Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | நூல் அறிமுகம் | அஞ்சலி | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
நேர்காணல்
வி.கல்யாணம், காந்திஜியின் தனிச்செயலர்
- அரவிந்த் சுவாமிநாதன்|அக்டோபர் 2009|
Share:
Click Here Enlarge"இத்தகைய மனிதர் இந்த மண்மீது நடந்தார் என்பதையே எதிர்காலத் தலைமுறைகள் நம்ப மறுக்கும்" என்று மகாத்மா காந்தியைப் பற்றிக் கூறினார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். அத்தகைய காந்திஜியோடு நெடுங்காலம் நடந்த பெருமையைப் பெற்றவர் திரு வி. கல்யாணம் என்ற தமிழர். காந்தியின் தனிச்செயலராக இருந்தவர். இளைஞராக இருந்தபோதே தமது பிரிட்டிஷ் அரசாங்கப் பதவியை உதறிவிட்டு வார்தாவில் இருந்த காந்தி ஆசிரமத்தில் சேர்ந்து பணியாற்றியவர். 87 வயதைக் கடந்துவிட்ட நிலையிலும் காந்தீயத்தை மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் என்ற முறையில் தரப்பட்ட சலுகை, விருது, நிதி என்று எதையும் ஏற்காமல், இன்னமும் கொள்கைப் பிடிப்போடு தேச நன்மைக்காகப் பணியாற்றி வருகிறார். ஊழல், வன்முறை, சுயநலம், ஒழுக்கமின்மை இவை மலிந்துவிட்ட இந்தச் சூழலில் இன்னமும் தூய்மைத் தீவாக வாழ்ந்து வருகிறார் கல்யாணம். காந்தி ஜயந்தியை நினைவுகூரும் இந்நேரத்தில் அவருடன் ஒரு பேட்டி...

கே: சுதந்திரப் போராட்டத்தில் உங்களுக்கு எவ்வாறு ஈடுபாடு வந்தது?

ப: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்திஜி தொடங்கினார். அப்போது எனக்குத் தெரிந்தவர் ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கொடுத்து, அதை இரவு நேரத்தில், யாருக்கும் தெரியாமல், இந்தியர்கள் வசிக்கும் வீடுகளில் மட்டும் போட்டுவிட்டு வருமாறு கூறினார். நானும் இரவு நேரத்தில், ஒவ்வொரு வீட்டுக் கதவின் உள்ளும் அந்தப் பிரசுரத்தைத் தள்ளி விட்டேன். அதை ஒரு போலீஸ்காரர் பார்த்துவிட்டார். என்ன அது என்று வாங்கிப் பார்த்துவிட்டு, வெள்ளைக்காரர்களுக்கு எதிராகச் செயல்படுகிறாயா என்று சொல்லி என்னைக் கைது செய்து கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார். என் பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. ஆனாலும் இதெல்லாம் அந்தக் காலத்தில் சகஜம் என்பதால் அவர்கள் இதைப் பெரிதுபடுத்தவில்லை.

பெரிய மனிதர்கள் வந்தாலும் கூட தரையில்தான் அமர வேண்டும். அங்கு எல்லாமே சிறுசிறு குடில்கள்தான். மின்சாரம், தண்ணீர்த் தொட்டி, குழாய் எல்லாம் கிடையாது. கிணற்றில் இருந்துதான் நீர் இறைத்துக் கொள்ள வேண்டும்.
கே: காந்தி ஆசிரமத்தில் எப்படிப் போய்ச் சேர்ந்தீர்கள்?

ப: நான் பிரிட்டிஷ் அரசாங்க ஊழியன். ஆனாலும் எனக்கு ஆபிஸிற்கு போய் உட்கார்ந்து கொண்டு குமாஸ்தா வேலை செய்யப் பிடிக்கவில்லை. எப்பொழுதும் சுறுசுறுப்பாக ஏதாவது உடல் உழைப்பதுதான் எனக்குப் பிடிக்கும். அப்போது டெல்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியராக தேவதாஸ் காந்தி இருந்தார். அவர் காந்தியின் புதல்வர் என்பது எனக்குத் தெரியாது. என் நண்பர் ஒருவர் தேவதாஸ் காந்திக்கும் நண்பர். அவர் என்னைப்பற்றி, அலுவலக வேலையைவிட, உடலுழைப்பதில் நான் ஆர்வமாக இருப்பது பற்றி அவரிடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு அவரும் இப்படிப்பட்டவர் ஆசிரமத்தில் போய்ச் சேரலாமே, அங்கு இவர் போன்றவர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்குமே என்று கூறியிருக்கிறார். ஒருநாள் நாங்கள் தேவதாஸ் காந்தியைச் சந்தித்தோம்.

அவர் என்னிடம் ஆசிரமம் என்றால் அவரவர் வேலையை அவர்களே செய்துகொள்ளும் சுயச்சார்பு அமைப்பு என்று கூறி, ஆர்வம் இருந்தால் ஆசிரமத்தில் போய்ச் சேர்ந்துகொள்ளலாம் என்று கூறினார். நான் சரி என்றேன். அவர் ஒரு அறிமுகக் கடிதம் கொடுத்தார். அதை எடுத்துக்கொண்டு வார்தா ஆசிரமத்தைச் சென்றடைந்தேன். அது காந்தியின் ஆசிரமம் என்பது அதுவரை எனக்குத் தெரியாது.

ஆசிரம மேனேஜர் என்னை ஒரு சிறு குடிசைக்கு அழைத்துக் கொண்டு போனார். செருப்பைக் கழற்றி வெளியே வைத்துவிட்டு இருவரும் உள்ளே சென்றோம். அது ஒரு சிறு அறை. உள்ளே மண்தரை, சாணி போட்டு மெழுகியிருந்தது. நாற்காலி இல்லை. எந்தவித ஆடம்பரப் பொருளும் அங்கே இல்லை. அப்போது அங்கே தரையில் ஒரு பூரான் ஊர்ந்து சென்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். உடனே நான் வேகமாக வெளியே சென்று செருப்பை எடுத்து வந்து அந்தப் பூரானை அடித்துக் கொன்றுவிட்டேன். "என்னப்பா, இப்படிப் பண்ணிட்டியே?" என்றார் மானேஜர் வருத்தத்துடன். "பூரான் கடிச்சா விஷம்" என்றேன் நான். அப்போது அவர் சொன்னார், "அப்பா, இது காந்தி ஆசிரமம். இங்கே வன்முறை என்பதற்கு இடமே இல்லை. அஹிம்சைதான் நமது கொள்கை. அதைப் புரிந்து நடந்து கொள்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதன் பின்னர்தான் அது காந்தியின் ஆசிரமம் என்பதும், எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத அஹிம்சையே அவரது கொள்கை என்பதும் எனக்குத் தெரிய வந்தது.

கே: ஆசிரம வாழ்க்கை குறித்துச் சொல்லுங்கள்...

ப: ஆசிரம வாழ்க்கை மிக வித்தியாசமானது. நான் டெல்லியில் மிகப்பெரிய வீட்டில் வசித்தவன். வசதியாக வாழ்ந்தவன். ஆசிரம வாழ்க்கையோ அதற்கு நேர்மாறானது. தங்குமிடம் ஒரு சிறு அறைதான். அதில் கழிப்பிட வசதிகூடக் கிடையாது. கழிப்பிடம் வெளியே தனியாகச் சிறுசிறு அறைகளைக் கொண்டதாக இருக்கும். உள்ளே ஐந்தடி ஆழமுள்ள ஒரு பெரிய குழி இருக்கும். அங்கே தண்ணீர் ஒருபுறம், அதை எடுக்க ஒரு குவளை. மணல் ஒருபுறம் கொட்டி வைக்கப்பட்டிருக்கும். அதை அள்ள ஒரு அகப்பை. காலைக்கடனை முடித்ததும் மணலை அள்ளி அதன்மேல் போட்டு மூடிவிட வேண்டும். இவ்வாறு 12 பள்ளங்கள் அங்கே இருந்தன. குழி நிரம்பிவிட்டால் வேறு ஒன்றைப் பயன்படுத்துவார்கள். சிறிது காலத்திற்குப் பின் அந்த மண் எல்லாம் எருவாகப் போய்ச் சேர்ந்துவிடும்.

ஆசிரமத்தில் காலையில் சீக்கிரமே எழுந்து கொள்ள வேண்டும். டீ, காபி கிடையாது. வெந்நீரில் சிறிது எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, சிறிது தேனைச் சேர்த்துப் பருகக் கொடுப்பார்கள். பெரிய மனிதர்கள் வந்தாலும் கூட தரையில்தான் அமர வேண்டும். கண்டிப்பாகப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும். ஆசிரம அலுவலகம் உட்பட அங்கு எல்லாமே சிறுசிறு குடில்கள்தான். மின்சாரம், தண்ணீர்த் தொட்டி, குழாய் எல்லாம் கிடையாது. கிணற்றில் இருந்துதான் நீர் இறைத்துக் கொள்ள வேண்டும்.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான எளிய சமச்சீரான உணவுதான். சாப்பாட்டு நேரத்தில் மணி அடிக்கும். உண்ட பிறகு, தட்டு, சமைத்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டுபோய்க் கழுவி வைக்கவேண்டும். எல்லா வேலைகளையும் பகிர்ந்து, அவரவருக்கு விருப்பமான வேலையைச் செய்யலாம். எனக்குத் தோட்ட வேலை மிக விருப்பமானது. அதுபோகப் பெருக்குவது, துடைப்பது போன்ற வேலைகளையும் செய்து வந்தேன். ஆசிரம உணவு விடுதியிலும் வேலை செய்வேன்.

எனக்கு ஆசிரம வேலை பிடித்து விட்டது. அதனால் டெல்லிக்குச் சென்று அரசாங்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் வார்தா ஆசிரமத்திற்கு வந்தேன். நான் இரண்டு முறை ஆசிரமத்துக்குப் போனபோதும் காந்திஜியைச் சந்திக்க முடியவே இல்லை.

கே: காந்தியை எப்போதுதான் சந்தித்தீர்கள்?

ப: நான் ஆசிரமம் சென்றபோது காந்திஜியும், தொண்டர்களும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆகா கான் பேலஸ் சிறையில் இருந்தனர். அப்போது காந்தியின் செயலாளராக மகாதேவ் தேசாய் இருந்தார். சிறந்த அறிவாளி. அவரும் காந்திஜியோடு சிறையில் இருந்தார். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக 15 ஆகஸ்ட் அன்று அவர் மாரடைப்பால் இறந்து விட்டார். அது காந்திஜிக்குப் பேரிழப்பாக இருந்தது. பின் சில மாதங்களில் கஸ்தூரிபாய்க்கும் உடல்நலமில்லாமல் அங்கேயே காலமாகி விட்டார். இருவரையும் அங்கேயே அடக்கம் செய்தார்கள். தினமும் காலை அவர்களது சமாதித் தலத்துக்குச் சென்று பிரார்த்தனாஞ்சலி செய்துவிட்டு வருவார் காந்தி. நெருங்கிய இரண்டு நபர்களின் மரணம் காந்திஜிக்கு மிகுந்த மனச்சோர்வைக் கொடுத்தது. நாளடைவில் அவரது உடல்நலம் சீர்கெட்டது. அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் அது நாடு முழுவதிலும் மிகப் பெரிய பிரச்சனையை உண்டாக்கிவிடும் என்று பயந்த பிரிட்டிஷ்காரர்கள், காந்தியை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்தனர். 1944 மே மாதத்தில் காந்திஜி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

சிறையிலிருந்து வெளியே வந்த காந்தியடிகள் மும்பையில் உள்ள ஒரு தொழிலதிபர் வீட்டில் தங்கி, இயற்கை வைத்தியம் செய்து கொண்டார். அவர் ஆசிரமத்திற்கு வராததால் ஆசிரமத்தில் உள்ள ஒருசிலர் காந்தியைச் சென்று சந்தித்து வரலாம் என்று புறப்பட்டனர். நானும் அவர்களுடன் போய்ப் பார்த்தேன்.

கே: காந்தியின் அந்தரங்கச் செயலரானது எப்படி?

ப: காந்திஜி அப்போது ஜுஹுவில் தங்கியிருந்தார். நாங்கள் உள்ளே நுழைந்தபோது அவர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். வெறும் லங்கோடு மட்டும் கட்டிக் கொண்டிருந்தார். இவர்தான் காந்தி என்று என்னுடன் வந்தவர் சொன்னார். எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. சரி, குளிக்கப் போகிறார் போலிருக்கிறது என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் அதுதான் அவரது நிரந்தர உடை என்பது தெரிய வந்ததும் அவர் மீதிருந்த மரியாதை மேலும் அதிகமாகி விட்டது. நான் அருகில் சென்று அவரை வணங்கிவிட்டு நின்றுகொண்டே இருந்தேன். மிகவும் தளர்ந்து வயதானவராக இருந்தார். என்னைப் பற்றி, என் குடும்பத்தைப் பற்றியெல்லாம் விசாரித்தார். அவருக்குப் பல் இல்லாததால் பேசுவது சரிவரப் புரியவில்லை. மெல்லிய குரலில் வேறு பேசினார். இருந்தாலும் ஒருவாறு அவரது கேள்விகளுக்கு பதிலளித்தேன். உனக்கு 'டைப்' அடிக்கத் தெரியுமா, எத்தனை மொழிகள் தெரியும் என்றெல்லாம் கேட்டார். நானும் டைப் தெரியும், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, உருது எல்லாம் தெரியும் என்று பதில் சொன்னேன். நான் பிரிட்டிஷ் அரசாங்க உத்தியோகத்தில் 250 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்ததைச் சொன்னவுடன் அவருக்கு ஆச்சரியமாகி விட்டது. "அடேயப்பா, என்னால் அவ்வளவு சம்பளமெல்லாம் தர முடியாது, 60 ரூபாய்தான் தரமுடியும்" என்று சொன்னார். எனக்குப் பணத்தாசை என்பது அப்போது இருக்கவில்லை. இப்போதும் இல்லை. எனவே காந்தியிடம் எனக்குச் சம்பளமே வேண்டாம், உங்களுடன் இருக்கத் தயார் என்று கூறி விட்டேன். ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில்தான் நான் அவருக்குச் செயலாளர் ஆனேன்.
Click Here Enlargeகே: உங்கள் ஆசிரம அனுபவங்களைச் சொல்லுங்களேன்...

ப: காந்திஜி மிகமிகக் கண்டிப்பானவர். காலையில் சுமார் ஒருமணி நேரம் எனக்கு டிக்டேஷன் கொடுப்பார். பிறகு மசாஜ் எடுத்துக் கொள்வார். பின்னர் வாக்கிங் போவார். காந்திஜிக்கு வரும் கடிதங்களை மொழி வாரியாகப் பிரித்து அடுக்கி வைப்பது என் முக்கியப் பணி. காந்திஜி பதில் போடுவதற்காக புதிய தாள்களை வாங்க அனுமதிக்க மாட்டார். வந்த கடிதத்தின் மறுபுறத்தில் இருக்கும் காலிப் பகுதியைப் பயன்படுத்துவார்.

எந்தப் பொருளையும் பாழாக்குவதோ, தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துவதோ, பாதுகாத்து வைப்பதோ காந்திக்குப் பிடிக்காது. நேரந்தவறாமை, ஒழுங்கு, வாய்மை அவருக்கு மிகமிக முக்கியம். காலையில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு யாரும் வராவிட்டால் காந்திஜி அவர்களை சாத்வீகமான முறையில் கண்டிப்பார். ஆசிரமம் என்று வந்து விட்டால் அதன் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடந்தது கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் ஆசிரமத்தை விட்டுச் செல்ல வேண்டியதுதான் என்று கண்டிப்பாகச் சொல்லி விடுவார். அவருக்குக் கோபம் வரும். ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு சாத்வீகமாக எச்சரிப்பார். கோபம் என்பது அவரைப் பொறுத்தவரை வன்முறை. ஆகவே மனத்தளவில் கூட வன்முறை இருக்கக் கூடாது என்றே அவர் விரும்பினார். ஆசிரமப் பிரார்த்தனையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், பார்சி என்று எல்லா மத வழிபாடுகளும் இருக்கும். காந்தி ஆசிரம வாழ்க்கை இயற்கையோடு இயைந்த வாழ்முறை.

கே: இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கும், பிரச்சனைக்கும் உண்மையான காரணம் என்ன?

ப: இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கும், பிரச்சனைக்கும் உண்மையான காரணம் ஒற்றுமையின்மைதான். தலைவர்களிடமும் ஒற்றுமையில்லை. மக்களிடமும் ஒருமித்த கருத்து இல்லை. இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்று காந்திஜி விரும்பினார். பல முயற்சிகள் மேற்கொண்டார். நிறையப் போராடினார். இந்தியாவின் ஒரு பகுதி பாகிஸ்தானாகப் பிரிந்து தனிநாடாகச் செல்வதை அவர் விரும்பவில்லை. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் போது ஒரே தேசமாக இருந்தோம். ஆனால் நம்மை நாமே ஆளப்போகும் நேரத்தில் ஏன் பிரிய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். முகமதலி ஜின்னா இந்த விஷயத்தில் கடைசிவரை மிகப் பிடிவாதமாக இருந்தார். காந்திஜி அவரிடம் இஸ்லாமியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும், தன்னை நம்பலாம், தான் நிச்சயம் அதற்கெல்லாம் உறுதுணையாக இருப்பேன் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனால் ஜின்னா கேட்கவில்லை. பெரும்பான்மையினரின் ஆட்சியில் சிறுபான்மையருக்கான உரிமைகள் பாதுகாக்கப்படாது என்றே அவர் நினைத்தார். முஸ்லீம்களுக்குத் தனி நாடு வேண்டும் என்பதில் அவர் மிக உறுதியாக இருந்தார். மேலும் நேருவின் மீதும் அவருக்கு நிறையக் கசப்புணர்வு இருந்தது.

இந்தப் பிரச்சனைக்கு முடிவு காணும் பொருட்டு காந்தி ஒரு யோசனையை முன்வைத்தார். இந்தியா ஒன்றுபட்டே இருக்க வேண்டும் என்றும், அந்த ஒன்றுபட்ட இந்தியாவின் பிரதம மந்திரியாக ஜின்னாவே இருக்கலாம் என்றும் அவர் கூறினார். ஆனால் அது அப்போதைய அரசியல் தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பாகிஸ்தான் பிரிந்தது.

நட்புடன்தான் பிரிந்தோம். ஆனாலும் அதன்பின் கலவரங்கள், குழப்பங்கள், வன்முறை என்று லட்சக்கணக்கானோருக்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டது. அது இன்றுவரை கஷ்மீர் பிரச்சனை, எல்லைப் பிரச்சனை என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. காந்திஜி சொல்லியது மட்டும் நடந்திருந்தால் இந்தக் கூச்சல், குழப்பம் எல்லாம் இருந்திருக்காது. இந்தியா வலுவான, ஒன்றுபட்ட பாரத தேசமாக இருந்திருக்கும்.

இன்று பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குகின்றனர்.அதிகாரத்தைப் பயன்படுத்திப் பலமடங்கு சம்பாதிக்கின்றனர். இலவசங்களைக் கொடுத்து மக்களை மூளைச்சலவை செய்கின்றனர். தலைமுறைக்குச் சொத்துக்களைச் சேர்த்து வைத்துவிட்டு மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஏமாற்றுகின்றனர்.
கே: காந்திஜி மரணமடைந்த போது உடன் இருந்தவர் நீங்கள், அந்த நிகழ்வைப் பற்றிச் சொல்லுங்களேன்!

ப: ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தது. சரியாக ஐந்தரை மாதத்திற்கு பிறகு அதாவது ஜனவரி 30ம் தேதி மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் காந்திஜி இறப்பதற்குச் சில நாட்கள் முன்னால் அவர்மீது ஒரு கொலை முயற்சி நடந்தது. அவர் கலந்து கொள்ளும் பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வீசப்பட்டது. அது அவர் இருக்கும் பக்கம் விழாததால் பிழைத்தார். பிர்லா ஹவுஸின் சுவற்றின் மீது விழுந்து சுவர் உடைந்து விட்டது. 'படார்' என்ற பெரிய சப்தம் கேட்டது. காந்திஜியோ ஏதாவது மிலிடரி பிராக்டிஸ் நடந்து கொண்டிருக்கும் என்று நினைத்துப் பேசாமல் இருந்து விட்டார். பின்னர் அவரிடம் முழு விவரம் தெரிவிக்கப்பட்டது. காந்தி மீதான கொலை முயற்சிக்காக மதன்லால் என்பவனை கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. காந்தியோ அவனை மன்னித்து விட்டு விடும்படியும், தான் இந்துமதத்திற்கு எதிராக நடந்து கொள்வதாக அவன் தவறாக நினைத்து அப்படிச் செய்திருப்பதாகவும், அவனை விட்டுவிட வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.

முதல் கொலை முயற்சி நடந்தபோது உள்துறை அமைச்சர் சர்தார் படேலுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் துணைப்பிரதமரும் கூட. அவர் உடனே காந்திஜிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கொடுத்தார். 21ம் தேதி பிர்லா ஹவுஸிற்கு ஒரு போலிஸ்காரர் தன் படையுடன் வந்தார். பார்வையாளர்களைச் சோதனை செய்து விட்டுத்தான் உள்ளே அனுப்ப வேண்டும் என்று அவர் சொன்னார். ஆனால் காந்திஜி மறுத்து விட்டார். "நான் நடத்துவது பிரார்த்தனைக் கூட்டம். பிரார்த்தனைக்கு வருபவர்களை எதற்காகச் சோதனை செய்ய வேண்டும்? அப்படிச் சோதனை செய்து, அவர்களுக்கு தொந்தரவு கொடுத்துத்தான் பிரார்த்தனைக் கூட்டம் நடத்த முடியும் என்றால் நான் பிரார்த்தனையையே நிறுத்தி விடுகிறேன்" என்று கூறிவிட்டார். தகவல் ஐ.ஜி.க்குத் தெரிவிக்கப்பட்டது. அவரும் வந்து பேசிப் பார்த்தார். "நீங்கள் 50, 100 பேர் அல்ல. இருபதினாயிரம் பேர் வந்தாலும் என்னைக் காப்பற்ற முடியாது. My life is in the hands of God" என்றார் காந்தி. வேறு வழியின்றி அவர்கள் திரும்பிப் போனார்கள்.

ஜனவரி 30. மாலை நேரம். காந்திஜி தனது பேத்திகளின் தோள்களில் கை வைத்தபடி பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்து கொண்டிருந்தார். நாங்கள் பின்னால் வந்து கொண்டிருந்தோம். நான் காந்திஜிக்கு இடப்புறம் சுமார் 6 அங்குலம் தொலைவில் நின்று கொண்டிருந்தேன். அப்போது எதிரே வந்த கோட்ஸே குனிவது போலக் குனிந்து சடாரென்று காந்தியைச் சுட்டுவிட்டான். அவன் நேராகச் சுட்டிருந்தால் என் மீதும் குண்டு பாய்ந்திருக்கும். அவன் சாய்வாக நின்று கொண்டு சுட்டதால் அது காந்திஜியின் மார்பின் வலப்புறம் பாய்ந்தது. அவர் உடனே கீழே விழுந்து இறந்து விட்டார்.

கே: மகாத்மா கண்ட கனவில் கொஞ்சமாவது நிறைவேறியிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

ப: காந்திஜி எதற்காக இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபட்டார்? பிரிட்டிஷார் நமது சொத்துக்களைச் சுரண்டிக் கொண்டிருந்தனர். இந்தியர்களை ஏவல் அடிமைகளாக நடத்தினர். ஊழியர்களுக்கு தேவையில்லாமல் அதிக சம்பளத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். கிராமங்களை அபிவிருத்தி செய்யவில்லை. அங்கே பள்ளிகள், கல்வி, மருத்துவ வசதி, சரியான சாலை வசதி, குடிதண்ணீர் ஆகியவை இல்லை. அவற்றில் பிரிட்டிஷார் அக்கறை காட்டவில்லை. ஆகவே நாமே ஆட்சி நடத்தினால் இந்த நிலைமை மாறும், கிராமங்கள் முன்னேறும் என காந்திஜி நினைத்தார். சுதந்திரத்திற்குப் பாடுபட்டார். ஆனால் இன்று நிலைமை என்ன?

காந்திஜி எல்லோருடைய சம்பளத்தையும் குறைக்கவேண்டும் என்று சொன்னார். "எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் எல்லாம் சமூகத்திற்கு வேலை செய்ய வந்திருப்பவர்கள். நம் வேலைக்காரர்கள். நமது எஜமானர்களல்ல. அதனால் அவர்களுக்கு சம்பளம் 500 ரூபாய் கொடுத்தால் போதும்" என்று காந்தி சொன்னார். ஆனால் இன்று நடப்பது என்ன? எல்லோருக்கும் மிக அதிக ஊதியம் வழஙகப்படுகின்றது. அத்தோடு மின்சாரம், டெலிபோன், பெட்ரோல், பயணங்கள் போன்றவை இலவசம் என்று ஏகப்பட்ட சலுகைகள். ஒவ்வொருவருக்கும் லட்சக்கணக்கில் பணம் செலவாகிறது. இதெல்லாம் காந்தியக் கொள்கைக்கு முற்றிலும் முரணானது. சுதந்திர இந்தியாவைப் பற்றி அவர் கண்ட கனவுகள் இன்னமும் கனவாகவே இருக்கின்றன என்பதுதான் கசப்பான உண்மை.

கே: தற்கால அரசியல், அரசியல்வாதிகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

ப: அரசு, ஏழை, எளிய மக்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டும் என்றெல்லாம் காந்தி வலியுறுத்தினார். ஆனால் அவரோடு இருந்த பலரே இக்கொள்கைகளைப் பின்பற்றவில்லை. நான் காந்திஜியுடன் இருந்ததால் எல்லாப் பெரிய மனிதர்களுடனும் பழகி இருக்கிறேன். வெகு நெருக்கமாகவே பலரைத் தெரியும். ஆனால் அதில் காந்தி சொல்படி நடப்பவர்கள் வெகு குறைவு. அந்த மாதிரி ஆட்கள் மீண்டும் வருவது வெகு கஷ்டம்.

லால்பகதூர் சாஸ்திரி, கான் அஃப்துல் கபார் கான், ராஜாஜி, டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத் போன்ற சிலர் மட்டுமே காந்தியக் கொள்கைப்படி இறுதிவரை வாழ்ந்தனர். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தில் பாதியை மாத்திரமே பெற்றுக்கொண்டார். சதாரா ஆசிரமத்தில் தங்கினார். அவர் இறக்குபோது கையில் காலணா கிடையாது. லால்பகதூர் சாஸ்திரி 'எனக்கு அரசாங்கத்தில் தரும் ஊதியம் மக்களுக்கு சேவை செய்ய தரப்படுகிறது. அது அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளுக்கு மிச்சம் இருக்குமேயானால், அந்தத் தொகையைக் குறைத்துக் கொள்ள வேண்டும்' என்று அரசாங்கத்துக்குக் கடிதம் எழுதினார். தற்காலிகப் பிரதமராக இரண்டு முறை இருந்த குல்சாரிலால் நந்தா அரசியலை விட்டு ஓய்வு பெற்றபோது அவரிடம் காலணா கிடையாது. அக்கால அரசியல் தலைவர்கள் அப்படி வாழ்ந்தார்கள், ஆனால் இன்றைக்கு...?

இன்று பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குகின்றனர். கோடி, கோடியாகச் செலவு செய்து தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். ஜெயித்த பின் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பலமடங்கு சம்பாதிக்கின்றனர். இலவசங்களைக் கொடுத்து மக்களை மூளைச்சலவை செய்கின்றனர். தலைமுறைக்குச் சொத்துக்களைச் சேர்த்து வைத்துவிட்டு மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஏமாற்றுகின்றனர். மக்களுக்குச் சொந்தமான கோடிகோடிக் கணக்கான ரூபாய் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. அவை கிடைத்தால் இந்தியாவின் கடன் அனைத்தையும் அடைத்து விடலாம். பல ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றி விடலாம். காந்திஜி இப்போது உயிருடன் இருந்திருந்தால் ஆட்சியாளர்களுக்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கியிருப்பார். இப்போது என்றில்லை. அவர் மட்டும் ஜனவரி 1948ல் சாகாமல் உயிரோடு இந்திருந்தால் அந்த வருட முடிவுக்குள்ளேயே ஆட்சியாளர்களுக்கு எதிராக மீண்டும் தனது சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கியிருப்பார். அந்த அளவுக்கு அவர் கூட இருந்தவர்களே அவருடைய கொள்கைகளுக்கும் கருத்துக்களுக்கும் முரணாகச் செயல்பட்டார்கள்.

கே: உங்களது தேசிய பாதுகாப்புக் கழகம் குறித்துச் சொல்லுங்களேன்!

ப: தேசிய பாதுகாப்புக் கழகத்தை (National Protection Party) ஆரம்பித்து 13 வருடங்கள் ஆகின்றன. தேசப்பற்றாளர் எம். குமார் அதை ஆரம்பித்தார். இது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி. ஆனால் பதவிக்கு வராமலும் தேசத்துக்கு நல்லது செய்யமுடியும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நான் தலைவராக இருக்கிறேன். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வீ. சுந்தரம் கொள்கை பரப்புச் செயலாளர். எம். குமார் அதன் பொதுச்செயலாளர்.

இன்று ஒருவர் தேர்தலில் நிற்கும்போது தன்மீது எந்த கிரிமினல் வழக்கும் இல்லை என்று தேர்தல் கமிஷனுக்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசாங்கத்தையும், தேர்தல் கமிஷனையும் நாங்கள் பலமுறை வற்புறுத்தி, பல்வேறு போராட்டங்களுக்குப் பின் அரசு அதை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொருவரும் தனது முழுமையான, உண்மையான சொத்துக்கணக்கைத் தெரிவிக்க வேண்டும் என்ற மசோதா நடைமுறைக்கு வருவதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது தேசிய பாதுகாப்புக் கழகம்தான். பார்லிமெண்டிலும், ராஜ்யசபாவிலும் அன்றாட நடவடிக்கைகள் இன்று தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படுவதற்கும் நாங்கள்தான் காரணம்.

கே: தென்றல் வாசகர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப: வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தங்களால் முடிந்த அளவு நாட்டின் முன்னேற்றத்திற்கான பொருளாதார உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதுதான் நான் கூற விரும்புவது.

காந்தி, காந்தீயம் போன்ற சொற்கள் செலாவணி இழந்து வரும் இந்நாளிலும், தனிமனித ஒழுக்கம், அஹிம்சை, வாய்மை என்று வாழும் ஒருவரைப் பார்த்ததில் பெருமகிழ்ச்சி. அதிகாலையில் எழுந்து தன் வீட்டின் எதிரே உள்ள சாலையைச் சுத்தம் செய்வது, செடி, கொடிகளைப் பராமரிப்பது, காந்தியம் பற்றி இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதுவது, கூட்டங்களில் உரையாற்றுவது, தம்மை நாடி வருவோருக்கு உதவுவது எனச் சலியாது உழைத்து வரும் திரு வி.கல்யாணம் அவர்களுக்கு நமது நன்றியைக் கூறி வணங்கி விடைபெற்றோம்.

*****


காந்தியை மதித்த பிரிட்டிஷ்காரர்கள்
பிரிட்டிஷ்காரர்கள் பலர் காந்திஜியை மிகவும் மதித்தார்கள். இந்தியாவுக்குச் சுதந்திரம் தரவேண்டும் என்றும் ஆர்வமாக இருந்தார்கள். அவர்கள் காந்திஜிக்குப் பலவிதங்களில் ஒத்துழைத்தார்கள். ஆதரவாகவும் செயல்பட்டார்கள். மீரா பென் போன்றோரை உதாரணமாகச் சொல்லலாம். காந்திஜியின் சார்பில் அவர்கள் அரசிடம் பேசுவார்கள். ஆனாலும் அங்கே இங்கிலாந்தில் சென்ன சொல்கிறார்களோ அதன்படிதான் அவர்கள் நடக்க வேண்டியிருந்தது என்பதால், காந்திஜியின் பல வேண்டுகோள்கள், ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டன.

சொல்லப் போனால் என்னை ஆசிரமத்திற்குப் போகச் சொல்லி வற்புறுத்தியதே என் மேலதிகாரியான ஒரு பிரிட்டிஷ்காரர்தான். 'The Great Man' என்று அவர் அடிக்கடி காந்தியைப் பற்றிச் சொல்வார். அவர்தான் வேலையை விடவேண்டாம் என்று கூறி லீவு கொடுத்து என்னை ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தார். உனக்கு அங்கே பிடித்திருந்தால் வேலையை விட்டுவிடு. பிடிக்காவிட்டால் லீவு முடிந்ததும் இங்கேயே தொடர்ந்து வேலை பார் என்று கூறி ஊக்கமளித்தார். அவர்கள் எல்லாம் காந்திஜியின் நேர்மையை, சுயநலமின்மையை வியந்தார்கள்.

*****


ஸ்டேஷன் மாஸ்டர் வசூலித்த அபராதம்!
காந்திஜி எப்போதும் மூன்றாவது வகுப்பில்தான் செல்வார். அவருக்கென்று தனியாக ஒரு பெட்டியை ஒதுக்கி வைத்திருந்தார்கள். ஆனால் அதற்குண்டான டிக்கெட்டுகள் வாங்கித்தான் அவர் பயணம் செல்வார் என்பது எனக்குத் தெரியாது. இலவசமாக அரசு பயணச்சலுகை கொடுத்திருக்கிறது என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் வேலைக்குச் சேர்ந்த புதிது வேறு.

எங்கு சென்றாலும் நான்கைந்து பேர் அவருடன் பயணம் செய்வார்கள். அன்று நான், அவர், ஒன்றிரண்டு செயலாளர்கள், மற்றும் grand Nieces ஆகியோர் பயணம் செய்து கொண்டிருந்தோம். வண்டி சுமார் 100 மைல் தூரம் சென்றிருக்கும். திடீரென்று என்னைக் கூப்பிட்ட காந்தி, "டிக்கெட் வாங்கி விட்டாயல்லவா?" என்று கேட்டார். நான் "இல்லை சார், டிக்கெட் வாங்க வேண்டும் என்பது எனக்குத் தெரியாது" என்று பதில் சொன்னேன். "அப்போ நாம டிக்கெட்லெஸ் டிராவலர்களா?" என்று கேட்டார் காந்தி. பின் "சரி, அடுத்த ஸ்டேஷனில் வண்டி நிற்கும்போது ஸ்டேஷன் மாஸ்டரை வந்து என்னை பார்க்கச் சொல்" என்று கூறிவிட்டார். பொதுவாக காந்தியைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக ஸ்டேஷனில் காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களில் ஸ்டேஷன் மாஸ்டரும் இருப்பார். காந்திஜி அனுமதி தராமல் யாரும் வந்து அவரைச் சந்திக்க இயலாது.

அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்றது. நான் ஸ்டேஷன் மாஸ்டரிடம் விஷயத்தைச் சொன்னதும் காந்திஜி தன்னைப் பார்க்க விரும்புகிறாரே என்று அவருக்கு ஒரே சந்தோஷம். காந்திஜி அவரிடம் என்னைக் காட்டி, "இந்தச் சின்னப் பையன் இப்போதுதான் சேர்ந்திருக்கிறான். புதுசு. அதனால் டிக்கெட் எடுக்காமல் இருந்து விட்டான். நாங்கள் பாட்னா வரைக்கும் போகிறோம். நீங்கள் டிக்கெட் கொடுத்து விடுங்கள் என்று கூறினார். அதற்கு ஸ்டேஷன் மாஸ்டர், "சார், நீங்கள் மிகப் பெரிய மகான். நீங்கள் எதற்கு டிக்கெட் வாங்க வேண்டும்? நீங்கள் தாராளமாகப் பயணம் செய்யலாம்" என்று சொன்னார். உடனே காந்தி அவரிடம் சுற்றியிருந்த மக்களைக் காட்டி, "சரிதான். இது போன்று எத்தனை மகான்களை நீங்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய விட்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். பின் அவரிடம் கண்டிப்புடன் "நீங்கள் டிக்கெட் கொடுக்காவிட்டால் இதுபோல நீங்கள் பயணிகளை இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கிறீர்கள் என்று நானே அரசாங்கத்திடம் புகார் செய்ய நேரிடும்" என்று கூறினார். உடனே அவர் பணம், அபராதம் எல்லாம் வாங்கிக்கொண்டு பயணச்சீட்டைக் கொடுத்தார்.

*****


காந்திஜி கொடுத்த செக்
ஒருமுறை பாட்னாவுக்குச் சென்றிருந்தோம். காந்திஜிக்குத் தெரிந்த ஆசிரம அன்பர் ஒருவர் அங்கே சந்திக்க வந்திருந்தார். காந்திஜி அவருக்கு ஏதோ ஒரு வேலை கொடுத்தார். அதற்கான செலவுக்குப் பணம் கொடுக்கவேண்டி இருந்தது. என்னைக் கொடுக்கச் சொன்னார். என்னிடம் எனது சொந்தப்பணம் 35 ரூபாய் இருந்தது. அதைக் கொடுத்து விட்டேன். பொதுவாக காந்தியுடன் பயணம் செய்யும்போது பணத்திற்கு அவசியம் இருக்காது. ஏனென்றால், காந்திஜிக்குப் பிரியமானவர்களே சகலவிதமான ஏற்பாடுகளையும் செய்து விடுவார்கள். நானும் பணம் கொடுத்தை மறந்து விட்டேன். ஆனால் காந்திஜி அதை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார். பத்து நாளைக்குப் பிறகு, அதாவது 1948ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி, நாங்கள் டெல்லிக்கு வந்த பிறகு காந்திஜி 35 ரூபாய்க்கு ஒரு செக்கை எழுதி என்னிடம் கொடுத்தார். சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் பாட்னா கிளையின் மீதான செக் அது. எனக்கோ டெல்லியில் வங்கிக் கணக்கு இருந்தது. நான் மிகவும் தாமதமாக, அதாவது ஜனவரி 29ம் தேதி அன்றுதான், அதை வங்கிக்கு அனுப்பினேன். ஆனால் அதற்கு மறுநாள் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். நான் மறுநாளே ஓர் ஆளை அனுப்பி அந்தச் செக்கைத் திருப்பி வாங்கிவிட்டேன். மகாத்மாவின் கையெழுத்தல்லவா அதில் இருக்கிறது! அதைப் பொக்கிஷமாக இன்னமும் பாதுகாத்து வருகிறேன்.

*****


'ஹே ராம்!' என்று காந்தி சொன்னாரா?
ஒரு சிலர் அவர் இறக்கும்போது 'ஹே ராம்' என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். ஆனால் என் காதில் அப்படி ஏதும் விழவில்லை. காந்திஜியின் குரல் மிகவும் மெல்லியது. மார்பில் சுடப்பட்ட நிலையில் அவரால் அப்படிச் சொல்லியிருக்க முடியுமா, அது அந்தக் கூச்சல் குழப்பத்தில் எல்லோருக்கும் கேட்டிருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் அடிக்கடி 'ஹே ராம்' என்று சொல்லிக் கொண்டிருப்பார். இறக்கும்போதும் அப்படிச் சொன்னாரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் குண்டு பாய்ந்த மறுநிமிடமே அவர் கீழே விழுந்து இறந்து விட்டார்.

*****


சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
மேலும் படங்களுக்கு
Share: 
© Copyright 2020 Tamilonline