Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
உறைந்து போன உறவுகள்
தாயாகிய சேய்
- நித்யா நடராஜன்|ஜனவரி 2010|
Share:
Click Here Enlargeசிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்றது

அதிகாலை மணி ஐந்து முப்பது. சூரியக்கதிர்கள் உலக மக்களை விழிக்க வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. தமிழ்ச்செல்வி - இக்கதையின் நாயகி. பாடல் அறிமுகம் கொடுக்கும் அளவிற்கு அவள் பாடலாசிரியர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் இன்னும் பரிச்சயமில்லை.

பெயர் : தமிழ்ச்செல்வி
வயது : 12
நிறம்: மாநிறம்
படிப்பு: இல்லை
உயரம்: 5 அடிக்கும் சற்று குறைவு
வேலை: உண்டு
இடம்: நொச்சிக்குப்பம், சென்னை.

சில நேரங்களில் 'தமிலு' என்றும் 'செலுவி' என்றும் குப்பத்து உறவினர்களால் அன்புடன் அழைக்கப்டுவாள். வறுமை காரணமாக செல்வியின் அம்மா, அவளை ஒரு வீட்டில் வேலைக்கு அமர்த்தியிருந்தாள்.

5:45 ஆகி விட்டதே, செல்வி வேலைக்குக் கிளம்ப வேண்டும் அல்லவா? 6 மணிக்கு திருவான்மியூரில் உள்ள கரிஷ்மா, அவினாஷ் தம்பதியினர் வீட்டுக்குச் செல்வி வேலைக்குச் செல்ல வேண்டும். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள், மூத்தவன் அபினவ். சென்னையில் உள்ள ஒரு உயர்தர கான்வென்ட்டில் யு.கே.ஜி. இளையவள் வர்ணா, ஒரு வயது. கரிஷ்மா ஷிஃப்டில் 6 மணி நேரம் அலுவலகத்திற்குப் போக வேண்டும், 8-2 அல்லது 2-8. கூடமாடச் சமையலில் உதவி பண்ணவும், வர்ணாவை கவனித்துக் கொள்ளவும் தமிழ்ச்செல்வி நியமிக்கப்பட்டிருந்தாள். வடநாட்டு தம்பதியினர், ஆயினும் 8 வருடச் சென்னை வாசம் அவர்களை 'தமில்' பேச வைத்திருந்தது.

6:05 டிங் டிங்... கதவு திறந்து, கரிஷ்மாவின் சற்றுமுன் குளித்த கோதுமை நிற முகம் பளீரென்றிருந்தது. "வா தமில்(ழ்). நல்லது, சீக்கிரமா வந்துட்டே. இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா போனாதான் வேலையை முடிக்க முடியும், இல்லாட்டி மானேஜர் டோஸ் விடுவார்".

அவள் பேசிக்கொண்டே இருக்க, தமிழ் தூக்கதில் சிரிக்கும் வர்ணாவைக் கண்குளிரப் பார்த்துவிட்டு "அக்கா, இப்போதெல்லாம் ரொம்ப நேரம் கை சூப்புது" என்றாள்.

கரிஷ்மா புரியமல் விழிக்க, தன் கையை சூப்பிக் காண்பித்து சைகை செய்தாள் தமிழ்.

முதன்முதலில் வர்ணா இவளைப் பார்த்துதான், "ம்மா" என்றாள். என்னெவென்று விவரிக்க முடியாத ஒரு சந்தோஷ மின்னல் தமிழ்ச்செல்வியைத் தாக்கியது
"ஓ! சரி, அடுத்த டாக்டர் விசிட்ல மருந்து கேட்கிறேன்".

"அதெல்லாம் வேண்டாம்க்கா, அம்மாகிட்டே சொல்லி கொஞ்சம் வேப்ப எண்ணை வாங்கி வர்றேன், கொஞ்ச நாள்ல நானே சரி பண்றேன்," என்றாள்.

"ம்ஹும், பெரிய மன்ஷிதான் போ".

