Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிறுகதை
எலி தந்த வலி
தமிழ் வகுப்பு
- எல்லே சுவாமிநாதன்|செப்டம்பர் 2008|
Share:
Click Here Enlargeவீட்டுக்குள் நுழைந்ததுமே என் மனைவி கத்தினாள்.

'எங்க போயிட்டீங்க? இன்னிக்கு சாயங்காலம் மூணு மணிக்கு மனோன்மணி பெண் அபிக்கு பார்க்கில பிறந்தநாள் விழா. மறந்து போச்சா? இளங்கோ டெலிபோன் பண்ணி விடியோ காமிராவை மறக்காம எடுத்திட்டு வரச்சொன்னார்.'

பார்க்குக்குப் போனபோது பிறந்தநாள் விழாவுக்குப் பலபேர் வந்திருந்தார்கள். அபி அழகான நீல கவுனில் இருந்தாள். அபியின் அப்பா இளங்கோ ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்.

தெரியாமத்தான் கேக்கிறேன்... நாம இங்கிலீஷ்காரங்களா? தமிழ்ல பேசினா தப்பா? இங்கிலீஷ்ல மட்டும் பேசம்ணு சட்டமா?'
அங்கே ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தார் இளங்கோவின் தந்தை ரங்கசாமி. சமீபத்தில் இந்தியாவிலிருந்து வந்திருந்தார். என்னைக் கண்டதும் 'வாங்க, வாங்க' என்று வரவேற்றார்.

'என்னங்க ஊரெல்லாம் பிடிச்சிருக்கா?' என்றேன்.

'ஊருக்கென்னங்க.. எல்லாம் நல்லாத்தான் இருக்கு' என்றார் சுவாரசியமில்லாமல்.

'அப்ப இங்க வந்து செட்டில் ஆயிட வேண்டியதுதானே...'

'இல்லீங்க... நானே இளங்கோவ ஊருக்கு வந்திடுன்னு சொல்லிட்டுருக்கேன். எனக்கு திருச்சி பக்கத்தில கிராமத்தில பெரிய வீடு இருக்குங்க. என் மனைவி அஞ்சு வருசம் முன்னால காலமாயிட்டா. தனியாத்தான் இருக்கேன். இவனானா இத்தோ அத்தோனு நாள் கடத்தறான். இவன் சம்பாத்திச்சுப் போடணும்னு அவசியமே இல்ல. எங்களுக்கு சொத்து பத்து நிறைய இருக்கு.'

நல்ல வேலையில் இருந்த இளங்கோ திரும்பிப் போவார் என்று நான் நம்பவில்லை. அப்படியே இளங்கோ போக விரும்பினாலும் மணிமேகலைக்கு அதில் விருப்பம் இருக்குமா தெரியாது. 'வந்தாலும், இளங்கோ கிராமத்தில தங்குவாரா சொல்ல முடியாது. சென்னையில வேலை தேடிப்பாருன்னு நினைக்கிறேன்.'

'வரட்டும் பரவாயில்ல. எப்படியோ ஊருக்கு வறது நல்லது. இது என்னைக் கவனிச்சிக்க ஆளு வேணும்கிறதால இல்லீங்க. அவன் குழந்தை நல்லபடியா ஊருல வளர்ந்து நம்ம கலாசாரத்தை கத்துக்க வாய்ப்பு இருக்கும்னு தான்... என்ன நான் சொல்லறது'

'சரிதாங்க. நம்ம கலாசாரத்தை எப்படி சொல்லித் தரணும்கிறீங்க?'

'முதல்ல குழந்தகளுக்குத் தமிழ் சொல்லித் தரணும். என்னதான் அமெரிக்கால இருந்தாலும் தமிழை மறக்கலாமா? இளங்கோ அபிக்குத் தமிழே சொல்லித் தரல. மருமக மணிமேகலைக்கும் இதில ஆர்வம் இல்ல. அப்பாவும் அம்மாவும் அபிகிட்ட இங்கிலீஷ்லேயே பேசறாங்க... அந்தக் குழந்தைக்கு எப்படி தமிழ் வரும்? அபிராமின்னு அழகான பேரு. அத சுருக்கி அபின்னு சொல்றது நல்லா இருக்கா? தெரியாமத்தான் கேக்கிறேன்... நாம இங்கிலீஷ்காரங்களா? தமிழ்ல பேசினா தப்பா? இங்கிலீஷ்ல மட்டும் பேசம்ணு சட்டமா?'

ரங்கசாமியின் ஆவேசத்தில் ஒரு நியாயம் புலப்பட்டது. தமிழ் சொல்லிக் கொடுக்க இங்கு நாங்கள் எடுத்த முயற்சிகளை விவரித்தேன்.

'எங்களுக்கும் குழந்தைகள் தமிழ் கத்துக்கணும்கிற ஆசை உண்டு. ஆனா எப்படி சொல்லித் தரணும்னு தெரியல. ஒரு பாட்டு வாத்தியாரம்மா தமிழை நான் சொல்லித் தரேன்னு வந்தாங்க. முதல்ல ச, ரி, க, ம, ப, த, நி மட்டும் கத்துக்கிட்டா போதும்னு ஆரம்பிச்சாங்க. ஸ்வர வரிசை வந்தப்பறம் பாக்கி சொல்லிக்குடுக்கலாம்னு சொன்னாங்க. பாட்டு வராம பல பேரு நின்னுட்டாங்க. சரியா வரல. அப்புறமா ஒரு டான்ஸ் டீச்சர் வந்தாங்க. நர்சரி ரைம் வழியா தமிழ் சொல்லித்தரேன்னு சொன்னாங்க.

'குத்தடி குத்தடி ஜைலக்கா
குனிஞ்சு குத்தடி ஜைலக்கா
பந்தலிலே தொங்குது பாவக்கா
பையன் வரான் பாத்துக்கோ
பைசா தருவான் வாங்கிக்கோ'ன்னு

ஒரு பாட்டும் சொல்லிக் கொடுத்தாங்க. அடுத்த மாசமே புருசனுக்கு வேலையில மாத்தலாயிடுச்சுனு ஊரைவிட்டுப் போயிட்டாங்க. முறையா தமிழ் சொல்லித்தர எங்களுக்கு சரியா ஆளு அமையல' என்றேன்.

'போகட்டும். நான் வந்துட்டன்ல. நானே இலக்கண சுத்தமா சொல்லித் தரேன்' என்றார் ரங்கசாமி. எனக்கு உற்சாகம் பிறந்தது.

பார்ட்டி முடிந்து எல்லோரும் போகுமுன் 'தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க விரும்புபவர்கள் திரு. ரங்கசாமியிடம் கற்கலாம்' என்று அறிவிப்பும் செய்தேன்.

'எதுக்கு இந்த வெட்டி வேலை? தமிழ் சோறு போடுமா?' என்று நண்பர் சுப்பராமன் என் காதருகில் முணுமுணுத்தார்.

எந்த இடத்திலே தமிழ் வகுப்பு என்ற கேள்வி எழுந்தது.

ரங்கசாமிக்கு கார் ஓட்டத் தெரியாது. இளங்கோவுக்கு அவரை அழைத்துப் போக நேரம் இருக்காது. வெளியில் எங்காவது வைத்துக் கொண்டால் ரங்கசாமியை ஒருவர் அழைத்து வரவும் திருப்பி வீட்டில் கொண்டு விடவும் வேண்டியிருக்கும். அவர் வீட்டிலேயே தமிழ் வகுப்பு நடத்தினால் அவருக்கு எளிதாக இருக்கும். எனவே 'இளங்கோ வீட்லயே தமிழ் வகுப்பு வெச்சிக்கலாம்' என்று அறிவித்தேன்.
ரங்கசாமி 'தாராளமா வெச்சிக்கலாம்' என்று ஆமோதித்தார்.

இங்க வளர்ற பிள்ளைங்க தமிழ் எழுதப் படிக்கத் தெரிஞ்சிக்கிறது அவசியம்னு எனக்குத் தோணலீங்க. அவங்க திருக்குறளும் கம்பராமாயணமுமா படிக்கப் போறாங்க? ஏதோ பேச்சளவுக்குத் தமிழ் கத்துக்கிட்டா போதும்னு தோணுது.
'நம்ம பெண்ணையும் தமிழ் வகுப்பில் சேர்த்துடலாமா?' என்று என் மனைவியைக் கேட்டேன். என்னை எரித்துவிடுவது போல் பார்த்தாள். 'அவளுக்கு ஏற்கனவே ஏகப்பட்டது கத்துக்க வேண்டியிருக்கு. ஹூலா ஹூப், ஸ்வாஹிலி, யோகா, டென்னிஸ், ஃபுட்பால், ஸ்பானிஷ்னு நிறைய இருக்கு. தமிழ் இப்ப வேண்டாம்' என்றாள்.

ஆறு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அபியுடன் சேர்ந்து தமிழ் கற்க அனுப்ப முன்வந்தார்கள். சனிக்கிழமை காலை நேரம் எட்டிலிருந்து ஒன்பதுவரை என்று முடிவு செய்யப்பட்டது.

அடுத்த மூன்று மாதம் கழித்து மணிமேகலையை சூப்பர் மார்க்கட்டில் காப்பிக் கொட்டை அரைத்துக் கொடுக்கும் இடத்தில் சந்தித்தேன்.

'உங்களால எனக்கு பெரிய பிரச்னை வந்திட்டுதுங்க' என்றாள்.

'என்னாலயா? நான் என்ன பண்ணினேன்?'

'தமிழ் வகுப்புனு எங்க மாமாவை உசுப்பி விட்டுட்டீங்க. எனக்குல்ல உயிர் போகுது'

'ஏங்க? என்னாச்சு?'

'இப்ப சனிக்கிழமை காலைல எங்க வேலையப் பார்க்க முடியல. தமிழ் வகுப்புக்கு...' அவள் சொல்லி முடிக்குமுன் 'மன்னிமெக்லெ, யுவர் ஆர்டர் ஈஸ் ரெடி' என்று குரல் வரவும், 'நாளைக்கு காலைல நீங்களே தமிழ் வகுப்புக்கு வாங்க. தெரியும்' என்று சொல்லிவிட்டுப் போனாள்.

என்னதான் நடக்கிறது என்று பார்க்க மறுநாள் காலையில் இளங்கோ வீட்டுக்கு போனேன். வரவேற்பறையில் பெரிய கூட்டம். மணிமேகலை சர்தார்ஜி ஒருவரிடம் 'க்யா சாஹியே ஆப்கோ' என்பதும் அவர் 'தோ இட்லி, தோ வடா அவுர் ஆதா கப் சாம்பார்' என்பதும் எனக்கு வியப்பாய் இருந்தது. எல்லோருக்கும் இட்லி, வடை சப்ளை நடந்தது. வாயில் இட்லியை விண்டு போட்டுக் கொண்ட சுப்பராமன் என்னைப் பார்த்து நெளிந்தார். 'தமிழ் சோறு போடுமான்னு கேட்டேன். சோறு என்ன, இட்லி வடை கூடப்போடும்னு தெரிஞ்சிக்கிட்டேன்' என்றார்.

'தமிழ் வகுப்பு எங்க நடக்குது?' இளங்கோவைக் கேட்டேன்.

பக்கத்தில் ஒரு அறைக்கு அழைத்துப் போனான். அங்கே ரங்கசாமி கண்ணை மூடிக்கொண்டு கையை தட்சிணாமூர்த்தி போல வைத்துக் கொண்டு,

'முயற்சியுள் அ ஆ அங்காப்புடைய

இ ஈ எ ஏ ஐ அங்காப்போடு

அண்பல் முதல்நா விளிம்புற வருமே

உ ஊ ஒ ஓ ஒள இதழ் குவிவே'

என்று தொல்காப்பியச் சூத்திரம் சொல்ல, கிட்டத்தட்ட இருபது சிறுவர் சிறுமியர் அவர் முன் அமர்ந்து நோட்டில் ஏதோ படம் போட்டுக் கிறுக்கிக் கொண்டிருந்தார்கள்.

இளங்கோ என்னை தோட்டத்துப் பக்கம் அழைத்துப் போனான். அங்கே பெஞ்சில் அமர்ந்தோம்.

'எப்படி இந்தத் தமிழ் வகுப்பு பிரபலமாச்சு. எத்தனி பேரு தமிழ் படிக்க வராங்க. இந்திக்காரங்க கூட வராங்க போல. தமிழ் வளர்ச்சி மனதுக்கு மகிழ்ச்சியா இருக்கு' என்றேன்.

'இந்தத் தமிழ் வகுப்பு சமாசாரம், சன்னியாசி பூனை வளர்த்த கதையாயிட்டுது. முதல்ல ஆறு பேருதான் இருந்தாங்க. குழந்தைகளை அழச்சிட்டு வந்த பெரியவங்களுக்கு ஒரு மரியாதைக்கி காப்பி கொடுத்தோம். காலையில் டிபன் சாப்பிடாம வந்துட்டம்னு சிலர் சொல்ல இட்லி கொடுத்தோம். மெதுவா அது பழகிடுத்து. கொடுக்கறதுதான் கொடுக்கறீங்க வடையும் போட்டா நல்லதுன்னு கேட்கவே வடை போட்டோம். இட்லி வடை கிடைக்கிறதுன்னு தெரிஞ்சவுடனே தெலுங்கர், கன்னடியர், மலயாளி, இந்திக்காரங்கனு நாங்களும் தமிழ் கத்துக்கிறம்னு கூட்டம் சேர்ந்திடுச்சு. இப்ப மசால் தோசை, பூரியும் சேர்த்து போட்டா நல்லா இருக்கும்னு சிலர் சொல்றாங்க. ஒரே சமயத்தில இருவது தோசை போடற மெசின் எங்க கிடைக்கும்? மணிக்கு என் மேல கோபம். சரியா முகம் கொடுத்து பேசறதில்ல. அப்பாவை ஊருக்கு அனுப்புன்னு சொல்றா. அப்பாவுக்கு நல்லா பொழுது போகுது. சனிக்கிழமை வகுப்புக்குனு வாரம் முழுக்கப் படிச்சு குறிப்பு எழுதி வெச்சிக்கிறாரு. என்னை நூலகத்துக்கு போய் தொல்காப்பியம், நேமிநாதம் எல்லாம் எடுத்திட்டு வரச்சொல்றாரு' என்றான் இளங்கோ.

அதற்குள் மணிமேகலை எனக்குத் தட்டில் இட்லி வடை சட்னியோடு ஒரு பேப்பரும் கொடுத்தாள். 'இது என்ன பேப்பர்' என்றேன்.

'காரட் சட்னி செய்முறை. வரவங்க, சட்னி போட்டா எப்படி செய்யறதுன்னு கேக்கிறாங்க. வகுப்பு, டிபன் சப்ளை முடிஞ்சு செய்முறை கேட்டு எழுதிக்கிட்டு அவங்கவங்க வீட்டுக்குப் போக ரொம்ப நேரமாகுது. அதனால நான் ரெசிப்பியையும் சேர்த்து டிபனோடவே கொடுக்க ஆரம்பிச்சுட்டேன்' என்றாள்.

'நன்றி' என்று சொல்லிப் பையில் வைத்துக் கொண்டேன். என் மனைவிக்கு இதைக் காட்ட வேண்டும். படித்துச் செய்து தருவாளா என்பது சற்று சந்தேகம்தான்.

