Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | முன்னோட்டம் | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சாதனையாளர் | நினைவலைகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
ராஜேஷ்குமார்
- அரவிந்த்|ஜூலை 2010|
Share:
தமிழ் இலக்கிய வெளியில் வெகுஜன இலக்கியத்திற்கு அதிக வாசகப் பரப்புண்டு. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இரண்டு தலைமுறைகளைக் கடந்து எழுதி இன்னமும் வெகுஜன வெளியில் முதலிடத்தில் இருப்பவர் ராஜேஷ்குமார்.

ராஜேஷ்குமாரின் இயற்பெயர் ராஜகோபால். சொந்த ஊர் கோவை. பரம்பரையாக ஜவுளி வணிகத்தில் ஈடுபட்டு வந்த குடும்பம். தந்தை புடவைகள் உருவாக்கும் தொழிலைச் செய்து வந்தார். பள்ளிப்படிப்பை முடித்த ராஜேஷ்குமார், வேளாண்துறையில் பட்டம் பெற்று பேராசிரியர் ஆவதை லட்சியமாகக் கொண்டிருந்தார். ஆனால் அவர் பி.யூ.சி. படித்து வந்த காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்ததால் வகுப்புகள் சரிவர நடைபெறவில்லை. அதனால் பி.எஸ்சி. வேளாண்மை படிக்கும் வாய்ப்பு நிறைவேறாமல் போனது. தாவரவியல் பட்ட வகுப்பில் சேர்ந்தார். பிறகு பள்ளி ஆசிரியராகும் எண்ணத்தில் பி.எட். பெற்றார். ஒரு கிராமத்தில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். கிராமத்துச் சூழல் ஒவ்வாததால் அந்த வேலையைத் துறந்தார். பின்னர் கோவையிலுள்ள தேவாங்க மேல்நிலைப்பள்ளியில் சில மாதங்கள் வேலை பார்த்தார். அதிலும் நீண்ட நாள் தொடர முடியவில்லை. பின்னர் தந்தைக்கு உதவியாகக் குடும்ப வணிகத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



வியாபார நிமித்தமாக வட மாநிலங்கள் பலவற்றுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மனிதர்களைப் படிக்க முடிந்த அந்தத் தருணங்களும் நீண்ட தொடர் பயணங்களும் அவரது எழுத்தார்வத்திற்கு வலு சேர்த்தன.

1977லிருந்து 1980வரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகி ராஜேஷ்குமாருக்குப் புகழைத் தேடித் தந்தன. தொடர்ந்து நில் கவனி கொல், மேனகாவின் மே மாதம் என்று வித்தியாசமான தலைப்புகளில் எழுத ஆரம்பித்தார்.
ராஜேஷ்குமார் கல்லூரியில் படிக்கும் போதே கல்லூரி மலருக்குக் கதைகள் எழுதியிருந்தார். அந்த ஆர்வத்தில் பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுத ஆரம்பித்தார். தனது சகோதரி மகனின் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டு ராஜேஷ்குமார் என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். பல கதைகள் திரும்பி வந்தாலும், விடாமுயற்சி வெற்றியைத் தந்தது. பிரபல பத்திரிகைகளில் தொடர்ந்து அவரது கதைகள் வெளியாக ஆரம்பித்தன. ஆரம்பத்தில் சமூகச் சிறுகதைகளும் ஆன்மீகம் கலந்த கதைகளும் எழுதி வந்தார். பின்னர் பிரபல எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜனின் ஆலோசனையின் பேரில் கிரைம் கதைகள் மீது கவனம் செலுத்தத் தொடங்கினார். குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. இவரது எழுத்து நடையால் கவரப்பட்டுத் தொடர்ந்து எழுத வாய்ப்பளித்தார். முதல் நாவல் மாலைமதி இதழில் வெளியாகியது. அதைத் தொடர்ந்து கல்கண்டு இதழில் 'ஏழாவது டெஸ்ட் ட்யூப்' என்ற தொடர்கதை வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்றது. சாவி, விகடன் பாலசுப்ரமணியன் போன்றோகளும் ராஜேஷ்குமாரின் எழுத்து வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர். 1977லிருந்து 1980வரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகி ராஜேஷ்குமாருக்குப் புகழைத் தேடித் தந்தன. தொடர்ந்து நில் கவனி கொல், மேனகாவின் மே மாதம் என்று வித்தியாசமான தலைப்புகளில் எழுத ஆரம்பித்தார். மோனா, மாலைமதி, ராணிமுத்து, சுஜாதா, ராணி, விகடன், குமுதம், சாவி, குங்குமம், வாரமலர், குடும்ப நாவல், பாக்கெட் நாவல் என்று எழுதாத இதழ்களே இல்லை எனும் அளவுக்கு எழுதிக் குவித்தார்.

1985ல் பாக்கெட் நாவல் ஆசிரியர் ஜி. அசோகன் ராஜேஷ்குமாரின் கதைகளை வெளியிடுவதெற்கென்றே க்ரைம் நாவல் என்ற பெயரில் மாதப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார். நந்தினி 440 வோல்ட்ஸ், திக் திக் திவ்யா, திரு மரண அழைப்பிதழ், இறப்பதற்கு நேரமில்லை, ரத்தம் சிந்தும் ரோஜாக்கள், உயிரின் நிறம் ஊதா என்பது போன்று மாதாமாதம் வித்தியாசமான தலைப்புகளில் அவர் எழுதிய நாவல்கள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

"வாழ்க்கையில் நான் வரிசையாகச் சந்தித்த தோல்விகள்தான் என் எழுத்துலக வெற்றிக்குக் காரணம். பொதுவாக அம்மா என்றால் தன் பிள்ளைகளுக்கு ஆமை-முயல் கதை, நரி கதை, நிலவில் பாட்டி வடை சுட்டக் கதைத்தான் சொல்வார்கள். ஆனால், என் அம்மா எனக்குச் சொன்னதெல்லாம் திகில், திரில் கதைகள்தான். இன்று இத்தனை புகழும், பாராட்டும் பெற்ற எழுத்தாளனாக நான் இருக்கக் காரணம் என் அம்மாவின் அன்பும், பரிவும், அவர் தந்த நம்பிக்கையும்தான்" என்கிறார் ராஜேஷ்குமார் நெகிழ்ச்சியுடன்.

க்ரைம் கதைகளையே ஏன் அதிகம் எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு, "நமது புராண, இலக்கியங்களில் மண்ணாசைக்கு மஹாபாரதம்; பெண்ணாசைக்கு ராமாயணம் இருக்கிறது. சிலப்பதிகாரம் கூட 50% க்ரைம் சப்ஜக்ட்தான். இவைகளில் இல்லாத க்ரைமா? சாகா வரம் பெற்றிருக்கும் காவியங்களே க்ரைமை அடிப்படையாய் வைத்து புனையப்பட்டிருக்கும் போது சாமானியன் நான் எழுதினால் மட்டும் அது தவறா?" என்பதுதான் ராஜேஷ்குமாரின் பதில்.
ஆற்றொழுக்கான, எளிமையான, வாசகனைக் குழப்பாத நடை. வீண் வர்ணனைகளைத் தவிர்த்து, சம்பவங்களை மையமாக வைத்து நகரும் கதை, பரபரப்பான திருப்பங்கள், வாசகன் எதிர்பார்க்காத முடிவு - இவைதான் ராஜேஷ்குமார் எழுத்தின் பலம்.
பிற்காலத்தில் எழுத்துத் துறையில் பல 'குமார்'கள் நுழைவதற்கு மூலகாரணமாக அமைந்தவர் ராஜேஷ்குமார்தான். தனது எழுத்துக்கள் குறித்து, "எனக்கு இரண்டு குழந்தைகள். வேறு எந்தத் தொழிலும் செய்ய இயலாது என்கிற நிலையில் ஒரு முழுநேர எழுத்தாளன் ஆனேன். இந்தத் துறையில் எப்படியாவது முன்னேறிவிடுவது என்கிற முனைப்பில் என் உழைப்பையும் கவனத்தையும் முழுமையாகச் செலுத்தி இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். இதற்கு மிக முக்கிய காரணம் எனது உழைப்பு, நம்பிக்கை, விடாமுயற்சி. ஒரு எழுத்தாளன் என்பவன் எப்போதும் தன் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும். நம்மைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். செய்தித்தாளில் வரும் செய்திகள் கூட நமக்கு ஒரு கதைக்கருவினைத் தந்துவிடும். எழுதும் சப்ஜக்டில் தெளிவாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் பற்றிய கதை என்றால் அதன் வல்லுநரிடம் போய் நான் விவரம் சேகரிப்பேன். மருத்துவக் குறிப்புகளை கதையில் சொல்ல வேண்டுமானால் அது சம்பந்தப்பட்ட மருத்துவர்களை அணுகி கேட்டுக்கொள்வேன். ஆர்மி சம்பந்தப்பட்ட நாவல்களுக்கு ஐஎன்எஸ் அக்ரானி சென்று விளக்கங்கள் பெறுவதுண்டு. இப்படிப் பலதரப்புகளிலும் விசாரித்து உழைத்துத்தான் ஒரு நாவலை எழுதுகிறேன்" என்கிறார்.

"ஆற்றொழுக்கான, எளிமையான, வாசகனைக் குழப்பாத நடை. வீண் வர்ணனைகளைத் தவிர்த்து, சம்பவங்களை மையமாக வைத்து நகரும் கதை, பரபரப்பான திருப்பங்கள், வாசகன் எதிர்பார்க்காத முடிவு" இவைதான் ராஜேஷ்குமார் எழுத்தின் பலம். 'க்ரைம் கதை மன்னன்' என்று வாசகர்களால் போற்றப்படும் இவர், இதுவரை 1650க்கு மேற்பட்ட மாத, தொடர் நாவல்களும், 2000த்திற்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். இன்றும் பெஸ்ட் நாவல், திகில் நாவல், எவரெஸ்ட் நாவல் என்று மாத நாவல்களிலும், பிரபல பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். விவேக், ரூபலா, கோகுல்நாத், நவநீதகிருஷ்ணன் போன்ற பாத்திரங்கள் மறக்க இயலாதவை. வாசகர் நெஞ்சினில் நீங்கா இடம் பெற்றவை. சுவாமி விவேகானந்தரின் மீது கொண்ட பற்றால், அநீதிகளை எதிர்த்துப் போராடும் தன் கதை நாயகனுக்கு 'விவேக்' என்று பெயர் சூட்டினார் ராஜேஷ்குமார். சாமான்யர்கள் முதல் மருத்துவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், துணை வேந்தர்கள், திரைப்படத் துறையினர் என பலர் ராஜேஷ்குமாரின் தீவிர வாசகர்கள். இவரது ஆயிரமாவது நாவல் வெளியீட்டின்போது இவரது வாசகர்களான நடிகர்கள் விஜய்காந்த், டி. ராஜேந்தர் உட்படப் பலர் அதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இவரது 'இரவில் ஒரு வானவில்' என்ற நாவல், 'அகராதி' என்ற பெயரில் திரைப்படமாகியிருக்கிறது. பல சிறுகதைகளும் நாவல்களும் தொலைக்காட்சிக் குறுந் தொடர்களாக வெளியாகி இருக்கின்றன. காஞ்சிப் பெரியவர் மீது இவருக்கு மிகுந்த மரியாதையும் பக்தியும் உண்டு. சித்தர்கள் பற்றியும் நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறார். சித்தர்கள் பற்றி இவர் சமீபத்தில் எழுதியிருக்கும் நூல் பரவலான வரவேற்பைப் பெற்ற ஒன்று. "விளக்கம் ப்ளீஸ் விவேக்" என்ற பெயரில் இவர் எழுதியிருக்கும் பொது அறிவுக் கேள்வி-பதில் நூல் வாசகர்களால் பாரட்டப்பட்ட ஒன்று.

"நான் எழுதுவது இலக்கியமல்ல என்று சொல்கிறவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. எங்கோ குக்கிராமத்தில் இருக்கிற பாமரனுக்கும் என் எழுத்து போய்ச் சேர்ந்து அவன் மனதை மகிழ வைப்பதே என் குறிக்கோள். அதை செய்துகொண்டே இருக்கிறேன். நல்லதைச் சொல்லுவதுதான் இலக்கியம். அப்படிப் பார்த்தால் நல்ல விஷயங்களைச் சொல்லிவருகிறேன் என்கிற நிறைவு எனக்கு உண்டு. இந்த நிறைவு எனக்குப் போதும்" என்கிறார் ராஜேஷ்குமார்.

இன்றும் சுறுசுறுப்பாக எழுதிக் கொண்டிருக்கும் ராஜேஷ்குமார், உலகிலேயே அதிக நாவல்கள் எழுதிய எழுத்தாளர் என்று கின்னஸ் சாதனை படைக்கவிருக்கிறார். இன்றும் தமிழ்நாட்டில் அதிக அளவில் விற்பனையாகும் நாவல்களை எழுதுகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline