Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
நூல் அறிமுகம்
ப. சிங்காரத்தின் இரண்டு நாவல்கள்
- வெங்கடேஷ் .ஆர்|ஆகஸ்டு 2008|
Share:
Click Here Enlargeஎண்பதுகளின் இறுதியில் நான் தீவிரமாக இலக்கியம் படித்த காலத்தில், ப. சிங்காரம் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களுள் ஒருவரானார். 'புயலிலே ஒரு தோணி', 'கடலுக்கு அப்பால்' என்ற இரண்டு நாவல்களை எழுதியுள்ள சிங்காரம், தமிழ் நாவல் உலகில் வித்தியாசமானவர். தமிழின் தலைசிறந்த 20 நாவல்களுள் ஒன்றாக 'புயலிலே ஒரு தோணி' கருதப்படுகிறது. அந்தச் சிறப்புக்கு அனைத்து தகுதியும் கொண்டது அந்நாவல்.

பெரும்பாலும் சமகால சரித்திரம் நாவல்களில் அதிகம் இடம்பெறாமல் போய்விடக் கூடும். வரலாற்றுப் புதினங்கள் ஒருவிதக் கற்பனையை முன்வைத்து எழுதப்பட்டதனால், அது என்னை அதிகம் கவர்வதில்லை. ஆனால், சென்ற நூற்றாண்டில் கண்ணெதிரே நடந்த முதல், இரண்டாம் உலகப் போர்கள் குறித்துத் தமிழில் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று தேடுபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

தமிழில் இன்று நகைச்சுவை எப்படி முற்றிலும் காணாமல் போய்விட்டதோ அதேபோல் சாகசகக் கதை என்ற வடிவமும் காணாமல் போய்விட்டது. 'புயலிலே ஒரு தோணி' சாகசக் கதை சொல்லலின் உச்சம்.
புயலிலே ஒரு தோணி', இரண்டாம் உலகப் போர் பின்னணி, சுமத்ரா தீவுகளில் நடைபெறும் கதை. அதுவும் தமிழர்கள் பார்வையில் இரண்டாம் உலகப் போர் அனுபவங்களை எழுதும் நாவல் இது. இதன் முக்கியத்துவத்தைப் பின்வருமாறு அலசலாம்.

* இரண்டாம் உலகப் போர் காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் எப்படித் தவிர்க்க இயலாமல், அந்தப் போரில் ஈடுபட வேண்டியக் கட்டாயத்துக்கு ஆளாயின என்பது இன்று ஆர்வமாக சரித்திரம் படிப்பவர்களுக்கு மட்டுமே புரியும். ஆனால், சிங்காரத்தின் நாவல்களில், போர்க்கால சரித்திரம் அவ்வளவு இயல்பாக உள்ளே நுழைந்து புறப்படுகிறது. பல நாட்டு ராணுவத் தலைவர்கள், அவர்களுடைய வீர சாகசங்கள் எல்லாம் செவிவழிச் செய்தி போல் சொல்லப்படுவதும், பொருத்தமான இடங்களில் நாவலில் இடம்பெறுவதும் மிகவும் சிறப்பு. சிங்காரத்துக்கு சரித்திரத்திலும் உள்ள தேர்ச்சியே இத்தகைய நிகழ்வுகளையும் எளிதாக எழுத உதவி செய்திருக்கிறது.

இந்த அளவுக்குச் சரித்திரத் தேர்ச்சி உள்ள நாவலாசிரியரைக் காண்பது மிகவும் அரிது. அதுவும் சரித்திரத்தைச் சுவாரசியமாக, நாவலின் ஒரு முக்கிய இழையாகப் பின்னிக் கொண்டு செல்வது அவரது பரந்த ஆங்கில வாசிப்பையே வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

70 ஆண்டுகள் கழித்து இன்றைக்குப் படிக்கும்போதும், இரண்டாம் போர்க் காலத்தை மனக்கண் முன் நிறுத்தும் வல்லமை அவரது எழுத்தில் நிறைந்து இருக்கிறது.

* கடல் பயணம் என்பது தமிழ் எழுத்து உலகில் முற்றிலும் புதிய அனுபவம். அதுவும் இரண்டாம் போர்க்காலத்தில் பாய்மரக் கப்பலில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்லும் அனுபவம், புயலிலே ஒரு தோணியில் கிட்டத்தட்ட 20-25 பக்கங்களுக்கு மேல் வருகிறது. ஒவ்வொரு வியாபாரியும் தன் சொந்தக் கதைகளையும் ஊர்க்கதைகளையும் நடப்புகளையும் பேசிக்கொண்டு செல்லும் பகுதி, நாவலின் சத்தான பகுதிகளில் ஒன்று. தமிழுக்குப் புதிதான அனுபவமும் இது. அத்தோடு, கடல் அலைகளின் ஆட்டத்துக்கு ஏற்ப, உள்ளே உட்கார்ந்துகொண்டு இருப்பவர்கள் படும் வேதனையும் விரக்தியும் மிக நுட்பமாகப் புனையப்பட்டு உள்ளது.

* நாவலின் மற்றொரு சிறப்பு, பினாங்கு போன்ற பகுதிகளில் செட்டிமார்கள் போய்ப் பணம் கொண்டு கொடுத்துச் செய்துவந்த லேவாதேவித் தொழில் பற்றிய வர்ணனை. செட்டித் தெருவை அப்படியே வாசகர் மனத்தில் சித்திரமாகத் தீட்டியுள்ள சிங்காரம், அங்கே உள்ள மேலாள், அடுத்தாள், பெட்டியடிப் பையன், சமையலாள் என்ற வரிசையில் ஒவ்வொருவரின் வேலையையும் அவர்கள் நடக்கும் விதங்களையும் மிக அழகாகச் சித்திரப்படுத்தியுள்ளார். பணம் சம்பாதிக்க வெளிநாடு போனவர்களின் அன்றைய வாழ்வை இப்பகுதிகள் ஆவணப்படுத்துகின்றன.

* எல்லாவற்றையும் மீறி, 'புயலிலே ஒரு தோணி' தனித்து நிற்பதற்குக் காரணம், அதன் கதை. அது பாண்டியன் என்ற ஹீரோவின் சாகசக் கதை (Adventure Fiction). தமிழில் இன்று நகைச்சுவை எப்படி முற்றிலும் காணாமல் போய்விட்டதோ அதேபோல் சாகசகக் கதை என்ற வடிவமும் காணாமல் போய்விட்டது. 'புயலிலே ஒரு தோணி' சாகசக் கதை சொல்லலின் உச்சம். நாவல் தொடக்கத்தில் இருந்து கடைசிவரை, பயம் என்ற ஒன்றை அறியவே அறியாத நாயகன். அவனது ஒவ்வொரு செயலும் ஒரு நிஜ ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது.

இன்றைக்குத் தனிமனித துக்கங்கள், பயங்கள், வக்கிரங்கள் ஆகியவை மட்டுமே நாவல்களாக எழுதப்பட்டுக்கொண்டு இருக்கும் வேளையில்,பாண்டியனின் பாத்திரப் படைப்பு மிகவும் உற்சாகமளிப்பதாக இருக்கிறது.
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யூகிக்கவே முடியாத அளவு திருப்பங்கள். பாண்டியன் எடுக்கும் அதிவேக முடிவுகள், அதைச் செயல்படுத்தும் உற்சாகம், எல்லாம் பிரமிக்க வைக்கின்றன.

* நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பது இன்று வாய்மொழிக் கதைகளாகவே படிக்கக்கிடைக்கின்றன. 'புயலிலே ஒரு தோணியில்' நேதாஜி ஒரு பாத்திரமாகவே வருகிறார். ஒரு அஸைன்மெண்ட் தருகிறார். அதைப் பாண்டியன் செய்து முடிக்கும் பகுதி, நாவலில் மற்றொரு சிறப்பான பகுதி. அதற்கு முன்னரே காட்டில் நடக்கும் பயிற்சி மையத்துக்கு நள்ளிரவில் வருகிறார் நேதாஜி. அங்கே நடந்த தவறுகளுக்குத் தண்டனைகளை வழங்குகிறார். உயிர்ப்புடன் உலவும் பாத்திரம் நேதாஜி.

*'புயலிலே ஒரு தோணி' இரண்டாம் போர்க்காலச் சூழலிலேயே நடைபெறுகிறது. 'கடலுக்கு அப்பால்' நேதாஜி மறைவுக்குப் பின் இந்திய தேசிய ராணுவம் கலைந்து பிரியும் காலகட்டத்து நாவல். முன்னது சாகசத் தன்மையோடு எழுதப்பட்டது. பின்னது, போருக்குப் பின்னான அமைதி, யதார்த்த வாழ்வு, காதல், ஏமாற்றம் போன்றவற்றோடு எழுதப்பட்டிருக்கிறது.

கடலுக்குப் அப்பால் நாவலின் நாயகன் செல்லையா. இவனைப் பாண்டியனின் தொடர்ச்சியான பாத்திரமாகக் கொள்ளலாம். இந்த நாவலின் முதல்பாதி, ராணுவ முகாமில் இருந்து தமிழர்கள் எல்லாரும் பிரிந்து 'சட்டை மாற்றி' சராசரி வாழ்வுக்குத் திரும்பும் பகுதி. ஒவ்வொரு ஊராக நடந்து கடந்து, தத்தமது பழைய தொழில்களில் போய்ச் சேர்ந்து கொள்ள முனைவதே இப்பகுதியின் சாராம்சம்.

அப்படித் திரும்பி தனது பழைய வட்டித் தொழிலுக்கே திரும்பும் செல்லையாவின் காதல் நிறைவேறாமல் போவது, இதன் இரண்டாம் பகுதி. அதற்குக் காரணம், அவனது ராணுவ ஈடுபாடு. துப்பாக்கி தூக்கியவன், வட்டித் தொழிலைப் பார்க்க லாயக்கில்லாதவன். கூழைக்கும்பிடும், பணிவும், பவ்யமும் அற்றுப் போனவன் என்று,அவனது கடை முதலாளி செல்லையாவுக்குத் தன் மகளை மணமுடித்துத் தர மறுக்கிறார். செல்லையாவின் காதல் ஏமாற்றத்தில் முடிகிறது.

'புயலிலே ஒரு தோணி' ஆகட்டும், 'கடலுக்கு அப்பால்' ஆகட்டும், முற்றிலும் வேறு கதைக்களன், கதைமாந்தர்கள், கதைநிகழ்ச்சிகளைக் கொண்டது. எல்லா சிறப்புகளும் ஒன்றுகூடி ஒரு நாவலில் அமைவது உண்மையிலே பெரிய அதிர்ஷ்டம்தான். இரண்டு நாவல்களும் அந்த அதிர்ஷ்டத்தை நிரம்பவே பெற்றிருக்கின்றன. எத்தனை முறை படித்தாலும், இவற்றின் சிறப்புகள் மேலும் துலங்கவே செய்யும்.

ஆர். வெங்கடேஷ்
Share: 
© Copyright 2020 Tamilonline