என் வாய் சும்மா இல்லை. 'அடுத்த வாரத்திலேருந்து நானும் தமிழ் வகுப்புக்கு வரலாம்னு இருக்கேன். சென்னையில திருவல்லிக்கேணில ரத்னா கபேல சூடா ரச வடை போடுவான் பாருங்க. அரைமணில வித்து தீர்ந்திடும். அடுத்த தடவை ரச வடை போடுங்க' என்றதும் மணிமேகலைக்கு முகம் மாறிவிட்டது.

'போட்டாப் போச்சு... நீங்க விளையாட்டா தமிழ் வகுப்பு இளங்கோ வீட்ல நடக்கும், ரங்கசாமி சொல்லித் தருவாருன்னுட்டு போயிட்டீங்க. இப்ப நாங்க முழிக்கறோம். ரெண்டு மாசம் உங்க வீட்ல வகுப்பு வெச்சி நீங்க தமிழ் சொல்லித் தாருங்களேன் ஒரு மாறுதலுக்கு' என்றாள் மணிமேகலை.

எனக்குப் பகீரென்றது. இரண்டு காரணங்கள். சின்னக் காரணம், எனக்கே தமிழ் தகராறு. இதில் நான் எப்படி சொல்லித் தருவது? பெரிய காரணம், என் மனைவி வரவங்களுக்கு காப்பி டிபன் கொடுப்பது என்பது கனவிலும் நடக்காத காரியம். எனக்குக் காப்பி கிடைப்பதே கஷ்டம். பூசாரியே பசிக்கு பட்டாணிக்கடலை திங்கறச்சே, சாமிக்கு பருப்பும் நெய்யும் போட்டுப் பொங்கல் படையல் எங்கேருந்துங்க வரும்?

'வீட்டை இடிச்சு ரீமாடல் பண்ணப் போறோம். இல்லாட்டி என் வீட்ல வெச்சிக்க ஆட்சேபமில்லை' என்று பொய் சொன்னேன். பிறகு 'டிபன் இருக்கட்டும். பிள்ளைங்க தமிழ் கத்துக்கிறாங்களா? எழுத்து அடையாளம் காட்றாங்களா? எழுத வந்திடுச்சா? படிக்க முடியுதா?' என்றேன்.

'குழந்தைங்களுக்கு மாமா சொல்றது ஒண்ணும் புரியல. அவரு ஏதோ சொல்லிட்டுப் போயிடறாரு. வீ டோன்ட் நோ வாட் ஹி ஈஸ் ஸேயிங்னு பிள்ளைங்க புலம்புதுங்க. அ அரம், ஆ ஆலமரம், இ இலந்தைப்பழம், ஈ ஈச்சம்பழம், உ உலக்கைனு சொல்லிட்டு போயிடராரு. குழந்தைகள் இதெல்லாம் பார்த்ததில்ல. முழிக்கறாங்க. அ அமெரிக்கா, ஆ ஆப்ரிக்கா, இ இத்தாலின்னு சொல்லிக்குடுத்தா என்ன? இங்க வளர்ற பிள்ளைங்க தமிழ் எழுதப் படிக்கத் தெரிஞ்சிக்கிறது அவசியம்னு எனக்குத் தோணலீங்க. அவங்க திருக்குறளும் கம்பராமாயணமுமா படிக்கப் போறாங்க? ஏதோ பேச்சளவுக்குத் தமிழ் கத்துக்கிட்டா போதும்னு தோணுது. இனிமே நாளையிலிருந்து நான் வீட்டிலேயே அபிக்கு பேச்சுத் தமிழ் சொல்லிக் கொடுக்கலாம்னு இருக்கேன்' என்று பொரிந்து தள்ளினாள் மணிமேகலை.

அடுத்த வாரம் ரங்கசாமி இந்தியா திரும்பப் போவதாய் எனக்குத் தகவல் வந்தது. இளங்கோ அலுவலக விசயமாய் சான்பிரான்சிஸ்கோ போகவேண்டி இருந்ததால் பயண தினத்தன்று இரவில் ரங்கசாமியை விமான நிலையத்தில் கொண்டு விடும் பொறுப்பு என்னுடையதானது.

விமான நிலையத்துக்குக் காரில் போகும் போது, ரங்கசாமி அதிகம் பேசவில்லை. அவர் முகம் வருத்தமாய் இருந்தது.

'என்னங்க உடல்நிலை சரியில்லயா? ஏன் சீக்கிரம் ஊருக்குப் போறீங்க? போயிட்டு எப்ப வரதா திட்டம்?' என்றேன்.

'மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்', 'நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல்' என்று பழமொழிகளை உதிர்த்தார்.

எனக்குப் புரியவில்லை. 'அய்யா, என்ன சொல்ல வரீங்க'

'உங்ககிட்ட சொன்னா என்னா? மருமக மணிமேகலைக்கு என்னைப் புடிக்கல. குழந்தை அபிக்கு தமிழ்ல பேச்சு சொல்லித் தாராப்புல என் காதுல விழற மாதிரி 'தாத்தா எப்பொழுது ஊருக்குப் போவாரு?', 'இந்தியாவுக்குப் போக தினமும் விமானம் இருக்கு', 'விருந்தும் மருந்தும் மூன்று நாள்'னு சொல்லித் தரா. ஒரு நாளக்கி அவள் சொல்லிக் கொடுத்தாளா இல்ல அபியே சொல்லிச்சானு தெரியல... அபி என்னைப் பார்த்து 'தாத்தா நீ ஒரு கொரங்கு'னு சொல்லிச்சு. சரி, பாவம், குழந்தை தெரியாம சொல்லிட்டுச்சுனு பேசாம இருந்தேன். அப்ப மருமக மணிமேகலை சொல்றா 'அபி, அபி, பெரியவங்களை மரியாதை இல்லாம பேசக்கூடாது. தாத்தா நீ ஒரு கொரங்குனு சொல்றது தப்பு. தாத்தா நீங்க ஒரு கொரங்குனு சரியா சொல்லு. எங்கே சொல்லு, நான் சொன்னதைத் திருப்பிச் சொல்லு 'தாத்தா நீங்க ஒரு கொரங்கு'ங்கறா. குழந்தைக்கு பேசச் சொல்லித்தாராளா, மறைமுகமா என்னைத் திட்டி ஊருக்குப் போகச் சொல்றாளானு கொழப்பமாயிடுச்சு. நான் கெளம்பரதா முடிவு பண்ணிட்டேன்.'

'இதை இளங்கோகிட்ட சொன்னீங்களா?'

'இல்லீங்க. வேணாம். அவன் மணிமேகலைய கண்டிப்பான், குடும்பத்தில கொழப்பம் வரும். நான் கெளரவமாப் போறதுதான் நல்லது. எனக்கு வீடு வாசல் ஒட்டு உறவு ஊர்ல இருக்கு. இங்க ஏன் லோல் படணும்? குழந்தைக்கு அவங்க தமிழ் கத்துக் குடுத்தா என்ன, பிரஞ்சு சொல்லிக் கொடுத்தா என்ன? மனசு தாங்காம உங்ககிட்ட சொல்லிட்டேன். இதை நீங்க இளங்கோகிட்ட சொல்ல வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ் வகுப்பு அத்தோடு நின்று போனது. தமிழ்ச் சங்கத்தில் ஒரு நல்ல தமிழ் வாத்தியாரைத் தேடிக்கொண்டிருக்கிறோம். இன்னம் கிடைத்தபாடில்லை. மணிமேகலை தன் வேலையை விட்டுவிட்டு தென்னிந்திய உணவகம் தொடங்கிவிட்டாள். வியாபாரம் சக்கைபோடு போடுகிறது.

எல்லே சுவாமிநாதன்
More

எலி தந்த வலி
Share: 
© Copyright 2020 Tamilonline