Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
'அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்' புனைவிலிருந்து....
- எம்.ஜி. சுரேஷ்|ஜூன் 2010|
Share:
சில அதீதமான தருணங்கள் நம்மை உரசிச் செல்வதுண்டு. அதுமாதிரியான தருணங்களில் ஒன்றாகவே இது இருக்கக்கூடும் என்று அவன் நினைத்தான். இலங்கையில் பிறந்து, சென்னையில் திரிந்து, கனடாவில் அலைந்து... இப்போது இந்த நிமிஷத்தில் எகிப்திய மண்ணில் நின்று கொண்டிருக்கிறான்.

எதிரே பிரம்மாண்டமாக, ஒரு ராட்சசனைப் போல் மனிதத் தலையும் சிங்க உடலுமாக ஸ்பிங்க்ஸ் மணல் வெளியில் உட்கார்ந்திருதது. வானம் மேகத் துணுக்குகள் ஏதுமின்றி நிர்வாணமாக இருந்தது. சகாராவின் மாலைச் சூரியனின் கதிர்கள் ஸ்பிங்க்ஸ் மீது பட்டுத் தெறிக்கையில் ஸ்பிங்க்ஸூம், மணல்வெளியும் தங்கம்போல் தகதகத்தன. அவன் கண்கள் கூச, இமைகளை இடுக்கிக் கொண்டு ஸ்பிங்க்ஸை பார்த்தான்.

அறுபத்தாறு அடி உயரமும், இருநூற்று நாற்பது அடி நீளமுமாக, அஸ்தமிக்கும் சூரியனைத் தன் குருட்டுக் கண்களால் வெறித்தபடி அது உட்கார்ந்திருந்தது. பார்ப்பதற்கு ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தைப் போல் இருந்தது.

அசந்து போய் நின்றான் அலெக்ஸாண்டர்.

ஐயாயிரம் ஆண்டுகளாக இந்த ஜடம் பிரமிடுகளைக் காவல் காத்து வருகிறதாம். அலெக்ஸ், ஸ்பிங்க்ஸைப் பற்றி நிறையப் படித்திருக்கிறான். வேறு வழி? தொழில் என்று வரும்போது ஒரு விஷயத்தைப் பற்றிப் படித்துத்தானே ஆக வேண்டி இருக்கிறது. சமீப காலத்தில் பிரமிட், ஸ்பிங்க்ஸ் என்று கரைத்துக் குடித்திருக்கிறான். ஸ்பிங்க்ஸைக் காலங்களைக் கண்காணித்து வரும் ஒரு காவலாளி என்று சொல்கிறார்கள். காலங்காலமாக அது தன் காலங்களைக் கவனித்து வருகிறதாகும்.

ஒரு சமயம் கடைக்குப் போய் என்னமோ வாங்கிவரப் போனபோது பிளாட்பாரத்தில் துண்டிக்கப்பட்ட ஒரு கை கிடந்ததைப் பார்த்தான். தோள்பட்டையிலிருந்து பிய்த்தெறியப்பட்ட மாதிரி சதைப் பிசிறுகளுடன்; வெண்மையான நரம்பு இழைகளுடன். அந்தக் கையில் கடிகாரம் வேறு கட்டப்பட்டிருந்தது.
அவனுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆறாம் வகுப்பு படிக்கும்போது இதைப் பற்றி செல்வரத்தினம் சாரும் விவரமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஹிஸ்டரி வகுப்பில் சார் சொல்கிற நேர்த்தியால் எல்லாமே கண்முன் நிதர்சனமாகத் தெரியும். பேசும்போது கைகளை ஆட்டி, முகபாவங்களுடன் பாடம் நடத்துவார். பார்ப்பதற்கு ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். புராதன யுகத்திலிருந்து, கால இயந்திரத்தில் ஏறிவந்து இந்த யுகத்துக்குச் செய்தி சொல்கிற மாதிரித் தோன்றும். திடீரென்று ஒருநாள் குண்டு வீச்சில் அந்தப் பள்ளிக்கூடம் தரையோடு தரையானது. நிறையப் பேர் செத்துப் போனார்கள். செல்வரத்தினம் சாரும்தான்; அவர் கதை சொல்கிற நேர்த்தியும் சேர்த்துத்தான். அதோடு ஓர் அழகிய வாழ்நாள் முற்றுப் பெற்றது. அன்றைக்கு இவன் பள்ளிகூடம் போகவில்லை. ஸ்கூலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த இவனைச் சிங்கள ராணுவத்தினர் இழுத்துக் கொண்டு போனார்கள். இவன் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, குண்டுவீச்சில் பள்ளிக்கூடம் விழுந்து கொண்டிருந்தது.

அலெக்ஸின் நினைவு தெரிந்த நாள் முதலாகவே, யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அது பகலைப் போல்; இரவைப் போல்; மழையைப் போல் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. திடீர் திடீர் என்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம்; 'டமார்' என்று பெரிய குண்டு வெடிச்சத்தம்; 'டம டம' வென்று இயந்திரத் துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் பீறிடும் சத்தம் என்று கேட்டுக் கொண்டிருக்கும். ஐந்து வயதிலேயே எது எந்த ஆயுதத்தின் சத்தம் என்பதைப் பார்க்காமலேயே இவனால் சொல்ல முடியும். தினமும், பள்ளிக்கூடத்துக்கு, கடைக்கு என்று வெளியே போவதற்கே பயமாக இருக்கும். இருந்தாலும் போகாமலிருக்கவும் முடியாதே! ஒரு சமயம் கடைக்குப் போய் என்னமோ வாங்கிவரப் போனபோது பிளாட்பாரத்தில் துண்டிக்கப்பட்ட ஒரு கை கிடந்ததைப் பார்த்தான். தோள்பட்டையிலிருந்து பிய்த்தெறியப்பட்ட மாதிரி சதைப் பிசிறுகளுடன்; வெண்மையான நரம்பு இழைகளுடன். அந்தக் கையில் கடிகாரம் வேறு கட்டப்பட்டிருந்தது. யாருக்கு நேரத்தைக் காட்டுவதற்காகவோ அந்தக் கடிகாரம் ஓடிக் கொண்டிருந்தது. அந்த இளம் வயதில் உலகம் முழுவதுமே இப்படித்தான் இருக்கும் போல என நினைத்துக் கொண்டான். பின்னாளில்தான் உலகம் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. சிங்கப்பூர் தெருவில் குப்பை போட்டால் குற்றம்; கல்கத்தாவில் குப்பை போடாவிட்டால் குற்றம். பிரான்ஸில் வீட்டுக்கு வீடு குடிநீர்க் குழாயைப் போல மதுவைப் பெற முடியும். அரபு நாடுகளில் மதுப்புட்டியைக் கையில் எடுத்துச் செல்வதே குற்றம். சவுதி அரேபியாவில் திருடினால் கைகளை வெட்டி விடுவர்கள். இந்தியாவில் திருடினால் அரசியல் தலைவராவது நிச்சயம்.

கொஞ்சம் விவரம் திறந்த பிறகுதான் பெரிய நாடுகள் போர் புரிவதில்லை. சின்னஞ்சிறு நாடுகள்தான் தொடர்ந்து போர் செய்கின்றன என்பது புரிந்தது. சின்னஞ்சிறு நாடுகள் போரிட்டால்தான் பெரிய நாடுகள் நிம்மதியாக இருக்க முடியும் என்றும் தெரிந்து கொண்டான். பெரிய நாடுகள் ஆயுதங்கள் தயாரிக்கின்றன. சிறிய நாடுகள் அவற்றை விலைக்கு வாங்கித் தங்களுக்குள் பிரயோகித்துக் கொள்கின்றன. சிறிய நாடுகளில் உள்ள மக்கள், தீராத யுத்தத்தில் கண்ணி வெடியில் சிக்கி மாமிசம் சிதறினால்தான், பெரிய நாடுகளிலுள்ள மக்களின் விருந்து மேஜைகளில் அந்த மாமிசத்தைப் பரிமாற முடியும். அதனால்தான் இந்த யுத்தங்களை யாரும் தடுத்து நிறுத்துவதில்லை. அடுக்குமாடிக் கட்டிடத்தில் வசிக்கும் நவீன நகர்ப்புற மனிதன் தன் பக்கத்து ஃப்ளாட்டில் வசிப்பவனைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதுபோன்ற மனப்போக்கில்தான் எல்லா நடுகளும் தங்களுக்குள் சுருங்கிக் கொண்டு தீவுகளாக இருக்கின்றன என்றும் புரிந்து கொண்டான்.

ஸ்பிங்ஸின் முகம் லேசாகச் சிவந்த மாதிரி இருந்தது.

முகம் சிவப்பது என்றால்... ஒருவேளை ஸ்பிங்க்ஸ் என்பது பெண்ணா? ஸ்பிங்க்ஸைப் பற்றிப் பேசும் யாரும் இதைப்பற்றி ஏன் யோசிக்கவில்லை? உண்மையில் அது பெண்ணா அல்லது ஆணா என்று யோசித்தான். அது உட்கார்ந்த நிலையில் இருப்பதால் இதைப்பற்றி இப்போதே முடிவெடுக்க முடியாது என்று தோன்றியது. ஒருவேளை இது உட்கார்ந்திருப்பதுதான் ஆண், பெண் என்ற பால்பேதத்தைக் கடந்ததற்கான அடையாளமாகவும் இருக்கலாம்.

அதன் அகலமான பெரிய கண்கள் விரிந்து திறந்திருந்தன. தனக்குக் கீழ் சித்திரக் குள்ளர்களாகத் திரிந்து கொண்டிருக்கும் மனிதர்களை, ஒரு தாய்ச்சிங்கம் தன்னைச் சுற்றி விளையாடும் குட்டிகளைப் பரிவோடு பார்ப்பது போல கண்காணித்தபடி உட்கார்ந்திருப்பதாக அவனுக்குப் பட்டது. ஸிபிங்க்ஸ் என்பது ஒரு 'சர்ரியலிஸ்ட்' சிற்பம் என்று நினைத்துக் கொண்டான். மனிதன் இரட்டைத் தன்மை கொண்டவன். க்ரூர பலம் கொண்ட மிருகத்தன்மையும், ஞானம் ததும்பும் விவேகமும் ஒன்றாக இணைந்திருப்பவன்தான் மனிதன் என்பதற்கான குறியீடாக இந்த ஸ்பிங்க்ஸைக் கொள்ளலாமா என அவனது கலைமனம் சிந்தித்தது.

மெல்லிய கோடு போன்ற அதன் வாய் லேசான கேலிப் புன்னகையை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளான இது எதை நினைத்து இப்படி நையாண்டியாகச் சிரித்துக் கொண்டிருக்கிறது?

தன்னை மறந்து ஸ்பிங்க்ஸையே பார்த்தபடி இருந்தான் அலெக்ஸ். படர்ந்த அதன் முகமும், பாகவதர் போன்ற தலைமுடியும், கீற்றுப் புன்னகையும் அதற்கு ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை ஏற்படுத்தியிருந்தன. சந்தோஷத்தில் அவன் காதுமடல்கள் ஜிவுஜிவுத்தன. கடைசியில் அது நடந்தே விட்டது. அவனால் பிரமிடுகளையும் ஸ்பிங்க்ஸையும் நேர் எதிரே ஸ்தூலமாகப் பார்க்க முடிந்திருக்கிறது. ஆச்சரியத்தோடு பிரம்மாண்ட வஸ்துவைப் பார்த்தபடி நின்றான்.

அப்போது திடீரென்று அதன் உதடுகள் அசைந்த மாதிரி இருந்தது. அவனுள் திகைப்பு மேலிட்டது. இதென்ன பிரமை. இது ஒரு சிற்பம். இதனுடையதோ பிரம்மாண்டமான பாறை உதடுகள். இறுக்கமான உதடுகளில் உறைந்து போன சிரிப்புடன், இந்தப் பாலைவனத்தில் வெயிலும் மழையிலும் காலங்காலமாக குளித்துக் கொண்டிருக்கிறது. இதன் வடிவமைக்கப்பட்ட கல் உதடுகள் அசைவது எப்படி சாத்தியம்?

