்வொருவரும் படித்து வேலைக்குச் சென்றபின் இதேபோல் ஒரு குழந்தையைப் படிக்க வைக்க வேண்டும் என்று உறுதிமொழி வாங்கியுள்ளோம். இதுபோல நான் தொடங்கிய ஒரு நல்ல காரியம் பல தலைமுறைகளைத் தாண்டித் தொடர் சங்கிலியாக வளரும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நான் இட்ட விதை எனக்குப் பின்னும் ஆலமரமாக வளரும் என்பதைப் பொக்கிஷமாக நினைக்கிறேன்.

கே: சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: வெற்றிக்குக் குறுக்கு வழியே கிடையாது. ஓட்டப் பந்தயத்தில் ஓடும்பொழுது எப்படி அக்கம் பக்கம் பார்க்காமல் நேரே இலக்கை மட்டும் பார்த்துக் கொண்டு ஓடுகிறோமோ அதுபோலத் தடைகள் வந்தாலும் இலக்கிலேயே கண்ணிருந்தால் நிச்சயமாக வெற்றி பெறலாம் என்பதை இளைஞர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆஷ் சேண்ட்லர், இவருடைய மகன், பல ஆங்கில, இந்திய சினிமாக்களில் நடித்துள்ளார். பாடகராகவும், ஸ்டேன்டப் கமேடியனாகவும் உள்ளார். மிகவும் வாஞ்சையுடன் தன் மகனுடைய பாடல்களையும், படங்களையும் எங்களுடன் பேடி சர்மா பகிர்ந்துக் கொண்டார். ஒரு சமுதாயப் பிரக்ஞையோடு செயல்படும் வெற்றிகரமான பெண்மணியைச் சந்தித்த நிறைவோடு விடைபெற்றோம்.

நேர்காணல்: அபர்ணா பாஸ்கர், தீபா சிவகுமார்
மேலும் படங்களுக்கு
More

இந்திரா சௌந்தர்ராஜன்
Share: 
© Copyright 2020 Tamilonline