Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்
Tamil Unicode / English Search
சிறுகதை
வாழைக் கன்னு
குட்டிக் கதை: வளரும் நாடு
இந்தியா
- கீமூ|டிசம்பர் 2010||(1 Comment)
Share:
தொலைவில் நிழலாகத் தெரிந்த அந்த உருவம் சிறிது கிட்டே வந்ததும் சற்றுத் தெளிவாயிற்று. ஓர் இந்தியக் 'குடிமகன்' கொஞ்சம் குடி அதிகமானதால் நிதானமின்றி தள்ளாடியபடி வீதி ஓரத்திலிருந்து விரைவாகச் செல்லும் வாகனங்களுக்கு இடையே வந்து, வந்து ஒதுங்கினான். தாண்டும் வாகனங்கள் பிளிறிக் கொண்டு அவனை விட்டு ஒதுங்கி ஒரு சிறு ஆட்டம் போட்டு விரைந்தன.

காரை ஒட்டி வந்த சுந்தர் "இன்னைக்கு நிச்சயம் அவன் வீட்டுல சொல்லிட்டு வந்துட்டான் போல இருக்கு" என்றான். "இது இந்த ஊர்ல ரொம்ப சகஜம். நீ நேர பார்த்து ஓட்டு" என்றார் அருணாசலம், சுந்தரின் அப்பா.

கிட்டே வந்ததும்தான் அவன் நிலைமை தெளிவானது. எதோ ஒரு வாகனம் அவனை மிக மோசமாக இடித்துவிட்டுச் சென்றிருக்க வேண்டும். முகத்தின் ஒரு பக்கத்தில் புலி அறைந்தது போல் ரத்தக் களறி, ஒரு கண் வெளியே தொங்கிக் கொண்டு இருந்தது. வலது கால் முட்டியின் மீதும் மோதி இருக்க வேண்டும். மூட்டில் எலும்பு தெரிய ஒரு சதைப்பிண்டம் தொங்கியது. வலது கையைக் காணோம்! உற்றுப் பார்த்ததில் மூட்டு விலகிப் பின்பக்கம் போய் இருந்தது.

சுந்தருக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவசரமாக அவன் காரை ஒதுக்கி நிறுத்தினான். பின்னாலிருந்து அப்பா அலறினார். "டேய்! இது உங்க ஊர் மாதிரி இல்லை. நீ நிறுத்தினா நீதான் இடிச்சன்னு உன்னச் சாத்திடுவாங்க. பார்க்காத மாதிரி பேசாம ஓட்டு."

"அப்பா, அவன் நிலைமையைப் பாத்த தானே? அவனுக்கு யாராவது ஹெல்ப் பண்ணலேன்னா அவன் கதி அதோகதி. இதப் பாத்துட்டு என்னால சும்மா போக முடியாது." "நீ ஆஸ்பத்திரிக்கு எடுத்துண்டு போனாலும் அவங்க ஆக்சிடென்ட் கேஸ்னா எடுத்துக்க மாட்டாங்க. அரசாங்க ஆஸ்பத்திரி எங்கன்னு இந்த நடு ராத்திரில தேடி அலைய முடியாது. அப்பறம் கோர்ட், கேசுன்னு வேற நீ அலையணும். நேர வீடு போய்ச் சேர வழி பாரு" என்று அதட்ட ஆரம்பித்தார் அப்பா.

சுந்தர் ஓர் அமெரிக்கப் பிரஜை. பல வருடங்களாக வாழ்ந்தும் அவனுக்கு அங்கு ஒட்டவே இல்லை. இந்தியா திரும்ப வேண்டும் என்று அவன் திட்டமிட்ட போதெல்லாம் எதாவது ஒரு தடை வந்து அவனுக்கு முடியாமல் போனது. நீண்ட நாள் காத்திருந்த பின் அவனுடைய நண்பன் ஒருவன் மூலம் ஒரு நல்ல வேலை அமைந்தது. அதற்காக இந்தியா திரும்பும் முன்னர் குடும்பத்துடன் ஒருமுறை விடுமுறையில் சென்று எல்லாக் கோணத்திலும் பார்த்து இந்திய வாழ்கையை எடை போட்டு வரலாம் என்று வந்திருந்தான்.

வாழ்க்கை வசதியற்ற சிறு குழந்தைகளுக்கு நேரடியாக உதவி செய்ய வேண்டும் என்பதே அவனுடைய இந்தியத் திட்டத்தின் முக்கிய நோக்கம். அவனுடைய மனைவி சாவித்திரி பிராக்டிகல் ஆனவள். "உன்னுடைய ரொமாண்டிக் ஐடியா எல்லாம் சரிதான். ஆனால் அங்க போய் உன்னால எவ்வளவு தூரம் இதற்காக நேரமும் பணமும் செலவு செய்யமுடியும்னு நெனைக்கிறே? வேலைக்கு போயிட்டு வரவே நமக்கு நேரம் செரியாயிடும். நீ அங்க போனாலும் இங்க யுஎஸ்ல இருக்கற கம்பனிக்குத்தான் வேலை பார்ப்ப. கான்ஃபரன்ஸ் கால் அது இதுன்னு ராப்பகலா வேலைவேலைன்னு கிடக்கப் போற. அங்க சனிக்கிழமைகூட வேலை பார்க்கணும். வாரத்தில கிடைக்கிற ஒரு நாள் வீட்டு வேலை செய்யவே போயிடும். இதுல உன்னுடைய சமூக சேவை எல்லாத்தையும் மூட்டை கட்ட வேண்டியதுதான்" என்பாள்.

சுந்தர் விடுவதாக இல்லை. "போய்ப் பார்த்தா தானே தெரியும். முடிஞ்சா பண்ணலாம். முடியாட்டி இருக்கவே இருக்கு இந்த ஊர். திரும்பி வரதுதான் இப்ப ரொம்ப ஈசியாப் போச்சே."

இப்படி ஆரம்பிக்கும் அவர்கள் பேச்சு இந்திய மற்றும் அமெரிக்க வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து ஒரு நீண்ட பட்டியலில் முடியும். சுந்தர், "இந்தியாவுலசுலபமா வீட்டு வேலைக்கு ஆள் வச்சுக்க முடியும். இங்க மாதிரி டிஷ் வாஷர் கூட தினமும் மல்லாட வேண்டாம்." சாவித்திரி, "ஆனால் என்ன புண்ணியம். உனக்குக் கிடைக்கிற உபரி நேரமெல்லாம் வேலைலேயே போயிடும்."

"குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி கூட இருக்க வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் நம்ம கலாசாரம் கத்துகிட்டு நம்மைப் போல வளருவாங்க."

"இங்க கலாசாரம் என்ன கெட்டுப் போச்சு? இந்த ஊர்ல இருக்கிற மாதிரி இந்தியால இன்னைக்குக் கிடையாது. தமிழ்ச் சங்கம் என்ன, கர்நாடக இசை சங்கம் என்னன்னு ஒரே இந்திய கலாசாரத்தில மூழ்கித்தான் நம்ம குழந்தைங்க வளர்றாங்க."

"நம்ம குழந்தைகளுக்கு பாவர்ட்டி பற்றி நிச்சயம் தெரியணும். அவங்க அமெரிக்க எக்செஸுக்குப் பழகிப்போய் பிறந்த நாளுக்கு முப்பது கிஃப்ட் தான் கிடைச்சுதுன்னு மூஞ்சியத் தூக்கி வச்சுக்கறாங்க. ஒண்ணும் இல்லாத குழந்தைகளப் பார்த்தாதான் அவங்க எவ்வளவு குடுத்து வச்சவங்கன்னு தெரியும்."

"அது என்னவோ சரிதான். அதுக்கு அவ்வளவு தூரம் போய்தான் கத்துக்கணும்னு இல்ல. இந்த ஊரிலேயும் இல்லாதவங்க நிறையப் பேர் இருக்காங்க. அப்படியே இந்தியாதான் போகணும்னாலும் ஒரு வெகேஷன்ல போனாப் போதுமே!"

"நம்மளால முடிஞ்ச அளவு அடுத்தவங்களுக்கு உதவலாம். முடியலேன்ன ஜகா வாங்கிடலாம்" என்று முடிப்பான் சுந்தர்.

ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள் இருவருக்கும் இந்தியாவின்மேல் பெரிய குறை இருந்தது. ஓர் உயிருக்கான மதிப்பு கிடைக்காது என்பது அவர்கள் கருத்து. சுந்தரின் நண்பன் ஒருவன் பெங்களூருவிலிருந்து சென்னைக்குக் கார் ஒட்டி வரும்போது ஒரு விபத்தில் இறந்து விட்டான். விபத்து நடந்தது நள்ளிரவில். பட்ட காயத்தால் ரத்த சேதம் அதிகமாக அவன் இரவு முழுதும் துடித்து, கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட நேர்ந்தது. செய்தி கேட்டு இருவரும் துடித்துப் போனார்கள்.

"இந்தியால இதுதான் ஒரு பெரிய ப்ராப்ளம்! உயிருக்கு மதிப்பே கிடையாது. சாகிறதைப் பார்த்தா எதைச் சுருட்டிட்டு ஓடறதுன்னு பார்ப்பானே ஒழிய உயிரைக் காப்பாத்தணும்னு ஒரு பயலும் நினைக்க மாட்டான். அப்படியே நினைத்தாலும் அங்க வசதி கிடையாது. இங்க ஏதாவதுன்னா மூணு நம்பரச் சுத்தினா போதும். ரெண்டு நிமிஷத்துல உதவி வந்துடும். என்னதான் செலவு ஆகும்னாலும் உயிரைக் காப்பாத்திடுவாங்க. இது ஒரு காரணம் போதும் இங்க இருக்க," சாவித்திரி.

"நீ சொல்றது எல்லாம் சரிதான். இருந்தாலும் இந்தியால எதனை பேருக்கு இப்படி ஆகறது? நமக்குத் தெரிஞ்சு எல்லாரும் ஒழுங்கா வாழலையா? இப்படி பயந்துண்டே இருந்தா எங்க இருந்தாலும் வாழ்க்கை நரகம் ஆயிடும்," சுந்தரின் வலுவில்லாத எதிர்வாதம்.

இவர்களின் பயத்தை நியாயப்படுத்தும்படி இன்றைய சம்பவம்!
அப்பாவின் அதட்டலை அலட்சியப்படுத்தி சுந்தர் காரை நிறுத்தினான். இதற்குள் அந்த ஆசாமி கீழே விழுந்து துடித்துக்கொண்டு இருந்தான். சுந்தர் அவனிடம் போய் என்ன என்று பார்ப்பதற்குள் மடமடவென்று ஒரு சிறு கூட்டம் கூடியது அவனைச் சுற்றி. இவர்கள் அவைவரும் இத்தனை நேரம் எங்கிருந்தார்கள் என்று நினைத்தான் சுந்தர். அப்பா சொன்னது முற்றிலும் நிஜம்!

"என்ன சார், இடிசுட்டயா?" என்றான் ஒருவன். "நான் இடிசிருந்தேன்னா எதுக்கு நிறுத்தப்போறேன்? உதவி செய்ய நிறுத்தினா ஒழிச்சிடுவீங்களே?" என்று பதிலுக்குச் சாடினான் சுந்தர்.

"என்ன மேன்! கார் வச்சுருந்தா என்ன வேணாலும் செய்வீங்க. நாங்க கேக்கக் கூடாதா? நீ இடிக்கலேன்னு என்ன நிச்சயம்?"

சுந்தருக்கு நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்தது. இருட்டில் ஒரு கூட்டத்தில் நாம் மாட்டிக்கொண்டு விட்டோம். நான்தான் இடித்துக் காயப்படுத்தி விட்டேன் என்று இவர்கள் அனைவரும் நினைக்கிறார்கள். இதில் எவனாவது ஒருத்தன் என்னையோ, காரையோ தாக்க ஆரம்பித்தால் அவ்வளவுதான்! அப்பா சொன்னதைக் கேட்டிருக்க வேண்டுமோ? ஆனால் அவன் நிலைமை என்ன ஆவது?

இந்த அமளியின் நடுவில் அந்த அவனை அனைவரும் மறந்து விட்டார்கள். அவன் வலியில் துடித்து ஏதேதோ மிருக சப்தங்கள் எழுப்பிக் கொண்டிருந்தான். அவன் காயத்திலிருந்து ரத்தம் கொட்டி ஒரு குளமாகத் தேங்க, அவன் அதில் துடித்துத் தேய்த்து அவன் உடம்பு முழுதும் சிவப்புக் கறை. சுற்றி இருப்பவர் "என்ன வலிக்குதா? தண்ணி வேணுமா?" என்று கேட்டு அவன் நகரும் போதெல்லாம் அவனைத் தவிர்த்து கபடி ஆடிக் கொண்டிருந்தனர். யாரும் எதுவும் செய்த மாதிரித் தெரியவில்லை.

"அமெரிக்காவா இருந்தா 911 என்கிற நம்பர் டயல் செய்தா போதும். எங்க இருந்தாலும் சரி போலீஸ் இல்லேன்னா தீயணைப்புப் படை உடனடியா வந்து ஆளைக் காப்பாத்திடுவாங்க," சாவித்திரி காருக்குள் புலம்பியபடி வெளியே நோக்கினாள்.

"நாம ஏதாவது உடனே செய்யலேன்னா அவர் செத்துப் போய்டுவாரு. ஒரு கை குடுக்கறதுன்னா குடுங்க, இல்லே வழி விடுங்க. சீக்கிரம் செய்யற விஷயம் இது," சுந்தர் கூட்டத்துக்குப் புரிய வைக்க முயன்றான். ஒருவரும் பதில் கொடுப்பதாகத் தெரியவில்லை. "ஒவ்வொரு நிமிஷமும் முக்கியமாச்சே. அவர் சாகக் கிடக்கிறாரே. என்ன செய்யப் போறேன்!" தவித்தான் சுந்தர்.

அப்போதுதான் அவன் வந்தான்.ஒரு இருபது இருபத்தைந்து வயது இருக்கும். தன் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி வந்தான். தலையில் ஹெல்மெட். அதை எடுத்ததும் ஜிவ்வென்று எழுந்து நிற்கும் அடர்த்தியான சுருட்டை முடி. சிறிய நெற்றி. இருட்டிலும் குளிர் கண்ணாடி அணிந்து இருந்தான். ஓட்டும் போது தூசி கண்ணில் விழாமல் இருக்க வேண்டி. கண்ணாடியைத் தூக்கி தலையில் அணிந்து கொண்டு கேட்டான், அதட்டலாக "என்ன நடக்குது? ஏன் கூட்டம்?"

அந்த அதிகாரத்துக்குப் பலன் உடனடியாக கிடைத்தது."அதோ, அங்க ஒருத்தன் அடி வாங்கிக் கெடக்கறான். இவர்தான் இடிச்சார் போலத் தெரியுது."

"நான் சத்தியமா இடிக்கல. நான் உதவி செய்ய நிறுத்தினேன். அவரு செத்துட்டு இருக்கார். யாராவது உதவலைன்னா போய்டுவார்," சுந்தர் அலறினான்.