யோசித்துக் கொண்டிருக்கும் போதே லேசான கிசுகிசுப்பு கேட்டது, அவன் காதருகில்.

காற்றில் வார்த்தை மிதந்தது. அவன் பெயரை யாரோ உச்சரித்த மாதிரி இருந்தது.

'அலெக்ஸ்..... அலெக்ஸாண்டர்...'

அவனுக்கு வியப்பாக இருந்தது. இந்த நாட்டில் தன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறார்களே, யாராக இருக்கும்? இந்தநாட்டில் அவன் பெயர் யாருக்குமே தெரியாது. அவன் எகிப்துக்கு வரக் காரணமான கலை ஏஜெண்ட் ஹாமில்டன் இவனுக்கு ஒரு சங்கேதப் பெயர் கொடுத்திருந்தான். அதன்படி இவன் பெயர் சிக்கந்தர். இது அலெக்ஸாண்டரின் இன்னொரு பெயர். அதே போல ஹாமில்டனும் இதர உறுப்பினர்களும் வெவ்வேறு பெயர் வைத்துக் கொண்டிருந்தனர். அப்படியிருக்க, இவனது இயற்பெயரில் யாரோ கூப்பிடுகிறார்கள்.

'அலெக்ஸ்.... ஏய் அலெக்ஸ்.... உன்னைத்தான்...'

மீண்டும் கேட்டது. இந்தத் தடவை குரலில் அழுத்தம் கூடியிருந்தது.

அலெக்ஸ் சுற்றுமுற்றும் பார்த்தான் சற்றுத் தொலைவில் ஒரு வெள்ளைக்காரி ஒட்டகத்தின் மேல் உட்கார்ந்து ஆடியபடி போய்க் கொண்டிருந்தாள். இந்தப்பக்கம் ஒரு நீக்ரோ மட்டக் குதிரை ஒன்றில் உட்கார்ந்து கொண்டு கீஸா பெரிய பிரமிடைச் சுற்றிப்பார்த்தபடி வலம் வந்து கொண்டிருந்தான். கெய்ரோவாசிகள் போலத் தோற்றமளித்த இளங்காதல் ஜோடி ஒன்று ஒற்றைக் கழுதையின் மேல் சவாரி செய்தபடி அடிவானச் சூரியனை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். நிச்சயம் இவர்களில் யாரும் இவனை அழைத்திருக்க நியாயம் இல்லை. ஆங்காங்கே பல வெளிநாட்டு 'டூரிஸ்ட்'கள் கையில் காமிராவுடன் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்கள். எல்லோருமே அவரவர் போக்கில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். இவனை யாருமே பொருட்படுத்திய மாதிரி தெரியவில்லை.

திரும்பவும், 'அலெக்ஸ்.... அலெக்ஸ்...'

ஸ்பிங்க்ஸூம் பிரமிடுகளும் ஏகப்பட்ட புதிர்களைத் தங்கள் வசம் புதைத்து வைத்திருக்கின்றன என்று அவன் படித்திருக்கிறான். இதுவும் அப்படிப்பட்ட புதிர்களில் ஒன்றா? கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்டது போன்ற உலோகத்தனமான இந்தக் குரல் எங்கிருந்து வருகிறது?

'இங்கே பார் அலெக்ஸ்... நான்தான்'

அந்த அமானுஷ்யக் குரல் மேலிருந்து வந்தது. அனிச்சையாகத் தலை உயர்த்தி அண்ணாந்து பார்த்தான்.

ஸ்பிங்க்ஸின் சிதிலமடைந்திருந்த முகம் இப்போது வழுவழுப்பாக மாறியிருந்தது. பிடரி மயிர் காற்றில் பறந்தது.

உலகிலேயே உயரமான தோள்களும், அதற்கு மேல் தலையுமாக 'ஸ்பிங்க்ஸ்' இவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் பிரமாண்டமான உதடுகள் லேசாக அசைந்தன.

'நீ எதைத் தேடி வந்திருக்கிறாய்... யாத்ரீகனே ஊர் ஊராகச் சுற்றினாயே, நீ தேடியதைக் கண்டுபிடித்து விட்டாயா?'

