Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
முன்னோடி
சங்கீத சாம்ராட் ஜி.ராமநாதன்
- அரவிந்த்|நவம்பர் 2009|
Share:
Click Here Enlarge'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...', 'வதனமே சந்திர பிம்பமோ...', 'மன்மத லீலையை வென்றார் உண்டோ...', 'வாராய் நீ வாராய்...', 'சின்னப் பயலே சின்னப் பயலே...', 'சுந்தரி சௌந்தரி நிரந்தரியே...' போன்ற காலத்தால் அழியாத திரைப் பாடல்களுக்கு இசையமைத்து தமிழ்த் திரையிசை உலகில் தனக்கென ஓர் அரியாசனம் அமைத்துக் கொண்டவர் சங்கீத சாம்ராட் ஜி. ராமநாதன்.

திருச்சி அருகே உள்ள பிச்சாண்டார் கோவிலில் பிறந்த ஜி. ராமநாதன் சிறுவயதிலேயே தாயை இழந்தவர். தந்தையார் கோபால்சாமி அய்யர். அக்காலச் சூழ்நிலையால் ராமநாதனால் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. அவரது மூத்த சகோதரர் சுந்தர பாகவதர் அக்காலத்தில் பிரபல ஹரிகதா வித்வானாக விளங்கினார். அவருடைய கதாகாலேட்சபங்களுக்கு ஹார்மோனியம் வாசிப்பவராகத் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார் ராமநாதன். சுந்தர பாகவதர் ஹரிகதை சொல்பவராக மட்டுமல்லாமல் சிறந்த நடிகராகவும், நாடக ஆசிரியராகவும் விளங்கினார். அதனால் பல நாடகங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு ராமநாதனுக்குக் கிட்டியது.

சிறுவயதிலேயே கற்றுக் கொண்ட சங்கீதம், பல்வேறு புராணக் கதைகளுக்கு ஹார்மோனியம் வாசித்த அனுபவம் எல்லாம் சேர்ந்து ராமநாதனுக்கு ஒரு தனிப் பாணியைத் தந்திருந்தது. பவளக் கொடி, அல்லி அரசாணி மாலை, வள்ளி திருமணம் எனப் பல நாடகங்களுக்குப் பின்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். அப்போதுதான் எம்.கே. தியாகராஜ பாகவதர் நாடக உலகில் நுழைந்து புகழ் பெற ஆரம்பித்திருந்த நேரம். பாகவதருடன் ராமநாதனுக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து பல நாடகங்களில் பணியாற்றினர். பாகவதர் பாட, அவருடன் ராமநாதனும் இணைந்து பாடினார். அற்புதமான பல கர்நாடக ராகங்களின் கூட்டுக் கலவையாக இருந்த அப்பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பாகவதர்-ஜி.ராமநாதன் இசைக் கூட்டணி தொடர்ந்தது.

ராமநாதனைச் சிறந்த இசையமைப்பாளராக உலகுக்கு அடையாளம் காட்டிய படம் பி.யூ. சின்னப்பா நடித்து மாடர்ன் தியேட்டர்ஸின் தயாரிப்பில் வெளியான உத்தமபுத்திரன். அப்படத்தின் மூலம் தமிழின் முதல் இரட்டை வேடப் படத்திற்கு இசையமைத்தவர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய 'காலவ ரிஷி' என்ற நாடகம் 1932ல் திரைப்படமாக எடுக்கப்பட்டபோது அதற்குப் பின்னணி அமைக்கும் இசைக் குழுவில் ராமநாதன் இடம்பெற்றார். அதுதான் அவரது முதல் திரையுலக வாய்ப்பு. தொடர்ந்து நாடகம், திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ராமநாதனின் சகோதரர் சுந்தர பாகவதர் கதாநாயகனாக நடித்த 'விப்ரநாராயணா' படத்தின் இசைக் குழுவிலும் ராமநாதன் இடம் பெற்றார். என்றாலும் தனித்து இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு 1940களில் தான் கிட்டியது. எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்து 1936ஆம் ஆண்டில் வெளியான 'சத்திய சீலன்' தான் அவரது முதல் படம் என்றும், ஏஞ்சல் பிலிம்ஸ் வெளியிட்ட 'பரசுராமர்' (1940) தான் அவரது முதல் படம் என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. சி.வி.ராமன் தயாரிப்பு இயக்கத்தில் வெளியான 'ஹரிஹர மாயா' தான் (1940) அவரது முதல் படம் என்றும் கூறப்படுகிறது. அப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியதுடன் நாரதராகவும் நடித்திருந்தார் சகோதரர் சுந்தர பாகவதர். தொடர்ந்து சி.வி. ராமனின் பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு ஜி.ராமநாதனுக்குக் கிட்டியது. சில படங்களில் அவர் பாடவும் செய்தார்.

ராமநாதனைச் சிறந்த இசையமைப்பாளராக உலகுக்கு அடையாளம் காட்டிய படம் பி.யூ. சின்னப்பா நடித்து மாடர்ன் தியேட்டர்ஸின் தயாரிப்பில் வெளியான உத்தமபுத்திரன். அப்படத்தின் மூலம் தமிழின் முதல் இரட்டை வேடப் படத்திற்கு இசையமைத்தவர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸின் பல வெற்றிப் படங்களுக்கு அவர் இசையமைத்தார். அதனால் திருச்சியிலிருந்து சேலத்துக்குக் குடிபெயர்ந்தார். பின்னர் பட வாய்ப்புகள் அதிகரிக்கவே சென்னைக்குக் குடிபெயர்ந்தார். 1942ல் ஜி.ராமநாதனுக்குத் திருமணம் நடந்தது. ஜெயலட்சுமியைத் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் இசையே அவரது முதல் மனைவியாக இருந்தது. உணவு, உடை, உறக்கம் பற்றிய அக்கறைகளின்றி எப்போதும் இசை பற்றியே சிந்திப்பவராக இருந்தார். சாயி, லட்சுமி என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

அக்காலத் தமிழ்த்திரையிசை உலகின் மும்மூர்த்திகளாக எஸ்.வி.வெங்கட்ராமன், சி.ஆர்.சுப்பராமன் மற்றும் ஜி.ராமநாதன் ஆகியோர் விளங்கினர். அதேசமயம் மற்ற இருவராலும் 'சங்கீத மேதை' என்று போற்றப்படக் கூடிய அளவு திறமை படைத்தவராக ராமநாதன் விளங்கினார். பற்பல புதுமைகளைத் தனது பாடல்களில் புகுத்தினார். அவரது இசை வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் 'சிவகவி'. கிருபானந்த வாரியாரின் திரைக்கதையில் உருவான அப்படம், தியாகராஜ பாகவதருக்கும் நல்ல புகழைத் தந்தது. உறுத்தாத பின்னணி இசை மூலமும், சிவனின் அழகான பாடல்களுக்கு அற்புதமான தனது இசையமைப்பின் மூலமும் உயிர் கொடுத்திருந்தார் ஜி.ராமநாதன். தொடர்ந்து ஜி. ராமநாதன், பாபநாசம் சிவன், எம்.கே. தியாகராஜ பாகவதர் இணைந்த கூட்டணி பல வெற்றிப் படங்களைத் தந்தது. சங்கீத மும்மூர்த்திகள் போல் இவர்கள் 1950களில் திரையிசையுலக மும்மூர்த்திகளாகப் போற்றப்பட்டனர்.
கர்நாடக ராகங்களைத் தன் படத்தில் புகுத்தியதோடு, பல புதுமைகளையும் செய்திருக்கிறார் ராமநாதன். சோகத்திற்குரிய ராகமான முகாரியில் அவர் போட்ட காதல் டூயட்தான் 'வாடா மலரே தமிழ்த் தேனே..'
சின்னப்பா, எம்.கே.டி. படங்களைத் தொடர்ந்து அடுத்த தலைமுறை நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரது படங்களுக்கும் இசையமைத்து தனது முத்திரையைப் பதித்தார் ராமநாதன். கர்நாடக இசை மட்டுமல்லாமல் நாட்டுப்புற இசையிலும் மேற்கத்திய இசையிலும் கவனம் செலுத்தினார். 'மதுரை வீரன்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'வாங்க மச்சான் வாங்க' மற்றும் 'தூக்குத் தூக்கி' படப்பாடலான ' ஏறாத மலைதனிலே - தாம்திமிதிமி தங்கக் கோனாரே' போன்றவை அக்காலத்தில் வெகுவாக ரசிக்கப்பட்டன. சிவாஜி நடித்த 'உத்தம புத்திரன்' படத்தில் இடம்பெற்ற 'யாரடி நீ மோகினி' ராக்-அண்ட்-ரோல் இசையில் அமைந்து ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. பாரதியார் பாடல்களைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பியதிலும் ராமநாதனுக்கு முக்கியப் பங்குண்டு. குறிப்பாகக் 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் பாரதி பாடல்களுக்கு அவர் மெட்டமைத்திருந்த விதம் மிகச் சிறப்பு.

கர்நாடக ராகங்களைத் தன் படத்தில் புகுத்தியதோடு, பல புதுமைகளையும் செய்திருக்கிறார் ராமநாதன். சோகத்திற்குரிய ராகமான முகாரியில் அவர் போட்ட காதல் டூயட்தான் 'வாடா மலரே தமிழ்த் தேனே..' (அம்பிகாபதி-1957). 'அன்பே.. இன்பம்... எங்கே.. இங்கே' என்று கேள்வி-பதிலாக டூயட் பாடலை முதன்முதலில் அளித்தவரும் ஜி. ராமநாதன்தான். புன்னாகவராளி, கானடா, ராகமாலிகா, சிந்துபைரவி போன்ற ராகங்களில் அவர் அளித்த பாடல்கள் என்றும் ரசிகர்கள் நெஞ்சில் நிலைத்திருப்பவை.

கண்ணதாசன் ஜி. ராமநாதனைப் பற்றிச் சொல்லும் போது, 'அவர் மிகுந்த தொழில் பக்தி உள்ளவர். தேர்ந்த இசை ஞானம் மிக்கவர். கர்நாடக சங்கீதப் பாடல்களுக்கு இசையமைக்க வெறும் பத்து நிமிடமே அவருக்குப் போதும். அதில் அபார ஞானம் அவருக்கு உண்டு. அவர் இசை என்றால் பாபநாசம் சிவனும், பாகவதரும் உடனடியாகப் படங்களுக்கு ஒப்புக் கொள்வார்கள்' என்கிறார்.

'என்னை மிகவும் கவர்ந்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் தான். அந்தக் காலத்திலும் அவர் இசையமைப்பில் அவர் எத்தனையோ புதுமைகளைச் செய்திருக்கிறார்' என்கிறார் இளையராஜா. இசையமைப்போடு மட்டும் நின்று விடாமல் தானே பல பாடல்களைப் பாடியும் இருக்கிறார்.சில படங்களில் நடித்துமிருக்கிறார் ஜி.ராமநாதன்.

மேற்கத்திய மோகமும் இந்திப்படப் பாடல் மோகமும் இருந்த காலத்தில், தமிழின் பாரம்பரிய இசையின் வலிமையை மீட்டுத் தந்தவர் ஜி.ராமநாதன். இசை என்பது படித்தவர்களுக்கு மட்டுமல்ல; பாமரர்களின் உள்ளத்தையும் ஒன்றச் செய்யக் கூடியது என்பதை தனது பல நாட்டுப்புறப் பாடல் மெட்டுக்களால் நிரூபித்தார். திரை உலகின் அப்பட்டமான வியாபாரப் போக்குகளுக்கிடையே இசையாலும் சாதனை படைக்க முடியும், இசைக்காகவே படங்களை ஓட வைக்க முடியும் என்று நிரூபித்தார். 'ஹரிதாஸ்' இரண்டு வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து ஓடியது என்றால் அதற்கு எம்.கே.டி., பாபநாசம் சிவன், ஜி.ராமநாதன் என்ற வலுவான கூட்டணியும், நல்ல பாடல்களும், இசையுமே மிக முக்கியக் காரணம்.

புதியவர்களின் வருகையால் ஜி.ராமநாதனுக்கு வாய்ப்புகள் குறைந்தன. ஆனாலும் ராமநாதன் மனம் தளராமல் 'பட்டினத்தார்' படத்தைத் தாமே தயாரித்ததுடன், அதில் பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்திரராஜனை கதாநாயகனாக்கி பல அற்புதமான பாடல்களைப் பாட வைத்தார். அதில் வரும் பட்டினத்தாரின் 'உடற்கூற்று வண்ண'த்திற்கு ராமநாதன் இசையமைத்திருக்கும் விதமும், டி.எம்.எஸ் பாடலைப் பாடிய விதமும் உள்ளத்தை உருக்கக் கூடியதாகும்.

1940களில் தொடங்கிய அவரது கம்பீரமான இசைவாழ்வு 1963ல் முற்றுப் பெற்றது. அருணகிரிநாதர் படத்தில் 'நிலவோ அவள் இருளோ', 'அம்மா தெய்வம் ஆனதுமே', 'ஆடவேண்டும் மயிலே' ஆகிய மூன்று பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார். அந்நிலையில் திடீரென்று அவர் நோய்வாய்ப்பட்டார். 1963 நவம்பர் 20 அன்று ஜி.ராமநாதன் மறைந்தார். காலத்தால் அழியாத பல பாடல்களைத் தந்திருக்கும் ஜி.ராமநாதன், மறைந்தாலும் இன்னிசையாக, செந்தமிழாக ரசிகர் உள்ளங்களில் என்றும் நிறைந்திருக்கிறார்.

அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline