Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
கிழக்கு
- என்.சொக்கன்|ஜனவரி 2010|
Share:
Click Here Enlargeஅன்று அதிகாலையிலிருந்தே அவனுக்கு நேரம் சரியில்லை.

தூக்கத்திலிருந்து விழிப்பதற்குமுன்பே ஒரு கெட்ட கனவு - யாரோ நான்கு முகம் தெரியாத அயோக்கியர்கள் அவனைத் துரத்தி, அவனுடைய கை, கால்களிலெல்லாம் சிறு ஊசி கொண்டு எண்ணற்ற துளைகள் செய்துவிட்டு, காணாமல் மறைந்துவிடுகிறார்கள்.

திடுக்கிட்டு விழித்துக்கொண்டவன், தன் அறையின் இதமான சூழலில்தான் ஓரளவு நிம்மதியடைந்தான். என்றாலும், அந்தக் கனவின் மிச்சம்போல, வயிற்றின் ஒரு மூலையில், பிடிவாதமாய் ஏதோ வலித்துக்கொண்டிருந்தது. சுவரோரமாய்ச் சரிந்தபடி தூங்கிக்கொண்டிருக்கும் சியாமளாவை ஒருமுறை பார்த்துவிட்டு, போர்வையை உதறி எழுந்தான்.

இந்த நேரத்தில் ஏன் இப்படியொரு கனவு? அதிகாலைக் கனவுகள் பலிக்கும் என்று சொல்வார்களே, இதுபோன்ற உளறல்களும் பலிக்குமா? எது எப்படியோ, அதற்குமேல் தூங்கமுடியாது என்பதுமட்டும் நிச்சயம்.

யோசனையோடு பல் துலக்கிவிட்டு, ஹாலில் வந்து அமர்ந்துகொண்டான். இன்னும் முழுசாய் விடிந்திருக்கவில்லை. சியாமளா ஏழுக்கோ, ஏழரைக்கோ எழுந்தபிறகுதான் காபி, அதுவரை எப்படி நேரத்தைக் கொல்வது?

செய்தித் தாள் வந்திருக்கிறதா என்று பார்ப்பதற்காக, வாசல் கதவைத் திறக்கையில், நங்கென்று காலில் இடித்துக்கொண்டான். கால்களை உதறியபடி மீண்டும் சோஃபாவுக்குத் திரும்பியபோது, லேசாய் ஒரு ரத்தப் பொட்டு துளிர்த்திருந்தது.

அவனுக்கு மகா எரிச்சலாய் இருந்தது. இத்தனை அவஸ்தைக்கு, அந்த பேப்பர் வந்து தொலைத்திருந்தாலாவது பரவாயில்லை, அதுவும் இல்லை!

பாத்ரூமில் காலைக் கழுவிக்கொண்டு, டிவிக்குப் பக்கத்திலிருந்த அலமாரியில், பிளாஸ்திரியைத் தேடினான். கிடைக்கவில்லை - திடீர்த் தேடலுக்குக் கிடைக்கும்படி என்னதான் இருக்கிறது இந்த வீட்டில்?

என் அப்பாவிப் பெண்டாட்டிக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கிறதா? அப்படி என்னதான் எழுதியிருக்கிறாள், எனக்குத் தெரியாமல்?
சமையலறையில் கிடைத்த ஏதோ ஒரு பழந்துணியை நனைத்து, கால் காயத்தை ஒற்றிக்கொண்டான் அவன். பின்னர் அதை அப்படியே சுருட்டி, குப்பைத் தொட்டியில் வீசி எறிந்துவிட்டு, மீண்டும் ஹாலுக்கு வந்தபோது, மேஜைக்குக் கீழே, பழைய பத்திரிகைகளை அடுக்கிய வரிசையில், ஒரு புத்தம்புதிய டைரியைப் பார்த்தான்.

ஆர்வத்தோடு எடுத்துப் பிரித்தபோது, முதல் பக்கத்தில், 'ஆர். சியாமளா' என்று கையெழுத்துபோல் பெயரெழுதியிருந்தது. அதன் கீழேயே, 'என் அனுமதியின்றி இந்த டைரியைப் படிக்கிறவர்களுக்கு, மன்னிப்பே கிடையாது!'

அட, என் அப்பாவிப் பெண்டாட்டிக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கிறதா? அவனுக்குள் தாங்கமுடியாத குறுகுறுப்பு படரலானது. அப்படி என்னதான் எழுதியிருக்கிறாள், எனக்குத் தெரியாமல்?

அவள் என்ன எழுதியிருந்தாலும், நான் அதைப் படிக்கலாமா? கூடாதா?

உள்ளறையை ஒருமுறை சங்கடமாய்த் திரும்பிப் பார்த்துக்கொண்டான் அவன். கணவன்-மனைவிக்குள் எந்த ரகசியமும் கூடாது என்று சொல்வார்கள், அதன்படி பார்த்தால், நான் இந்த டைரியைப் படிப்பதில் எந்தத் தப்பும் இல்லை. ஆனால், அதைத் தீர்மானிக்க வேண்டியது நான்மட்டும் தானா?

இந்த எண்ணம் தோன்றியதும், அவன் அந்த டைரியை மூடி, மேஜைமேல் வைத்துவிட்டான். சத்தமில்லாமல் திரும்பிவந்து, சோஃபாவில் சரிந்தாற்போல் அமர்ந்துகொண்டான்.

கல்லூரி நாள்களில் அவன் டைரி எழுதியதுண்டு. தினந்தோறும் ஒரு பக்கம் என்றெல்லாம் கணக்கு வைத்துக்கொள்ளாமல், தோன்றிய நேரத்தில், பக்கம் பக்கமாய் எழுதித் தீர்த்த விஷயங்கள் - பெரும்பாலும் செலவுக் கணக்கு, பார்த்த சினிமா, கிரிக்கெட் மேட்ச், கவர்ந்திழுத்த பெண்கள், அவர்களின் நாகரீக உடை அலங்காரங்கள், அலங்கோலங்கள், இன்னபிற.

அந்தக் குப்பைகளெல்லாம், இப்போது எங்கே கிடக்கிறதோ, தெரியாது. ஆனால், அவற்றில் எதையும் சியாமளாவிடம் காண்பிக்க, அவன் தயங்கமாட்டான் - நிச்சயமாய்.

அப்படியானால், சியாமளா ஏன் தயங்கவேண்டும்? வீட்டில் நாங்கள் இருவர்தான் இருக்கிறோம் என்ற நிலையில், 'யாரும் படிக்கக்கூடாது!' என்று ஒரு குறிப்பு எழுதிவைத்தால், மறைமுகமாக, அவனைச் சொல்வதாகதானே அர்த்தமாகிறது? அப்படி என்ன விஷயத்தை மறைக்கிறாள்?

அவன் மீண்டும் மேஜையினருகே நடந்து சென்று, அந்த டைரியை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தான். அதன் முதல் பக்கத்திலிருந்த பறவை ஓவியத்தைக் கொஞ்சம் ரசித்தான். பிரிப்பதற்கு மனம் வரவில்லை.

சியாமளா ரொம்ப நல்ல பெண், வெகுளி, அவனிடம் எதையும் மறைக்கத் தெரியாது, உண்மையில், அக்கம்பக்கத்து வம்பு வழக்குகளில் துவங்கி, தொலைக்காட்சித் தொடர்களின் அன்றாட நிகழ்வுகள்வரை எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அவனிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறவள்தான் அவள் - அவனுக்குதான் பெரும்பாலும் அவள் சொல்பவற்றைக் கேட்க நேரமிருப்பதில்லை.

நாள்தோறும், நள்ளிரவைத் தொடும் நேரத்தில் அலுவலகத்திலிருந்து களைத்துத் திரும்புகிறவனுக்கு சாப்பிட்டுவிட்டுப் படுக்கத்தான் நேரம் இருக்கிறது. இதனால், அவனுடைய உடல் எடை கூடும் என்று சியாமளா ஒவ்வொரு நாளும் சொல்கிறாள், 'அட்லீஸ்ட், வீட்டுக்குள்ளேயாவது ஒரு சின்ன வாக்-மாதிரி, அஞ்சு நிமிஷம் சுத்திச் சுத்தி நடந்துட்டு, அப்புறம் தூங்குங்களேன், ப்ளீஸ்!'

அவள் சொல்வதைத் தவிர்க்க விரும்புகிறவன்போல், 'நீ ஏன் டெய்லி எனக்காக சாப்பிடாம காத்திருக்கே?', என்பான் அவன்.

'ப்ச், வீட்ல இருக்கிறது ரெண்டே பேரு, ஆளுக்கு ஒரு நேரத்தில சாப்பிடணுமா?', கத்தரித்தாற்போல் அவளுடைய பதில்கள். மேலும் வற்புறுத்தினால், 'எனக்குப் பசிக்கலைங்க!', என்பாள்.

அந்த இரவு நேரப் பேச்சுகள் எல்லாவற்றுக்குமே, இப்போது புது அர்த்தம் தேடத் தோன்றியது அவனுக்கு. ஒருவேளை, சியாமளா திருப்தியாய் இல்லையோ? வாரத்தில் ஆறு நாள்கள் - சில சமயம் ஏழு நாள்களும்கூட, அலுவலகத்திலேயே கழிக்கிற கணவனின் நேசம் அவளுக்குப் போதவில்லையோ? என்னை உள்ளங்கையில் தாங்கிக் கொண்டாடுகிற ஒரு கணவனை ஏன் கொடுக்கவில்லை என்று ஆண்டவனிடம் டைரியெழுதி சண்டை போடுகிறாளோ?

இந்த எண்ணம் தோன்றியதும், கையிலிருந்த டைரி மிகவும் கனப்பதாய்த் தோன்றியது அவனுக்கு. அவன் நினைத்ததுபோல் சியாமளாவுக்கு ஏதும் மன வருத்தம் இருக்குமானால், இப்போது இந்த டைரியைப் பிரித்துப் படிப்பதில் தவறே இல்லை - அவளது பேச்சை, நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ளமுடியாதவன், அவள் எழுதியிருப்பதையாவது புரிந்துகொண்டு, அதன்படி நடக்கலாம், அடிக்கடி முடியாவிட்டாலும், எப்போதாவது, அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வரலாம், அவளை ஒரு சினிமாவுக்கோ, இசை நிகழ்ச்சிக்கோ அழைத்துப்போகலாம், அவளுக்குப் பிடித்தமான சிறு பரிசுகள் வாங்கித் தரலாம்.

ஆனால், இதையெல்லாம் செய்வதற்கு, ஏன் டைரியைப் பிரித்துப் படிக்கவேண்டும்? இப்போதே செய்தால் ஆகாதா?

டைரியைக் கீழே வைத்துவிட்டு, மெலிதான சிரிப்புடன் தலையைப் பிடித்துக்கொண்டான் அவன். எதையோ நினைக்க ஆரம்பித்தால், இந்த அசட்டு மனது, வேறெங்கோ வந்து மடக்குகிறது.

இந்தச் சிந்தனையை மாற்றுவதற்காகவேனும், வீட்டைச் சுற்றி ஒருமுறை நடந்துவரலாம் என்று தோன்றியது அவனுக்கு. நிதானமாய் எழுந்து நின்று சோம்பல் முறித்தவன், அனிச்சையாய்ப் படுக்கை அறைப்பக்கம் திரும்பி, குழந்தைபோல் கைகளைக் குவித்துக்கொண்டு தூங்கும் சியாமளாவை ஆசையாகப் பார்த்தான். இவளுக்குள் அப்படியென்ன ரகசியம் இருக்கமுடியும்?

சட்டென்று திரும்பிக் குனிந்தவன், அந்த டைரியின் அட்டையை இன்னொருமுறை கூர்ந்து கவனித்தான் - இந்த வருடத்து டைரிதான். அப்படியானால், சமீபத்தில்தான் சியாமளா இதை எழுதத் தொடங்கியிருக்க வேண்டும்.

யோசிக்க யோசிக்க, அவனுக்குக் குழப்பமாகவே இருந்தது. அவன் நினைப்பதுபோல், அந்த டைரியில் இருப்பது, சியாமளாவின் அன்றாடப் பிரச்சனைகள் ஏதுமா, அல்லது ஆறாத காயங்கள் எதைப்பற்றியாவது கொட்டித் தீர்த்திருக்கிறாளா?

இப்படி நினைத்ததும், அவனுக்குள் திக்கென்றது. சியாமளாவுக்கு ஒரு பூர்வ கதை உண்டா? என்னிடம் மறைக்கிற அளவுக்கு, அந்தக் கதையில் அப்படியென்ன பெரிய ரகசியம்?

யோசனையோடு நிமிர்ந்தபோது, சுவரில் பதித்திருந்த அவர்களின் திருமணப் புகைப்படம் - மாலையும், கழுத்துமாய் அவனருகே நிற்கிற சந்தோஷமும், பெருமிதமும், சியாமளாவின் புன்னகையில் தெள்ளத்தெளிவாய்த் தெரிந்தது.

அவன் மெல்லமாய்த் தலையை உலுக்கிக்கொண்டான் - இல்லை, இந்தப் பெண்ணுக்கு, இன்னொரு கதை இருக்க வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும், அதை என்னிடம் மறைக்க அவளுக்குத் தெரியாது, நான் அவளிடம் அப்படி நடந்துகொண்டதில்லை!

உண்மையில், அவர்களின் முதலிரவிலேயே, அவள் தனது பழைய காதல் ஒன்றைப்பற்றிச் சொல்லியிருக்கிறாள் - அவளது அத்தை பையன் ஒருவன், அவனுக்கும், இவளுக்கும்தான் கல்யாணம் செய்யப்போவதாக, சிறுவயதிலிருந்தே ஒரு விளையாட்டுப் பேச்சைத் தொடர்ந்து கேட்டதால், அதன் சாத்தியங்களைப்பற்றித் தெரியாமலேயே, அவனைத் தன் துணைவனாக வரித்துக்கொண்டிருக்கிறாள் - இத்தனைக்கும், இவள் அவனிடம் நாலு வார்த்தை சேர்ந்தாற்போல் பேசியதுகூட இல்லை! (இதைச் சொன்னபோது, சியாமளா வெட்கமாய்ச் சிரித்தது, இன்னும் அவனுக்குப் பளிச்சென்று நினைவிருக்கிறது!)
பின்னர் அவன் அமெரிக்காவில் படித்து, அங்கேயே வேலைக்குச் சேர்ந்து, பச்சை அட்டை வாங்கி, உடன் பணியாற்றும் ஒருத்தியை மணந்துகொண்டு... இவள் அவனைக் கடைசியாய்ப் பார்த்து, பத்து வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது.

ஒருவேளை, இந்த டைரிதான் உண்மை, இதுவரை தான் சியாமளாவைப்பற்றிப் புரிந்துகொண்டிருப்பதெல்லாம் பொய் என்றாகிவிடுமோ?
'அவன் மூஞ்சிகூட எனக்கு நினைவில்லைங்க, சுத்தமா மறந்துடுச்சு!', குரலிலோ, முகத்திலோ கொஞ்சமும் சோகமில்லாமல் சியாமளா சொல்ல, அவன் குறும்பாய்ச் சிரித்து, 'அவன் பேராவது நினைவிருக்கா?', என்று அவளைக் கிண்டலடித்தான்.

அந்த கேலியைப் புரிந்துகொள்ளாமல், 'அவன் பேரு, ராஜு சுந்தரம், வீட்ல சுந்தா-ன்னு கூப்பிடுவாங்க!', என்றாள் அவள், 'ஏன் கேட்கறீங்க?'

அதுதான் சியாமளா. ஒரு குழந்தைபோல்தான் - எதிராளி என்ன நினைத்துப் பேசுகிறான் என்று குதர்க்கமாய் யோசிக்கத் தெரியாது, அவன் திருப்திப்படும்படியாய் வேஷங்கள் போடத்தெரியாது, ஏமாற்று வார்த்தைகள் பேசத் தெரியாது. தான் நினைப்பது எதுவானாலும், அதை உடனடியாகப் பேசித் தீர்க்காவிட்டால் பாவம் என்பதுபோல், வெள்ளந்தியாய்த் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருப்பாள்.

ஆனால், அந்த சியாமளாவுடன், இந்த டைரியைக் கொஞ்சமும் பொருத்திப்பார்க்க முடியவில்லை அவனால். மற்றவர்கள் - குறிப்பாக அவன் - படிக்கக்கூடாது என்று நினைக்குமளவு, அப்படி என்னதான் அவளுக்குள்?

இந்த நான்கு ஆண்டு மணவாழ்க்கையில் சியாமளாவைப்பற்றிய தனது எண்ணங்களை, புரிதல்களை ஒருபக்கமும், இந்த டைரிக் குறிப்பு தனக்குள் உண்டாக்கியிருக்கும் கேள்விகளை இன்னொரு பக்கமும் வைத்து, எடையிட்டுப் பார்த்தபோது, அவனால் எந்த உறுதியான முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆனால், ஒருவேளை, இந்த டைரிதான் உண்மை, இதுவரை தான் சியாமளாவைப்பற்றிப் புரிந்துகொண்டிருப்பதெல்லாம் பொய் என்றாகிவிடுமோ? அவனுக்கு பயமாய் இருந்தது.

அந்த டைரியை மடிமேல் வைத்துக்கொண்டு, அதன் ஓரங்களை மெல்லமாய் வருடினான் அவன். இத்தனை கேள்விகளை மனதினுள் போட்டுக் குழப்பிக்கொள்வதைவிட, இதை ஒருமுறை பிரித்துப் பார்த்துவிட்டால்தான் என்ன?

இந்த வாதமும், முடிவும் அவனுக்குப் பிடித்திருந்ததுதான். என்றாலும், எல்லாமே ஒருதரப்பு நியாயங்களாய், தானே உருவாக்கிக்கொண்டு விட்டோம் என்கிற குற்றவுணர்ச்சி - அதுதான் அவனைத் தடுத்துக்கொண்டிருந்தது. ஆயிரம்தான் காரணங்கள் சொன்னாலும், சியாமளாவின் அனுமதியின்றி, இதைப் பிரித்துப்பார்ப்பது சரியில்லை என்பதாக, மனதின் ஒரு பகுதி விடாமல் சொல்லிக்கொண்டிருந்தது.

பேசாமல், தூங்கும் பெண்ணை எழுப்பிக் கேட்டுவிடலாமா?

கேட்கலாம். ஆனால், என்ன கேட்பது? 'என்னிடம் மறைக்கிற அளவு என்ன விஷயம் எழுதுகிறாய்?', என்றா? அவள் மறைப்பது என்று தீர்மானித்தபின், 'எதை மறைக்கிறாய்?' என்று கேட்பது அநாகரீகமில்லையா? 'இது எனக்கான ரகசியம்' என்று அவள் நினைத்திருக்கும்போது, 'அது என்னன்னுதான் சொல்லேன்!', என்று குடைந்தால், கணவன் என்கிற உறவை, ஆதிக்கத்துக்குப் பயன்படுத்துகிற கோழைத்தனமில்லையா?

அந்த டைரியினுள் அப்படி என்னதான் இருக்கமுடியும்? அன்றாட செலவுக் கணக்கு? அல்லது, ஸ்ரீராமஜெயம்? அல்லது, பப்பாளி ரசம் வைப்பது எப்படி? அல்லது, முப்பது நாள்களில் ஆங்கிலப் பாடங்கள்? அல்லது, என் கணவனிடம் எனக்குப் பிடிக்காத விஷயங்கள்? அல்லது, அவருக்குத் தெரியாமல் நான் சேமித்திருக்கும் சிறுவாட்டுத் தொகை விபரங்கள்? அல்லது, சியாமளாவின் பழைய காதல் கடிதம் ஏதாவது? - இப்படிப்பட்ட அதீதக் கற்பனைகளையெல்லாம் அவன் வெறுத்தான். என்றாலும், இந்த சந்தர்ப்பத்தில் வேறேதும் நினைக்கத் தோன்றவில்லை என்பதும் உண்மை.

ஆனால், சியாமளா எழுதியிருக்கிற விஷயம் எதுவானாலும், அதன் முன், இப்போதைய, பின் விளைவுகள் எந்த அளவு தீவீரமானவையானாலும், தனக்கு அது பெரிய அதிர்ச்சி எதையும் உண்டாக்கப்போவதில்லை என்று அவன் உறுதியாய் நினைத்தான், சியாமளாவின்மீது அவன் கொண்டிருக்கும் நேசத்தையோ, புரிதலையோ அவற்றால் நிச்சயம் குறைத்துவிடமுடியாது.

அப்படியானால், தான் இப்போது அதை அறியத் துடிப்பது ஏன்? அதுதான் அவனுக்குப் புரியவில்லை.

அந்த டைரியில் எழுதப்பட்டிருக்கும் செய்திகளைக்காட்டிலும், தனக்கும், சியாமளாவுக்கும் இடையே, இப்படியொரு ரகசியம் தோன்றி மறைக்கிறதே என்னும் எண்ணம்தான், அவனுக்குத் தாங்கமுடியாத வலி உண்டாக்கியது - அதிவேகமாய்ச் சுழலும் சக்கரத்தின் மையத்தில், ஒரு சிறிய, மிகச் சிறிய புள்ளி, அசைவற்று உறைந்திருக்குமே. அதுபோல, மிக அன்னியோன்யமான தம்பதிகளிடையேயும், இதுபோன்ற ரகசியங்களைத் தவிர்க்கமுடியாதோ?

அவன் கண்களை இறுக மூடிக்கொண்டான், இரண்டு விழிகளிலும் இரண்டு மெகா சக்கரங்கள் சுழலத்துவங்க, முந்தைய கனவில் பார்த்த அயோக்கியர்கள் அந்தச் சக்கரங்களின்மேல் அமர்ந்துகொண்டு சிரிக்கிறார்கள்.

எப்போதோ படித்த ஒரு குழந்தைக் கதையை நினைத்துக்கொண்டான் அவன் - அந்தக் கதையில் ஒரு பூனை வரும் - இந்தக் காதுக்கும், அந்தக் காதுக்குமாய் அகலமாகச் சிரிக்கும், பின்னர், திடுமென்று மறைந்துவிடும் - அந்தச் சிரிப்புமட்டும், அந்தரத்தில் நிலைத்திருக்கும். அதை ஆச்சரியத்துடன் பார்த்த கதாநாயகிப் பெண் சொல்வாள், 'சிரிப்பில்லாத சிடுமூஞ்சிப் பூனைகளை நான் நிறைய பார்த்திருக்கிறேன், ஆனால், பூனையே இல்லாத சிரிப்பை இப்போதுதான் பார்க்கிறேன்!'.

அதுபோல, முகமற்ற அந்த மனிதர்கள், அவன் கனவில் சிரித்தார்கள், சுழலும் சக்கரங்களின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு, அதன் மையத்தில் சுழலாமல் நிலைத்திருக்கும் புள்ளியைச் சுட்டிக் காண்பித்து, அவனை கேலி செய்து, இன்னும் பெரிதாய்ச் சிரித்தார்கள். அவர்களைத் திட்டுவதா, தாக்குவதா, அல்லது கவிழ்ந்தமர்ந்து அழுவதா என்று அவன் முடிவு செய்வதற்குள், ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கிப்போனான்.

****

சியாமளா அவனை உலுக்கி எழுப்பியபோது, அறை ஜன்னல்களின் திரை விலகி, கிழக்கு வெளிச்சம் தரையெங்கும் பரவியிருந்தது.

அவன் சிரமமாய் எழுந்து அமர்கையில், சியாமளா புன்னகையுடன் கேட்டாள், 'என்னது? மாப்பிள்ளைக்குப் பஞ்சு மெத்தை பிடிக்காம சோஃபாவிலே தூக்கம்?'

கையிலிருந்த டைரியை மறைக்கவேண்டுமா என்று யோசித்தபடி, அதை மேஜைமேல் வைத்தான் அவன், 'அதிகாலையில, ஏதோ கனாக் கண்டு முழிச்சுகிட்டேன் சியாமளா, அப்புறம் எதுக்கு இங்கே வந்தேன்னே எனக்கு நினைவில்லை!'

'சரி, எழுந்திருச்சி பிரஷ் பண்ணுங்க, காஃபி தர்றேன்!', என்றபடி அந்த டைரியை எடுத்து, ஓரமாய்ப் போட்டாள் சியாமளா. அப்போது அவளது முகத்தில் சிறு அதிர்ச்சியோ, சலனமோகூட இல்லை - தினந்தோறும், காலை எழுந்ததும் போர்வைகளை மடித்து, தலையணைகளை நேராக்குவதுபோல்தான் அவளது அந்தச் செய்கை இருந்தது - அத்தனை நேரமாய் அவன் அந்த டைரிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில், நூற்றில் ஒரு பகுதியைக்கூட சியாமளா அதற்கு வழங்கவில்லை - சொல்லப்போனால், ஒருவித அலட்சியத்துடன்தான் அவள் அந்த டைரியைத் தூரமாய் வீசினாள்.

சியாமளா சமையலறைக்குள் சென்றபிறகும், சில விநாடிகளுக்கு அவன் அந்த டைரியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் வீசிய வேகத்தில், அதன் முதல் பக்கம் திறந்து, மற்ற பக்கங்கள் காற்றில் அலைபாய்ந்தன. ஆனால் ஏனோ, அவற்றில் என்ன இருக்கிறது என்று வாசிக்கும் ஆர்வம், இப்போது அவனுக்கில்லை.

தரையெங்கும் படர்ந்திருந்த வெயில் வளையங்களை மிதித்தபடி, அவன் குளியலறைக்குச் சென்றான். கிச்சனில் வேலையாயிருந்த சியாமளா ஏதோ ஒரு பாட்டை மெலிதான குரலில் பாடுவது, ரம்மியமாய்க் கேட்டுக்கொண்டிருந்தது.

இன்று மாலை, அவளை ஒரு நல்ல இசைக் கச்சேரிக்கு அழைத்துச்செல்லவேண்டும் என்று அப்போது நினைத்துக்கொண்டான் அவன்.

என்.சொக்கன்
Share: 
© Copyright 2020 Tamilonline