Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எனக்கு பிடிச்சது | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
நினைவலைகள்
அமர்நாத் யாத்திரை: வழி தப்பித் தவித்தேன்
- சி.கே. கரியாலி, திருவைகாவூர் கோ.பிச்சை|மார்ச் 2010|
Share:
Click Here Enlargeகரியாலி ஐ.ஏ.எஸ்.
தமிழில்: திருவைகாவூர் கோ.பிச்சை


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajanசிறிது ஓய்வுக்குப் பிறகு பஞ்சதரணிக்குப் புறப்பட்டோம். குறுகிய சாலையின் ஒரு பக்கம் உயரமான மலைத் தொடராகவும் மறுபக்கம், அச்சம் உண்டாக்கும் அதல பாதாளமாகவும் இருந்தது. பாதாளத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து மலையை ஒட்டிய பாதையிலேயே நடந்து சென்றோம். மழை வேறு பெய்ய ஆரம்பித்தது. மழைக்கு அணியும் சட்டைகளோ குடைகளோ எங்களிடம் இல்லை. சாலை சேறும் சகதியுமாகி விட்டது. கம்பளித்துணிகள் நனைந்து கனத்து உடம்பில் ஒட்டிக் கொண்டன. நடப்பதே பெரும் சுமையானது. குளிரில் நாங்கள் உறைந்து போனோம். ஒதுங்கவும் இடமில்லை, பின்னால் திரும்பிச் செல்லவும் இயலாது. ஆகவே மிகுந்த பிரயாசையுடன் நடந்தோம். ஒரு மணி நேரம் சென்றதும் மழை நின்றது. சூரியன் உத்வேகத்துடன் வெளியே வந்தது. உடம்பில் இருந்த ஆடைகள் விரைவில் உலர்ந்து வியர்க்கத் தொடங்கியது. எங்கள் பாதை செங்குத்தானது. நாங்கள் மகாகுணாஸ் கணவாயை நெருங்கிக் கொண்டிருந்தோம். இந்த இடம் யாத்திரையின் மிக உயர்ந்த இடம். அருகில் சிறிய அழகிய அருவி ஒன்று இருந்தது. அதில் நீராடிப் புத்துணர்வு பெற்றோம். ஆனால் நான் மிகவும் களைத்துப் போய்விடவே, குதிரையின் மீது அமர்ந்து நாகராணிக் கணவாயைக் கடந்தேன். இதற்கு அரைமணி நேரம் ஆனது. நாங்கள் பஞ்சதரணியை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.

நாகராணிக் கணவாய் விந்தையான ஒன்று. இது வளைந்து நெளிந்து திருப்பதியிலுள்ள திருமலைக் குன்றுகளைப் போன்றும், ஒரு பெரிய பாம்பு படுத்துக் கிடப்பது போன்றும் தோற்றமளிக்கிறது. அடர்ந்த காடுகளும், பனிமூடிய சிகரங்களும் கொண்டது. என்னைச் சூழ்ந்திருந்த பேரழகில் சொக்கிப்போய் தன்னை மறந்தேன். இந்நிலையில் என்னுடன் குதிரையில் வந்த என் நண்பர்கள் முன்னே சென்று விட்டதை நான் கவனிக்கவில்லை. அவர்கள் அனைவரையும் தவறவிட்டது பெரிய பிரச்சனையாகி விட்டது.

திடீரென்று தூரத்தில் ஒரு சிறு புள்ளி ஒன்று ஆற்றின் மேல் வேகமாக வருவது போன்ற தோற்றத்தைக் கண்டேன். அது பனிக்கட்டி மீது நடந்து என்னை நெருங்கிக் கொண்டிருந்தது.
சில மைல் தூரம் என் முன்னாலும், பின்னாலும் யாருமில்லை. என் கண்களுக்குத் தெரிவது ஒரே பாதையாக இருந்ததால் அது சரியான பாதை என்றும் அதில் சென்றால் என்னை பஞ்சதரணி முகாமில் கொண்டு சேர்த்துவிடும் என்றும் நம்பினேன். எனது கம்பளி, எனது டார்ச் மற்றும் அத்தியாவசியமானவைகள் குதிரையோடு சென்றுவிட்டன. இன்னும் நான் கடக்க வேண்டியது பதினான்கு கி.மீ. தூரம். பகல் வெளிச்சம் இருக்கும்வரை பாதையைப் பார்க்க முடியும். இரவு வந்தால் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே நான் விரைவாக நடையை எட்டிப் போட்டேன். மாலை மறைந்து இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. திடீரென, அகலமான ஒரு பனிப்பாதையின் பக்கமாக நான் நடந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அது பனி உறைந்த ஆறு என்பது எனக்குப் புரிந்தது. அது பஞ்சதரணி நதியாக இருக்க வேண்டும். எங்கோ இதன் கரையில்தான் எங்கள் முகாம் இருந்தாக வேண்டும் என்பதால் நான் ஆற்றின் பக்கமாகவே நடந்து சென்றேன். "கடவுளே எனக்கு வழியைக் காட்டு" என்று வேண்டிக் கொண்டேன். இருள் சூழ்வதற்குமுன் நான் அங்கு செல்ல முடியவில்லை என்றால் இந்தப் பனிபடர்ந்த மலைப்பகுதியில் எப்படி நான் இரவைக் கழிப்பது என்று திகைத்தேன். அப்போதுதான் எதிர்கரையில், தொலைவில் சிறுசிறு விளக்குகள் பிரகாசிப்பதைக் கண்டேன். நான் போய்ச் சேர வேண்டிய இடம் அதுதான். ஆனால் வெளிச்சத்தில் செல்ல வேண்டும். இப்போதே மாலை ஆறுமணி. மெல்ல சூரியன் மறைந்து இருள் நெருங்கிக் கொண்டிருந்தது.

பனி உறைந்த நதியை எப்படிக் கடப்பது? இது புதிய சங்கடம். கடக்கிறவர் மிகவும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். சில இடங்களில் பனிக்கட்டி மெலிதாக இருக்கும். அதில் கால் வைத்தால் ஆற்றுக்குள் முழுக நேரிடும். எனவே பத்திரமாக ஆற்றைக் கடக்கச் சரியான இடத்தைக் காட்டி உதவுமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன்.

அப்போது திடீரென்று தூரத்தில் ஒரு சிறு புள்ளி ஒன்று ஆற்றின் மேல் வேகமாக வருவது போன்ற தோற்றத்தைக் கண்டேன். அது பனிக்கட்டி மீது நடந்து என்னை நெருங்கிக் கொண்டிருந்தது. அருகில் வந்ததும்தான் அது ஒரு மனித உருவம் என்பதை அறிந்து கொண்டேன். அவர் சுமார் இருபது வயதுள்ள காஷ்மீரி முஸ்லீம் இளைஞர். முகாமிலிருந்து கிளம்பியவர் வழியில் எங்கும் நிற்காமல் சுமார் 5 கி.மீ. தூரத்தையும் ஓடியே வந்திருக்கிறார். எனது நண்பர்கள் முகாமை அடைந்ததும், நான் இல்லாததால் மிகவும் வருத்தப்பட்டு என்னைத் தேட அந்த இளைஞரை அனுப்பி இருக்கிறார்கள். நான் பெரிதும் களைத்துப் போய் இருந்தேன். எனது ஒரு கையை அந்த இளைஞரின் தோள் மீது வைத்தேன். இதனால், எனது உடம்பின் பாரத்தில் ஒரு சிறிதளவு அவர் தோளில் இறங்கியது. அவரது உதவியுடன் விரைவாக ஆற்றைக் கடந்தேன். பத்தே நிமிடங்களில் ஒரு மீட்டர் அகலம் உள்ள ஆற்றைக் கடந்து விட்டோம். அதன் பிறகு இன்னொரு ஓட்டம் பிடித்து சுமார் 7 மணிக்கு முகாமை அடைந்தோம். என்னைத் தேட ஒரு வழிகாட்டியை அனுப்பி வைத்த அவர்களுடைய சமயோசிதம் பாராட்டுக்குரியது.

எல்லாம் முடிந்ததும் நான் என் கட்டிலில் விழுந்தேன். தித்திக்கும் சூடான தேநீர் கொடுத்து நேத்ரா எனக்கு புத்துயிரூட்டினான். இதை அடுத்து சூடான, காரசாரமான காய்கறிகளோடு அரிசிச் சாதம் உண்டோம். அன்றிரவு கடவுளுக்கும் நண்பர்களுக்கும் நன்றி கூறி நிம்மதியாக உறங்கினேன்.
அமர்நாத்
மறுநாள் காலை அமர்நாத் புனித தரிசனத்துக்குப் புறப்பட ஆயத்தமானோம். புனிதத்திலும் புனிதமான அமர்நாத் திருக்கோயில் சிவத் திருத்தலம். இங்கு அவர் 'பனிலிங்க'த் திருவுருவில் காட்சி அளிக்கிறார். சாலையில் கடைசி தங்கும் இடமான பஞ்சதரணியிலிருந்து கோவில் இருக்கும் தூரம் சில கி.மீ.தான். பஞ்சதரணி நதியை ஒட்டியே பாதை செல்கிறது. இந்த நதியைக் கடக்கும் ஒருவர் பிறப்பு, இறப்பு என்ற வாழ்க்கைச் சக்கர சுழற்சியிலிருந்து விடுபட்டு வீடுபேறு பெறுவதாக நம்பிக்கை.

சிவபெருமானின் சூலாயுதம் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீநகரில் உள்ள டம்டமி அகரா என்ற இடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் யாத்திரையில் கால்நடையாகச் சிவனின் சூலாயுதத்தைப் புனித குகைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.
பஞ்சதரணி என்றால் ஐம்புலன்களின் தளையிலிருந்து விடுவித்துக் காப்பாற்றுகிறவர் என்பது பொருள். இது பஞ்சமாபாதகங்களிலிருந்தும் விடுவிப்பதுடன், வாழ்க்கையின் நான்கு கட்டங்களிலிருந்தும் விடுவித்து ஐந்தாவது கட்டமான மரணத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. நதி எப்போதும் உறைந்த நிலையில் இருப்பது போல மரணமும் உறைந்த நிலையாகக் கருதப்படுகிறது. அமர்நாத்தில் உயிர்துறப்பது முக்தி பெறுவதற்கான நிச்சயமான வழி என்று நம்பப்படுகிறது. அநேக சாதுக்களும் யோகிகளும் தங்கள் மரணத்தைக் தழுவிக்கொள்ள இந்த இடத்தைத் தேடி வருவது வழக்கமாக உள்ளது.

பஞ்சமா பாதகங்கள் காமம், கோபம், பேராசை, பொறாமை, களவு ஆகியன. வாழ்க்கையின் நான்கு நிலைகள் பிரம்மச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், துறவறம் என்பன. பண்டைக்காலத்தில் நமது மூதாதையர்கள் அமர்நாத் யாத்திரைக்குப் புறப்படும் முன்பே துக்கம் கொண்டாடி, தங்களுக்கான ஈமச்சடங்குகளை நிறைவேற்றிவிடுவார்களாம். அநேக முதிய யாத்திரிகர்கள் மரணத்தை எதிர்நோக்கிச் சென்றாலும் இளைஞர்களுக்கும், பலசாலிகளுக்கும் கூட அது ஆபத்தான பயணம்தான். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக இஸ்லாமிய இடையர் தலைவர் ஒருவரால் இந்த அமர்நாத் குகை கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. காணாமல் போன ஆடுகளைத் தேடிக்கொண்டு மலை உச்சியில் குகைவரை சென்றிருக்கிறார் அவர். குகைக்கு வெளியே அழகிய ஒரு மனிதரும், கண்கவரும் வசீகரமான ஒரு பெண்ணும் ஒரு காளையின் மீது அமர்ந்திருந்தனர். அந்த நபரின் கழுத்தில் ஒரு பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தது. ஆடுதேடி வந்தவர் அதிர்ச்சி அடைந்தவராய், அவர்களைப் பார்த்து 'எனது ஆடுகளைக் கண்டீர்களா?'' என்று கேட்டிருக்கிறார். ஆடுகள் அவருடைய வீட்டிற்குப் போய்விட்டதாகத் தெரிவிக்கிறார்கள். பின் இருவரும் அவர் வைத்திருந்த விறகு உள்ள சாக்குப்பையைத் தொட்டார்கள். அவர் வீட்டுக்குப் புறப்படும்போது அவர்கள் இருவரும் குகைக்குள் சென்று மறைந்ததையும் பார்த்திருக்கிறார்.

அவர் வீடு திரும்பினால் ஆடுகள் திரும்பி வந்திருந்தன. விறகு இருந்த சாக்கில் விறகுகள் தங்கப் பாளங்களாக மாறியிருந்தன. இதனால் ஆச்சரியமும் குழப்பமும் அடைந்த முஸ்லீம் தலைவர் மலையிலிருந்து கீழே இறங்கி இந்துக்கள் வசிக்கும் கணேஷ்புரிக்குச் சென்று அங்குள்ள பண்டிதர்களிடம் தான் கண்டதைத் தெரிவித்தார்.

இடையர் தலைவர், தலைமைப் பண்டிதரை குகைக்கு அழைத்துச் சென்றார். குகையின் உள்ளே ஒரு ஜோடிப் புறாக்களையும் பனிலிங்கம் ஒன்றையும் அவர்கள் கண்டனர். இவ்வளவு உயரத்தில் இந்தப் பறவைகள் இருப்பது வழக்கமில்லை. சிவனும் பார்வதியும்தான் இப்படி புறாக்களாக உருவெடுத்திருப்பதாக அவர்கள் முடிவுக்கு வந்தனர். தலைமைப் பண்டிதர் கோவிலைப் பேணிப் பாதுகாப்பவராகவும் அர்ச்சகராகவும் அங்கேயே தங்கிவிட்டார். அன்று முதல் முஸ்லீம் இடையர்கள் கோவிலுக்கும், கோவிலுக்குச் செல்லும் சாலைக்குப் பாதுகாவலர்களாகவும் கணேஷ்புரி இந்துப் பண்டிதர்கள், கோவிலின் அர்ச்சகர்களாகவும் இருந்து வருகின்றனர். குகையைச் சுற்றிலும் பனி மூடும் வரையில், பருவநிலை அனுமதிக்கும் வரையில், அர்ச்சனை நடைபெறுகிறது. கோவிலுக்கு எதுவும் வருமானம் வந்தால் இந்த இரண்டு குடும்பத்தினரின் மரபினர் பரம்பரை உரிமைப்படி பிரித்துக் கொள்கின்றனர்.

பண்டைய சைவர்களுக்கு இந்தக் குகை இருப்பது தெரிந்திருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் தெரிவிக்கின்றன. சிவபுராணம், சைவசித்தாந்தம் போன்ற சைவ இலக்கியங்களில் குறிப்பிடப்படும் நிகழ்வுகளான - சிவனும் பார்வதியும் உரையாடியது - இத்தலத்தில்தான். கோவிலிற்கு உள்ளேயோ அல்லது சுற்றுப் புறத்திலோ ஒரு ஜோடி புறாக்களைக் காண்பது யாத்ரிகர்களுக்கு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது.

ஆண்டாண்டுக் காலமாக இந்தப் புனிதக்குகை யாத்ரிகர்கள் செல்ல வேண்டிய இலட்சிய இடமாகப் பெயர் பெற்றுவிட்டது. சிவபெருமானின் சூலாயுதம் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீநகரில் உள்ள டம்டமி அகரா என்ற இடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் யாத்திரையில் கால்நடையாகச் சிவனின் சூலாயுதத்தைப் புனித குகைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். எனது தந்தை தீவிர சிவபக்தரும் சிறந்த மல்யுத்த வீரரும் ஆவார். அவர் 1926க்கும் 1948க்கும் இடையில் பலமுறை சாதுக்களுடன் இந்த ஊர்வலத்தில் அமர்நாத் யாத்திரை சென்றிருக்கிறார். எனது மாற்றாந்தாய்க்குப் பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டது. எனது பாட்டியார் குழந்தை வரம் வேண்டி குடும்பத்துடன் அமர்நாத் யாத்திரை செல்ல முடிவு செய்தார். அவர்கள் ஊர் திரும்பியதும் என் மாற்றாந்தாய் மீண்டும் கருவுற்றிருந்தார். 1939ம் ஆண்டு அவர் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு சிவகுமார் (சிவனின் மகன்) என்று பெயர் சூட்டினர்.

(தொடரும்)

கரியாலி ஐ.ஏ.எஸ்.
தமிழில்: திருவைகாவூர் கோ.பிச்சை
Share: 
© Copyright 2020 Tamilonline