Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது
- |அக்டோபர் 2008||(1 Comment)
Share:
Click Here Enlargeவீட்டுக்கடன் சந்தை வீழ்ச்சியில் (sub-prime market) தொடங்கியது இந்தப் பெரும் பனிச்சரிவு. அதில் வங்கிகள் அகப்பட்டுத் தவித்தன. மெரில் லின்ச் போன்ற நிதி நிறுவனங்கள் சிக்கி நொறுங்கின. கடைசியாக காப்பீட்டுத்துறை ஜாம்பவான் AIGயும் நிலைகுலைந்தது. அமெரிக்கா ஒரு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டுக்கொண்டு வெளியே வரத்தெரியாமல் விழிப்பதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன. கெட்டிக்கார நாடுகளின் பலமே அவற்றின் வருடாந்தர மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் நான்கில் ஒரு பங்காவது அதன் உள்நாட்டுச் சேமிப்பாக இருப்பதுதான். இந்தியாவில் இது நடைமுறையில் உள்ளது. ஆனால் உலகின் மிகப்பெரிய கடன்கார நாடுகளில் ஒன்று அமெரிக்கா. வரப்போகும் சம்பளத்தை முன்கூட்டியே செலவழித்து வாழ்வது இங்கு வழக்கம். அதனால்தான் எரிபொருள் விலை ஏறியதுமே மக்கள் தத்தளிக்கத் தொடங்கி விட்டனர்.

***


எரிபொருள் விலையேற்றத்தினால் சில நன்மைகளும் உண்டு! அமெரிக்க மக்கள் 'கார் பூலிங்' செய்யலாமா, பஸ்களில் பயணிக்கலாமா என்று யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். இதனால் கேசலீன் செலவு குறையும். மற்றொரு நன்மை என்னவென்றால் மரபுசாரா மாற்று எரிபொருள்களைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இது உலகைத் தள்ளியிருக்கிறது. அரசுகள் இதற்கு முதன்மை அளித்து ஆய்வுகளை விரைவுபடுத்த வேண்டும். 'ஹைப்ரிட்' வாகனங்களுக்கு திடீர் மவுசு வந்திருப்பதும் நல்லதுதான். அது போதாது. முழுக்கவே பெட்ரோலியம் சார்ந்த எரிபொருள்களை ஒதுக்கும் நிலை விரைந்து வரவேண்டும். அதனால் இறக்குமதிச் செலவு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் வெகுவாகக் குறையும்.

***


மக்கெய்ன் தனது துணையதிபர் பதவி வேட்பாளராக சரா பேலினை அறிவித்தவுடன் அவருக்கான ஆதரவு அதிகரித்ததாகக் கணக்கெடுப்பு கூறியது. சரா பேலின் பேசாதவரை நன்றாகத்தான் மதிக்கப்பட்டார். அவரிடம் யாரும் கேள்விகள் கேட்டுவிடாமல் மிக கவனமாக அதனால்தான் பாதுகாத்தார்களோ என்னமோ! கேள்விகளுக்கு பதில் சொல்லத் தொடங்கியதும் அவரது வெறுமை புலப்படத் தொடங்கிவிட்டது. தான் கீழே போவது மட்டுமல்லாமல் மக்கெய்னையும் கீழே இழுத்துக்கொண்டு போகிறார். பத்திரிகை மற்றும் டி.வி.க்களில் மிக அதிகம் நக்கல் செய்யப்படுபவர் சரா பேலின் தான் என்றால் மிகையல்ல. துணையதிபர் வேட்பாளர்களுக்கான நேரடி விவாதம் அவருக்கும் ஜோ பைடனுக்கும் இடையே அக்டோபர் 2 அன்று நடைபெறுகிறது. அதற்குள் சரா பேலின் சுதாரித்துக்கொண்டு விடுகிறாரா என்று பார்க்கலாம்.

