Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2006 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | பயணம் | புதுமைத்தொடர் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
மெய்ந்கர் மாயத்தின் மர்மம்
- கதிரவன் எழில்மன்னன்|ஏப்ரல் 2006|
Share:
Click Here EnlargeSilicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யாவின் துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண் வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவழிக்கிறான். ஷாலினி ஸ்டான்·போர்டு மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிகிறாள். சூர்யாவை மானசீகமாகக் காதலிக்கிறாள். அவரோ தன் கடந்த கால சோகத்தில் மூழ்கியிருக்கிறார். அதை மறந்து தன்னை வெளிப்படையாக நெருங்கட்டும் என்று காத்திருக்கிறாள் ஷாலினி. மூவரும் துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர். இந்த வரிசையில் இதோ ஒரு புதிய புதினம்...

சூர்யா தன் அலுவலக அறையில் மின் வலையை மேய்ந்து கொண்டிருந்தார். அடுத்திருந்த கூடத்தில் கிரண் ஆடும் இருக்கையில் குறுக்காக மடிந்து சாய்ந்து கொண்டு தொலைக்காட்சியின் ஒவ்வொரு சேனலாக ரிமோட்டைச் சில நொடிகளுக் கொரு முறை க்ளிக் செய்து மாற்றிக் கொண்டே இருந்தான்.

அதே கூடத்தில் இன்னொரு இருக்கையில் ஷாலினி அமர்ந்து ஒரு மருத்துவ பத்திரிகை யைப் படித்துக் கொண்டிருந்தாள். சூர்யாவுக் காக தன் தாய் அன்புடன் செய்து தந்திருந்த தின்பண்டங்களை கொடுத்து விட்டுப் போகும் சாக்கில் வந்தவள், சூர்யாவின் கூர்ந்த கவனத்தைக் கலைக்க வேண்டாம், அவராக வரும் வரை காத்திருக்கலாம் என்ற எண்ணத்துடன் கிரணுடன் போய் அமர்ந்து கொண்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கிரணின் க்ளிக் மழை அவள் கவனத்தைக் கலைக்கவே அவனைக் கடிந்து கொண்டாள்.

"ஏய், கிரண்! ஒரு சேனலை ஒரு ரெண்டு நிமிஷமாவது பாரேன். இப்படி ரெண்டு ஸெகண்டுக்கு ஒரு தடவை மாத்திக்கிட்டே இருந்தேன்னா உன்னோட விரல்கள் உன்னோட ஆருயிர் க்ராக்பெர்ரியை பயன் படுத்த முடியாம தேய்ஞ்சு போயிடும். அப்புறம் உன் நூத்துக் கணக்கான கேர்ள் ·ப்ரெண்ட்ஸோட கொஞ்சல் ஈமெயில் பாக்காம தவிச்சுப் போயிடப் போறே."

கிரண் பழித்துக் காட்டினான். "அடடா, என்ன அக்கறை! போதும்மா. ரொம்ப ஒண்ணும் கவலைப் பட்டுக்காதே! நான் சேனல் மாத்தறது உனக்குக் கஷ்டமா இருந்தா போயி சூர்யாவோட உக்காந்துக் கறதுதானே? ஆசாமி சத்தமேயில்லாம மணிக்கணக்குல உக்காந்துக்கிட்டிருக்கார்."

அந்த இருவரின் செல்லச் சண்டை சூர்யாவை ஈர்க்கவே அவர் அலுவலகத் திலிருந்து கூடத்துக்கு வந்தார். ஷாலினி கிரணை கோபித்துக் கொள்ள ஆரம்பித் தாள். "பாத்தியா கிரண், உன் சத்தம் சூர்யாவின் கவனத்தைக் கலைச்சிடுச்சு..."

சூர்யா கையை உயர்த்திக் காட்டி அவளைத் தடுத்தார். "சே, சே, அப்படி யெல்லாம் ஒண்ணுமில்லே ஷாலினி. சும்மாத்தான் மின்வலையை மேய்ஞ்சுக் கிட்டிருந்தேன். நீ எப்போ வந்தே? எனக்குத் தெரியவே இல்லையே!"

ஷாலினி தன் தாய் கொடுத்த முறுக்குகளை நீட்டினாள். "கொஞ்ச நேரந்தான் ஆச்சு. அம்மா உங்களுக்காக ஆசையா அனுப்பி யிருக்கா. குடுத்துட்டுப் போகலாம்னுதான் காத்துக்கிட்டிருந்தேன். இந்தாங்க."

சூர்யா ஆவலுடன் ஒரு முறுக்கை எடுத்து சுவைத்தார். "ஆஹா! அற்புதமான மயிலாப்பூர் முறுக்கு. பிரமாதம். உங்க அம்மாவுக்கு என் மகத்தான பாராட்டையும், நன்றியையும் சொல்லு. அடுத்து தேங் குழலுக்குக் காத்துக்கிட்டிருக்கேன்னும் மனு போடு!" என்றார்.

கிரண், "போதும் ஸார். ரொம்ப ஐஸ் வைக்காதீங்க. எங்க அம்மா இப்பவே சூர்யா ஜபந்தான் பண்ணிக்கிட்டிருக்கா" என்றான்.

ஷாலினி உள்ளுக்குள் பூரித்துப் போனாள். தன் தாயுடன் தானும் சேர்ந்து செய்த தின்பண்டங்களைச் சூர்யா விரும்பி சுவைப்பது அவளை உவகையின் உச்சிக் குக் கொண்டு சேர்த்தது. ஆனாலும் தம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டாம் என்று மௌனமானாள்.

சூர்யாவின் கவனம் கிரணின் மேல் திரும்பியது. "ஆமாம், கிரண் நீ ஏன் டி.வி. ரிமோட்டைப் போட்டுத் தேச்சிக் கிட்டிருக்கே? வழக்கமா எதாவது ஒரு வீடியோ விளையாட்டில மூக்கைப் பதிச்சிக்கிட்டு தட்டிக்கிட்டே இருப்பயே."

கிரண் ஒரு நீண்ட பெருமூச்செறிந்தான். "என் லெவல்ல இருக்கற எல்லா வீடியோ விளையாட்டும் ஆடிப் பாத்தாச்சு. இப்ப போரடிச்சும் போயாச்சு."

ஷாலினி ஆச்சர்யத்துடன் வினாவினாள். "என்ன? இப்ப புதுசா வந்திருக்கற மைக்ரோஸா·ப்ட் XBox-360 என்ன ஆச்சு. அதையுமா விளையாடித் தீத்த்தாச்சு!"

கிரண் மீண்டும் பெருமூச்செறிந்தான். "அது வெளி மார்க்கெட்ல வரத்துக்கு முந்தியே என் நண்பன் ஒருத்தன் பேட்டா வாங்கிக் குடுத்துட்டான். அக்கு வேறு, ஆணி வேறா அலசித் தீத்தாச்சு. நீங்க கேக்கறத்துக்கு முந்தியே சொல்லிடறேன். நின்டெண்டோவும் ஸோனியும் அமெரிக்கவுல வெளியிடாம ஜப்பான்ல மட்டும் வெளி யிட்டிருக்கற வீடியோ கான்ஸோல்களையும் அதுக்கான விளையாட்டுக்களையும் கூட முடிச்சாச்சு. ஓ! ஆமாம், PC-க்காக வந்திருக்கற பலபேர் சேர்ந்து மின்வலையில விளையாடற புதுப்புது விளையாட்டுக் களையும் தீத்தாச்சு. இப்பப் புதுசா ஒண்ணும் இல்லைன்னா என் தலையே வெடிச்சுடும்!"

இதைக் கேட்ட சூர்யா முறுவலுடன் ஒரு வெடியை எடுத்து வீசினார்! "அப்போ எல்லாமே விளையாடியாச்சா? இப்ப புதுசா வந்திருக்கற ஸென்ஸரி ஸ்டிமுலேட்டட் 3D விர்ச்சுவல் ரியாலிடி கேம் கூடவா?"

"அது கூடத்தான்..." என்று ஆரம்பித்த கிரண், சூர்யாவின் வார்த்தைகள் உறைக்கவே திடீரெனெ நிறுத்திவிட்டு வாய் பிளந்து கொண்டு திக்கித் தடுமாற "3D... விர்ச்சுவல் ரியாலிடி... கேமா! எங்கே? ஏது? எனக்குத் தெரியவே தெரியாதே? எனக்குத் தெரியாம உங்களுக்கு எப்படித் தெரிய முடியும்?" என்றான்.

ஷாலினியை சூர்யா கூறியதில் வேறு வார்த்தைகள் ஈர்த்தன. "ஸென்ஸரி ஸ்டிமுலேஷனா! அப்படி என்ன செய்யறாங்க? புதுசா இருக்கே" என்றாள்.

சூர்யா பலமாகச் சிரித்தார். "எனக்கு அப்பவே தெரியும். அதுல உங்க ரெண்டு பேருக்கும் வெவ்வேற விதத்துல ஆர்வம் இருக்கும்னு. கவலைப்படாதே கிரண். உனக்குத் தெரியாம ஒரு விடியோ கேமும் வெளியிட்டுட முடியாதுன்னு. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் ஒரு ஆரம்ப நிலை நிறுவனம் வச்சிருக்கார். அந்த நிறுவனம் என்ன செய்யுதுங்கறதைப் பத்தி ஒரே யூகம்" என்றார்.

"3D விர்ச்சுவல் ரியாலிடி வீடியோ கேம்!" என்று கத்தினான் கிரண்.

"ஸென்ஸரி ஸ்டிமுலேஷனோட!" என்று மென்மையான இனிய குரலில் கூவினாள் ஷாலினி.

"உங்களுக்கு அனுப்பியிருக்காங்களா? எங்கே, காமியுங்க" என்று துடித்தான் கிரண்.

சூர்யா மீண்டும் சிரித்தார். "இல்லை கிரண். இப்பத்தான் உருவாக்கிக் கிட்டிருக்காங்க. ஓரளவுக்கு வந்திருக்கு, ஆனா இன்னும் வெளியிடற நிலைக்கு வரலை. ஆனா அவங்க எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்காங்க. அதைப் பத்தித்தான் சொன்னேன்."

கிரண் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான். "அப்பாடா! பயந்தே போயிட்டேன், என்னடா நாமதான் சொங்கியாயிட்ட மோன்னு! எப்ப என் கைக்கு கிடைக்கும் அது? கேட்டு பேட்டாவா வாங்கித் தாங்களேன்" என்று கெஞ்சினான்.

சூர்யா முறுவலுடன், "உங்க ரெண்டு பேருக்கும் டைம் இருந்தா இன்னிக்கே கூட அங்க போய்ப் பார்க்கலாம்!" என்றார்.

கிரண் அறையின் கூரையை இடித்து விடுவது போல துள்ளிக் குதித்தான்! "வாவ்! இன்னிக்கே என்ன, இப்பவே போகலாம் வாங்க" என்று அவசரப்படுத்தினான்.

ஷாலினி சந்தேகத்துடன், "அங்க போய் பாக்கலாமா? அவங்க மின்னஞ்சல் அனுப்பி யிருக்காங்கன்னு வேற சொல்றீங்க... அப்படீன்னா அங்க எதாவது எதோ கசமுசாவா? வழக்கமா இப்படி எதாவது சொன்னீங்கன்னா அப்படித்தானே இருக்கும்" என்றாள்.

சூர்யா கையைத் தட்டிப் பாராட்டினார்! "ரொம்ப சரி ஷாலினி. அப்படியேதான். நிறுவனத்தை வச்சிருக்கறவர் சிறுவயதில என்கூடப் படிச்சவர். அதுக்கப்புறம் பழக்கம் விட்டுப் போச்சு. ஷாலினி சொன்னபடி அவர் நிறுவனத்துல எதோ பிரச்சனை ஏற்பட்டிருக்காம். நாம அந்த ஹோலக்ரா·பி மெமரி நிறுவனத்துல செஞ்சது பத்திக் கேள்விப்பட்டு இப்ப எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கார். ஆனா இப்ப நமக்கு ரொம்ப பிஸியா இருக்கே அதான் வேற யாருக்காவது சொல்லிடலாமான்னு யோசிக்கிறேன்" என்றார்.

கிரண் வெடித்தே விடுவது போல் கொதித்தெழுந்தான். "வேற... யாருக்காவதா? அய்யோ எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலையே! இதை மட்டும் நீங்க விட்டீங்கன்னா நான் என் கையாலயே உங்க... ஹ¥ம்! எதையாவது அடிச்சு... கிர்ர்ர்ர்" என்று பொறுமினான்.

"ஏய் கிரண், யார் கிட்ட என்ன சொல்றே!" என்று கொதித்த ஷாலினியைச் சூர்யாவின் பலத்த சிரிப்பு இடைமறித்து நிறுத்தியது.

சூர்யா கிரண் முதுகில் பலத்த ஷொட்டு ஒன்றை விட்டார். "எனக்குத் தெரியாதா கிரண். சும்மா உன்னைச் சீண்டினேன் அவ்வளவுதான். நாம்ப நிச்சயமா வரோம்னு அப்பவே நான் பதில் அனுப்பியாச்சு. அந்த விஷயமாத்தான் மின்வலையில கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சுகிட்டிருந்தேன்" என்றார்.

கிரண் சங்கடத்துடன் நெளிந்து கொண்டே இளித்தான். "ஹீ...ஹீ... ஸாரி! ரொம்ப நல்லாவே என் காலை வாரிட்டீங்க! நான் அந்தக் கெட்ட பழக்கத்தை உங்களுக்குக் கத்துக் கொடுத்துட்டேன் போலிருக்கு. குருவை மிஞ்சின சிஷ்யனாயிட்டீங்க. அந்த அபிஷேக் பச்சனோட ப்ள·ப் மாஸ்டர் படம் வேற போட்டுக் காட்டிட்டேனே, அதான் போலிருக்கு!" என்றான்.

"சரி கிளம்புவோமா கிரண்?" என்றபடி நகர ஆரம்பித்த சூர்யா நின்று ஷாலினியை நோக்கினார். "ஓ, ஷாலினி, உனக்குக் கூட இதுல ஆர்வம் இருக்கு போலிருக்கே? நீயும் வரயா? அந்த உணர்வுத் தூண்டல் (sensory stimulation) விஷயமா எதாவது பிரச்சனை இருந்தா உன்னோட உதவி தேவையா இருக்கும்னு நினைக்கிறேன்" என்றார்.
சூர்யா தன் நினைப்புடன், தன் உதவியை யும் நாடுவதால் கிளுகிளுப்படைந்த ஷாலினி, "இந்த வாய்ப்பை விட்டுடுவேனா என்ன? நிச்சயமா வரேன். இப்போதைக்குத் தலை போறா மாதிரி வேலை ஒண்ணு மில்லை. அப்படி வந்தா இருக்கவே இருக்கே என் இந்த மின்கயிறு? இழுத்துடுவாங்க" என்று தன் செல்பேசியை எடுத்துக் காட்டினாள்.

கிரண் "வாய்ப்பு என்னத்துக்கு? ஸென்ஸரி பத்திப் பாக்கவா? சூர்யாவோட சுத்தவா?" என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டான்.

ஷாலினி "ஓ! மறந்தே போயிட்டேனே. இப்ப உங்க ரெண்டு பேருக்கும் வெளியில ஒரு சர்ப்ரைஸ் காத்துக்கிட்டிருக்கு" என்றாள்.

கிரண், "என்ன, என்ன? சொல்லு" என்று அவசரப்பட்டான்.

ஷாலினி புன்னைகயுடன் தன் அழகிய கூந்தல் முகத்தின் மேல் விழுந்து விளையாடும்படி தலையசைத்து மறுத்து விட்டு, பவ்யமாக குனிந்து வெளியே வருமாறு வாசல் கதவைக் காட்டினாள்.

கிரண் ஓடினான். சூர்யாவும் ஷாலினியும் சற்றெ மெதுவாகப் பின்தொடர்ந்தனர். அவர்கள் வெளியே வந்து சேரும் முன், கிரண் பரபரப்புடன் கூவினான். "ஏய் ஷாலினி! வெளுத்துக் கட்டிட்டே போ. பிரமாதம்!"

சூர்யா வந்து பார்க்கும் போது கிரணைக் காணவில்லை. ஆனால் வெளியில் பள பளவெனப் புதுப் பொலிவுடன் நின்று கொண்டிருந்த லெக்ஸஸ் 400H வண்டி அவர் கண்ணைப் பறித்தது. ஷாலினி தன் கையிலிருந்த மின்சாவியின் பட்டனை அழுத்தினாள். பீப் என்ற கீச்சலுடன் வண்டி கதவின் பூட்டு திறந்துகொண்டது.

"ஓவ்! என் காது!" என்ற கத்தலுடன் காதைக் குடைந்து கொண்டே வண்டியின் அடியிலிருந்து கிரண் வெளியில் சறுக்கிக் கொண்டு வெளியில் வந்தான்.

"ஏய் கிரண் அங்க வண்டிக்குக் கீழே என்ன செஞ்சுக்கிட்டிருக்கே?" என்றாள் ஷாலினி.

"இது ஒரு பிரமாதமான வண்டி. வெளியில பாக்கறதை விட அடியில பாக்கறத்துக்கு இன்னும் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு" என்றான் கிரண்.

ஷாலினி முகத்தை சுளித்தாள். "வண்டிக்கு அடியிலயா? அப்படி என்ன இருக்கு? எல்லா வண்டி மாதிரிதானே.

எஞ்ஜின்தான் கேஸ்-எலக்ட்ரிக் ரெண்டும் சேத்த ஹைப்ரிட்..." என்று சொல்லிக் கொண்டிருந்தவளை இடை மறித்துத் தடுத்தான் கிரண்.

"போதும்மா, உன் கார் அறிவை என் கிட்டக் காட்டாதே. எஞ்ஜினை விட ரொம்ப சுவாரஸ்யமான விஷயமெல்லாம் இருக்கு இதுல. இது எல்லா சக்கரமும் தனித் தனியா ஓடறமாதிரியான 'ஆல் வீல் டிரைவ்' வண்டி. நீ சொல்றா மாதிரி ஹைப்ரிட் தான். ஆனா அதுலயும் விசேஷமிருக்கு. முன் சக்கர ஜோடி, பின் சக்கர ஜோடி ரெண்டுத்துக்கும் தனித்தனியான மின்சார மோட்டர் இருக்கு தெரியுமா? எதுக்கு எப்ப சக்தி வேணுமோ தனியா கொடுக்கும். பவரும் ரொம்ப ஜாஸ்தி. மொத்தம் சேத்தா இதுக்குள்ள 250 குதிரைகள் ஓடுதுன்னு கேள்விப்பட்டிருக் கேன். சாவியை இங்க குடு, போகலாம்" என்று பிடுங்காத குறையாக ஷாலினியிட மிருந்து பிடுங்கிக் கொண்டு ஓட்டுனர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு திருப்பினான். ஒன்றும் ஆகவில்லை!

என்ஜின் ஓடும் ஒலி ஒன்றும் கேட்காததால் கிரண் குழம்பினான். ஸ்டீயரிங் சக்கரத்தை சுற்றி அங்கும் இங்கும் தேடிக் கொண்டிருந்தான்.

அதற்குள் பின்னிருக்கையில் ஏறிக் கொண்ட ஷாலினி, கிரணின் சங்கடத்தைக் கண்டு கலகலவென பீங்கான் தட்டின் மேல் மணிகளைக் கொட்டியது போல் இனிமையாகச் சிரித்தாள். "ஆஹா, கார்களைப் பத்திச் சகலமும் தெரிஞ்ச அறிவு சிகாமணியே, இது ஆரம்பத்துல மின்சார மோட்டர்ல ஓடுது. அதுனால பழைய கார்கள் மாதிரி சத்தம் வரதில்லை. அங்க பாரு 'ரெடி'ன்னு ஒளிருது. அவ்வளவுதான். பெடலை அழுத்தினா கிளம்பிடும்" என்றாள்.

"எதுக்கு அதெல்லாம் மாத்தணுமாம்? வேற வேலை கிடையாது அந்தப் பசங்களுக்கு!" என்று முணுமுணுத்துக் கொண்டு, சூர்யா பக்கத்தில் அமர்ந்தவுடன் காரைக் கிளப் பினான். ஆனால் கார் டிங், டிங்கென்று விடாமல் மணி அடிக்கவே, ஷாலினியிடம் "இப்ப என்ன?" என்று கேட்கவே அவள் கிரண் பாதுகாப்புப் பட்டையை மாட்டிக் கொள்ளாததைச் சுட்டிக் காட்டினாள். "யா, யா!" என்று முணுமுணுத்துக் கொண்டே அதை மாட்டிக் கொண்டு, "டிங்" சத்தம் நின்றதும் காரின் ஜி.பி.எஸ் வரைபடக் கருவியில் போகும் இடத்துக்கு வழிகாட்ட முகவரியைப் போடப் போனான். ஆனால் அதன் மின்திரையில், எல்லா பட்டன்களும் அழுத்த முடியாதபடி அழித்த படி இருந்தது.

"ஓ! நோ! இப்ப என்ன வந்தது இதுக்கு?!" என்று கத்தினான்.

ஷாலினி மீண்டும் சிரித்து விட்டு, "எல்லாம் உன்னை மாதிரி ஆளுங்களைக் காப்பாத் தறத்துக்குத் தான் கிரண். வண்டியை நிறுத்தினாத்தான் முகவரி போட முடியும். இல்லாட்டா அதை செஞ்சிக்கிட்டே எங்கயாவது போய் இடிச்சுடுவே" என்றாள்.

கிரண், "சே! இந்த வண்டி எங்க ஸ்கூல் ப்ரின்ஸிபாலை விடச் சரியான சர்வாதி காரியா இருக்கும் போலிருக்கே!" என்று திட்டிவிட்டு, வண்டியை நிறுத்தி முகவரி யைப் போட்டுவிட்டுக் காழ்ப்புடன் வண்டி யின் உந்து பெடலை பலமாக ஒரு அழுத்து அழுத்தினான். வண்டி தடாலென குதித்துப் பறந்தது.

பின்னோக்கி பலமாகத் தள்ளப்பட்ட ஷாலினி, இருக்கை மேல் இடிபட்ட பின்மண்டையைத் தடவி விட்டுக் கொண்டே, கிரணைக் கடிந்து கொண்டாள். "கிரண், இது உன் போர்ஷா டர்போ இல்லை. கொஞ்சம் மென்மை காட்டு.

இப்படி ஓட்டினேன்னா அதோட ஹைப்ரிட் தொழில்நுட்பத்துக்குப் பலனே இல்லை. அங்க பாரு. ஓடறத்துகு சக்தி எங்கேந்து வருதுன்னு திரையிலயே காட்டுது. அதுல நீ ஒட்டற படி ஓட்டினா சாதாரண கேஸலீன் என்ஜின் மட்டுந்தான் சக்தி கொடுக்குது. ரொம்ப கேஸ் செலவாயிடும். பேட்டரியால மட்டும், அது இல்லன்னா குறைந்த பட்சம் அதோட கேஸ் சேத்து சக்தி குடுத்து கேஸ் மைலேஜ் அதிகமாக்கணும்னா கொஞ்சம் நிதானமாத்தான் எடுக்கணும்.

மைலேஜை அதிகப்படுத்தி, ·பாஸில் எண்ணை மேல அமெரிக்காவுக்கு இருக்கற சார்பைக் குறைக்கத்தான் நான் அதிக விலையானாலும் பரவாயில்லைன்னு ஹைப்ரிட் வாங்கியிருக்கேன்! நீ என்னன்னா..."

கிரண், "போதும்மா லெக்சர்! சே! இதோட சக்தியை இப்படி வீணாக்கறயே? பறக்க வேணாம்! எல்லாம் கிழங்கள்" என்று அலட்சியமாகக் கூறினான். ஆனாலும் அவன் தான் சொல்வதிலிருந்த உண்மையை உணர்ந்து கொண்டு, அசடு வழியும் புன்னகையுடன் வேகத்தைக் குறைத்து மின்மோட்டருடன் ஓடும்படி செய்ததைக் கவனித்து விட்ட ஷாலினி செல்லமாக அவன் தலையில் தட்டினாள்.

சிறிது நேரத்தில் அவர்கள் சூர்யாவின் நண்பர் நாகநாதனின் ஆராய்ச்சி அலுவலகத்துக்குச் சென்று சேர்ந்தனர். கட்டிடத்தின் வெளியில் மூன்று பரிமாணங் களில், ஒன்றிணைந்த மூன்று வெவ்வேறு வண்ணக் கோளங்கள் சுற்றிக்கொண்டிருந்த படி அமைந்த அறிவிப்புக் குறி "Nathan VR" என்று பளீரிட்டுக் கொண்டிருந்தது.

கிரண் அதைக் கண்டு மிகுந்த பரபரப்புடன் துள்ளினான். "ஓ! நேதன் வீ.ஆர். ஆ?! அதை முன்னாடியே சொல்ல வேண்டியதுதானே?! இவங்களைப் பத்தி நான் ரொம்பவே கேள்விப்பட்டிருக்கேன். வெறும் PC விளையாட்டுகளுக்கே இவங்க ரொம்ப நல்ல 3D வரா மாதிரி செஞ்சிருக்காங்க. இவங்க நீங்க சொல்ற மாதிரி ஸென்ஸரி 3D விஆர் விளையாட்டு உருவாக்கறாங்கன்னா பிரமாதமாத்தான் இருக்கும். பாருங்க இதைப்பத்தி நான் என்னோட விளையாட்டுக் குழுவிடம் எப்படிப் பீத்திக்கிறேன்னு. உங்களுக்கு அவர் நல்லாத் தெரியும்னு இப்பதான் எனக்கு தெரியுது."

சூர்யா கையைத் தூக்கி வேண்டாம் என்று அசைத்துக் காட்டினார். "கிரண், ஸாரி, நீ அந்த மாதிரி செய்ய முடியாது. இவங்க என்ன செய்யறாங்க, நாம இதுல சம்பந்தப் பட்டிருக்கோம் இதெல்லாம் யாருக்கும் தெரியக் கூடாதுன்னு நாகநாதன் ரொம்ப வலுவாச் சொல்லியிருக்கார். ஊம்... பை த வே, நேதன்னு சொன்னயே, அது அவர் பேர் நாதன்-லேந்துதான் வந்திருக்கு. மேலும் அவரை எனக்கு ரொம்ப நல்லாத் தெரியாது. ரெண்டு பேரும் சின்ன வயசுல ரெண்டு மூணு வருஷம் ஒண்ணாப் படிச்சோம் அவ்வளவுதான். அப்பகூட ரொம்ப நெருக்கம்னு சொல்றத்துக்கில்லை."

கிரண் உதட்டைப் பிதுக்கித் தன் ஏமாற்றத்தைக் காட்டினான். "சே! இன்னிக்கு எல்லாமே அடிமேல அடியா இருக்கு. முதல்ல காரை ஜிவ்வுன்னு விட்டா ஷாலினி வேண்டாம்னுட்டா. இப்ப என்னடான்னா, என் வட்டத்துல ராஜா மாதிரி பவனிவர்ற வாய்ப்பை நீங்க பிடுங்கிட்டீங்க. எல்லாம் கிழட்டு சர்வாதி காரி ராஜ்யமாப் போச்சுப்பா. ஹ¥ம்..." என்று போலியாகப் பெருமூச்செறிந்தான்.

ஷாலினி அவனைக் கிண்டல் செய்தாள். "கவலைப் படாதே கிரண். எங்களை மாதிரி கிழடுங்க கூட பழகினாக் கூட உன் கேர்ள் ·ப்ரெண்ட்ஸ் உன் மேல இன்னும் மதிப்பு வச்சிருப்பாங்க. அறிவு வயசுப்படி பாத்தா உனக்கு வயசு அஞ்சுதான். உன்னை அம்மா மாதிரி கொஞ்சி அடக்கி வச்சுக் கலாம்னு அவங்களுக்கு நல்லாத் தெரியும்!"