அலெக்ஸ் அசைவற்று நின்றான். அவனால் எதையும் அனுமானிக்க முடியவில்லை. நம்ப முடியாதது நடந்து கொண்டிருக்கிறது... ஸ்பிங்க்ஸ் பேசுகிறது. கேலியில் அதன் உதடு கழித்துக் கொண்டது.

தன்னைச் சுற்றிலும் பார்த்தான். யாரும் இதைக் கவனிக்கவில்லை. கீஸா பிரமிடின் வாயிலில் கும்பல் கும்பலாக நின்று டூரிஸ்ட்கள் காமிராவில் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒட்டகத்தில் போன வெள்ளைக்காரி போனபடி இருந்தாள். கழுதையில் போன காதல் ஜோடியும் அப்படியே. அவர்களுக்கு அப்பால் தொலைவில் நைல் நதி சூரிய ஒளியில் மின்னும் வெள்ளிப் பாம்பென வளைந்து நெளிந்து போய்க் கொண்டிருந்தது.

'யாத்ரீகனே பதிலையே காணோம்? நீ தேடியதைக் கண்டுபிடித்து விட்டாயா?'

மீண்டும் அதே உலோகக் குரல். இந்தத் தடவை அது இவன் முதுகுத் தண்டை அசைத்தது.

.......................
ஒவ்வொரு காலத்திலும் மனிதனின் வாழ்நிலையை அரசியல்தானே தீர்மானிக்கிறது. அந்தந்தக் கால அரசியல் கருத்தியலை கலை இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன.ஒவ்வொரு இதிகாசமும் ஒவ்வொரு காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
திக்பிரமை பிடித்த மாதிரி நின்று கொண்டிருந்த அலெக்ஸிடம் ஸ்பிங்க்ஸ் கேலிப் புன்னகையுடன் கேட்டது.

'என்ன யோசிக்கிறாய்? இந்தப் பிரமிடுகளில் இப்போது நீ எடுத்துக் கொண்டு போவதற்கு ஒன்றும் இல்லை. கலீஃபாக்களும் சுல்தான்களும் இங்கிருந்த விலையுயர்ந்த பொருட்களையும், எழுதப்பட்ட பிரதிகளையும் அள்ளிக் கொண்டு போனார்கள். அப்புறம் வந்த மத்தியகாலக் கிறிஸ்தவர்கள் மிச்சமிருந்த மம்மிகளை வாரிக் கொண்டு போனார்கள். கடைசியாக விட்டுப் போயிருந்த கொஞ்ச நஞ்ச வஸ்துக்கள் பாரோவா டுடான்கமனின் கல்லறையில் மிஞ்சியிருந்தது. அதையும் ஹோவர்ட் கார்ட்டர் என்கிற பிரிட்டிஷ்காரன் சுருட்டிக் கொண்டு போனான். மியூசியத்துக்குக் கொஞ்சம் கொடுத்தான். அவனுக்குக் கொஞ்சம் எடுத்துக் கொண்டான். இப்போது உனக்கு வழங்குவதற்கு இங்கே வெறுமையைத் தவிர ஒன்றுமில்லை'

அலெக்ஸ் கண்ணைக் கட்டி விடப்பட்டது மாதிரி குழம்பி நின்றான்.

'என்ன குழம்புகிறாய்? இப்போது எகிப்திய நாகரீகம் என்பது ஒரு நீர்க்குமிழி. வெறும் வார்த்தைகளாக அதிருந்து அலைந்து கொண்டிருக்கிறது'

'ஏறக்குறைய எங்கள் நாகரீகமும் அதே மாதிரி ஆகிக் கொண்டிருக்கிறதோ என்று பயமாக இருக்கிறது'

'தமிழர் நாகரீகத்தைச் சொல்கிறாயா?'

'ஈழத் தமிழர் நாகரீகத்தைச் சொன்னேன். தீராத யுத்தமும், ஏராளமான புலம் பெயர்தலும் ஒரு இனத்தின் நாகரீகத்தை அழித்துவிடும் அல்லவா?'

