Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அஞ்சலி | நூல் அறிமுகம் | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
Tamil Unicode / English Search
சிறுகதை
மருமகள், மகன், நான்
இது இல்லேன்னா அது!
- டி. எஸ். பத்மநாபன்|மே 2010||(1 Comment)
Share:
வாசுவிடமிருந்து வந்த மின்னஞ்சலைப் படித்து அதிர்ந்து போனேன். 'அதிர்ந்து போனேன்' என்பது மிகவும் பலவீனமான வார்த்தை. உள்ளத்தின் உணர்ச்சிகளைக் கொட்டுவதற்கு இன்னும் அகராதியில் சரியான வார்த்தைகள் இல்லையே! எனக்கே இவ்வளவு அதிர்ச்சி என்றால் வாசுவுக்கு எப்படி இருந்திருக்கும்? நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எப்படித் தாங்கிக் கொண்டிருப்பான் இந்த வலியை? தோள் கொடுத்து ஆறுதல் சொல்லக்கூட என்னால் முடியவில்லையே! அது சரி, மொட்டைத்தாத்தன் குட்டையில் விழுந்தான் என்பது போல என்ன விஷயமென்று சொல்லாமல் என் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தால் எப்படி? விஷயத்திற்கு வருகிறேன். வாசுவின் மனைவி-என்னிடம் உடன் பிறந்த சகோதரியைப்போல் பழகிய தேவகி-ஒரு கார் விபத்தில் உயிரிழந்தாள் என்பதுதான் செய்தி. விபத்து நடந்து நாலு நாட்களுக்குமேல் ஆகிவிட்டது வாசு என் பால்ய, உயிர் நண்பன். பிறந்து வளர்ந்ததெல்லாம் மணக்கால் கிராமத்தில். ஒன்றாகவே படித்து, ஒன்றாகவே லூட்டி அடித்து, குளத்தில் நீச்சல் போட்டு அவ்வப்போது கட்டிப் புரண்டு சண்டையிட்டு வளர்ந்தவர்கள். பிறகு காலேஜிலும் நட்பு தொடர்ந்தது. மற்றவர்கள் பரிகாசம் செய்து பேசும் அளவிற்கு. கல்லூரிப் படிப்பு முடிந்ததும்தான் முதல்முதலாகப் பிரிந்தோம். வாசுவிற்கு சென்னயில் வேலை. நான் வேலைக்காக தில்லி சென்றேன். ஒரு பெரிய தனியார் கம்பெனியில் மார்கெட்டிங் பிரிவில்.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajanவாசு ஒருமுறை போன் செய்து சொன்னான் தனக்கு கல்யாணம் நிச்சயம் செய்யப்போகிறார்கள்-பெண்ணைப் பார்க்க நானும் வரவேண்டுமென்று. நானும் மறுக்க முடியாமல் சென்றேன். தேவகி-அதுதான் பெண்ணின் பெயர்-ரொம்ப அழகு என்று சொல்லமுடியாவிட்டாலும் களையாக இருந்தாள். எம்.ஏ.இலக்கியம் படித்திருந்தாள். பெண்மையின் இலக்கணம் தெரிந்திருந்தது. கலகலப்பாகப் பேசினாலும் ஒரு பணிவு இருந்தது. இவள் நிச்சயமாக வாசுவிற்கு ஏற்ற பெண் என்று மனதில் பதிந்து போயிற்று. வாசுவிற்கும் பெண்ணைப் பிடித்திருக்கவே கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

தேவகி வாசுவுக்கு எல்லாவிதத்திலும் ஏற்ற பெண். வாசுவின் மேல் காட்டிய அன்பு, வீட்டை அழகு படுத்தி வைத்திருந்த விதம், கலகலப்பான சுபாவமென்று தேவகி வந்தத்திற்குப் பிறகு வீடே சொர்க்கமாயிருந்தது.
எதிபார்த்தது போலவே தேவகி வாசுவுக்கு எல்லாவிதத்திலும் ஏற்ற பெண். வாசுவின் மேல் காட்டிய அன்பு, வீட்டை அழகு படுத்தி வைத்திருந்த விதம், கலகலப்பான சுபாவமென்று தேவகி வந்தத்திற்குப் பிறகு வீடே சொர்க்கமாயிருந்தது. வாசு போன் செய்யும்போதெல்லாம் 'என் தேவகி அப்படிச் செய்தாள், இதைச் செய்தாள்' என்று நொடிக்கு நூறுமுறை அவள் புராணம் பாடாமல் இருக்க மாட்டான். அவன் சொல்வது உண்மைதான் என்பது வாசுவின் திருமணத்திற்குப் பிறகு முதல் முதலாக அவன் வீட்டுக்குச் சென்றபோது தெரிந்தது. ஏதோ நெடுநாள் பழகியவள் போல ‘அண்ணா, அண்ணா' என்று ஆசையாகக் கூப்பிடுவாள். எனக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து சமையல் செய்வாள். அவள் கைமணமே அற்புதம். எனக்குச் சகோதரி இல்லாத குறையை அவள் நீக்கினாள் என்றே சொல்லலாம். அப்புறம் சென்னை செல்லும்போதெல்லாம் வாசு வீட்டிற்குச் செல்லாமல் வரமாட்டேன் அன்புத் தங்கையின் கட்டளை அது. அவன் இல்லாவிட்டால் கூட, தேவகி என்னை அவர்கள் வீட்டில்தான் தங்கவேண்டும் என்று வற்புறுத்துவாள்.

வாசு-தேவகி தம்பதியருக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு இப்போது மூன்று வயது. வேலை காரணமாக ஊர் சுற்றிக் கொண்டிருந்த நான் திருமணத்தைப் பற்றியே நினைத்துப் பார்க்கவில்லை. தேவகி மட்டும் "எப்போ அண்ணா கல்யாணம் செய்துக்கப் போறீங்க?" என்று விடாமல் கேட்டு அலுத்துப் போய்விட்டாள். அலுவலக நிமித்தமாக இரண்டு மாதம் ஹாங்காங் வந்திருக்கும் வேளையில்தான் தேவகியின் மரணம் பற்றிய இடிச்செய்தி வந்தது. உடனே பறந்து போக ஆசைதான். ஆனால் அசைய முடியாது. வாசுவுக்குப் போன் செய்தேன். வார்த்தைகளில் துயரம் பொங்கியது. வாசு உடைந்து போயிருந்தான். அவன் அழ, நான் கலங்க ஆறுதல் வார்த்தைகளுக்கே இடமில்லாமல் போயிற்று.
பல்லைக் கடித்துக்கொண்டு இரண்டு மாதங்களில் வேலையை முடித்துக் கொண்டு, தலைமை அலுவலகத்தில் ஒரு வாரம் விடுமுறை பெற்றுச் சென்னை பறந்தேன் 'வாசு எப்படிக் கலங்கியிருக்கிறானோ, தேவகி இல்லாத வீடு இருண்டிருக்குமே' என்ற எண்ணங்களுடன். வீட்டை அடைந்து வாசலைப் பார்த்தபோது வாசலில் கோலம் போட்டு அழகாக இருந்தது. எனக்கு வியப்பாக இருந்தது. 'யார் இப்படியெல்லாம் கோலம் போட்டு வீட்டை அழகாக வைத்திருகிறார்கள்?' என்று எண்ணியவாறே காலிங் பெல்லை அடித்தேன். வாசு வந்து கதவைத் திறந்தான், 'வாடா, வாடா' என்று உற்சாகமாக வரவேற்றான். நான் எதிர்பார்த்ததைப்போல சோகத்தின் சுவட்டையே காணோம். ஆச்சரியமாக இருந்தது. "என்ன அப்படிப் பார்க்கிறே, தேவகி இல்லாமல் வீடு எப்படி இவ்வளவு நீட்டா இருக்குன்னா? சஸ்பென்ஸ்! சொல்றேன். ரமா, இங்கே வா. யார் வந்திருக்கா பாரு" என்றான். உள்ளேயிருந்து இருபத்தெட்டு, முப்பது வயதிருக்கும் அந்தப் பெண் வெளியே வந்து, "வாங்க, வாங்க. நீங்க இன்னிக்கு வருவீங்கன்னு இவர் சொன்னார்" என்றாள்.

அவ்வளவு அன்னியோன்னியமாக ஒருத்தியுடன் குடும்பம் நடத்திவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு இவனால் எப்படிச் சந்தோஷமாயிருக்க முடிகிறது?
"என்ன இப்படி முழிக்கிறே. இவள் என் ஆபீசில் வேலை பார்க்கிற பெண். தேவகி போனதுக்கப்புறம் எப்படிப் பையன் ராமுவை வச்சுண்டு தனியா சமாளிக்கப் போறோம்ன்னு தடுமாறிட்டிருந்தபோதுதான், என்னை ஆபிசில் எல்லாரும், 'எத்தனை நாளைக்குத் தனியாக் குழந்தையை வச்சு கஷ்டப்படுவே, இன்னொரு கல்யானம் பண்ணிக்கோ' என்றார்கள் எனக்கும் கொஞச நாளுக்கப்புறம் அது சரின்னுதான் பட்டுது. அதான் இவளைக் கல்யாணம் செய்துண்டேன். உன்னிடம் சொல்லாமல் சஸ்பென்சா வச்சிருந்தேன்" என்றான்.

அடப்பாவி! அவ்வளவு அன்னியோன்னியமாக ஒருத்தியுடன் குடும்பம் நடத்திவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு இவனால் எப்படிச் சந்தோஷமாயிருக்க முடிகிறது? என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அன்பு, பாசம் எல்லாமே இவ்வளவுதானா? ஈருடல்,ஓருயிர் என்பது எல்லாம் வெறும் கதைகளில் மட்டும்தானா? நினைத்துப் பார்க்க முடியவில்லை. தேவகி இடத்தில் இன்னொருத்தியா? எப்படி மனசு வரும்? என் வாசுவா இப்படி?

"என்னடா யோசனையிலிருக்கே?" என்று என்னை இந்த உலகுக்குக் கொண்டு வந்தான் வாசு. அப்போது மூன்று வயது ராமு, "அப்பா நீ வாங்கிக் கொடுத்த கார் பொம்மை உடஞ்சுடுத்து" என்று அழுதவாறே வந்தான். "கவலைப்படாதேடா, இந்த பொம்மை உடைஞ்சாலென்ன? புதுசா ஒண்ணு வாங்கிண்டாப் போறது. இதில்லன்னா அது" என்றான் வாசு.

இது இல்லைன்னா அது! ஒருவேளை வாழ்க்கையின் தத்துவமும் அதுதானோ? எனக்குப் புரியவில்லை!

டி.எஸ். பத்மநாபன்,
கலி.
More

மருமகள், மகன், நான்
Share: