Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
நினைவலைகள்
தாராவின் மணவாழ்க்கை
- சி.கே. கரியாலி, திருவைகாவூர் கோ. பிச்சை|டிசம்பர் 2009|
Share:
ஆங்கில மூலம்: கரியாலி, முன்னாள் ஐ.ஏ.எஸ்.
தமிழில்: திருவைகாவூர் கோ. பிச்சை

காஷ்மீரில் மிகப் பெரும்பான்மையினர் சைவர்கள். அவர்களது சிந்தைனைப் போக்கு தென்னிந்திய சைவ சித்தாந்தத்தோடு பெருமளவு ஒத்திருக்கிறது. காஷ்மீரில் புதுமணத் தம்பதியருக்கு முதல் சிவராத்திரி தென்னிந்தியரின் தலை தீபாவளி போல மிக முக்கியமானது. முதல் சிவராத்திரிக்கு தாரா கணவன் வீட்டிற்குச் சென்றாள். அவளது பெற்றோர் தம்பதிகளுக்கும், கணவனின் குடும்பத்தாருக்கும் துணிமணிகள், தம்பதியருக்கு நகைகள், மாமியார் நாத்தனாருக்குப் பணம் போன்றவற்றை அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் அனுப்பியதில் அரிசி மூட்டைகள், உலர்ந்த பழங்கள், ஏலக்காய், பாதாம்பருப்பு, பெரிய கற்கண்டு கட்டிகள், கல் உப்பு அனைத்தும் அடக்கம். (உலகத்தின் வேறுபல பகுதிகளைப் போல இங்கும் அன்பளிப்புகளில் உப்பு மிக அடிப்படையானதாகவும், அத்தியாவசியமானதாகவும் மதிக்கப்படுகிறது). பெண்கள் குடும்பச் சொத்தில் பங்கு பெற முடியாததால் அவர்களுக்கு நகைகள், பணம் ஸ்திரீதனமாக வழங்கப்பட்டன.

சிவராத்திரி விருந்துக்கு நெருங்கிய உறவினர்கள் அழைக்கப்படுவார்கள். அன்று இரவு முழுவதும் ஒருவரும் தூங்கமாட்டார்கள். தூக்கம் வராமல் இருக்க எல்லோரும் சோழிகளை வைத்துக் கொண்டு ஆடுவார்கள். பெரியவர்கள் இளைஞர்களுக்கு 'ஹைராத்' என்று கைப்பணம் கொடுப்பார்கள். (ஈத் பெருநாளில் முஸ்லீம்கள் கொடுக்கும் 'இதி' போன்ற இந்த பழக்கம் - சிவராத்திரிக்கும் தொற்றிக்கொண்டது).

அவர் கிராமத்தான் போன்ற மாறுவேடத்தில் சென்று திருடர்களைப் பிடித்ததுடன், திருட்டுப் பொருள்கள் இருந்த இடத்தையும் கண்டு பிடித்து மீட்டார்.
தாராவின் முதல் புத்தாண்டை அவளுடைய மாமியார் தால் ஏரியிலுள்ள சார்சினார் என்ற தீவில் பிரமாதமான வனபோஜனத்தோடு கொண்டாடினார். சுமார் இருபது படகுகளில் விருந்தினர்கள் வந்து சேர்ந்தனர். உணவு அங்கேயே சமைக்கப்பட்டது. வெய்யில் நாட்களில், ஏரிக்கரைப் பக்கம் உள்ள தோட்டங்கள், பூங்காக்களில்தான் நகர மக்கள் அனைவரும் வனபோஜனம் செய்வார்கள். இது அவர்களுக்கு விருப்பமானது.

தாராவின் மணவாழ்க்கை, அவள் கணவனுடன் வசிக்கச் செல்லும் வரையில் வேடிக்கை விளையாட்டு, ஆட்டபாட்டம் இவைகளுடன் உல்லாசமாகவே இருந்தது. வன அதிகாரியாக அரசுப் பணியில் மணமகன் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஆண்கள் மட்டுமே வேலையில் சேர்ந்தனர். பெண்கள் வீட்டிலேயே தங்கிக் குழந்தைகளையும் வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் எனது பாட்டனார், பீர்பஞ்சாவில் இருந்து பாரமுல்லா; ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து ஸ்ரீநகர்வரை நீண்டிருந்த வனப்பகுதியில் அதிகாரியாக இருந்தவர். மனைவி தன்னுடன் இருக்க வேண்டுமென்று விரும்பினார். இருவரும் லாகூர், ராவல்பிண்டி, கராச்சி, ஹரித்வார் போன்ற இடங்களுக்குச் சென்றனர். அவர்கள் வீடு திரும்பும்வரையில் அவளுடைய மாமியார் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டார். இருவரும் மிகத் துணிச்சலான வாழ்க்கை நடத்தி வந்தனர். கணவருடன் அடர்ந்த காட்டு வழிகளிலும், உயர்ந்த மலைக் கணவாய்களிலும் பயணமாகச் சென்று வந்தார் தாரா. குஜ்ஜார், பகர்வால்ஸ் (மாடு ஆடு வளர்ப்பவர்கள்) ஆகிய மலைஜாதி மக்கள் நடத்தும் விருந்தோம்பலை இருவரும் அனுபவித்தனர். திறந்தவெளியில் தீமூட்டி அதைச் சுற்றி உட்கார்ந்து பாட்டுப்பாடி ஆட்டம் ஆடி விருந்து நடைபெறும். வனக்காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் ஆகிய அனைத்து குழுவினரும் ஒரு பெரிய குடும்பமாக வாழ்ந்தனர். இந்தச் சூழ்நிலையில் என் பாட்டியின் கருவில் உருவாகி என் தாயார் பிறந்தார்.

தாராசந்த் வன அதிகாரி என்ற முறையில் நல்ல பெயரெடுத்தார். அவர் சிறப்பாகப் பணியாற்றியதற்காக இரண்டுமுறை தங்கப் பதக்கம் பெற்றார். ஒரு தடவை அதிகவிலை மதிப்புள்ள மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டில் ஏற்பட்ட பெருந்தீயைச் சமாளித்து, விலைமதிப்பற்ற ஆயிரக்கணக்கான சதுர மைல் பரப்பில் இருந்த இமய மலைக்காடுகளுக்குள் தீ பரவாமல் தடுத்தார். இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு பெருந்திருட்டு நடந்துவிட்டது. கிடங்கிலிருந்து குங்குமப்பூ, கஸ்தூரி மற்றும் சில வனச் செல்வங்கள் களவு போய்விட்டன. இது அவரை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டது. இதற்குப் பொறுப்பான அதிகாரி என்று பணிமுறைப்படி அவர் குற்றம் சுமத்தப்பட்டுக் கைதாகி இருக்க வேண்டும். இதைத் துப்புத்துலக்க ஒருமாதம் அவகாசம் அளிக்கக் கேட்டுக் கொண்டார். இதற்கு மேலதிகாரிகள் அனுமதி அளித்தனர். அவர் கிராமத்தான் போன்ற மாறுவேடத்தில் சென்று திருடர்களைப் பிடித்ததுடன், திருட்டுப் பொருள்கள் இருந்த இடத்தையும் கண்டு பிடித்து மீட்டார்.
தாராவின் குழந்தைகள்

என் தாத்தா-பாட்டிக்குப் பதினான்கு குழந்தைகள். என்னுடைய பாட்டியின் வயிற்றில் குழந்தை இல்லாமலோ அல்லது கையில் ஒரு பால் குடிக்கும் குழந்தை இல்லாமலோ இருந்த நாள்களே இல்லை. என் தாத்தா தன்னுடைய நாற்பத்தெட்டாவது வயதில் இறந்தபோதும் கூடப் பாட்டி தன் கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டுதான் இருந்தாள். துர்பாக்கியவசமாக ஐந்து குழந்தைகள் மட்டுமே - மூன்று பெண்களும் இரண்டு பையன்களும் - பிழைத்தனர். இந்த ஐவரில் மூன்றாமவரான என் தாய் 1928ல் பிறந்தார். வயதான ஆசிரியர் ஒருவர் என் தாயாருக்கு எழுத்துக்களைக் கற்பித்தார். (அந்தக் காலத்தில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதென்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகவே அவர்கள் கல்வி வீட்டிலேயே நடந்தது) என் தாய் மிகுந்த தைரியசாலி. ஆகவே அவள் சதா புத்திமதிகள் சொல்லி எச்சரிக்கும் வைதீகக் குடும்பத்தில் அடைபட்டுக் கிடக்க விருப்பமில்லை. உண்மையில் அவள் காட்டுக் குழந்தை. ஆகவே அவளது பெற்றோர்கள் வசிக்கும் காட்டிலேயே இருக்க விரும்பினாள். தன் ஆசிரியர் தலையில் எண்ணெயை ஊற்றியும் அவருடைய ஆடையில் இங்க்கைக் கொட்டியும் அவரது தலைமுடியில் நாடாவைக் கட்டியும் அவருக்கு எதிராகப் பல கலகங்கள் செய்தாள். இதன்மூலம் முன்னதாகவே தன் படிப்பை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாள். ஸ்ரீநகரிலிருந்து வனத்திலிருக்கும் பெற்றோரிடம் அனுப்பி வைக்கப்பட்டாள்.

சாந்தா காட்டுக் குழந்தையாகவே வளர்ந்து வந்தாள். அவளுக்கென்று சொந்தமாக ஒரு குதிரை இருந்தது. இரவு-பகல் எந்த நேரத்திலும் அவள் குதிரையில் ஏறித் தனியாகவே சவாரி செய்து வருவாள்.
அவளுடைய தமக்கை பிரபா அமைதியான, கடமையை உணர்ந்த குழந்தை. அவளது பாட்டியின் அன்புப் பிடியில் வளர்ந்து வீட்டிலேயே நல்ல கல்வியின் பயனை அடைந்தாள். தனியாக நடுநிலைப்பள்ளித் தேர்வு எழுதி கல்வியில் தேர்ச்சி பெற்று நீதி நூல்களையும் மதநூல்களையும் படித்தாள். ஆனால் அவள் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதுவதற்கு முன்பு அவள் படிப்பு திடீரென முடிவிற்கு வந்தது. ஒரு ஆசிரியரையும் ஒரு மாணவியையும் உள்படுத்தி அவதூறு பரவி காஷ்மீர் பள்ளத்தாக்கையே குலுக்கியது. பிரபாவின் கல்வி நிறைவு பெறாததற்கு அதுவே காரணமாயிற்று.

கல்வி பயிலப் பிரபாவுக்கு ஆர்வம் இருந்தபோதிலும் அவளது படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தச் சம்பவம் காரணமாக அமைந்துவிட்டது. அவளுடைய பதினான்காவது வயதில், அவளது சகோதரனின் பள்ளித்தோழனும், மதிநுட்பம் மிக்க இளைஞனுமான ஜானகிநாத் கெளலுக்கும் பிரபாவுக்கும் மணம் முடித்து வைக்கப்பட்டது. இந்த அறிவின் மிக்க இளைஞர்தான் பிற்காலத்தில் மாநிலத்தின் நீதித்துறைச் செயலாளராக உயர்ந்தார். அவர் ஒருவருடைய சிந்தனையில் வடிவெடுத்த அமைப்புதான் ஜம்மு-காஷ்மீர் வங்கி. அவரே அதன் நிறுவனத் தலைவராகவும் இருந்தார். இடையில் சாந்தா காட்டுக் குழந்தையாகவே வளர்ந்து வந்தாள். அவளுக்கென்று சொந்தமாக ஒரு குதிரை இருந்தது. இரவு-பகல் எந்த நேரத்திலும் அவள் குதிரையில் ஏறித் தனியாகவே சவாரி செய்து வருவாள். அவள் காட்டுத் தீயைப் பார்த்தாள். கூட்டாக வேட்டைக்குப் போனாள். காளான் சேகரித்தாள். வனபோஜனம் ருசித்தாள். காட்டு ஓடைகளில் நீந்தினாள். எப்போதாவது மலைவாழ் மக்களுக்கான ஒரு பள்ளிக்குச் சென்று வருவாள். அங்கு உருது எழுத்துக்களை உச்சரிக்க ஓரளவு கற்றுக் கொண்டாள். ஒருநாள் அவள் தகப்பனார் கடுமையான மாரடைப்பில் உயிர் நீத்தார். பதினாறு வயதான, சுட்டியான சாந்தாவின் வாழ்க்கை உறைந்துநின்றது.

ஆங்கில மூலம்: கரியாலி, முன்னாள் ஐ.ஏ.எஸ்.
தமிழில்: திருவைகாவூர் கோ. பிச்சை

(தொடரும்)
Share: 
© Copyright 2020 Tamilonline