Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நிதி அறிவோம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | இலக்கியம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அஞ்சலி
திரு காமேஸ்வரன் சிவமணி
நாட்டிய பேரொளி மறைந்தது
- கேடிஸ்ரீ|அக்டோபர் 2006|
Share:
Click Here Enlargeபழம்பெரும் நடிகை பத்மினி கடந்த ஞாயிறு (24.09.06) அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74.

கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள பூஜாப்பூரைச் சேர்ந்தவர் பத்மினி. 1932ம் வருடம் ஜூன் மாதம் 12ம் தேதி தங்கப்பன் பிள்ளை. மற்றும் சரஸ்வதிக்கு மகளாக பிறந்த பத்மினி தன்னுடைய நான்காவது வயதிலேயே பராம்பரிய நடனத்தை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.

கோபிநாத், டி.எம்.மகாலிங்கம் பிள்ளை ஆகியோரிடம் முறையாக நடனம் கற்றுக் கொண்ட பத்மினி, திருவனந்தபுரத்தில் உள்ள மகிளா மந்திரம் பள்ளியிலும், சிஷெல் ஆங்கிலப்பள்ளியிலும் படித்தார். இதற்கிடையில் இவரது ஒன்பதாவது வயதில் இவரது குடும்பம் சென்னைக்கு குடியேறியது. 1942ல் இவரது அரங்கேற்றம் சென்னையில் நடந்தது.

பத்மினிக்கு லலிதா, ராகினி என இரு சகோதரிகள். சகோதரிகள் மூவருமே நடனத்தில் தேர்ச்சி பெற்று விளங்கினர். அந்நாளில் மூன்று சகோதரிகளையும் திருவாங்கூர் சகோதரிகள் என்று கூறுவர். பிரசித்தி பெற்ற 'டான்ஸர்ஸ் ஆப் இந்தியா' என்ற நடனக்குழுவில் தன்னை இணைத்துக் கொண்ட பத்மினி அந்த நடனக்குழு மூலம் 14 வயதிற்குள் இந்தியா முழுவதும் பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி சாதனைப் புரிந்தார். திரைப்பட உலகிற்கு பத்மினியின் வரவு எதிர்பாராதது. ஆம். பத்மினியின் நடனத்தை தற்செயலாக பார்த்தார் புகழ்பெற்ற நடனகலைஞர் உதயசங்கர். பத்மினியின் நடனம் அவரை கவர, அவரின் 'கல்பனா' என்ற ஹிந்தி படத்தில் நடிப்பதற்கு அழைத்தார். பத்மினியும் அவரது அழைப்பை ஏற்று 'கல்பனா' படத்தில் நடித்தார். 'கல்பனா' வைத் தொடர்ந்து நாற்பது வருடங்கள் திரையுலகில் பல்வேறு சாதனைகளை புரிந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பல்வேறு மொழிப் படங்களில் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்தார் பத்மினி. திருவனந்தபுரத்தில் நடந்த பத்மினியின் நடனநிகழ்ச்சி ஒன்றை பார்த்த என்.எஸ்.கிருஷ்ணன், 'மணமகள்' படத்தில் நடிக்க வைத்து தமிழில் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து சிவாஜிகணேசன் நடிப்பில் வெளிவந்த 'தூக்கு தூக்கி' படத்தில் சகோதரிகள் மூவருக்கும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க, படத்தில் 'சுந்தரி சவுந்தரி' பாடலுக்கு முதன் முதலாக சகோதரிகள் மூவரும் சேர்ந்து நடனம் ஆடினார்கள்.

அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய தென்னிந்த கதாநாயகர்களான நடிகர் திலகம் சிவாஜிகணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ராமச் சந்திரன், என்.டி.ராமராவ், ராஜ்குமார், பிரேம்நசீர், ஜெமினிகணேசன் என்று அனைத்து கதநாயகர்களுடனும் நடித்த பெருமை இவருக்கு உண்டு.
1961ஆம் ஆண்டு டாக்டர் கே.டி.ராமச் சந்திரனை திருமணம் செய்து கொண்ட பத்மினி, திருமணத்திற்கு பின்பு திரைப் படங்களில் நடிப்பதிலிருந்து கொஞ்சம் விலகி நடனத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். இத்தம்பதிகளுக்கு ஒரே மகன் பிரேமானந்த்.
1974ல் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி யில் குடியேறிய பத்மினி அங்கு 'பத்மினி நுண்கலை பள்ளி' என்ற பெயரில் நாட்டிய பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். இப்பள்ளியின் மூலம் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உருவானார்கள். பரதநாட்டியம், மோகினி யாட்டம், கிராமிய நடனங்கள் போன்ற நடனங்கள் இவரது நடனபள்ளியில் கற்றுக் கொடுக்கப்பட்டன.

1981ஆம் ஆண்டு பத்மினியின் கணவர் ராமச்சந்திரன் இறந்தார். தொடர்ந்து அமெரிக்காவில் நாட்டிய பள்ளியை நடத்தி வந்தார். இவரது மகன் பிரேமானந்த் அமெரிக்காவில் உலகப் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 'வார்னர் பிரதர்ஸ்' நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சிறந்த நடிகைகளுக்கான விருது முறையே 1954, 1969, 1961 மற்றும் 1966 ஆகிய ஆண்டுகளில் பத்மினிக்கு அளிக்கப்பட்டது. மேலும் 1957ல் மாஸ்கோவில் நடைபெற்ற இளைஞர் விழாவில் இவருக்கு சிறந்த பாரம்பரிய நாட்டிய கலைஞர் என்கிற அரிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அன்று சோவியத் அரசு பத்மினியின் உருவத் துடன் கூடிய தபால் தலையை வெளி யிட்டு அவரை கெளரவப் படுத்தியது.

தமிழக அரசின் கலைமாமணி விருது, "பிலிம்பேர் விருது என பலவிருதுகள் இவரைத் தேடிவந்தன. கடந்த 1965ல் இந்தியா - பாகிஸ்தான் போரின் போது காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பாதுகாப்பு வீரர்களுக்காக போர் முனைக்கே சென்று நாட்டியமாடினார் பத்மினி.

பிரிட்டன் ராணி எலிசபெத், லேடி மவுண்ட்பேட்டன், ராஜேந்திர பிரசாத், ஜவகர்லால்நேரு, சர்தார்பட்டேல் உள்ளிட்ட பிரபலங்கள் முன் நடன நிகழ்ச்சி நடத்திய பெருமை இவரைச் சாரும்.

அமெரிக்காவில் இவர் நடத்தி வந்த நடனப்பள்ளியை மூடிவிட்டு சென்னை யிலேயே நிரந்தரமாக தங்க வேண்டும் என்று சமீபத்தில்தான் சென்னைக்கு வந்தார்.

சமீபத்தில் சென்னையில் எம்.ஜி.ஆர் நடித்த 'நாடோடி மன்னன்' படம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையிடப் பட்டதை அடுத்து, சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் நடைப்பெற்ற விழாவிற்கு வருகை தந்திருந்தார் பத்மினி. மேலும் கடந்த இரண்டு வாரம் முன்பு நடைபெற்ற சூர்யா, ஜோதிகா திருமண நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கடந்த வாரம் முதலமைச்சர் கருணாநிதிக்கு திரையு லகத்தினர் நடத்திய பாராட்டுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுதான் பத்மினியின் கடைசி நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது. நாட்டிய பேரொளி பத்மினியின் மறைவுக்கு தென்றல் தனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.

கேடிஸ்ரீ
More

திரு காமேஸ்வரன் சிவமணி
Share: 
© Copyright 2020 Tamilonline