Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | முன்னோட்டம் | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சாதனையாளர் | நினைவலைகள்
Tamil Unicode / English Search
நலம்வாழ
சிறுநீரகம் தரும் பெரும் தொல்லை
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|ஜூலை 2010||(1 Comment)
Share:
Click Here Enlargeஐயிரண்டு திங்கள் என்னைச் சுமந்து பெற்றெடுத்த அன்னை சமீபத்தில் காலமானார். காரணம், சிறுநீரகக் கோளாறு. அவருக்கு அஞ்சலியாக இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

மனிதர்களுக்குச் சற்றே தாராளமாக இரண்டு சிறுநீரகங்களை இயற்கை வழங்கியுள்ளது. சிறுநீரகங்களுக்கு உடலில் நான்கு முக்கியப் பணிகள்:

 • கழிவுப் பொருட்களை வெளியேற்றுதல்.
 • கனிம, உப்பு அளவுகளைச் சீராக வைத்தல்.
 • ரத்தச் சிவப்பணு (RBC) உற்பத்திக்கான ஹார்மோன்களைச் சுரத்தல்
 • உடலில் நீரின் அளவைக் கட்டுக்குள் வைத்திருத்தல்.


இரண்டு சிறுநீரகங்களும் பொதுவாக முதுகுத் தண்டின் இருபுறமும் விலா எலும்பின் கீழ் உள்ளன. இவை ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களையும் தேவைக்கு அதிகமான நீரையும் வடிகட்டிச் சிறுநீராக மாற்றுகின்றன. இது நுண்குழல்கள் வழியாக சிறுநீரகத் தொட்டிக்குச் (pelvis of the kidney) சென்று அங்கிருந்து சிறுநீரகக் குழல்கள் (ureter) மூலம் சிறுநீரகப்பையை (urinary bladder) சென்று அடைகிறது. சிறுநீர் வெளியேறும் வரை அது சிறுநீரகப்பையில் தங்கியிருக்கிறது. பத்து முதல் பதினைந்து சதவிகித அளவு சிறுநீரகப் பணியே ஒருவரை உயிரோடு வைத்திருக்கப் போதுமானது; அதனால் இதன் செயல்பாடு முப்பது சதவிகித அளவுக்குக் குறையும்வரை எந்த விதமான நோய் அறிகுறியும் தோன்றுவதில்லை. அதனால் பலருக்கு நோய் முற்றிய பின்னரே இது கண்டறியப்படுகிறது.

யாரைத் தாக்கும்?
யாருக்கு வேண்டுமானாலும் சிறுநீரக திறனிழைப்பு ஏற்படலாம். ஆனால், சிலரை இது அதிகமாகத் தாக்குகிறது.

நோயின் தீவிரத்தை கண்காணிக்க வேண்டும். முதன்மை மருத்துவரும், சிறுநீரக மருத்துவரும் இணைந்து சில பரிசோதனைகள் செய்வர். சிறுநீரகத்தின் தசையை எடுத்து biopsy மூலம் பரிசோதிக்க வேண்டி வரலாம்.


 • நீரிழிவு நோய் உள்ளவர்கள்.
 • இரத்த அழுத்தம் உள்ளவர்கள்.
 • சிறுநீரக பாதையில் நுண்ணுயிர் கிருமிகள் ஆக்கிரமிப்பு உள்ளவர்கள்.
 • சீழ்பிடிப்பினால் குறைந்த ரத்த அழுத்தம் (Sepsis) உள்ளவர்கள்.
 • வலி மாத்திரைகள் அதிகம் உண்பவர்கள்
 • சிலவகை scan செய்யும்போது கொடுக்கப்படும் contrast மருந்துகளால்.
 • சுக்கியன் என்று சொல்லப்படும் Prostate சுரப்பியில் அடைப்பு
 • தான்தோன்றியாக (காரணமின்றியே) சிறுநீரகத்தில் இருக்கும் 'குளோமருலம்' என்று சொல்லப்படும் வடிகட்டியில் ஏற்படும் அழற்சி
 • ஈரல் அழற்சி நோய்மூலமும், தொண்டைக்கட்டின் பின்விளைவாகவும் ஏற்படலாம்.
 • குடும்பத்தில் சிறுநீரக நோய் உள்ளவர்கள் (சிலவகை நோய்களுக்கு மட்டும் இது பொருந்தும்)


நோயின் அறிகுறிகள்:
மேற்கூறிய அறிகுறிகள் தோன்றக் காலதாமதம் ஆகலாம். இன்னதென்று குறிப்பிட முடியாத குறியீடுகளே ஆரம்பத்தில் இருக்கலாம்.

ஆரம்ப கால அறிகுறிகள்
 • உடற்களைப்பு
 • சோர்வு
 • பசியின்மை
 • கை, கால் குடைச்சல்
 • சிறுநீரில் ரத்தம் கலந்திருத்தல்
 • புரத நீரிழிவு
 • நீர் அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் உடல் வீக்கம் குறிப்பாகக் கால்கள் வீங்குதல்
 • ரத்தக் கொதிப்பு அதிகரித்தல்
 • விலாமடிப்பில் வலி


முற்றிய நிலை அறிகுறிகள்
 • தோல் அரிப்பு
 • நடுக்கம்
 • அரை மயக்கம்
 • குழப்பம்
 • குமட்டல், வாந்தி
 • சுவாசத்தில் துர்நாற்றம்
 • மீளாத்துயில் நிலை (coma)


நலமாக உள்ள போது சீதோஷண நிலை மற்றும் நீர் அருந்தும் அளவைப் பொருத்து சிறுநீர் செறிவாகவோ (concentrated) நீர்த்தோ (diluted) இருக்கும்; ஆனால் சிறுநீரகங்கள் நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது செறிவாக்கும் பணி முதலில் பாதிக்கப்படுவதால் சிறுநீரின் அளவு வழக்கத்துக்கு அதிகமாக இருக்கலாம். இந்த ஒரு காரணத்தாலே பெரும்பான்மையானோர் தங்களுக்கு நோய் இருப்பது தெரியாமல் போகலாம்.
தவிர்க்கும் வழிகள்
 • நீரிழிவு நோய் உள்ளவர்கள் வருடத்திற்கு ஒருமுறை சிறுநீரில் புரதப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
 • மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
 • நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம் சிறிநீரகப் பாதிப்பு தவிர்க்கப்படலாம்.
 • ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். 'உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்' என்கிற பழமொழிக்கு விஞ்ஞான அடிப்படை சிறுநீரகப் பணியையே குறிக்கும். ஆகவே உப்பை உட்கொள்ளும் போது நம்மையும் அறியாமல் நாம் நீர் அருந்துகிறோம். சிறுநீரகம் சீராக இல்லாவிட்டால் குடிக்கிற நீர் அனைத்தும் உடலிலிருந்து வெளியேற முடியாமல் வீக்கம் தருகிறது.
 • கூடுமானவரை வலி மருந்துகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளமால் இருப்பது நல்லது.
 • தான்தோன்றி நோய்கள் (Idiopathic) மூலம் சிறுநீரகம் பாதிக்கப்படுமானால் அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் நல்ல மருத்துவம் செய்து கொள்வது தகுந்தது.


தவறாமல் டயலிசிஸ் சிகிச்சைக்கு நோயாளியை அழைத்துச் செல்வதின் மூலம் ஆயுள்காலத்தை ஓரிரண்டு வருடங்கள் நீட்டிக்கலாம்.நோயின் காரணம் என்னவென்று கண்டுபிடிப்பதின் மூலம் தீர்வு முறைகள் நிர்ணயிக்கப்படும்.


ஆரம்பகால சிகிச்சை
நோயின் தீவிரத்தை கண்காணிக்க வேண்டும். முதன்மை மருத்துவரும், சிறுநீரக மருத்துவரும் இணைந்து சில பரிசோதனைகள் செய்வர். சிறுநீரகத்தின் தசையை எடுத்து biopsy மூலம் பரிசோதிக்க வேண்டி வரலாம். நோயின் காரணம் என்னவென்று கண்டுபிடிப்பதின் மூலம் தீர்வு முறைகள் நிர்ணயிக்கப்படும். முதல் சில வருடங்களில் நீர் பெருக்கி மருந்துகள் (diuretics) தரப்படலாம். புரதம் கழியாமல் இருக்க ACE Inhibitor என்று சொல்லப்படும் மருந்தும், ARB என்ற வகை மருந்தும் தரப்படும். நீரழிவு நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைப்பது மிக அவசியம். அடிக்கடி ரத்தப் பரிசோதனையும் சிறுநீர்ப் பரிசோதனையும் தேவைப்படும். தான்தோன்றி வகை சிறுநீரகத் திறனிழப்பு உள்ளவர்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறைக்கும் மருந்துகள் தரப்படும். இதன்மூலம் சிறுநீரகச் செயலிழப்பு சற்று தாமதமாக்கப்படும். ஆனால் இதனால் நுண்ணுயிர்க் கிருமிகள் தாக்கலாம்.

முற்றிய நிலைச் சிகிச்சை
சிறுநீரகச் செயல் 10-15 சதவிகிதமாகக் குறையுமேயானால் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை (Renal Replacement Therapy) தரவேண்டி வரும். உணவுக் கட்டுப்பாடு அதிகமாக இருக்கக்கூடும். உப்பைக் குறைப்பதுடன் பொடாசியம் அதிகமான உணவுகள் உண்ணக்கூடாது. தக்காளி, கீரை வகைகள் போன்றவற்றில் அதிகப் பொடாசியம் உள்ளது. புரதத்தின் அளவு, குறிப்பாக மாமிச உணவு உண்பவர்களுக்கு, குறைக்கும்படி அறிவுறுத்தப்படும்.

சிறுநீரக மாற்றுச் சிகிச்சை முறைகளில் உறுப்பு மாற்றுதலும் (Transplant), கூழ்மப் பிரிப்பு (Dialysis) முறையும் முக்கியமானவை. இன்றைய நிலைமையில் சிறுநீரகத் திறனிழப்பிற்கு நிறைவான சிகிச்சை என்பது மாற்றுச் சிறுநீரகம் பொருத்துதலே. ஆனால் பலவகை சமூக மற்றும் விஞ்ஞான ரீதியான காரணங்களால் இந்தச் சிகிச்சை எல்லோருக்கும் அமைவதில்லை. ஆனால் குடும்பத்தில் சரியான பொருத்தத்துடன் சிறுநீரகம் கிடைக்குமேயானால் அதனால் ஆயுள்காலத்தை நீட்டிக்கலாம். இவர்களும் எதிர்ப்புச் சக்தி மருந்துகள் பலவற்றை எடுத்துக் கொள்ள வேண்டி வரும். அதனால் வரும் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.

கூழ்மப் பிரிப்புச் சிகிச்சை பொதுவாகச் சிறுநீரக நிபுணர்களால் வழங்கி மேற்பார்வையிடப்படுகிறது. சிறுநீரகத்தின் கழிவுப் பொருள் நீக்கு பணியை டயலிசிஸ் சிகிச்சையால் ஓரளவுக்கு ஈடுகட்ட முடியும். இன்றைய தேதியில் அமெரிக்காவில் மட்டும் சுமார் மூன்று லட்சம் பேர் இந்த சிகிச்சையைப் பெற்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். டயலிசிஸ் சிகிச்சை இரு வகைப்படும் - ஒன்று ஹீமோடயலிசிஸ். இது வாரம் மூன்றுமுறை ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வகை; மற்றொன்று வயிற்று உறுப்புக்களுக்கு உறைபோல் இருக்கும் பெரிடோனியத்தில் நீர் நிரப்பி, தொடர்ச்சியாக வீட்டிலேயே செய்யும் வகை. யாருக்கு எது ஏற்றது என்பதை நோயாளியும் நிபுணரும் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.

தொடர்ந்து டயலிசிஸ் செய்வதன் மூலமும், உணவுக் கட்டுபாட்டுடன் இருப்பதன் மூலமும், Epogen என்று சொல்லப்படும் ரத்தச் சிவப்பணு உற்பத்திக்கான மருந்து வாரவாரம் எடுத்துக்கொள்வதன் மூலமும் சிறுநீரகச் செயல்பாட்டை ஓரளவுக்கு செயற்கையாகச் செய்யமுடியும். இதற்குக் குடும்பத்தினரின் பங்கு மிக முக்கியமானது. வேளாவேளைக்கு மருந்துகள் அளித்து, உணவை கட்டுபாட்டுடன் வைக்கமுயல்வதின் மூலமும், தவறாமல் டயலிசிஸ் சிகிச்சைக்கு நோயாளியை அழைத்துச் செல்வதின் மூலமும் ஆயுள்காலத்தை ஓரிரண்டு வருடங்கள் நீட்டிக்கலாம். நோயாளிகள் டயலிசிஸ் செய்யத் தொடங்கியதும் மிகவும் சோர்வாக காணப்படலாம். அவர்களின் நடமாட்டம் குறையலாம். அவர்களின் நோயைக் கட்டுகள் வைப்பதற்கு குடும்பத்தினரின் பங்கு அதிகமாக தேவைப்படுகிறது. இன்றைய தேதியில் டயலிசிஸ் ஆரம்பிக்கப்பட்ட தினம் முதல் ஐந்து வருடங்களுக்குள் 50% நோயாளிகள் மரணம் எய்தும் சாத்தியக் கூறுகள் உள்ளன. அதனால் சிறுகச் சிறுக நொடிக்க வைக்கும் சிறுநீரக நோயைத் தவிர்க்க முயல்வோம்.

மேலும் விவரங்களுக்குப் பார்க்க: www.kidney.org

தகவல் உதவி: மரு. நிரஞ்சன் சங்கரநாரயணன்,
சிறுநீரக மருத்துவர், மேற்கு ஹார்ட்ஃபோர்ட்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்
Share: 
© Copyright 2020 Tamilonline