'இது உண்மைதான். ஆனால் உன்னைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?'

'என்னைப் பற்றியா? என் கடந்த காலம் கசப்பால் தடவப்பட்டது. நிகழ்காலம் இருளால் பூசப்பட்டிருக்கிறது. எதிர்காலம் கும்மிருட்டாக இருக்கிறது. உன் பிரமிடை விடவும் என் வாழ்க்கை வெறுமையானது'

'உனக்கென்ன, நீதான் காலையில் மாண்ட்ரியலில் டிபன் சாப்பிடுகிறாய். பிற்பகல் லண்டனில் விழுங்குகிறாய். இரவு கெய்ரோவில் சாப்பிடுகிறாய், உனக்கென்ன கவலை?'

'உனக்கென்ன நீ இதுவும் சொல்வாய் இன்னமும் சொல்வாய்' என்று நினைத்துக் கொண்டான்.

ஒரு காலத்தில் ஸ்பிங்க்ஸ் பேசியிருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறான். பிரமிடுகளைக் காவல் காத்து வந்த ஸ்பிங்க்ஸ் ஒருகாலத்தில் அவ்வழியாகப் போகிறவர்களிடம் விடுகதைகள் போடுமாம். விடுகதைகளுக்கு சரியான பதிலை யார் சொல்கிறார்களோ அவர்களை மட்டுமே போக அனுமதிக்குமாம். சரியான பதில் சொல்ல முடியாதவர்கள் கல்லாக மாறி காலம் பூராவும் நிற்க வேண்டியதுதானாம்.

கிரேக்க மன்னன் ஈடிபஸிடம் ஸ்பிங்க்ஸ் கேட்ட கேள்வி புகழ்பெற்றதல்லவா?

'காலையில் நான்கு கால்கள்; பிற்பகலில் இரண்டு கால்கள்; மாலையில் மூன்று கால்கள் இப்படி நடக்கும் பிராணி எது?'

ஸ்பிங்க்ஸ் கேட்டதும் ஈடிபஸ் தாமதிக்காமல் பதில் சொன்னான்.

'மனிதன்தான் அந்தப் பிராணி. ஏனெனில், அவன்தான் காலையில் அதாவது குழந்தைப்பருவத்தில் நான்கு கால்களால் தவழ்கிறான். வாழ்க்கையின் பிற்பகலான வாலிபப் பருவத்தில் இரண்டு கால்களால் நடக்கிறான். முதுமையில் கைத்தடியை மூன்றாவது காலாகக் கொண்டு ஊன்றி நடக்கிறான்'

ஈடிபஸிடம் ஸ்பிங்க்ஸ் தோற்றுப்போனது.

'அலெக்ஸ்... நீ என்னை ஏதாவது கேள்வி கேட்கிறாயா?'

அவன் இதயம் அதிர்ந்தது.

'கேள்வியா?'

'பயப்படாதே. நான் உன்னைக் கேள்வி கேட்டால்தானே நீ பயப்பட வேண்டும். உன்னைத்தானே கேள்வி கேள் என்கிறேன். என்னிடம் வருபவர்களிடமெல்லாம் கேள்விகள் கேட்டு எனக்கு அலுத்து விட்டது. எனவே இந்த முறையை மாற்றிப் பார்க்கலாமா என்று தோன்றுகிறது. ஒரு மாறுதலுக்கு நீ என்னைக் கேள்வி கேளேன் நான் பதில் சொல்கிறேன்'

'சரி'

கேள்வி
கேட்பது சுலபம். பதில் சொவதுதானே சிரமம். இது பரவாயில்லை என்று தோன்றியது.

கொஞ்சநேரம் யோசித்தான். எதுவும் பிடிபடவில்லை. பின்பு ஏதோ தோன்றியவனாக, 'உன்னை பிரமிடுக்குத்தானே காவல் வைத்திருக்கிறார்கள், அப்படியிருந்தும் எப்படி பலபேர் பிரமிடுகளைக் கொள்ளையடிக்க அனுமதித்தாய்?'

ஏதோ குருட்டுத் தைரியத்தில் கேட்டு விட்டானே தவிர, அடுத்த கணமே திகில் அவன் மேல் ஆக்டோபஸ் போல் கவிந்தது.

அதிருஷ்டவசமாக ஸ்பிங்க்ஸ் கோபப்படவில்லை. தனது பிரம்மாண்டமான மண்டையை ஒருதரம் ஆட்டிக் கொண்டது. இவன் கேட்டதிலிருந்த நியாயம் அதற்குப் புரிந்திருக்கும் போல. ஆயிரக்கணக்கான வருஷங்களின் அனுபவத் தொகுப்பு அதன் மனசில் அடுக்குகளாய் உயர்ந்து அதன் விவேகத்தை விஸ்தரித்திருக்கக் கூடும்.

'உனக்கு முதலில் ஒரு விஷயம் தெரிய வேண்டும். நீ நினைப்பது போல நான் பிரமிடுகளுக்குக் காவலாளி அல்ல. ஒரு பார்வையாளன் மட்டுமே. நிறையப் பேர் உன்னை மாதிரி தப்பர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பிரமிடுகளைக் கட்டி ஐயாயிரம் வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதல்லவா? பிரமிடுகள் வருவதற்கு முன்பிருந்தே நான் இங்கேதான் உட்கார்ந்திருக்கிறேன். நான் தோன்றி ஐயாயிரம் ஆண்டுகள் கழித்துதான் பிரமிடுகளையே கட்டினார்கள்' என்று சொல்லிவிட்டுப் பெருமூச்சு விட்டது. சிறுபுயல் போன்ற அதன் மூச்சுக் காற்றில் மணல் பறந்தது.

'நீ சொல்வதை என்னால் நம்ப முடியவில்லையே'

'மனிதர்களான நீங்கள் எதைத் தான் நம்பியிருக்கிறீர்கள்? அதுசரி, நைல் நதியின் மேற்குக் கரையிலிருக்கும் லூஸார் நகரத்துக்குப் போயிருக்கிறாய் அல்லவா?'

'ஆமாம். போயிருக்கிறேன்'

'அது பழங்காலத்தில் தீப்ஸ் என்று அழைக்கப்பட்டது. நைல் நதியின் குறுக்கே அஸ்வான் அணை கட்டப்பட்ட பிறகு தீப்ஸிலிருந்த பழமையான கோயில்கள் எல்லாம் அணைக்கட்டு நீருக்குள் மூழ்கி விட்டன. எப்போதாவது நீர்மட்டம் குறையும்போது கோயிலின் கோபுரங்கள் - நீரில் மூழ்கும் கப்பலின் மேல்தளத்தைப் போல - முங்கித் தெரியும், அந்தக் கோயில்களில் ஒன்றுதான் முகமூடிக் கோயில்.'

'முகமூடிக் கோயில்?'

'ஆமாம். அதைக் கட்டியவர்கள்தான் என்னையும் உருவாக்கினார்கள்'

'எகிப்தியர்கள் தானே?'

'ஆதி எகிப்தியர்கள்'

'ஆதி எகிப்தியர்களா?'

'ஆமாம். ஆதி ஆப்பிரிக்கக் குடியினர். அப்புறம் வந்த யூப்ரடீஸ் டைக்ரீஸ் ஆற்று நாகரிகத்திலிருந்து புறப்பட்டு வந்த சுமேரியர்களின் ஒரு பிரிவினர், இங்கிருந்த ஆப்பிரிக்கப் பழங்குடியினரை அடிமைப்படுத்தினார்கள். ஆதி அமெரிக்கர்களை வெள்ளை அமெரிக்கர்கள் அடிமைப்படுத்திய மாதிரி. ஆதி இந்தியர்களை பிற்கால இந்தியர்கள் அடிமைப்படுத்திய மாதிரி. அந்த அடிமைகளை வைத்துதான் பிரமிடுகள் கட்டப்பட்டன.'

'சரி. அதிருக்கட்டும். முகமூடிக் கோயில் என்று என்னமோ சொன்னாயே'

'ஆமாம். அந்தக் கோயிலில் ஒரு முகமூடியை வைத்து மக்கள் வழிபட்டனர்.

'விசித்திரமாக இருக்கிறதே'

'ஆனாலும் உண்மை. ஏக காலத்தில் எல்லா மனிதர்களின் முகமாகவும் இருக்கக் கூடிய, ஒரே முகத்தைக் கொண்ட முகமூடி அது. விவேகியின் முகத்திலிருந்து முட்டாளின் முகம் வரை; கடவுளின் முகத்திலிருந்து சாத்தானின் முகம் வரை சகல முகங்களும் அந்த ஒரே முகத்தில் இருந்தன. நாம் எந்த முகத்தை மனதில் நினைத்துக் கொண்டு பார்த்தாலும் அந்த முகம் அதில் தெரியும். என் முகத்தை நீயும் உன் முகத்தை நானும் பார்க்கலாம்.'

'உபநிஷத்தில் வரும் 'தத்வமஸி' அதாவது 'நீயே அது' என்ற சிந்தனைக்கு வடிவம் கொடுத்த மாதிரி இருக்கிறதே'

'உண்மைதான். பாரேன். அத்தனை முகங்களும் தெரியக் கூடிய ஒரு ஒற்றை முகத்தைச் செதுக்கிய அந்தச் சிற்பி 'நீயே அது' என்பதற்கான அலிகரியாக அதைச் செய்திருக்கிறான். இதே மாதிரி உலகெங்கிலுமுள்ள கலை இலக்கியப் படைப்புகள் எல்லாமே அலிகரிகள்தான்.'

'அப்படியா சொல்கிறாய்?'

'ஆமாம். ஹோமரின் இலியாத், வால்மீகியின் ராமாயணம், பால்ஸாக்கின் யுஜனி கிராண்டட், சர்வாண்டிஸின் டான் க்விக்ஸாட் எல்லாமே அலிகரிகள்தான்.'

'அப்படி நினைத்துத்தான் அந்த ஆசிரியர்கள் எழுதினார்கள் என்கிறாயா?'

'அவர்கள் நினைத்தும் எழுதியிருக்கலாம். அல்லது தற்செயலாகவும் இது நிகழ்ந்திருக்கலாம். ஒவ்வொரு காலத்திலும் மனிதனின் வாழ்நிலையை அரசியல்தானே தீர்மானிக்கிறது. அந்தந்தக் கால அரசியல் கருத்தியலை கலை இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன.

'நீ சொல்வது சரிதான்'

'ஆமாம். கடந்த கால சமூகம் போர் வீரர்களை உருவாக்கியது. அதற்குத் தோதாக 'இலியாத்' போன்ற இதிகாசங்கள் தேவைப்பட்டன. யுத்தம் அரசியலாக இருந்தது. பின்பு வந்த யுகம் வியாபாரிகளை உருவாக்க ஆரம்பித்தபோது பால்ஸாக்கின் யுஜினி கிராண்டட் போன்ற இதிகாசங்கள் உற்பவித்தன. பொருளாதார வெற்றியே அரசியலாக ஆனது. இன்றைய நவீனயுகம் தன்னை அதிகவிலைக்கு விற்றுக் கொள்ளும் விலையுயர்ந்த நபர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதை இன்றைய இதிகாசங்கள் பேசக்கூடும். ஒவ்வொரு இதிகாசமும் ஒவ்வொரு காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்கிறது.

'காலங்கள் தோறும் இதிகாசங்கள் மாறி வருகின்றன என்கிறாய், இல்லையா?'

'அப்படிச் சொல்ல முடியாது. எல்லா இதிகாசங்களும் அப்படி இல்லை. எல்லாக் காலங்களுக்கும் பொதுவான அலிகரியுடன் கூட ஒரு இதிகாசம் இருக்கிறது. அது என்னவென்று உனக்குத் தெரியுமா?'

யோசித்தான் அலெக்ஸ்

'இராமாயணத்தைச் சொல்கிறாயா?'

'இல்லை'

'அப்படியானால்.....'

'மகாபாரதம்'

எம்.ஜி. சுரேஷ்

*****


(நன்றி: 'அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்', புதுப்புனல் பதிப்பகம், 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை - 600005)
Share: 
© Copyright 2020 Tamilonline