இவர்கள் சம்பாஷணையின் ஊடே தமிழ்செல்வி பரபரவென்று பாத்திரம் துலக்கிவிட்டு, காய்கறி வெட்டுவதில் மும்முரமானாள். இயந்திர கதியில் காலை நேரம் ஆரம்பமானது. அபினவ்வை எழுப்பி, பல்துலக்க வைத்து, ஹார்லிக்ஸ் கொடுத்து, சாப்பிட இரண்டு பிரட் துண்டுகளைக் கொடுத்து, புததக மூட்டையைச் சீர்செய்து, சோளக்கொல்லை பொம்மை போல் யூனிஃபார்ம் மாட்டி, அவினாஷுடன் அனுப்பி வைத்தாயிற்று. இனி வர்ணாவை மட்டும் கவனித்தால் போதும்.

7:40க்கு கரிஷ்மாவுக்கும், அவள் ஸ்கூட்டிக்கும் கையசைத்துவிட்டு கதவைத் தாழிட்டு தமிழ்ச்செல்வியும், வர்ணாவும் உள்ளே வந்தார்கள். பிரட் துண்டுகளைச் சுவைக்கப் பிடிக்காமல், நேற்று தனக்காகக் கரைத்து வைத்த சாதத்தை, நான்கு சிறிய வெங்காயத்தின் துணையோடு சாப்பிட்டாள் தமிழ். இதிலிருக்கும் சுவை வேறெதில் இருக்கிறது? தனக்குள் பேசிக்கொண்டள். எப்படித்தான் தினமும் இரவில் அந்தச் சப்பாத்தியைச் சாப்பிடுகிறர்களோ? தனக்கு மெல்லவே சோம்பேறித்தனமாக இருப்பதாக உணர்வாள்.

கரிஷ்மா மதிய ஷிஃப்டில் வேலை செய்தால், அவினாஷ் இருவரையும் சமாளிப்பது கஷ்டம். கரிஷ்மா வரும்வரை வர்ணாவைக் கொஞ்சிவிட்டுக் கிளம்புவாள் தமிழ்ச்செல்வி. அப்பொழுதெல்லாம் இரவு வீடு திரும்புவது காரில்தான்.

"என்ன செலுவி, ஆபீசர் கணக்கா வேல முடிச்சு வராப்புல தெரியுது!" என்ற குரல்களுக்கு பதிலளிக்க இயலாமல் புன்சிரிப்பை மட்டும் உதிர்ப்பாள்.

ஏதோ யோசனையில் இருந்தவள் வர்ணாவின் அழுகையைக் கேட்டுத் துணுக்குற்று மணி பார்த்தாள்.

"அதுக்குள்ள பசிச்சிடுச்சா கண்ணு, இரு ஃபாரெக்ஸ் கலக்கி எடுத்திட்டு வரேன்" என்று சிறிது தட்டிக் கொடுத்துவிட்டு சமையலறைக்கு விரைந்தாள்.

அதற்குள் சிறிது கரிஷ்மாவைப் பற்றி... வர்ணா பிறந்தவுடன் அவளைப் பார்த்துக் கொள்வதும், வீட்டு வேலை செய்வதும் மிகச் சிரமமாக இருந்தது. நெருங்கிய தோழி மூலமாக தமிழ்ச்செல்வியைப் பற்றித் தெரிய வரவே, வீட்டு வேலைக்கு அவளை வரச் சொல்லலாம் என்ற எண்ணம் வந்தது. முதலில் சிறிது தயங்கினாள். பிறகு, நான்கு நாட்கள் அவளும் கூடவே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டாள். தமிழ்ச்செல்வி பெரிதாக எதற்கும் ஆசைப்படாததிலும், அக்கறையுடன் வர்ணாவைக் கவனித்துக் கொண்டதிலும் சிறிது ஆச்சரியப்பட்டாலும், வெளிக்காட்டாமல், அவளுடன் நன்றாகவே பழகினாள். வர்ணாவும் நன்கு ஒட்டிக் கொண்டாள். விசேஷங்களுக்கு புதுத் துணியும், வீட்டில் இவர்களுக்குண்டான உணவும், அவ்வப்போது பீட்சாவும் தமிழ்ச்செல்விக்கு வாடிக்கையானது. இது தவிர தமிழ்ச்செல்வியைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவோ, ஆராயவோ கரிஷ்மா நினைத்தது இல்லை.

மாதங்கள் உருண்டோடின.

இதோ இன்று வர்ணா தமிழ்ச்செல்வியைப் பார்த்து, "அத்தா... அத்தா" என்று வாயில் ஃபாரெக்ஸ் வழியச் சிரித்தாள். முதன்முதலில் வர்ணா இவளைப் பார்த்துதான், "ம்மா" என்றாள். என்னெவென்று விவரிக்க முடியாத ஒரு சந்தோஷ மின்னல் தமிழ்ச்செல்வியைத் தாக்கியது. மாலை வந்த கரிஷ்மாவிடம் குறைந்தது 50 முறையாவது சொல்லித் தீர்த்திருப்பாள். கரிஷ்மா பெரிதாகக் காட்டிக் கொள்ளாமல், எப்பொழுது அந்த மழலை "ம்மா"வைத் தான் திரும்பக் கேட்பது என்று காத்திருந்தாள். நான்கு நாட்களில் அவள் கனவு நிறைவேறியது.
இப்படியாக வாழ்க்கைச் சக்கரம் சுழல்கையில்தான் ஒரு நாள் கரிஷ்மாவின் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. தென் இந்தியக் குழந்தைகள் உரிமைக் கழகத்தின் அமைப்பாளர் குணாளன் பேசினார். இவளைச் சந்தித்து 15 நிமிடங்கள் பேச வேண்டும் என்றார். பதட்டப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்றும், பொதுவாகவே அழைத்ததாகவும் கூறினார். ஆயினும் எதுவோ அவள் மனதை நெருடியது. சனிக்கிழமை மாலை குணாளன், அவரது உதவியாளர் தாமஸ் இருவரும் கரிஷ்மாவின் வீட்டுக்கு வந்தனர்.

குப்பத்தில் இருப்பவர்களிடம் குழந்தைகளின் பாதுகாப்புக் குறித்துப் பேசியதாகவும், அங்கே குழந்தைகளைப் பணிக்கு அனுப்பும் பெற்றோரிடம் பேசியதாகவும், இவளைப் போல் இன்னும் சிலரின் முகவரியும், அலைபேசி எண்ணும் கேட்டு வாங்கிக் கொண்டதாகவும் கூறினார். மேலும் நேரம் ஒதுக்கியதற்கு நன்றி கூறிக் கொண்டே பேச ஆரம்பித்தார் "குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு சொல்லுவங்க. எந்த மதத்திலேயும் இதை ஆட்சேபிக்கிறவங்க கிடையாது. உங்களுக்கும் இரண்டு குழந்தைங்க இருக்கு. அவங்க சிரிப்பிலே நீங்க உலகத்தையே மறந்திருவீங்க. எவ்வளவு பணக்காரனா இருந்தாலும் அவன் பெற்ற பிள்ளைக்கு நல்ல சாப்பாடு மட்டும் போட்டு வீட்டுல வைச்சிருக்க மாட்டான். சரியா படிக்கலைன்னா கூட ஸ்கூல், காலேஜ்னு அனுப்பி முன்னுக்குக் கொண்டு வரப் பார்ப்பான். படிப்பு வராட்டி ஒழுக்கமும் பண்பாடும் வரட்டும்னு நெனைப்பான். ஆனா வறுமைங்கிற ஒரே காரணத்துக்காக தமிழ்ச்செல்வி மாதிரிக் குழந்தைங்க படிப்பு கிடைக்காம, ஏன் வெளி உலக ஞானம் கூட இல்லாம வளர்றாங்க. இப்போ இது பெரிய இழப்பா தெரியாது. ஆன தெரிய வர்ற அன்னிக்கு ஈடுகட்ட முடியாது. காலம் கடந்த ஞானோதயமா இருக்கும். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க" என்றார்.

அக்கா, நான் ஸ்கூலுக்கு போகலே அக்கா, எனக்கு பாப்பா ஞாபகமாவே இருக்கு. நான என்ன படிச்சு கலெக்டரா ஆவப் போறேன்? நானே பாப்பாவ பத்திரமாப் பாத்துக்கறேன். என்னைய விட வேற யாரு நல்லாப் பாத்துக்க முடியும்?
நடுநடுவே தாமஸ் அவளுக்கு ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துக் கூறினார். கரிஷ்மாவிற்கு அவர் கூறியது சரியாகப் பட்டாலும், ஏனோ அவள் இதுவரை தவறு எதும் செய்யவில்லை என்றுதான் தோன்றியது. தமிழ்ச்செல்வியின் முகத்தில் அமைதி இருக்குமே தவிர, சோகம் இருந்ததாக அவளுக்குத் தோன்றவில்லை. ஆயினும் இனி ஏதும் தவறு செய்துவிடக் கூடாதென்று தோன்றவே, தான் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டாள்.

தமிழ்ச்செல்வி மற்றும் சில குழந்தைகளுக்கு ஆகும் கல்விச் செலவை அரிமா சங்கத்தினர் ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளனர். மேலும் அரசுப் பள்ளியிலும் பள்ளிக் கட்டணத்தில் சலுகை அளிப்பதாகக் கூறியுள்ளனர். அதனால் இனி அவளைப் பணிக்கு எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறினார். சிறிது கலவரப்பட்டாலும், அது தமிழ்ச்செல்விக்கு நன்மை பயக்குமே என்று கரிஷ்மா சமாதானமடைந்தாள். மேலும் அவளது பள்ளிச் சீருடை செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாகவும் வாக்களித்தாள்.

அனைத்து சம்பிரதாயங்களும் மும்முரமாக நிறைவேறின. தமிழ்ச்செல்வி இதுவரை ஏற்றிராத அவதாரமாக பள்ளிச் சீருடை அணிந்து தன்னைப் போலவே இருக்கும் சக மாணவிகள் மத்தியில் அமர்ந்திருந்தாள். காலை பத்து மணிக்கு முதல் வகுப்பாக கணக்கு என்று கூறினர். சரியாகப் பத்து மணி அடித்தது. ஆசிரியரும் உள்ளே நுழைந்தார். இதுவரை "உன் பேரு என்ன? எங்க இருந்து வரே?” என்ற கேள்விகளுக்கு ஆவலாக பதிலளித்த தமிழ்ச்செல்வி இப்போது அமைதியானாள். கணக்குப் பாடம் துவங்கியது.

இரண்டே நிமிடத்தில் "அச்சோ, பாப்பா ஃபாரெக்ஸ் சாப்டிச்சா தெரியலே" என்று தனக்குள் முனகினாள்.

"சனிக்கிழமை தான் பார்க்க முடியுமோ?"

"கையை பிடிச்சிக்கிடே இருக்கணும், இல்லேன்னா சூப்ப ஆரம்பிச்சிரும்."

"இன்னிக்கு தலைக்குக் குளிப்பாட்டனும், சரியா துவட்டலேன்னா பாவம் சளி பிடிச்சிக்குமே."

"நான் இல்லாம யாருகூட வெளையாடுதோ தெரில."

இதுபோல ஆயிரத்துக்கும் மேலான சம்பாஷணைகள் அவளுக்குள்ளேயே! ஒருவழியாக முதல்நாள் வகுப்பு முடிவடைந்தது.

மறுநாள் காலை 9:00 மணிக்கு கரிஷ்மா, வர்ணாவிற்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள். அழைப்பு மணியின் ஓசை கேட்டு பாதியில் கைகழுவிவிட்டு கதவு திறந்தாள். அங்கே பள்ளிச் சீருடையில் கண்கள் சிவந்த நிலையில் தமிழ்ச்செல்வி.

"அக்கா, நான் ஸ்கூலுக்கு போகலே அக்கா, எனக்கு பாப்பா ஞாபகமாவே இருக்கு. நான என்ன படிச்சு கலெக்டரா ஆவப் போறேன்? ஒண்ணும் வேணாம். நானே பாப்பாவ பத்திரமாப் பாத்துக்கறேன். என்னைய விட வேற யாரு நல்லாப் பாத்துக்க முடியும்?" என்றாள் பாசத்துடன்.

தமிழ்ச்செல்வியின் முகத்தில் குழப்பம் இல்லை. ஏமாற்றம் இல்லை. எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் தீர்மானம் இருந்தது.

சட்டத்தினாலோ, பணத்தினாலோ, அரசாங்கத்தினாலோ, தனி மனிதனாலோ, ஏன், அன்பினாலே கூட அவள் முடிவை மாற்ற முடியாது. அடிப்படை மாற்றம் தேவை. எங்கே? அவள் சிந்தனையில்! அது யாரால், எப்போது முடியும்?

நித்யா நடராஜன்,
சான்ஹோஸே, கலிபோர்னியா
More

உறைந்து போன உறவுகள்
Share: 




© Copyright 2020 Tamilonline