Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | அமெரிக்க அனுபவம் | அஞ்சலி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
உமா மகேஸ்வரி
- அரவிந்த்|மார்ச் 2011|
Share:
வை.மு. கோதைநாயகி, கு.ப. சேது அம்மாள், குமுதினி, கமலம்மாள், ஆர். பொன்னம்மாள், கிருத்திகா தொடங்கி ராஜம் கிருஷ்ணன், அம்பை, வாஸந்தி, லக்ஷ்மி எனப் பல்வேறு காலகட்டங்களில் காத்திரமான பல பங்களிப்புச் செய்துள்ள தமிழ்ப் பெண் எழுத்தாளர் வரிசையில் புத்திலக்கியத்தை மேலெடுத்துச் செல்லும் இளம் படைப்பாளி உமா மகேஸ்வரி.

போடிநாயக்கனூரை அடுத்த திருமலாபுரத்தில் 1971ம் ஆண்டு உமா மகேஸ்வரி பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவரது எழுத்துப் பயணம் கவிதைகளில் தொடங்கியது. 1985ம் ஆண்டு எழுத்துலகில் கவிதைகளோடு பிரவேசித்தார். தொடர்ந்து கதை, கவிதை, நாவல் எனப் படைப்பின் பல தளங்களிலும் முத்திரை பதிக்க ஆரம்பித்தார். முதல் கவிதைத் தொகுதி 'நட்சத்திரங்களின் நடுவே' 1990ல் வெளியாகி உற்சாகமான வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து 'வெறும் பொழுது', 'கற்பாவை' ஆகியன இவரது கவி ஆளுமையைப் பறை சாற்றின. "தன் ஸ்வாதீனத்தின் மீது நிர்பந்தத்தை பிரயோகிக்கும் புறக்காரணிகள் மீது கசப்புணர்வோ, அவற்றிற்கு எதிராக வளர்த்தெடுத்துக் கொண்ட வன்மமோ இவரிடம் தென்படுவதில்லை" என்கிறார் க. மோகனரங்கன், உமா மகேஸ்வரியின் கவிதை மொழி குறித்து.

எழுத்தாளர் சுந்தர ராமசாமியுடனான நட்பு உமாவின் படைப்பாற்றலுக்குப் பெரிய உந்துசக்தியானது. கவிதைகள் மட்டுமல்லாது காத்திரமான சிறுகதைகளையும் படைக்கத் தொடங்கினார். முதல் சிறுகதைத் தொகுப்பான 'மரப்பாச்சி' இவரைத் தேர்ந்த எழுத்தாளராக இலக்கிய உலகுக்கு அடையாளம் காட்டியது. தொடர்ந்து 'தொலைகடல்', 'அரளிவனம்' ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகிப் பல்வேறு விதமான விமர்சனங்களை இலக்கிய உலகில் தோற்றுவித்தன. தனித்த மொழி ஆளுமையாலும், சொல்லாற்றலாலும் இவரது படைப்புகள், பரவலான கவனத்தைப் பெற்றன. 'யாரும் யாருடனும் இல்லை' என்ற இவரது நாவல் கவனிக்கத் தகுந்த ஒன்று. "இந்த நாவல், ஒரு கூட்டுக் குடும்பத்தின் ஓட்டைகளையும் கோணல்களையும் எந்தவிதப் புகார்த் தொனியுமின்றி தீட்டிக் காட்டுகிறது. ஆளாளுக்குத் தனித்தனியான நோக்கங்களும் எதிர்பார்ப்புகளும் பாதைகளும் நிறைந்த குடும்பம், குரூரமான ஒரு வன்முறைக் களனாக மாறிவிடும் சந்தர்ப்பங்களை மிகையின்றித் தீட்டிக் காட்டுகிறார் உமா மகேஸ்வரி." என்கிறார் பாவண்ணன். "நவீன தமிழ் இலக்கியத்தில் உமா மகேஸ்வரி ஒரு ஆச்சரிய வரவு. உமாவின் ஆதர்சங்களில் அம்பையும் இருந்திருக்கக்கூடும் என்று சில இடங்களில் மொழி நடை காட்டினாலும், உமா அம்பையைத் தாண்டி வந்துவிட்ட எழுத்தாளர். சிறுகதைகளிலும், நாவலிலும் கவிதை நடையொத்த நடையிலான இவரது ஆளுமை தமிழுக்குப் புதிது. அன்றாட வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளிலிருந்து அசோகமித்திரன் உன்னதமான மனித உணர்வுகளை எழுப்பிக் கொண்டு வருவது போல உமாவும் மிகச் சாதாரண விஷயங்களிலிருந்து பெண்பார்வையை அழுத்தமாக வெளிப்படுத்துகிறார்" என்கிறார் பத்திரிகையாளர் ஞாநி.
யதார்த்தமும், அலங்காரங்கள் அதிகமில்லாத எளிமையுடன் கூறும் சொற்பாங்கும் உமாவின் தனித்தன்மைக்குச் சான்று கூறுபவை. இவரது எழுத்துக்கள் பெண்களின் உலகத்தைப் பல கோணங்களில் இருந்து பார்க்கும் தரிசனத்தைத் தருகின்றன. பெண்களின் உள்ளுணர்வுகளை, மென்மையான, உண்மையான, உயிர்ப்புள்ள வார்த்தைகளால் விவரிக்கின்றன. உறவுகளின் மென்மையையும், மேன்மையையும், எந்தவித அதிர்ச்சித் தொனியும் இல்லாமல், உரத்துக் கூவாது மிக இயல்பாக, கவித்துவமான சொற்களால், பாசாங்கற்ற மொழியில் உணர்த்துததல் இவரது எழுத்தின் பலம். மொழியின் பல புதிய பரிமாணங்களை, கவித்துவம் மிக்க சொல்லாற்றலால் இவர் காட்சிப்படுத்துவது இவரது கவி ஆளுமையைக் காண்பிக்கிறது. "அழகியலுக்கு எதிரான ஒரு பொதுக் கருத்தை தமிழ் இலக்கியச் சூழல் முன்வைத்து, இலக்கிய நுண் உணர்வினை அரசியலுக்குப் பலி கொடுத்துவிட்ட சூழலில் அர்த்தமுள்ள மறுப்பாக உமா மகேஸ்வரியின் அழகியல் மலர்ந்திருக்கிறது" என்கிறார் உமாவின் சிறுகதைத் தொகுப்பான 'அரளிவன'த்தின் வெளியீட்டாளர் கோபால் ராஜாராம்.

கவிதையின் வீச்சை உரைநடையிலும் கொண்டுவரும் படைப்பாற்றல் மிக்க உமா, தனது படைப்புகளுக்காக கதா தேசிய விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, இந்தியா டுடேயின் சிகரம் விருது, ஏலாதி இலக்கியப் பரிசு, இலக்கியச் சிந்தனைப் பரிசு, கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசு, ராஷ்டிரிய சிக்‌ஷனா சமிதி அமைப்பினரின் சாஷ்வதி நஞ்சனகுடு திருமலாம்பா விருது (Shashwathi Nanjanagudu Tirumalamba award) போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். கணையாழி குறுநாவல் போட்டியிலும் முதல் பரிசு பெற்றிருக்கிறார். தற்பொழுது, கணவர், குழந்தைகளுடன் ஆண்டிப்பட்டியில் வசிக்கும் உமா, தொடர்ந்து தீவிரமாக இலக்கிய உலகில் இயங்கி வருகிறார். 'மஹி' என்ற புனைபெயரிலும் சிறுகதைகள் எழுதி வருகிறார்.

அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline