Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
கயிற்றரவு!
- சுப்பிரமணியன் ரமேஷ்|பிப்ரவரி 2009|
Share:
Click Here Enlargeஎங்கே இருக்கிறேன்?

இந்த இடம் என்ன இடம்?

எப்படி சாப்பிடுகிறேன்? எப்போது தூங்கி எப்போது விழிக்கிறேன்?-

எதுவுமே பிடிபடாமல் மொத்த வாழ்க்கையும் ஒரு வியப்பென மாறிப் போயிற்று சிதம்பரத்திற்கு! இது எல்லாவற்றிற்கு மேலாய் வள்ளி ஏன் இன்னமும் வந்து தன்னைப் பார்க்கவில்லை என்பது ஒரு பெரும்புதிராய் இருந்தது. யாரேனும் தந்தியாவது குடுத்தாங்களா? கேட்கலாம்னா யாரையும் பார்க்க முடிவதில்லை. தூக்கத்திலோ, மயக்கத்திலோ டாக்டர்ங்க வந்து போயிடராங்களா, எல்லாம் தெளிவில்லாம தெரியரதுக்கு என்ன காரணம்? யோசிக்க முயன்றதில் மறுபடியும் இருட்டிக் கொண்டு வந்தது, தூக்கமா? மயக்கமா?

எது கனவு, எது நனவு என இனம் காணுவதும் மிகக் குழப்பமாய் இருந்தது, தொடர்ச்சியாய் தன் மகள் வள்ளியம்மையின் நினைப்பு மறுகிக் கொண்டிருக்கும் வேளைகளில் தான் விழித்திருப்பதாகவும், குழப்பமாய் நகரும் பெரிய பெரிய உருவங்கள் தென்படும் வேளைகள் கனவின் ஒரு பகுதியாகவோ அல்லது தொடர்ந்து செலுத்தப்பட்டிருக்கும் ட்ராங்குலைசர்கள் பரப்பும் பிரம்மையின் ஒரு பகுதியாகவோ இருக்கும் என்னும் முடிவுக்கு அவர் வந்துவிட்டிருந்தார். அதற்கு நேர் எதிர்தான் நிஜம் என்றாலும் அவர் வாதிடும் நிலைமையில் இல்லை.

அறுபது எழுபது வருசத்துக்கு முந்தி நடந்ததெல்லாம் இவ்வளவு தெளிவா நினப்புக்கு வருதே அப்பிடின்னா அதெல்லாம் எங்க பதிஞ்சிருக்கும்னு ஆச்சரியமா இருக்கு, தனக்குள்ளாகவே வியந்தார் சிதம்பரம்
இடையில் ஒருமுறை விழிப்பு வந்தபோது இருளை மட்டுமே பார்க்க முடியும் அளவிற்கு இருட்டாக இருந்தது, சின்ன வயசில் ஐயா காரியாப்பட்டியில வயலுக்கு கையைப் பிடிச்சி கூப்பிட்டுப் போவார். அவரோட மொடமொடப்பான வேட்டி மட்டும் மங்கலாத் தெரியும், சில்லுனு காத்தில ஒரு வாசம் கமக்கும், 'தாழம்பொதருலே அது, எட்டதள்ளி வா, பெரிசு எதனாச்சும் வந்து புடுங்கி வைக்கப்போது..' கைக்கு மேலாக இருட்டிலிருந்து கரகரத்த குரல் வழியும். மொரமொரப்பான வெடிப்பு விட்டிருக்கும் ஆள்காட்டி விரலே ஒரு வித கண்டிப்புடன் கிட்ட நெருக்கி நடக்கச் சொல்லி சைகை செய்யும், அதுவே தான் துணையாய் இருப்பதாய் அபயம் தரும். லாந்தரின் வெளிச்சம் மேல் பக்கம் கரி அப்பின கண்ணாடி வழியாக, கொஞ்சம் போல ஈரவாடையடிக்கும் செம்மண் சாலையை பொன்போல மெழுகிவரும். லாந்தரின் திரி 'இப்போ செத்திடுவேன், இப்ப செத்திடுவேன்'னு ஆடிக்கிட்டே வரும். வெளிச்ச வட்டத்துக்கடியில் ஒரு கருப்பு வட்டம் தரைமீது வழுக்கிக்கிட்டே போகும், ஓடி ஓடி அதை மிதிக்க முயலும் சிதம்பரத்தை, 'ஏலே சொம்மா நீ வரமாட்டே? லாந்தர்ல சூடு வாங்கினா உங்கம்மாக்காரி எனக்கு கஞ்சி வைக்கமாட்டா' எனக் கட்டுப்படுத்துவார். ஆனாலும் அம்மாவாசை ராத்திரிகளில பொதரெல்லாம் நட்சத்திரங்களாவும், ஒளியின் நீந்தலாவும் மின்மினிப் பூச்சிங்க தென்பட்டா நின்னு வேடிக்கை பார்க்க அனுமதிப்பார்.

இவ்வளவு வருசங்கழிச்சி இதெல்லாம் ஞாபகம் வருதேன்னு ஆச்சரியமாக இருந்தது சிதம்பரத்துக்கு. அறுபது எழுபது வருசத்துக்கு முந்தி நடந்ததெல்லாம் இவ்வளவு தெளிவா நினப்புக்கு வருதே அப்பிடின்னா அதெல்லாம் எங்க பதிஞ்சிருக்கும்னு ஆச்சரியமா இருக்கு, தனக்குள்ளாகவே வியந்தார் சிதம்பரம். சீக்கா படுத்து இரண்டு வாரமிருக்குமா? இரண்டு வருடமாச்சி, மூணு வருடமாச்சின்னு சொன்னாலும் கூட நம்புவேன்... சமீபத்தில நடந்ததெல்லாம் குழப்பமாய் மறந்து போக எப்பத்திய நெனப்பெல்லாமோ வருதே... மருந்தாதான் இருக்கனும்! இந்த மருந்துங்க செய்யரத நினைச்சா ஆச்சரியமா இருக்கு, தனக்குள்ளாகவே வியந்து கொண்டார்.

அழகம்மைதான் எந்த மருந்தும் காப்பாத்த முடியாம ரோகத்தில கிடந்து போய்ச் சேர்ந்தா, மூணு வருஷ வள்ளிக் குட்டியை சிதம்பரத்திடம் சேர்ப்பிச்சிட்டு. 'ஆத்தாவைப் பத்தி யாருக்கும் தெரிய வேணாம், நீயே போதும் எனக்கு அப்பச்சி'ன்னு ஆளான சடங்கு செய்த அன்னிக்கி வள்ளி சொன்னப்ப அவருக்கு அழுகை முட்டிகிட்டு வந்திச்சி, அறுப்பு முடிஞ்சப்பறம் வருமே ஒரு நெறைவு அதுபோல இருந்திச்சி... கருந்தேக்குல கட்டிப் போட்டிருந்த சாரங்களையும், உத்திரங்களையும் பார்த்துகிட்டேருந்தார், அழுகையை அடக்க வகை தெரியாது. சாணி தெளிச்சி, போட்டிருந்த கோலத்தைக் கலைச்சது போல கணவதி வீட்டு ஆச்சி ஆலத்தி கரைச்சல ஊத்தின போது கூட ஏதோ ஒரு நெனப்பு கண்ணுல தண்ணியா ஊத்திச்சி. அழகம்மையோட கை பட்டதெல்லாம் துலங்கும். அவள் கோலம் போட்டா இழையில ஒரு பிசிறிருக்காது... புள்ளி இடவெளி ஏறுமாறா இருக்காது. கிளியோட மீனாட்சியும், சப்பரத்தில தோரணங்கள் தொங்கத் தொங்க தேருமாய் வீதியே பளிச்சின்னு ஆகிப் போகறது போல வண்ணப் பொடிகளில் தேர்ந்த சித்திரக்காரனின் மனசோடும், நுட்பத்தோடும் போடுவா வள்ளியம்மை. அதை மிதிச்சி நடக்கவே மனசே வராது. 'ஏ... வள்ளி வாசலை அடச்சி கோலம் போட்டியன்னா மனுசன் எப்படி உள்ளாரக்க வர்றது?'ன்னு செல்லமா கோவிச்சிக்கக் கூட செஞ்சிருக்காரு! பள்ளத்தூரிலிருந்து கானாடுகாத்தானுக்கு போயிட்டு வரும் போது குமரன் ஸ்டோரிலயிருந்து பளப்பளான்னு மின்னும் ஆப்செட் கோலப்புத்தகங்களை எல்லாம் வாங்கி வந்து தருவாரு, சிவகாசி மசியும், புதுத்தாளுமாய் ஏகத்துக்கும் புதுக்கருக்கு கலையாம வாடையடிக்கும். புத்தகத்தால அத்தனை வாஞ்சையை தர முடியுன்னு தெரிஞ்சா, பிரிண்ட் போடறவன், மசி கலக்கறவன், பின்னடிக்கிறவன் எல்லாரும் இன்னமும் கொஞ்சம் சிரதையெடுத்து அழகா செய்வான் அவனவன் வேலையை.

மகளோ சிதம்பரத்திற்கு இம்மியும் குறைந்தவளில்லை, அண்ணாமலை தோப்பில கிடந்த கிளி கொத்தின மாங்காய், பள்ளிக்கூடத்தில மகாபலிபுரத்துக்கு டூர் போனப்ப எவளோ வெள்ளக்காரி கொடுத்தான்னு பீஸ் போன ப்ளாஷ் பல்பு, வெள்ள வெளேர்ன்னு கையகலத்துக்கு கிளிஞ்சல், சந்தையில நல்லாயிருந்ததுண்ணு பழுப்பு கலரில அழகா பச்சைக் கொடி ஓடறாப்பல பார்டர் போட்ட பாம்புத்தோல் மணி பர்ஸ், இப்படி தனக்கு ஒசத்தியா பட்டதெல்லாத்தையும், அப்பச்சிக்கென கொண்டு வந்து சேர்ப்பித்தாகிவிடும்.
அட ஆண்டவா என்ன ஒரு பயங்கரமான கனா!" திடுப்பென அழகம்மை தான் செத்துப் போயிட்டாளே என்ற நினைப்பெழ, கனவுக்குள்ளே கனவைப் பற்றிப் பேசுவதாக எண்ணி நகைத்துக் கொள்ளவும் செய்தார்.
கல்யாணமாய் மறுவீட்டுக்கு வரும்போது கூட வாசலுக்கு மாட்டறத்துக்குன்னு நூலால பின்னின ஒரு அலங்கரிப்பை மாட்டிட்டுத் தான் போனா... அவங்க சின்னாத்தா கேட்டப்பக் கூட விடாப்புடியா எங்க அப்பச்சிக்குத்தான்னு சண்டை பிடிச்சி கொண்டுவந்தான்னு சிரிச்சபடி ஆச்சி சொல்லிப்பிட்டு போனதில் சிதம்பரத்திற்குப் பெருமையாகவும், மதர்ப்பாகவும் இருந்தது.

தூங்கிப் போயிருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டார் சிதம்பரம். யாரோ நெருக்கமாகப் பார்த்துக் கொண்டிருப்பதாய்த் தோன்றவே சிரமப்பட்டுக் கண்களைத் திறந்தார்... பார்வைத் தெளிவற்று மசமசப்பாய்த் தெரிந்தது, கண்கள் எரிச்சலாய் இருந்தது. கைகளால் கண்களைத் தேய்த்தால் சரியாகக் கூடும், ஆனால் கைகள் என்ன... தலை முதல் கணுக்கால்கள் வரையான எல்லா அணுக்களும் மூளையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு ஒரு பெரிய கூத்தின் உச்சக் காட்சிக்கென மௌனமாய்க் காத்திருப்பதைப் போன்றும், நெருப்புக் குழியில் இறங்கிப் போகும் கால்களின் இயக்கம் போல இயங்கிக் கொண்டும் விடுபட காத்திருப்பதைப் போன்றும் இருந்தது. நெஞ்சின் இடது பாகம் முழுதும் வலி. உடல், வியர்வையைப் பூக்களாய்ப் பூத்து வலியிடம் பிரார்த்தனையாய் சமர்ப்பித்துக் கொண்டிருந்தது.

மோகரித்த முழவாய், முரணித்து முரணித்து ருத்ர உக்கிரமாய் வலி மேலெழ மேலெழ, உடல் தன் முழு கவனத்தையும் இந்த வலியின் ஓங்காரத்தில் ஒன்றித் தன்னுணர்வை இழந்து கொண்டிருந்தது. வலியின் ஆதி மொழியில் புலன்கள் அமைதி பெற்றன. மழை விடுபட்ட கணத்தில் அளவற்ற துல்லியத்தில் அழகம்மை கருணையும், புன்னகையுமாய் படுக்கைக்குப் பக்கத்தில் காத்திருந்தாள். ரோகம் பீடித்த அழகம்மையில்லை, தளிர்ப் புன்னகை சிந்த தான் மாசமாய் இருந்ததைச் சொன்ன அழகு, எல்லாவற்றையும் காத்து ரட்சிக்கும் காமாட்சி, கருணாசாகரி, குல தெய்வமாய் தன் குலம் வளர்க்கும் தேவியார் அம்மன். தன் உயிரின் ஏதோ ஒரு பகுதியில் கலந்து போய்விட்ட ஆருயிர். அவசரமாய் எழுந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டே சொன்னார், "அட ஆண்டவா என்ன ஒரு பயங்கரமான கனா!" திடுப்பென அழகம்மை தான் செத்துப் போயிட்டாளே என்ற நினைப்பெழ, கனவுக்குள்ளே கனவைப் பற்றிப் பேசுவதாக எண்ணி நகைத்துக் கொள்ளவும் செய்தார்.

"பொக்கை வாயைக் காட்டி சிரிக்கிறாம் பாரு!" வாஸ்த்தல்யம் பொங்க மழலையைக் குனிந்து பார்வையால் அள்ளிக் கொண்டாள் வள்ளி, அவளின் நெற்றிக் கற்றை திராட்சைக் கொடியென மெல்லக் காற்றில் அசைந்தது. ரோஜா வண்ணத் துணிகளைச் சுருணையாய்ச் சுருட்டிக் கொண்டு, கட்டை விரலை மற்ற நான்கு விரல்களாலும் இறுகப் பற்றியவாறு அண்டைக் குடுத்திருந்த தலையணையை அம்மாவின் மார்பகங்களாய் பாவித்து தூங்கிக் கொண்டிருந்த சிசுவின் பிருஷ்டங்களை வலது கையாலும், கழுத்தையும், சிரஸையும் இன்னொரு கையால் மென்மையாய் அணைத்தவாறு தூக்கி தன் மூக்கால் மெல்ல தன் மழலையின் மூக்கை நிமிண்டினாள் வள்ளியம்மை. கிளர்ந்த பால் மணத்தை சுகமாய் அனுபவித்தபடி, "பால் கார பாண்டு! பால்கார கோண்டு!" எனக் கொஞ்சினாள். இயல்பூக்கத்தில் உந்தப்பட்டு, இளம் உதடுகளை சப்புக் கொட்டி பால் காம்புகளை தேடிக் கொண்டிருந்தது குழவி. இளக்கமாய் இளஞ்சூட்டோடிருந்த அக்குட்டி கம்பங்களியை நினைவூட்டியது. வள்ளிக்குத் தன் அப்பாவின் ஞாபகம் வர, கீழிதழ் இழுபட்டு, மூக்கு விடைத்து, கண்களின் கலக்கத்தின் வழியே ஒரு ஆழ்ந்த துயரின் சாயல் நெகிழ்வாய் நிலைத்தது. திரளும் கண்ணீருடன் குழந்தையைப் பார்த்து முறையிட்டாள், "ஏன்டா செல்லம்! உன்னைப் பார்த்தா எங்க அப்பச்சி உச்சி குளிர்ந்து போயிருப்பாரேடா! உன் மூத்தாவில நனையாம அவர் ஆன்மா எப்டி சாந்தி அடைஞ்சதோ? ஏன்டா வாண்டு நீ ஒரு ஒண்ர வருஷம் முன்னாடி பொறந்திருக்கக் கூடாது?" வள்ளி கைகளை வசதியாய் சரி செய்ய முயல்கையில் இடுப்பிலிருந்த துணி கீழே விழ, வளைவான மெல்லிய கால்களை குளிரில் இடுக்கிக் கொண்ட குழவி மெல்ல திமிர்த்து உடலை வளைத்து நெட்டி முறித்து கண்களை பிரயத்தனத்தோடு திறக்க முயன்றது. வெளிச்சம் கூச கண்களை இடுங்கிக் கொண்டார் சிதம்பரம். தெளிவற்ற பார்வையின் ஊடாக மிக அருகில் வள்ளியின் சாயலில் முகம் தெரிந்தது, மிகப் பெரிதாய். 'அட மறுபடி கனவு! எல்லாவற்றையும் ஞாபகமாய் வீட்டுக்குப் போனவுடன் வள்ளியிடம் சொல்லனும். கனவில அழகம்மையைப் பார்த்ததையும் கூட...' இமைகள் தானாகவே மூடிக்கொள்ள சிரிப்பு பொங்கி வந்தது சிதம்பரத்திற்கு.

"பாரு! பாரு! சிரிக்கறாம்பாரு! சிஜ்ஜு பைய்யா, புஜ்ஜு குட்டி! நரிக் கனவாடா பாப்பாக்கு!" என்றவாறு நெஞ்சோடு அணைத்து, 'பச்'சென முத்தினாள் வள்ளி.

சுப்பிரமணியன் ரமேஷ்
Share: 
© Copyright 2020 Tamilonline