***
மக்கெய்னின் இழப்பு ஒபாமாவின் லாபம். அவரது ஆதரவு பல புள்ளிகள் மேலே ஏறியுள்ளன. பேச்சாற்றல் அவரது கவர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது. ஆனால், அவருக்கும் மக்கெய்னுக்கும் இடையில் நடந்த முதல் நேரடி விவாதத்தில் ஒவ்வொரு முறையும் 'you are wrong' என்று கூறி பதிலளிக்கத் தொடங்கினார். விவாத வழிமுறைகளில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பாடுகள் சில உள்ளன. எதிர் வாதக்காரரை நேரடியாக விளிக்காமல், நடுவரிடம் பேச வேண்டும் என்பது ஒன்று. இரண்டாவது, தனது கருத்து மாறுபட்டதாக இருந்தாலும் (இப்படிப்பட்ட எதிரணிகளில் இருப்பவர்களுக்கு மாறுபட்டதாகத்தான் இருக்கும்) அதை நாகரீகமாக வெளிப்படுத்துவது. 'நீ சொல்வது தவறு' என்று எதிராளியிடம் நேரடியாகப் பேசுவது தவறான அணுகுமுறை. 'நான் உங்களுடன் முரண்படுகிறேன்' என்று வேண்டுமானால் சொல்லலாம். ஏனென்றால் இத்தகைய அரசியல் கருத்து மோதல்களில் மற்றவர் பேசுவது தவறாக இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.

மிகப் பிரபலமாகிவரும், அதிலும் அதிபராகும் வாய்ப்பு மிக அதிகமாகக் கொண்ட ஒருவர், இவ்வாறு பொதுமேடை நாகரீகத்தைக் கடைப்பிடிக்காதது மற்றவர்களுக்குத் தவறான முன்னுதாரணமாகிவிடும் அபாயம் இருக்கிறது. இந்திய அரசியல் மேடைகளின் அளவுக்கு இன்னும் அமெரிக்க மேடைகள் தரம் தாழவில்லை. பரஸ்பர மரியாதை, பாரம்பரியத்தை மதித்தல், தேசபக்தி ஆகியவை இங்கே தெளிவாகக் காணப்படுகின்றன. குழாயடிச் சண்டையாக இன்னும் மாறவில்லை. அந்த நாகரீகத்தைக் காப்பாற்றும் பொறுப்பு ஒபாமாவுக்கும் இருக்கிறது.

***


பற்பல மொழிகளில் தேர்ச்சி, அதிலும் இந்தியாவின் இரண்டு தொன்மொழிகளான தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றில் ஆய்வு நோக்கும் பாண்டித்தியமும் கொண்ட பேரா. இந்திரா பீட்டர்சன் நேர்காணல் இந்த இதழின் சிறப்பு அம்சம். தமிழ்ப் பதிப்புத் துறையை ஒரு கலக்கு கலக்கிவிட்டு, தேசிய அளவில் தடம்பதிக்கத் திட்டமிட்டுச் செயலாற்றும் நியூ ஹொரைசன் மீடியாவின் பத்ரி சேஷாத்ரியுடனான நேர்காணல் மிகச் சுவையானது. எல்லே சுவாமியின் நகைச்சுவைக் கதை, மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து தமிழகம் போன வற்றாயிருப்பு சுந்தர் சந்தித்த ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள் ஆகியவற்றைச் சுவையாகச் சித்திரிக்கும் கட்டுரை, பலவித சாதனையாளர்களைப் பற்றிய செய்திகள் ஆகியவற்றோடு வருகிறது தென்றல். 'கொன்றன்ன இன்னா செய்யினும்' சிறுகதை உங்கள் மனதைத் தொடுவது நிச்சயம். அத்தோடு, இந்த இதழிலிருந்து சிங்கப்பூர்/மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை சிங்கப்பூரின் முன்னணித் தமிழ் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அறிமுகப்படுத்துகிறார். படியுங்கள், சுவையுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எங்களுக்கு எழுதுங்கள்.

***


இது பண்டிகை மாதம். வாசகர்களுக்கு நவராத்திரி, தீபாவளி, ரமலான், காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்!


அக்டோபர் 2008
Share: 
© Copyright 2020 Tamilonline