அவர்கள் வண்டியிலிருந்து இறங்கி ஒரு நொடி கூட இருந்திருக்காது. கட்டிடத்தின் பெரும் கதவு படாலெனத் திறக்க, ஆஜானுபாகுவான ஒரு மனிதர் அவர் இருந்த உயரத்துக்கும் பருமனுக்கும் சிறிதும் பொருந்தாத அளவு வேகத்துடன் ஓட்ட நடையுடன் வந்து, சூர்யாவை இறுக்கக் கட்டிக் கொண்டுவிட்டு அவர் முதுகில் படாரென ஒரு ஷொட்டுவிட்டார். தான் தினமும் செய்யும் உடற்பயிற்சியால் இரண்டையும் தாங்கிக் கொண்ட சூர்யா முதுகைத் தடவி விட்டுக் கொண்டு "ஹலோ, மிஸ்டர் நாகநாதன் எப்படி இருக்கீங்க?" என்று குசலம் விசாரித்தார்.

நாகநாதனோ, "டேய் சூரி! என்னடா என்னமோ மிஸ்டர் கிஸ்டர் எல்லாம் போட்டு ரொம்ப ·பார்மலா பேசறே? நாம சின்ன வயசில நாகப்பழத்தைக் காக்கா கடி கடிச்சிகிட்டு டென்ட்டு கொட்டாயில மணல் குவிச்சு உக்காந்து எம்.ஜி.ஆர் படத்துக்கு விசில் அடிச்சதை எல்லாம் மறந்துட்டயாடா? என்னை நாகு இல்லைன்னா நாக்ஸ்னு கூப்பிடு போதும்" என்று புயல்போல் வீசவும் சூர்யா ஒரு நிமிடம் அசந்தே போனார்.

கிரண் தனக்கே உரித்தான பாணியில் மௌனத்தைக் கலைத்தான், "சூரி... மணல்... எம்.ஜி.ஆர் படம்... விசில்! ஆஹா, நினைச்சுப் பாக்கவே எவ்வளவு அருமையா இருக்கு. ரொம்ப அழகா எங்ககிட்ட இந்தக் கதையெல்லாம் சொல்லாம மறைச்சிருக் கீங்களே பாஸ். இன்னும் என்னென்ன கூத்தடிச்சிருக்கீங்களோ! நாக்ஸ், எங்ககிட்ட இன்னும் விவரமா சொல்லுங்க, இவரை கொஞ்சம் ப்ளாக்மெயில் பண்ணறத்துக்கு வசதியா இருக்கும்" என்றான்.

நாகு 'யார் இந்தப் பொடியன்? இங்க என்ன செய்யறான்?' என்ற தோரணையுடன் கிரணை ஏற இறங்கப் பார்த்தார். அதை உணர்ந்த சூர்யா, அறிமுகம் செய்து வைத்தார்.

"நாகு, இவன் கிரண், பங்கு வர்த்தக அனலிஸ்ட். இவ ஷாலினி, டாக்டர், மேலும் மருத்துவ ஆராய்ச்சி செய்யறா. இவங்க ரெண்டு பேரும் என் கேஸ்களில நிறைய உதவி செய்யறாங்க. நீங்க உணர்வு தூண்டலோட விர்ச்சுவல் ரியாலிடி விளையாட்டுக்களை செய்யறீங்கன்னு நான் சொன்னதும் ரொம்ப ஆர்வமா வந்திருக் காங்க. இவங்களை நீங்க என் போலவே முழுக்க முழுக்க நம்பலாம்."

நாகு, இருவரிடமும் கை குலுக்கிக் கொண்டே, "அப்படியா. உங்க ரெண்டு பேரையும் சந்திச்சது ரொம்ப சந்தோஷம். வாங்க, வாங்க. ஆராய்ச்சி சாலையை சுத்திப் பாத்துக் கிட்டே பேசலாம்" என்று உள்ளே அழைத்துச் சென்றார்.

அங்கு அவர்கள் கண் முன்னே விரிந்தது ஒரு மெய்நிகர் மாய உலகம்!

(தொடரும்)

கதிரவன் எழில் மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline