Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
வளைகுடாப் பகுதியில் பொன்னியின் செல்வன்
- கந்தசாமி பழனிசாமி|டிசம்பர் 2009|
Share:
Click Here Enlargeஏறக்குறைய 300 அத்தியாயங்கள் கொண்ட ஒரு பெரிய வரலாற்று நவீனத்தை மூன்றரை மணி நேரமாக நாடகமாகச் சுருக்கிச் சுண்ட வைத்து இரசிகர்களுக்கு ஊட்டுவது எளிதல்ல. அது பாற்கடலைக் காய்ச்சி பன்னீர் எடுப்பது போன்ற பகீரத முயற்சி. பாகீரதி என்ற பெயர் கொண்டதாலோ என்னவோ இந்த முயற்சியை எடுத்துக் கொண்டதோடு வெற்றிகரமாகவும் செய்து முடித்தார் மேடை வடிவமைத்து இயக்கிய பாகீரதி சேஷப்பன். பல மாத உழைப்பில் இதனை நாற்பத்தைந்தே காட்சிகளாக மாற்றியமைத்து மேடையேற்றி விருந்தாக்கியது சாதனைதானே. (அட்டையில் பாகீரதிக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் தமிழ்ச் சங்கத் தலைவர் லேனா கண்ணப்பன்).

நந்தினியாக அறிமுகமான கீர்த்திகா, என்ன அசத்தலான, அழுத்தமான நடிப்பு! பன்னிரண்டாவது வகுப்பில் படிக்கும் இரண்டாம் தலைமுறை அமெரிக்கத் தமிழ்ப் பெண் இவர். நல்ல தமிழில் பேசி நடிக்க வேண்டிய சரித்திர நாடகமான இதில் முக்கியப் பாத்திரத்தை ஏற்க முன்வந்ததே கீர்த்திகாவின் அசாத்தியத் துணிச்சலையும் ஆர்வத்தையும் காட்டுகிறது. கொஞ்சுமொழி பேசவேண்டியதோர் எதிர்மறை வேடத்துக்கு கச்சிதமான பொருத்தம்.

மணிமேகலையாக வந்த பாரதி ராம், அவரும் இவ்வூரில் வளர்ந்த இளம் நாயகி. தெளிவான உச்சரிப்பும் நடிப்பும் அவரிடம். இணையத்தில் வலைப்பூ அமைத்து 'அதற்கு வாருங்கள் பொன்னியின் செல்வன் பற்றிய கருத்தை அதில் கூறுங்கள்' என்ற குதூகலக் குரல் வேறு.

மலையமானாக வந்த எம்.எஸ். கிருஷ்ணன், அநிருத்தராக வந்த கணேஷ் பாபு, ஆதித்த கரிகாலராக ராம், பெரிய பழுவேட்டரையராக ராம்கி போன்றவர்களின் பழுத்த நாடக முன்னனுபவம் சிறப்பாக வெளிப்பட்டது.
'காதலில் விழுந்தேன்' (fall in love) என்று சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம். பொன்னியின் செல்வன்பால் காதல் கொண்டு அவன் பெயர் கேட்ட மாத்திரத்தில் 'பொத், பொத்' எனத் தரையில் மயங்கி 'விழுந்து', 'காதலில் விழுந்தேன் என்பதற்கு புதுப்பொருள் தந்த வானதியாக நடித்த விசாலாக்ஷியின் நடிப்பு, நாடகத்தில் பல இடங்களில் நகைச்சுவையை அள்ளித் தெளித்தது.

நாடகத்தில் சுந்தர சோழனாக வந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் ஊமை மந்தாகினியின் (சௌம்யா) மலரும் நினைவுகளில் பரிதவிப்பு, அவளுக்குத் தவறிழைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வு ஆகியவற்றை எளிதில் காட்டி, நோய்வாய்ப்பட்டு (ஆட்சிக்)கட்டிலில் படுத்துக்கொண்டே ஜெயிக்கிறார் என்றால், வந்தியத் தேவன் வல்லவரையன் பாத்திரமேற்ற ராஜா, கடம்பூர், பழையாறை அரண்மனை, இலங்கை என்று ஓலை எடுத்து ஓடிக்கொண்டே இரசிக நெஞ்சங்களில் 'நிற்கிறார்'. தனது இயல்பான நடிப்பாலும், உரையாடலில், குறிப்பாக ஆழ்வார்க்கடியானோடு (அசோக்) பேசும்போது, இழையோடிய நகைச்சுவையாலும் மேடையில் கிரீடம் அணிந்து தோன்றிய பல ராஜாக்கள் மத்தியில் ஒரு ராஜாவாக வராவிட்டாலும் ரசிக நெஞ்சங்களில்அவர் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டார்.

குந்தவையாக வந்த வசந்தி ஈழம் சென்ற சோழ இளவலை எப்படியும் கொணர்ந்து அவனுக்கு முடிசூட்டிவிடத் துடிக்கும் சகோதர பாசம், அந்தக் குறிக்கோளை எட்டிவிட வேண்டும் என்பதில் காட்டும் தீவிரம், கொல்ல நினைக்கும் கொடுமதியாளர்களைக் கூர்மதியால் வெல்ல எடுக்கும் விடாமுயற்சி என நல்ல நடிப்பு. மலையமானாக வந்த எம்.எஸ். கிருஷ்ணன், அநிருத்தராக வந்த கணேஷ் பாபு, ஆதித்த கரிகாலராக ராம், பெரிய பழுவேட்டரையராக ராம்கி போன்றவர்களின் பழுத்த நாடக முன்னனுபவம் சிறப்பாக வெளிப்பட்டது.

பொன்னியின் செல்வனாகத் தோன்றிய ஸ்ரீராமன் சபேசன் நடிப்பில் மிடுக்கு, அவனைத் துடுப்பேந்திக் கரைசேர்த்து காத்து, அவனது இடுக்கண் களையும் பூங்குழலி சுகியின் நடிப்பில் துடுக்கு, குறிப்பாக மந்தாகினியின் கொடுஞ்சொப்பனங்களால் மனம்வாடி, நெடுங்காலமாக நித்திரையற்ற சுந்தரசோழர் 'நீ நன்றாகப் பாடுவாயாமே' என்று பாட்டால் தாலாட்டி, உறங்கவைக்கக் கோரி உருக, சுகி தனது சொந்தக்குரலில் சுகராகம் பாடி, அவரைக் கண்கிறங்கச் செய்து கட்டிலில் தலை கிடத்தும் காட்சி, ஆழ்வார்க்கடியானாக அசோக் திரை விலகியதும் தனது தேன்குரல் பாட்டால் நாடகத்தின் துவக்கத்திலேயே அதைத் தூக்கி நிறுத்திய மாட்சி, பார்த்திபேந்திர பல்லவராக இந்திரா தங்கசாமி, நந்தினிமேல் மையல் கொண்டு அவளை வசீகரித்து வசமாக்க அவளிடம்கைதட்டலுக்கிடையே பேசும் போதை வசனம், இப்படி யாரை, எதைத்தான் சொல்லுவது?

அறியாத பல முகங்களின் அறிமுகங்கள் - ராஜா, கீர்த்திகா இந்திரா உட்பட - பலரை முதல்முறை என்றால் நம்பமுடியவில்லை. ஏனென்றால் அவர்களின் நடிப்பு முதல் தரம்.

சோமன் சாம்பவனாக அறிவழகன், இடும்பன் காரியாக வேத நாராயணன், ரவிதாசனாக ஸ்ரீகாந்த், சேந்தன் அமுதனாக சுப்ரமணியன், மதுராந்தகராக மனோஜ், கந்தமாறனாக கணபதிராமன், சம்புவரையராக லேனா கண்ணப்பன், கொடும்பாளூர் வேளாளராக சூர்யா, கொஞ்சம் மழுப்பல் சோதிடராக சோலை இப்படி அனைவருமே ஏற்ற பாத்திரத்தைப் போற்றும்படிச் செய்திருந்தனர்.

பாடத் திறம் கொண்ட பாத்திரம் என்றால் அசோக், சுகி போன்ற இன்குரலினர், சற்று நஞ்சு கலந்த கொஞ்சு மொழி என்றால் அதற்கேற்ற நாயகி என்று பாத்திரத் தேர்விலும் இயக்குநர் பாகீரதியின் பாங்கு பளிச்.

குந்தவை-வந்தியத்தேவன் அளவளாவி உலாவரும் ஒய்யார ஓடம், புயலில் சிக்கிய கப்பல் என எளிய, எடுப்பான, அழகான உத்திகள் மூலம் மேடையைக் கடலாக்கி அதன் மேலே கப்பல் ஓட்டிய அமைப்பாளர்களை நாடக மேடையில் 'கப்பலோட்டிய தமிழர்கள் ' என்று சொன்னால் தகும். வல்லவரையன் செல்லும் கப்பல் புயல் இன்னலில், பளீர் மின்னலில், திடீர் இடியில் சிக்கித் தீக்கிரையாவதும், நொடியில் அவன் கடலில் குதித்துப் பொன்னியின் செல்வனால் மீட்கப்படுவதும் சீரிய காட்சியமைப்புக்குச் சிறந்த சாட்சிகள்.
Click Here Enlargeஒய்யார ஓடம் (பாரதி), தீப்பிடித்த பாய்மரம் (கணேஷ் பாபு, பல்லவி, பாகீரதி), சோழர்கால மேடைப் பின்னணி (விசாலாக்ஷி), சுரங்கப் பாதை, வேட்டை மண்டபம், பள்ளிபடை வடிவமைப்புகள் (வேணு) போன்றவை சோழர் காலச் சூழலைக் கண்முன் கொணர்ந்தன.

'கல்கி' பத்திரிகையில் வந்திருந்த மூலப் படங்களைப் போன்றே பொன்னியின் செல்வன், குந்தவை ஆகியோருக்குச் சிறப்பாக ஆடை வடிவமைத்திருந்தது இன்னொரு சிறப்பான முயற்சி. பொன்னியின் செல்வன், குந்தவை, நந்தினி, பெரிய பழுவேட்டரையர், ஆதித்த கரிகாலர் போன்றவர்களுக்கு உடைகளை இந்தியாவிலிருந்து வடிவமைத்து பெற்று வந்த வசந்தி, இதர ஆடை அலங்காரங்களுக்கு ஏற்பாடு செய்த ராம்கி, முக ஒப்பனை செய்த (செம்பியன் மாதேவி) நித்தியவதி, சௌமியா, ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். தயாரிப்பு மேலாளர் வேணுவைப் பாரட்டிய தீர வேணும்.

சுமார் இரு நிமிட நேரம். கடம்பூர் அரண்மனையில் குழந்தைகள் இருவர் (அனுஸ்ரீ அறி, அனிகா ராஜாமணி) குதூகலித்துக் குரவை ஆட, உக்கிர இசையில் தேவராளன் (வேத நாராயணன்) வேலைப் பிடித்து வெறியாட்டம் போட, முறுக்கேற்றும் உடுக்கு முழக்கில் அவன் ஆவேசமாகச் சன்னதம் வந்து சாமியாட, உடுக்கு நின்றதும் உயிரற்றோன் போல் அவன் தரையில் விழ, அமர்க்களம். சுஜாதா ரவியின் நடன அமைப்பும் பாரதி ராமின் காவடிகளும் அழகு சேர்த்தன.

இந்த மிகப் பிரமாண்டமான வரலாற்று நவீனத்தை அமெரிக்காவில் நாடகமாகத் தயாரிக்க முனைந்து, அதை அரங்கேற்றமும் செய்து முடித்தது வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தினரும் அங்குள்ள தமிழர்களும் பெருமை கொள்ளவேண்டிய சாதனை.
லேனா கண்ணப்பனின் பேனாவில் விளைந்த குரவைக் கானாக் கூத்துப்பாட்டை துள்ளல் இசையமைத்து துடிப்பேற்றும் குரலில் தனக்கே உரிய நாட்டுப்புற முத்திரையுடன் பாடியிருந்தார் இசையமைப்பாளரும் இணை இயக்குனருமான ஸ்ரீதரன் மைனர். மேலும் நாடகத்தின் பல காட்சிகளில் காணப்படும் சூழ்ச்சிச் சூழலுக்கு இசையின் மிதமான அதிர்வுகள் மூலம் பதம் சேர்த்திருந்த விதமும், திரைப்பட இசைக் கலப்படமின்றித் தனித்துவத்தைக் காட்டியிருந்ததும் ஸ்ரீதரன் மைனரின் சிறப்பு; பல மாத உழைப்பு. மைனர் - இசையில் மேஜர் தான்.

மேடையில் ஓடிய மெல்லிய ஒளி, பாத்திரங்கள் தரித்திருந்த அரச பரம்பரையினரின் சரித்திர ஆடையில் தெரித்து, அவற்றை மேலும் மினுங்கவைத்தது என்றால், பின்புலத்தில் நிழலாடிய இருளோ சாடையிலேயே பின்னியது சதியின் வலையை. மெச்சும் தரமான கச்சித ஒளியமைப்பு.

மாபெரும் தமிழ்த் திரையுலக நாயகர்களே 'பொன்னியின் செல்வன்' நவீனத்தைப் படமாக்க முயன்று, அது அடைய முடியாத 'மலைத்தேன் அதுவென மலைத்தேன்' எனக் கைவிட்டதொரு பிரமாண்டமான வரலாற்று நவீனத்தை அமெரிக்காவில் நாடகமாகத் தயாரிக்க முனைந்து, அதை அரங்கேற்றமும் செய்து முடித்தது வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தினரும் அங்குள்ள தமிழர்களும் பெருமை கொள்ளவேண்டிய சாதனை.

கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் தயாரித்து வழங்கிய அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாடகம் நவம்பர் 8, 2009 ஞாயிறன்று மாலை 'சான்றோர் மண்' என்று அங்குள்ள தமிழர்களால் அன்போடு அழைக்கப்படும் சான் ரமோன் கலை மையத்தில் அரங்கேறியது. எழுநூறுக்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட அரங்கம் நிரம்பி வழிந்தது. 'கல்கி' பத்திரிக்கையின் ஆசிரியர் சீதா ரவி, திரைப்படப் பாடாலாசிரியர் பா. விஜய், நடிகர்கள் நாசர், எஸ்.வி. சேகர் ஆகியோர் அனுப்பியிருந்த வாழ்த்துக்களுடன் தொடங்கிய இந்த நாடகத்தை ரசிகர்கள் வெகுவாகக் கைதட்டி ரசித்துப் பாராட்டினர்.

எழுத்து: கந்தசாமி பழனிசாமி,
சான் ஹோசே
புகைப்படங்கள்: hashwinphotography.com
மேலும் படங்களுக்கு
Share: 
© Copyright 2020 Tamilonline