அந்த இளைஞன் கூட்டத்தை ஒதுக்கிவிட்டு கீழே இருப்பவனைப் பார்த்தான். "என்னப்பா குடியா?" என்றவன் "யாரவது கொஞ்சம் தண்ணி குடுங்க சீக்கிரம்" என்று கூட்டத்தைப் பார்த்து சொல்லி விட்டு, சுந்தரின் கார் அருகில் சென்று கூர்ந்து நோக்கினான்.

"கார்ல ரத்தம் ஏதும் இல்லை. இவர் இடிக்கல. உதவி செய்யத்தான் நிறுத்தினேன்னு சொல்லறார் தானே. அப்பறம் என்ன? உயிரக் காப்பாத்தறதைப் பாக்கலாம்" என்று சினந்தான்

சுந்தரிடம் திரும்பி, "சார், உங்க வண்டி ஃபுல்லா இருக்கு. ஒரு ஆட்டோ கிடைக்குமான்னு பாக்கலாம். ஜி.ஹெச். ஒரு கிலோ மீட்டர்ல இருக்கு. அங்க கொண்டு சேர்க்கலாம்," என்றவன் கூட்டத்திடம் திரும்பி "ஒரு ஆட்டோவ நிறுத்துங்க பார்க்கலாம்" என்று கத்தினான்.

இவனுடைய ஆணைக்கு காத்திருந்தார் போல பலர் தெருமுனைக்குச் சென்று ஆட்டோ பார்க்க ஆரம்பித்தனர். நிறுத்திய ஆட்டோ ஓட்டுனர் புலம்பினார், ”ஐயோ, ஆக்சிடென்ட் கேசா சார், வேண்டவே வேண்டாம். யாரும் எடுத்துக்க மாட்டங்க. பிரச்சினை ஆயிடுங்க. என்ன விட்டுருங்க."

இளைஞன் சீறினான். "ஒரு சாத்து சாத்தினா தெரியும். ஒருத்தன் சாகக் கிடக்கறான். அவனை காப்பாத்துவியா? மவனே, ஓடவா பாக்கற நீ?"

"சார் ஒரு கை குடுங்க, இவனை ஏத்தலாம்" என்று சுந்தரின் உதவியுடன் அவனை ஆட்டோவில் ஏற்றி அவன் அருகே அமர்ந்தான். "ஜி ஹெச்சுக்கு விடுப்பா சீக்கிரம்" என்றான்

நொடியில் கூட்டம் கலைந்தது. அவர்கள் ஏறிச் சென்ற ஆட்டோ மறையும்வரை சுந்தர் பார்த்துக் கொண்டிருந்தான்.

காருக்குத் திரும்பி வந்தவன் உக்காரும் முன்னர் பின்னாலிருந்து கேள்வி வந்தது. "என்ன நேர்லயே பாத்தியா இந்தியாவோட லச்சணத்தை? இதுக்கும் மேல உனக்கு இங்க திரும்பி வரணுமா?"

வண்டியில் அமர்ந்த சுந்தர் வீதி ஓரத்தில் அனாதையாய் நின்றிருந்த அந்த இளைஞனின் வண்டியையும், தரையில் அவன் தூக்கி வீசியிருந்தஹெல்மெட்டையும் நிதானமாகப் பார்த்தான். அவன் முகத்தில் புன்முறுவல் பூத்தது. இந்தியாவில் நல்ல வசதிகளுக்குக் குறை இருக்கலாம். ஆனால் நல்ல மனிதர்களுக்கு இல்லை என்று நினைத்தவன் காரைக் கிளப்பியவாறே திரும்பி சொன்னான் "நிச்சயமாக!"

சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி,
சான் ஹோசே, கலி.
More

வாழைக் கன்னு
குட்டிக் கதை: வளரும் நாடு
Share: 
© Copyright 2020 Tamilonline