Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
என்.சொக்கன்
- அரவிந்த்|ஜனவரி 2010|
Share:
Click Here Enlargeகதை, கவிதை, கட்டுரை எனத் தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர், நாக சுப்ரமணியம் என்னும் இயற்பெயர் கொண்ட என். சொக்கன். 33 வயதாகும் சொக்கன் பிறந்தது சேலம் அருகில் உள்ள ஆத்தூரில். பள்ளிப் படிப்பும் அங்கேயே. கோவையில் உள்ள அரசுத் தொழில்நுட்பக் கல்லூரியில் உற்பத்தித்துறைப் பொறியியலில் பட்டம் பெற்றார்.

பள்ளிக் காலத்திலேயே சொக்கனின் இலக்கிய ஆர்வம் தொடங்கி விட்டது. பார்வையற்ற தனது அத்தைக்கு வாசித்துக் காட்டுவதற்காக, பொன்னியின் செல்வனைப் படிக்க ஆரம்பித்தவர், தொடர்ந்து கல்கி, சுஜாதா என தேடிப் பிடித்துப் படிக்கத் தொடங்கினார். கல்லூரிக் காலத்தில் நூலகங்களிலும், பழைய புத்தகக் கடைகளிலுமாக ஏராளமான நூல்களை வாங்கிப் படித்தார். அது எழுத்தாவத்தைத் தூண்டி விட்டது.

சொக்கன், பள்ளிநாட்கள் முதலே எழுதத் தொடங்கியிருந்தாலும் எழுத்தின் வடிவம் பிடிபட்டது கல்லூரிக் காலகட்டத்தில்தான். கல்லூரியில் வெளியான தமிழ் இதழில் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவம், பலவிதமாக எழுதிப்பார்க்கும் ஆர்வத்தையும், தைரியத்தையும் தந்தது. முதல் சிறுகதை பாக்கெட் நாவல் அசோகன் ஆசிரியராக இருந்த 'எ நாவல் டைம்' இதழில் 1997ஆம் ஆண்டில் வெளியானது. ஆனந்த விகடனில் இரண்டு கதைகள் வெளியானதைத் தொடர்ந்து முன்னணி இதழ்கள் பலவற்றிலும் எழுதத் தொடங்கினார். சிறுகதைப் போட்டிகளில் சிலவற்றுக்குப் பரிசும் கிடைத்தன.

மாணவர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் சொக்கன் எழுதியிருக்கும் நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை. பள்ளி, கல்லூரி மாணவர்களால் அதிகம் விரும்பி வாங்கப்படும் நூல்கள் இவருடையன.
சொக்கனுக்குக் கவிதைகளிலும் அளவற்ற ஆர்வம் உண்டு. ஒரு கவிதைப் பரம்பரை உருவாகவேண்டும் என்ற எண்ணத்தில் இவர் ஆரம்பித்ததுதான் 'தினம் ஒரு கவிதை' என்னும் மின்னஞ்சல் மடற்குழு. இணைய வாசகர்களிடையே மிகவும் பிரபலமான அக்குழுவில் ஆயிரக்காணக்கானவர்கள் இணைந்து தங்களது கவித்திறனை வெளிப்படுத்தினார்கள். இரா. முருகன், ஆர். வெங்கடேஷ், லாஸ் ஏஞ்சலஸ் ராம் ஆகியோருடன் இணைந்து சொக்கன் நடத்திய 'ராயர் காபி கிளப்' இணைய மடற்குழு, இணைய வாசகர்களிடையே வரவேற்பையும் கவனத்தையும் பெற்ற ஒன்றாகும்.

எழுத்தாளர் பா. ராகவனுடன் ஏற்பட்ட தொடர்பு கிழக்கு பதிப்பகத்தின் நட்சத்திர எழுத்தாளராகச் சொக்கனை உருமாற்றியது. தனது குருநாதர் பாராதான் தனது எழுத்தின் வளர்ச்சிக்கும், ஊக்கத்திற்கும் காரணம் என்று கூறும் சொக்கன், "அவர் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை, நான் என்மீது வைத்திருப்பதைவிட அதிகமானது. அவர் தருகிற ஊக்கம், வாய்ப்புகளால்தான் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்க முடிகிறது" என்கிறார், நெகிழ்ச்சியுடன்.

"என் படைப்புகளில் சிறந்ததாக நான் கருதுவது எது என்று சில சமயம் நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள். எனக்கென்னமோ சொக்கனைத்தான் சொல்லத் தோன்றுகிறது" என்று பா. ராகவன் சொன்னதையே தனக்கான மிகப்பெரிய பாராட்டு என்று கூறுகிறார் சொக்கன்.
'ஒரு பச்சை பார்க்கர் பேனா', 'என் நிலைக்கண்ணாடியில் உன் முகம்', 'முதல் பொய்' - மூன்றும் சிறுகதைத் தொகுப்புகள். கலீல் கிப்ரன் சிறுகதைகளை 'மிட்டாய்க் கதைகள்' என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார். 'ஆயிரம் வாசல் உலகம்' - நாவல். அம்பானி, பில்கேட்ஸ், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, அஸிம் ப்ரேம்ஜி, லஷ்மி மிட்டல், ரத்தன் டாடா என்று சாதனையாளர் வாழ்க்கைகளைச் சரித்திரமாக்கியிருக்கிறார். அத்துடன் ஷேக்ஸ்பியர், நெப்போலியன், சல்மான் ருஷ்டி, குஷ்வந்த் சிங், சார்லி சாப்ளின், அண்ணா, வீரப்பன், சச்சின், டிராவிட் ஆகியோரின் வாழ்க்கைச் சித்திரத்தையும் பதிவு செய்திருக்கிறார். நேபாள், அயோத்தி, அமுல் வரலாறு, கோக் வெற்றிக் கதை, நோக்கியாவின் சாதனை குறித்தும் நூல்கள் எழுதியிருக்கிறார்.

மாணவர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் சொக்கன் எழுதியிருக்கும் நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை. பள்ளி, கல்லூரி மாணவர்களால் அதிகம் விரும்பி வாங்கப்படும் நூல்கள் இவருடையன. இவரது நூல்களில் பல ஒலிப்புத்தகமாகவும், ஆங்கில, ஹிந்தி, மலையாள, குஜராத்தி மொழிபெயர்ப்பிலும் வெளியாகியுள்ளன. கதை, கட்டுரை, சுயமுன்னேற்றம், வாழ்க்கை வரலாறு என்று இதுவரை 60க்கும் மேற்பட்ட நூல்களைச் சொக்கன் எழுதிக் குவித்திருக்கிறார். அதுபோக பிரபல முன்னணி வார இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். எப்படி எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்க முடிகிறது என்று கேட்டால், " நேர நிர்வாகம் மட்டும் புரிந்துவிட்டால் வீடு, வேலை, எழுத்து என எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவது அப்படியொன்றும் சிரமமானதில்லை. காலம் காலமாக எல்லா எழுத்தாளர்களும் செய்து வருகின்ற காரியம்தானே அது!" என்கிறார்.

இவரது படைப்பிற்கு திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் விருது வழங்கி கௌரவித்துள்ளது. பாரதி, கல்கி, சுஜாதா மூவருமே தனக்கு பாதிப்பு ஏற்படுத்திய படைப்பாளிகள் என்று கூறும் சொக்கன், தன் எழுத்தின் வெற்றிக்கு, எந்தப் பொறுப்பையும் சுமத்தாமல் தன்னைச் சுதந்திரமாக எழுத விடும் மனைவி உமா முக்கியக் காரணம் என்கிறார். யாருடைய பாணியையும் பின்பற்றாமல் தனக்கென சில லட்சியங்களோடு எழுதி வரும் சொக்கன், "இயல்பான மொழியில் எல்லோருக்கும் புரியும்படி எழுதுவதுதான் எனக்குத் தெரிந்த இலக்கியம்" என்கிறார் தன்னடக்கத்துடன்.

தற்போது 'பெப்ஸி' நிறுவனத்தின் வளர்ச்சிக் கதையை எழுதிக்கொண்டிருக்கும் சொக்கன், பெங்களூரில் உள்ள CRMIT நிறுவனத்தில் இயக்குனராகப் பணிபுரிந்து வருகிறார். மனைவி உமா, மகள்கள் நங்கை, மங்கையுடன் பெங்களூரில் வசித்து வருகிறார். புனைவு, அபுனைவு, கட்டுரை என்று இலக்கியத்தின் எல்லாப் பிரிவுகளிலும் எழுதிவரும் சொக்கன், தமிழ்ப் புத்திலக்கிய பரப்பில் முக்கிய இடம்பெறுகிறார்.

அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline