Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
வாசகர் கடிதம்
ஜூலை 2009: வாசகர் கடிதம்
- |ஜூலை 2009||(1 Comment)
Share:
தென்றலைத் தொடர்ந்து படித்துவருகிறேன். ஜூன், 2009 இதழில் எனக்கு சிறப்பாகப் பிடித்தது மணியன் செல்வனின் அருமையான நேர்காணல், சாதனையாளர் பி. வெங்கட்ராமன் பற்றிய குறிப்பு மற்றும் இலங்கைச் செய்தி, எல்லைகளில்லா மருத்துவர் போன்றவை. தொடர்ந்து சிறப்பாக வர என் வாழ்த்துக்கள்.

அ. முத்துலிங்கம்,
கனடா

தென்றல் பத்திரிகையை வேண்டி, விரும்பி, ரசித்து, அனுபவித்து, படித்து பலன்பெறும் பல லட்சம் வட அமெரிக்கத் தமிழர்களில் நானும் ஒருவன்.

உங்களது பத்திரிகை பற்றியும், உங்களது ஆசிரியர் குழுவைப் பற்றியும் பாராட்டி எழுதிக் கொண்டே போகலாம். தென்றல் மேலும் சிறப்புகளைப் பெற வாழ்த்துகிறேன்.

ரத்தினவேல்,
சன்னிவேல்


ஜூன் 2009 தென்றல் மிகச் சிறப்பாக இருக்கிறது. அட்டைப்படக் கட்டுரைகள் எல்லாமே எனக்குப் பிடித்திருந்தன. தென்றல் குழு அற்புதமான பணி செய்கிறது. தென்றலுக்கு எனது வாழ்த்துகள்.

‘அன்புள்ள சிநேகிதியே'வில் கூறியுள்ளபடி அமெரிக்காவுக்கு முதன்முறையாகப் பயணிக்கும் பெற்றோருக்கு ஏற்படும் கலாசார அதிர்ச்சி குறித்து ஒரு கையேடு வெளியிட வேண்டும். இளம் ஜோடிகள் தமக்குள்ளே ஒத்து அமைதியோடு வாழவேண்டுமே தவிர, பெரியவர்களிடம் போய் முறையிட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

கணேஷ் கிருஷ்ணமூர்த்தி (மின்னஞ்சலில்)


தென்றல் (ஜூன், 2009) ‘அன்புள்ள சிநேகிதியே' படித்தேன். காலம் மாறிவிட்டது. கணவன் மனைவி இருவருமே சமமான பங்குதாரர்கள்தாம். இதைப் புரிந்துகொண்டு தமக்குள் பகிர்ந்துகொள்ள வேண்டும். கணவர் அம்மாபிள்ளையாக இருக்கக் கூடாது.

நமசிவ் அருள் (மின்னஞ்சலில்)


தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்களைப் பார்த்தேன். ஆங்கிலக் குறுக்கெழுத்துகளோடு ஒப்பிடும்போது தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர் ஒன்றை உருவாக்குவது அதற்குத் தீர்வு காண்பதைவிடக் கடினமானது. நான் பார்த்த பல தமிழ் குறுக்கெழுத்துப் புதிர்களைப் போலல்லாமல் தென்றல் புதிர், வடிவ ஒழுங்கமைவு கொண்டதாக இருக்கிறது. இப்படிப் படைப்பது நிச்சயமாக ஒரு பெரிய சவால்தான். தமிழின் தனித்தன்மையை ஒரு சிலரால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடிகிறது, அந்தச் சிலரில் டாக்டர். வாஞ்சிநாதன் ஒருவர். இந்த அரிய முயற்சிக்கு எனது பாராட்டுதல்கள்.

ஆர். ராஜகோபாலன் (மின்னஞ்சலில்)


தென்றல் ஜூன் இதழில் ‘அன்புள்ள சிநேகிதியே' படித்தேன். பிள்ளையின் பெற்றோரை இந்தப் பெண்மணி குற்றம் கூறியிருக்கிறார். இந்தக் காலத்தில் பல பெண்கள் திமிர் கொண்டவர்களாகவும் தொட்டாற்சிணுங்கிகளாகவும் இருக்கிறார்கள். அவர்கள் மாமியார்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், ஆனால் தமது பெற்றோர்மீது மட்டுமே அக்கறை செலுத்துகிறார்கள். பொதுவாகவே, ஆண்கள் அப்பாவிகள், பெண்களோ ஆட்டிப் படைப்பவர்கள். பெண்ணின் தாயார்கள் அதிகமாக வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்கள். ஆனால், மாமியார் பக்கம் இருக்கும் நியாயத்தைப் பெண்கள் பார்ப்பதில்லை. எவ்வளவோ எழுதலாம், ஆனால் பயனில்லை.

வசந்தா ராமச்சந்திரன் (மின்னஞ்சலில்)


அழகு தமிழுக்கு உயிர்நீர் வார்த்து வரும் தென்றலுக்கு என் அன்பான வணக்கமும் வாழ்த்துக்களும். அமெரிக்காவில் எப்படி நாள் நகரப்போகிறதோ என நினைத்த எனக்கு, தென்றல் ஒரு நண்பனாய், நல்ல தமிழை இல்லம் சுமந்து வந்த தூதுவனாய் நாடி வர மகிழ்ந்து போனேன். வீட்டில் இருந்த சமீபத்திய மற்றும் பழைய பிரதிகள் ஒவ்வொன்றையும், வாசித்து வருகிறேன்.

ஒரு பிடிப்போடு நம் சந்ததிகள் தமிழ்ப் பண்பாட்டை அறியும் வண்ணம் சமுதாயப் பணி ஆற்றிவரும் தென்றலுக்குப் பெருமதிப்பு என்றும் உண்டு என்பதில் ஐயமில்லை.

வரப்புக்குள் - தேவையான
நீர் இருந்தால்
பயிருக்கு நல்லது.

வரம்புக்குள் முனைப்போடு
நாமிருந்தால்
நமக்கு - நம் சந்ததிக்கு நல்லது.

எம். ராஜூ,
இல்லினாய்ஸ்


தென்றல் ஜூன் 2009 இதழில் வெளிவந்த ‘அன்புள்ள சிநேகிதியே'வில் குறிப்பிட்டுள்ள இந்தப் பெண்ணுக்கு நடந்த சம்பவம் இந்தியாவிலும் நடப்பதைப் பார்க்க முடிகின்றது. அந்தக் காலத்தில் நாம் பெரியவர்களுக்குக் கீழ்ப்படிந்தோம், பராமரித்தோம் என்பதெல்லாம் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவையல்ல. பெண்கள் நன்றாகப் படித்து, நல்ல சம்பளத்தில் சொந்தக் காலில் நிற்கின்றனர். சுயமாகச் சிந்தித்துச் செயல்படுகின்றனர். பெரியவர்கள் அவர்கள் விஷயத்தில் தலையிடாதவரை மரியாதையும் கொடுக்கின்றனர்.

ஒரு குடும்பத்திலிருந்து மற்றொரு குடும்பத்துக்கு வரும்போது அங்கிருப்பவர்களை அனுசரித்து நடக்கக் கொஞ்ச நாட்களாகலாம். பெரியவர்கள் புரிந்து நடந்து கொண்டால் தேவையற்ற மன உளைச்சல்களிலிருந்து விடுபடலாம். மேலும் பெண்களுக்கென்று சில கொள்கைகள் இருக்கும். அதில் தலையிடும்போது தேவையற்ற பிணக்குகள் ஏற்படும். தன் மகனின் திருமண வாழ்வுக்காகப் பெற்றோர்கள் சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இப்போது அப்பெண்ணைப் பிரிந்திருக்கலாம். ஆனால் மகனுக்கு இன்னுமொரு வாழ்வை அமைத்துக் கொடுக்க அவர்கள் எத்தனை கஷ்டப்பட வேண்டும், எத்தனை இன்னல்களை எதிர் கொள்ள வேண்டும்? கொஞ்சம் யோசித்திருந்தால் தங்களைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டிருக்கலாம்.

திருமணம் ஆனதும் கணவன் கொடுக்கும் சலுகையும், சுதந்திரமுமே சில பெண்கள் தங்களை மாற்றிக்கொள்ள மிக முக்கிய காரணம்.

ஜயலக்ஷ்மி சேஷாத்ரி,
கனெக்டிகட்
ஓவியர் மணியம் செல்வன் நேர்காணல் மிக அருமை. அட்டையிலும் அசத்தி விட்டார். நடராஜர் ஓவியம் அற்புதம். சிறுவயது முதல் நான் ரசித்து வந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த ஓவியரைப் பேட்டி கண்ட தென்றலுக்கு நன்றி.

சித்ரா வைத்தீஸ்வரன் பதிலில் சொல்லியிருப்பது போன்று இந்தக் காலத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளக் கையேடு தேவைதான் போலுள்ளது. பல குடும்பங்கள் இது போன்ற பிரச்சனையால் தவிக்கின்றன. மைதிலி குமாரின் பேட்டியில் ஒரு பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு முன்னெடுத்துச் சொல்வதைப் பெருமையுடன் கூறியுள்ளது பாராட்டத்தக்கது. ஸ்ரீலங்காவில் மருத்துவர்களின் மகத்தான பணி மனதைத் தொட்டது. தோல் நோய் பற்றிய விஷயங்கள் மிக உபயோகமானது. நிகழ்வுகள் பகுதி படிக்கும் போதே சந்தோஷமாக உள்ளது. இவ்வளவு தமிழ் நிகழ்ச்சிகளா என வியக்க வைக்கிறது. இவற்றைத் தொகுத்து வழங்கும் தென்றலுக்கு நன்றி!

கணபதி ஸ்தபதியின் நேர்காணல் மிக அருமை. படிக்கப் படிக்க ஆர்வம் கூடி எவ்வளவு விஷயங்கள் என எப்போதும் திகைக்க வைக்கிறது தென்றல்.

லதா சந்திரமௌலி,
பென்சில்வேனியா


தென்றல் (ஜூன், 2009) ‘அன்புள்ள சிநேகிதியே'வில் உங்கள் அறிவுரை படித்தேன். பிரசவம் பார்க்க வந்திருக்கும் எனது தாயாரும் படித்தார்கள். உங்கள் அறிவுரை நூற்றுக்கு நூறு சரியானது. நாங்கள் அதைப் படித்து மகிழ்ந்தோம் என்பதோடு ஏற்கவும் செய்கிறோம். இப்படிப்பட்ட வழிகாட்டுதலுக்கு நன்றி.

ரக்ஷிதா (மின்னஞ்சலில்)


தென்றல் மே, 2009 இதழில் வெளியான தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நேர்காணல் மிக நன்று. சென்னை வானொலியில் ‘இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியில், எளிமையான குரலில், உயர்ந்த நன்னெறிக் கருத்துக்களை வழங்கிய அவருடைய நேர்காணலைப் படித்தபோது, அவரது குரலை நேரடியாகக் கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அமெரிக்கா வருவதற்கு முன்னர் சென்னையில் வசித்த இரண்டு ஆண்டுகளில் அவரது நிகழ்ச்சியைக் கேட்கத் தவறிய நாட்கள் இல்லை! தென்றல் மூலம் அவரது நேர்காணலை வாசித்ததில் பெரு மகிழ்ச்சி!

ஜூன் இதழில் வெளிவந்த, பாமரர்கள்-படித்தவர்கள் மற்றும் எல்லா வயதினரும் பார்த்து, பிரமித்து, பரவசத்துடன் ரசிக்க வைக்கும் வசீகரம் மிக்க உயிரோவியங்களை வழங்கி வரும் மணியம் செல்வன் அவர்களுடனான நேர்காணலும் மிக அருமை. ‘வாழ்க்கைத் தேவைக்காக நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நினைப்பே தவறானது' என்ற அவருடைய மேன்மையான கருத்து மிகவும் போற்றுதலுக்குரியது. அவரது வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கிறது. மணியம் மற்றும் அவரது புதல்வர் மணியம் செல்வன் இருவரையும் ‘ஓவிய உலகிற்குத் தமிழகம் அளித்த கொடை' என்று சிறப்பிக்கலாம்.

‘கார்கில் ஜெய்' எழுதிய ‘என் காது செவிடான காரணம்' சிறுகதையைப் படித்து, நான் பயணித்த நியூயார்க் சப்வே டிரெயின் என்றும் எண்ணாது, உரக்கச் சிரித்து விட்டேன். கடைசிவரை கோழிப்பண்ணை லெவலிலேயே பேசி, நம்மை நாமக்கல் அருகே கிராமத்தில் கவுண்டர் வீட்டுக்கே அழைத்துச் சென்ற கார்கில் ஜெய்க்குப் பாராட்டுக்கள். இன்னும் எழுதுங்கள் - தென்றலில் நகைச்சுவையை மேலும் கூட்டுங்கள்!

படிக்கப் படிக்கத் தென்றல் இனிக்கிறது. தென்றலில் உயர்தரம் மிக்க பல்சுவைப் பகுதிகள் ஒவ்வொன்றும் மிக அருமை. வாழ்த்துக்கள்.

சென்னிமலை பி. சண்முகம்,
ஃப்ளஷிங், நியூயார்க்


தமிழ் நாட்டில் ஓசூரிலிருந்து என் மகள், மாப்பிள்ளை வீட்டுக்கு வந்துள்ளோம். தமிழ் இதழ்கள் படிக்க மாட்டோமா என்று நினைத்த எனக்கு, தென்றலைப் பார்த்த மாத்திரத்தில் தென்றல் என்னைத் தென்றலாக வருடியது. படிக்கப் படிக்க மிகச் சுவையாக உள்ளது. ‘சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தாற்போல' இருக்கிறது.

செல்லம் ராமமூர்த்தி,
நியூ ஜெர்ஸி


ஜூன் மாதத் தென்றல் இதழில் மணியம் செல்வன் அவர்களின் நேர்காணல் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. அச்சிறப்பு என்ன என்பதை அட்டைப்படமே விளக்குகிறது.

மணியம் செல்வன் என்பவர் ஒரு பெரிய ஓவியரின் மகன். அவரும் நானும் வட இந்தியப் பயணம் ஒன்று மேற்கொண்டோம். போகும் வழியெல்லாம் ஓவியத்தைப் பற்றி அவர் பேசவும், நான் சிற்பக் கலையைப் பற்றிப் பேசவும் முடிந்தது. எண்ணங்களை வண்ணங்களின் மூலம் மேடு பள்ளங்களைச் சுவைபட இவர் காட்டுவதால் இவரை சுவாமிநாதன் என்கிறேன், சரிதானே!

அடிப்படையில் ஒரு சிற்பி நல்ல ஓவியனாக இருக்க வேண்டும். நல்ல ஓவியனின் திறமையின்றி நல்ல சிற்பியாக வருவதற்கில்லை என்பது என்னுடைய அனுபவம். எனது தந்தை ம. வைத்தியநாத ஸ்தபதி அவர்களின் நூற்றாண்டு விழாவில் மணியம் செல்வன் அவர்களை கௌரவித்து பரிசு வழங்கியது நினைவுக்கு வருகிறது.

மணியம் செல்வனின் தந்தையார் என்னுடைய நண்பர். நான் பழனி தண்டாயுதபாணி தேவஸ்தானத்தில் ஸ்தபதியாகப் பணியாற்றிய காலத்தில் கல்கி அவர்கள் சார்பில் தோரணவாயில் ஒன்றை வடிவமைக்க வந்திருந்தார். நானும் அவரும் நெருங்கிப் பழகினோம். நானும் அவர்தம் பணிக்கு உதவினேன். அதன்பிறகு மணியம் செல்வன் அவர்களை வட இந்தியாவில் சந்திக்க நேர்ந்தது. அந்தப் பயணத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் மதியொளி என்ற சரஸ்வதி அம்மையார். அவர் கோட்டோவியத்தைச் சொல்லோவியமாகத் தீட்டுபவர். அவர்களுடன் மணியம் செல்வனைச் சந்தித்தது ஒரு அபூர்வ சந்திப்பு.

மணியம் செல்வன் அவர்களின் நேர்காணலை மிகவும் அருமையாக அமைத்துக் கொடுத்த தென்றல் இதழை மெச்சுகிறேன். இங்ஙனம் ஒவ்வொரு மேதையின் நேர்காணலை மக்கள் ரசிக்கச் செய்வது மிகப்பெரிய தொண்டாகும். நாம் மட்டும் ரசிக்காது, நம் எதிரில் உள்ளோரையும் ரசிக்கச் செய்வதே கலைஞர்களின் நோக்கம் என்பதை உறுதி செய்திட்ட தென்றலை சுகித்தேன், மதிக்கிறேன்.

பத்மபூஷண் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி


அமெரிக்காவில் இத்தனை உயர்தரப் பத்திரிகையை வெளியிடுவதற்கு உங்களுக்கு நன்றி. நான் வீட்டில் கன்னடம் பேசுகிறவன் என்றாலும் தமிழை மிகவும் நேசிக்கிறவன். தமிழ் எனக்கு அதிகம் தெரியாது. எனது தமிழறிவைத் தென்றல் கூர்மையாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்கிறது. நல்ல பணி, தொடர்ந்து செய்யுங்கள்.

வினய் ரங்கப்பா,
ஹாம்ப்டன், வர்ஜீனியா
(ஆங்கிலக் கடிதத்தின் தமிழாக்கம்)
Share: 
© Copyright 2020 Tamilonline