Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நலம் வாழ | எனக்குப் பிடிச்சது
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
தேவன்
- அரவிந்த்|செப்டம்பர் 2010|
Share:
பாரதியார், புதுமைப்பித்தன், கல்கி தொடங்கி பலரும் நகைச்சுவையாக எழுதி வெற்றி கண்டுள்ளனர். அவர்களுள் தேவன் என்று அழைக்கப்படும் மகாதேவன் தனக்கென்று தனியிடம் பெற்றவர். தேவன், கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் செப்டம்பர் 8, 1913 அன்று பிறந்தார். பள்ளிப்படிப்பு திருவிடைமருதூரில். பின்னர் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். சிறிது காலம் பள்ளியொன்றில் ஆசிரியப் பணியாற்றினார். படிக்கும்போதே தேவனுக்கு எழுத்தாற்றல் இருந்தது. அதை வளர்த்துக் கொள்ள விரும்பிய சமயத்தில் ஆனந்த விகடனில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. 21ஆம் வயதில் விகடனில் துணையாசிரியராகச் சேர்ந்தார். சிறுகதை, நாவல், பயணக் கட்டுரை, செய்தி விமர்சனம் என்று எழுதிக் குவித்தார். சமயம், ஆன்மீகம், வரலாறு சார்ந்த தேவனின் கட்டுரைகளும், சில்பி, கோபுலு ஆகியோரின் அதற்கான ஓவியங்களும் வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

1942ல் விகடனின் நிர்வாக ஆசிரியராக உயர்ந்தார் தேவன். தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயர் பெற்றார். அவர் உருவாக்கிய ’துப்பறியும் சாம்பு’ பாத்திரம் ஷெர்லக் ஹோம்ஸ், ஜேம்ஸ்பாண்ட் போலச் சாகாவரம் பெற்றது. சாம்புவின் சாகசத்தையும், அதற்கு ராஜு வரைந்த ஓவியத்தையும் காண வாராவாரம் வாசகர் கூட்டம் காத்திருந்தது. பத்திரிக்கை, எழுத்துத் துறையில் தேவன் கையாளாத உத்திகளே இல்லை என்னுமளவிற்கு புதிய பல உத்திகளைக் கையாண்டு விகடனின் விற்பனையை உயர்த்தினார். அக்கால வாசகர்களின் வாசிப்புத் தரத்தை உயர்த்தியதில் தேவனுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.

1957ஆம் ஆண்டு வரை விகடனில் பணியாற்றிய தேவன் ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகளையும், இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியிருக்கிறார். ஜஸ்டிஸ் ஜகன்னாதன், கோமதியின் காதலன், கல்யாணி, மிஸ்டர் வேதாந்தம், சி.ஐ.டி.சந்துரு, மிஸ். ஜானகி, மைதிலி, மாலதி, ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் ராஜாமணி, ராஜியின் பிள்ளை, ராஜத்தின் மனோரதம் போன்ற அவரது படைப்புகள் மறக்க இயலாதவை. ’சீனுப்பயல்' என்ற சிறுகதைத் தொகுப்பு, சிரிக்க மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைப்பது. அவரது சின்னக் கண்ணன் கட்டுரைகள் குறிப்பிடத்தகுந்தது. ஜஸ்டிஸ் ஜகந்நாதன் நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மல்லாரி ராவ் கதைகள் தேவன் திருவிடை மருதூரில் குடியிருந்தபோது வீட்டின் உரிமையாளர்களாக இருந்த மராத்திய சகோதரர்கள் கூறிய அனுபவ, வாய்மொழிக் கதைகளை அடிப்படையாக வைத்துப் புனையப்பட்டவை. இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்ட போது எழுதிய ‘ஐந்து நாடுகளில் அறுபது நாட்கள்’ குறிப்பிடத்தகுந்த பயணநூல்களுள் ஒன்று..

தேவனின் சில நாவல்கள் நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும் உருப்பெற்றன. கோமதியின் காதலன் திரைப்படமானது. ‘துப்பறியும் சாம்பு’ பாத்திரத்தை ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் நாகேஷ் ஏற்று நடித்தார். பின்னர் காத்தாடி ராமமூர்த்தி சாம்பு வேடமேற்றுச் சில நாடகங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். இயக்குநர் ஸ்ரீதர், மிஸ்டர் வேதாந்தம் போன்ற புதினங்களை தொலைக்காட்சித் தொடராக அளித்தார்.
தேவன், தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயர் பெற்றார். அவர் உருவாக்கிய ’துப்பறியும் சாம்பு’ பாத்திரம் ஷெர்லக் ஹோம்ஸ், ஜேம்ஸ்பாண்ட் போலச் சாகாவரம் பெற்றது.
”எதிர்பாராத வரிகளை தொடர்கதை அத்தியாயங்களின் ஆரம்பத்தில் பிரயோகிக்கும் ஆச்சரியங்களும், சிறுகதைகளில் வாசகரின் கவனத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தியிருக்கும் அற்புதமும், அவரை விட்டால் தமிழ் எழுத்தாளர்களில் மிகச் சிலரிடமே உள்ளன. தேவனை இப்போதைய வாசகர் உலகு சரிவர அறிந்திருக்காதது துர்பாக்கியமே. என்போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னோடியாகவும், மானசீக ஆசானாகவும் இருந்திருக்கிறார் தேவன்” என்கிறார் சுஜாதா.

”தம் சொல், எழுத்து எதனாலும் பிறர் மனத்திற்குத் துன்பம் புரிந்தவரன்று. ஹாஸ்யம் என்று பிறர் மனது நோக எழுதக்கூடாது என்று ஹாஸ்ய எழுத்தாளர்களுக்கு தேவன் முன்மாதிரியாக விளங்கினார்” என்கிறார் மீ.ப. சோமு. ”தமிழுக்கும், எழுத்தாளர்களுக்கும் பெருமை வரக் காரணமான சிற்பிகளில் ஒருவர் தேவன்” என்று பாராட்டுகிறார் வாகீச கலாநிதி கி.வா.ஜ. இப்படிப் பலரது பாரட்டையும் பெற்ற தேவன், தன்னலம் கருதாது வாழ்ந்தவர். எப்போதும் பிறரை ஊக்குவிப்பராக இருந்தவர். தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருமுறை பதவி வகித்திருக்கிறார். ”தேவன் நல்ல மனிதர். மிகச் சிறந்த பண்பாளர்” என்கிறார் தேவனின் நெருங்கிய நண்பராக இருந்த ஓவியர் கோபுலு.

எழுத்து பற்றி தேவன், ”எழுதுவது மிகவும் சிரமமான, சங்கடமான தொழில். ’அழகாக வார்த்தைகளைக் கோத்துக் கொடுத்து விட்டேனே!’ என்றால் பிரயோசனமில்லை. எத்தனையோ பொறுமை, எத்தனையோ உழைப்பு, வாழ்க்கையை ஊன்றிக் கவனித்து ஏற்பட்ட பக்குவம், பொது ஜனங்கள் எதை விரும்புவார்கள் என்ற சரியான ஊகம், எப்படி எழுதினால் சிறப்பாக அமையும் என்று கண்டு கொள்கிற ஞானம் - இவை அத்தனையும் ஒரே ஆசாமியிடம் வேண்டும். அப்படி இருந்தால்தான் அவனால் சிறந்த எழுத்தாளராகப் பரிணமிக்க முடியும். ஆனால் இவை அனைத்தும் ஒரே நாளில் வருகிற வித்தைகள் இல்லை. பலவருஷங்கள் உழைத்தே இந்தத் தேர்ச்சியை அடைய முடியும்.” என்று கூறியிருக்கிறார்.

தன் படைப்புக்களை நூலாக்கிப் பார்க்க வேண்டும் என்ற தேவனின் ஆசை அவர் உயிரோடு இருக்கும்வரை நிறைவேறவில்லை. 44-ஆவது வயதில், 1957 மே 5 அன்று தேவன் மறைந்தார். அவர் மறைவுக்குப் பின் அல்லயன்ஸ் பதிப்பகமும், சமீபத்தில் கிழக்கு பதிப்பகமும் அவரது நூல்களை வெளியிட்டுள்ளன. தேவன் நினைவாக அவரது நண்பர்கள், வாசகர்கள் இணைந்து உருவாக்கிய தேவன் அறக்கட்டளை ஆண்டுதோறும் அவரது நினைவு நாளன்று சிறந்த எழுத்தாளர்களுக்குத் தேவன் விருது வழங்குகிறது.

வோட்ஹவுஸுக்கு இணையாகத் தமிழில் அதிகம் நகைச்சுவை எழுதியவர் என்ற வகையிலும், நகைச்சுவை எழுத்தாளர்கள் பலருக்கும் முன்னோடி என்ற வகையிலும் மிக முக்கிய இடம் பெறுகிறார் தேவன்.

அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline