Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர் | நூல் அறிமுகம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
நன்றி எதற்கு?
- பூரம் சத்தியமூர்த்தி|ஆகஸ்டு 2008|
Share:
Click Here Enlargeமுதலியாரின் சம்சாரத்திற்கு காலையிலிருந்து உடம்பு சரியாக இல்லை. வயதோ நாற்பத்தேழு. தேகம் என்றைக்குமே மெலிவு. குச்சி குச்சியாகத்தான் காலும் கையும் இருக்கும். நிறம் கறுப்பு. முகம் சிணுங்கினால் வைர மூக்குத்தி 'பளீர்' என்று வெட்டும். வயிற்றுக்கோளாறு எப்பொழுதுமே உண்டு. ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டிருக்கிறது. கடந்த வருஷம் முழுவதும் தொந்தரவில்லை. அதற்கு முன்புதான் வயிற்றில் ஆபரேஷன் ஆயிற்று. மறுபடியும் இப்பொழுது தொந்தரவு.

அதைக்கண்டதும் முதலியாருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. கட்டிலில் பக்கத்தில் அமர்ந்தபடி கையைப் பிடித்துப் பார்த்தார். நெஞ்சைத் தொட்டார். அர்த்தமில்லாத செய்கைகள். கையைப் பிடித்துப் பார்த்து எதுவும் அவரால் தெரிந்து கொள்ள முடியாது. டாக்டர் எதற்குப் பார்க்கிறார் என்று அவரைக் கேட்டால் சொல்லத் தெரியாது. என்னவோ அவளுக்கு ஆறுதலாகப் பார்த்து வைத்தார். கூடவே கேட்டார்; 'சோடா வாங்கியாரட்டா?'

'ஊஹூம்..'

'என்ன?'

'ஐய, சும்மா விடுங்களேன், உயிரை எடுக்கறீங்களே..'

'சுடுதண்ணி வேணுமா?'

'ச்சூ... ஒரு எளவும் வேணாம்...'

கூடத்துப் பெஞ்சியில் அமர்ந்திருந்த சண்முகம், தன் வலது மணிக்கட்டில் சுற்றியிருந்த மஞ்சள் கயிற்றை நெருடியபடியே, 'ஏன், மாமா, வைத்தியர் ஐயாவைக் கூட்டியாரட்டா?' என்று மெதுவாகக் கேட்டு வைத்தான்.

முதலியார் அதைக் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. சம்சாரத்தின் முகத்தருகே குனிந்து கொஞ்சிக் கொஞ்சி எதற்கோ கெஞ்சிக் கொண்டிருந்தார். 'வடிவு.. வடிவு...' என்கிற முனகல்தான் கேட்டது.

வடிவு முகத்தைச் சிணுங்கித் திரும்பித் திரும்பிக் கண்களை மூடிக்கொண்டாள். தன் சம்சாரம் அப்படி முகத்தைச் சிணுங்கினால் உயிரே போகிற மாதிரி இருக்கும் முதலியாருக்கு!

சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று எண்ணியவனாக முதலியார் வீட்டுப் பெரிய திண்ணையிலேயே முடங்கிக் கிடப்பது நாளடைவில் சண்முகத்தின் வழக்கமாகி விட்டது
வடிவாம்பாளின் தலைமாட்டில் பிரமை பிடித்த மாதிரி நின்றபடித் தலைகுனிந்து விரல் நகத்தால் தரையைக் கீறிக் கொண்டிருந்தாள் சுந்தரவள்ளி. அவளுக்கும் சண்முகத்திற்கும் கலியாணம் முடிந்து ஒரு வாரம்தான் ஆகிறது. ஒரு வாரமாய் வெட்கப்பட்டு வெட்கப்பட்டு மிரள்வதற்குத் தான் பொழுது சரியாக இருந்திருக்கிறது. 'மாமி'க்கு உடம்பு சரியில்லை என்றவுடன் அவளுக்கும்தான் உடல் வெலவெலத்துப் போய்விட்டது. சமையல் அறைக்குள் அவள் இன்னும் அடியெடுத்தே வைக்கவில்லை.

முதலியாருக்கு சண்முகம்தான் வளர்ப்புப் பிள்ளை மாதிரி இருந்தான். பத்து வருஷங்களுக்கு முன் கிராமத்திற்குள் அவன் அநாதையாக வந்து சேர்ந்தது இன்று போல் நினைவில் இருக்கிறது. தாய் தந்தை இருவரும் வயது வந்த காலத்தில் அவனைப் பெற்றுப் போட்டு போய்ச் சேர்ந்து விட்டார்கள் பரலோகத்திற்கு.

ஆகவே, அவன் பள்ளிக்கூடத்திற்குக் கூட அதிக நாட்கள் போகவில்லை. சில்லரை வேலைகள் செய்து, கிடைத்த இடத்தில் சோற்றைத் தின்று கழித்தான். இரண்டு வேளைச் சோறு எந்த வீட்டில் எப்பொழுது கிடைக்கும் என்று தெரியாது. தோட்டம், துரவு சுத்தப்படுத்துவது, தண்ணீர் இறைத்துக் கொடுப்பது, தென்னை மரத்திலேறி தேங்காய் பறிப்பது, மட்டை உறித்துத் தருவது, கிணற்றில் விழுந்த பாத்திரங்களை எடுப்பது, கொடிப்பந்தல் கட்டுவது, வெள்ளை வர்ணம் பூசுவது, தோரணங்கள் கட்டுவது, கைவண்டி இழுப்பது- இப்படி எந்த வேலை கிடைத்ததோ அதைச் செய்தான். அவனிடம் அப்படி ஒன்றும் அதிகக் காசு சேர்ந்ததில்லை.

ஒருநாள் வயல்காட்டில் சுற்றித்திரிவான் அவன்; இன்னொரு நாள் பெருமாள் கோவிலில் தோரணங்கள் கட்டிக் கொண்டிருப்பான். வீடு என்று அவனுக்கு எதுவும் இருந்தது கிடையாது. அவனைக் கோபுர வாசலில் அடிக்கடி காணலாம். இல்லாவிட்டால் நாயர் பெட்டிக்கடை அருகே இஷ்டப்படித் திரிந்து கொண்டிருப்பான். அப்படி இருந்தவனுக்குத்தான், ஒருநாள் முதலியாரின் தென்னந்தோப்பில் தேங்காய் பறித்துக் கொடுக்கச் சந்தர்ப்பம் வந்தது. நான்குபேர் தென்னை மரங்களில் ஏறினார்கள். சண்முகத்திற்குத் தென்னை மரம் ஏறுவதில் தனி உற்சாகம் உண்டு. ஆகவே அன்றைக்கும் அதிகம் தேங்காய் பறித்தவன் அவன்தான்! அதை முதலியார் பார்த்துவிட்டு மூக்கில் விரலை வைத்ததில் வியப்பில்லையே?! 'பலேடா பயலே!... பலே!... வீட்டுக்கு வந்து சோறு தின்னுப்பிட்டு அப்புறம் கூலி வாங்கிக்கடா...' என்று பாராட்டித் தன்னோடு அவனை அழைத்துக்கொண்டு போனார் அவர்.

சண்முகம் ஓரிடத்தில் ஒருவேளை சோறு தின்றுவிட்டால் அப்புறம் அங்கே யார் எந்த வேலையைக் காலால் இட்டாலும் தலையால் செய்வான். முதலியாரின் சம்சாரம் வடிவாம்பாள், அவ்வப்போது சோறு போடுவாள்.

அதற்குத் தகுந்தபடி வேலை வாங்கிக் கொள்ளவும் அவள் தவறுவதில்லை. அதிலெல்லாம் அவள் ரொம்பவும் கணக்கு. தோட்டத்திலிருந்து வந்த மாம்பழங்களில் இரண்டைக் கொடுத்தால், மாலையில் எருமை மாட்டைக் குளிப்பாட்டிக் கொண்டு வரச் சொல்வாள். சண்முகம், வேலைக்குச் சோம்பல் படக்கூடியவன் இல்லை! செய்கிறதையும் திருப்தியாக மூக்கால் அழாமல், சுத்தமாகச் செய்வான். சாவுக்கிராக்கி பண்ணுகிற வழக்கம் கிடையாது. ஆகக்கூடி, சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று எண்ணியவனாக முதலியார் வீட்டுப் பெரிய திண்ணையிலேயே முடங்கிக் கிடப்பது நாளடைவில் சண்முகத்தின் வழக்கமாகி விட்டது!

வடிவாம்பாளின் குணம் அவனுக்கு நன்றாகத் தெரியும்! ஆனால் அதையெல்லாம் அவன் கவனிக்கவே மாட்டான். அதனால் தானோ என்னவோ வடிவாம்பாளுக்கு அவனை நிரம்பவும் பிடித்துப் போயிற்று. அவளுக்கு எங்கே கொஞ்சம் நம்பிக்கையும், பாசமும் விழுகிறதோ அங்கே முதலியாருக்கும் நம்பிக்கை பாசம் எல்லாம் வந்துவிடும்! அது வழக்கம். வடிவாம்பாள் பேசுகிற தினுசு, தொனி, முகபாவம் ஆகிய அனைத்தையும் கவனித்து அவர் பார்க்கிற விதமே அலாதி தான்! அவள் சொல்கிறதில் அபிப்பிராய பேதமே வைத்துக் கொண்டதில்லை! வடிவாம்பாளுக்கு எதிலும் தீர்மானமான அபிப்பிராயம்தான்; அவள் சொன்னால் சொன்னதுதான்!

முதலியாருக்குத் தந்தை வழியில் அதிக சொத்து கிடையாது; மனைவி மூலம் வந்ததுதான் முக்கால்வாசி! ஆயிரம் தென்னை மரங்கள், பத்து ஏக்கர் நஞ்சை, புஞ்சை, பெரிய வீடு இவ்வளவும் வடிவாம்பாளோடு வந்த சொத்துக்கள்! முதலியார் தம்பதிக்கு பிள்ளை குட்டியே பிறக்கவில்லை. இப்பொழுது அவருக்கு வயது ஐம்பத்தேழு ஆகிவிட்டது. தலை நரைத்துப் பல் விழுந்து விட்டது. உற்றார்-உறவினர் அவரை நாடிய காலம் உண்டு. அவரும் வடிவும் அவர்களுக்கு வேண்டிய அளவு செய்ததும் உண்டு.

வடிவாம்பாளுக்குப் பெரிய மனசு. ஒருவரைப் பிடித்து விட்டால் வாரிவாரி வழங்கும் வள்ளன்மை அவளுக்கு வந்து விடும். ஏழைமையைக் கண்டால் ஒவ்வொரு சமயம் மிகவும் இரங்குவாள். இன்னொரு சமயம் என்ன கெஞ்சினாலும் பைசாகூடக் கொடுக்க முன்வரமாட்டாள். சிலபேரிடம் அந்தப் பூனைக்குட்டி விசுவாசத்தை எத்தனை வருஷமானாலும் மாற்றிக் கொள்ளமாட்டாள். முதலியார் எல்லாவற்றிற்கும் பூட்டிய ஜோடி மாதிரி இணங்குவார்.

'நம்ம கட்டைப்பய பொண்சாதி வந்தா...' என்று அவர் சாதாரணமாக ஆரம்பிப்பார்.

'உம்..' வடிவாம்பாளின் பதிலில் எதுவுமே கண்டுபிடிக்க முடியாது.

'பச்சரிசி தவிடு வேணுமாம்..'

'என்னது? கட்டைப்பய பொண்சாதியா? அவளுக்கு வேற வேலை கிடையாது!'

'அதுதானே... இப்ப இல்லேன்னிட்டேன்! கண்டிப்பா...' முதலியாரின் வழக்கம் இதுதான். 'காற்றடிக்கிற திசை' புரிந்தால் போதும்!

'நம்ப விறகு டிப்போ நாராயணன் அவசரமா நூறு ரூபா கடன் கேட்டான் காலையிலே...' என்று லேசாகச் சொல்வார்.

'அதுக்குத்தான் காலையிலே வந்தானா, பாவம்... எங்கிட்ட சொல்லவே இல்லையே? ஐயோ பாவம், குடுத்தீங்களா?'

'எதுக்கும் அப்புறம் வான்னு சொல்லி அனுப்பிச்சேன்..'

'ஏன் குடுக்கிறதுதானே பாவம்...'
'இப்ப வர்றேன்னு இருக்கானே. அப்புறமா வந்து அம்மாகிட்ட கேட்டு வாங்கிக்கன்னு சொல்லியிருக்கேனே' என்பார். உடனே யாரையாவது விட்டு அவனைக் கூப்பிட்டு அனுப்புவார்.

சண்முகத்திற்கும் சுந்தரவள்ளிக்கும் முதலியார்தான் தன் செலவில் கலியாணம் பண்ணி வைத்தார். ஊர்க் கோயிலில் கலியாணம் தடபுடலாக நடந்தேறிற்று
சண்முகத்திற்கு இதெல்லாம் உள்ளூரச் சிரிப்பாக இருக்கும். ஆனால் எதையும் என்றும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான். அதனால் நமக்கென்ன என்று விட்டு விடுவான். அதையெல்லாம் பற்றி ஊரில் வம்பளக்கிற சின்னத்தனமும் அவனிடம் கிடையாது. அம்மா தயவு இருந்தால்தான் எதுவும் நடக்கும் என்கின்ற ரகசியம் அவனுக்குத் தெரியும். ஆகவே அவள் மனசு கோணாமல் நடந்து கொள்வதில் அக்கறையாய் இருப்பான். காக்காய் பிடிக்கிறது என்றில்லை. காரணம் இல்லாமல் அவள் பேரில் அவனுக்குச் சிலசமயம் இரக்கம் வருவதுண்டு. அவள் ருசியாய்ச் சமையல் செய்து சுடச்சுட போடும்போது அவன் மனது உருகி விடும். நெய் ஊற்றி அவன் ஆயுளில் சாப்பிட்டதில்லை. அங்கு வந்த பிறகுதான் அதெல்லாம் கண்ணால் பார்க்க முடிந்தது. வண்டி மாடுகளைக் குளிப்பாட்டி கொட்டிலில் கட்டிவிட்டு வந்தால் சுடச்சுட டிகிரி காபி போட்டுக் கொடுப்பாள். அதை மறக்கவே முடியாது. பட்சணங்கள், பலகாரங்கள், பருப்பு சாம்பார், ரசம் வேண்டிய மட்டும் அவன் சாப்பிட்டிருக்கிறான். போதும் போதும் என்று சொன்னாலும் கேட்காமல் போடுவாள். சாப்பிடாவிட்டால் கோபம்கூட வந்துவிடும். நான் கொடுத்து வேண்டாம் என்று சொல்லலாமா என்கிற மாதிரி முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வாள். இந்த உபசரிப்பில் அவன் ரொம்பவும் பரவசப்படுவான். வேஷ்டி துணிமணிகள் தருவதிலும் தாராளம்தான். தீபாவளிக்குத் தீபாவளி வேஷ்டி வாங்கித் தருவதிலும் குறைவு இருக்காது. ஒவ்வொரு சமயம் அவளே மகிழ்ந்துபோய் நீதாண்டா என் பிள்ளை மாதிரி என்பாள். முதலியார் முகத்தில் மகிழ்ச்சி படரும். சண்முகம் ஒன்றும் பேசமாட்டான். தலையைக் குனிந்து கொள்வான். பிள்ளை செய்கிறாற்போல தான் அவனும் எதுவும் எதிர்பார்க்காமல் ஒவ்வொரு காரியமும் செய்திருக்கிறான்.

மூன்று மாதங்களுக்கு முன் வடிவாம்பாள்தான் கல்யாணப் பேச்சைத் துவக்கினாள். அன்றைக்குப் பௌர்ணமி நிலவு. வடிவாம்பாள் வாசல் திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தாள். முதலியார் சாய்வு நாற்காலியில் அரைத் தூக்கத்தில் இருந்தார்.

'சண்முகம் உனக்கு என்னடா வயசு?'

'எனக்காம்மா, முப்பது ஆகப் போகுதுங்க...'

'அதுசரி, நீ ஏண்டா கண்ணாலம் கட்டலை..'

'ம்.. நான் எங்கம்மா..'

'ஏன்? என்னதான் ரோசனை...'

'நான் எப்படிப் பொண்ணு கேக்கறது ஒருத்தர் கிட்ட?'

'ஏன், எத்தினியோ பொண் கிடக்கு, அநாதியா அரை வவுத்துக் கஞ்சிக்குக் கூட இல்லாமெ கஷ்டத்திலே இருக்கு'

'அதுசரிங்கம்மா... நம்ம பாடே பெருங் கஷ்டமாவுல்ல இருக்கு'

'அப்படிச் சொல்லாத... உனக்கு வேண்டியதத் தாரேன்'

முதலியார் விழித்துக் கொண்டார். 'உம்... கொடுத்தாப் போச்சுது...'

'என்ன சம்முகம், நான் சொல்றதைக் கேளு, தொரைசாமி முதலி வீட்டுல வேலை செய்யுதே சுந்தரவள்ளி... அது ரொம்ப நல்ல பொண்ணாத் தெரியுது'

'யாரச் சொல்லுறேய் வடிவு. இங்கிட்டு பால் வாங்கிட்டு ஓடிச்சே அந்தக் குட்டியா?'

'ஆமாங்குறேன், ஒரு நாளைக்கு இங்கிட்டு வந்து முப்பது படி அரிசி புடைச்சு வக்கலியா?'

'ஆமாமாம், நினைப்பு வருது'

'சம்முகம், அந்தப் பொண்ணக் கட்டிக்க, பொண்ணோ அநாதை. பாவம்'

'ஏன்மா, எனக்கு சம்பாத்யம் இல்லியேம்மா' என்றான் சண்முகம்

'அட, என்னடா சம்முகம், நீ இந்த வூட்டுப் புள்ளை மாதிரி உனக்கு வேண்டியதை நான் தான் தரேங்கிறேன்...'

சண்முகம் வெட்கப்பட்டு வாயை மூடிக் கொண்டு இருந்தான்.

'என்ன சம்முகம், நான் சொல்றதைக் கேக்கப்போறியா இல்லையா...?'

'சரிங்க..!'

'நான் இவ்வளவு வருஷமா உன்னை எதுக்குச் சோறு போட்டு வளர்த்தேன்!..'

'.....'

'எங்க ரெண்டு பேருக்கும் நீதாண்டா மவன்..'

'சம்முகம், அம்மா சொல்றது காதுல விழுந்திச்சா' என்று முதலியார் பலமாகப் புன்னகை செய்தார்.

'எனக்கு என்னவோ மனசு சங்கடமா இருக்குதுங்க.'

'என்னடா சங்கடம், நான் தத்து எடுத்துக் கிட்டேன்னு வச்சிக்க...' என்று வடிவாம்பாள் முகத்தைப் பார்த்துக்கொண்டே சிரித்தார் முதலியார்.

வடிவாம்பாளும் அதை ஆமோதிப்பது போல, 'ஆமாம் சம்முகம், நாங்க உன்னைத்தான் நம்பியிருக்கோம்' என்று கண்ணீர் விட்டாள்

ஊர் முழுவதும் கூட அரசல் புரசலாக அந்தப் பேச்சு பரவிற்று.

'முதலியார் நம்ப சம்முகம் பயலுக்கு சொத்தை எழுதி வக்கப் போறாராம். தத்து எடுத்துக்கிட்டாராம்.'

'ஆமாம்யா.. வடிவாம்பாள் பேச்சுக்கு அப்பீல் கிடையாது அங்ஙனே...'

'சம்முகம் பய அம்மாளை நல்லா காக்கா பிடிச்சுட்டான்யா.. அதிலே.. கெட்டிப் பெய.. நல்லா வலைய விரிச்சு பிடிச்சான்யா...'

'அநாதைப் பயலுக்கு யோகத்தைப் பார்த்தியா?!..'

-இப்படியெல்லாம் ஊரில் பேச்சு அடிபட்டது.

சண்முகத்திற்குக் காரணமில்லாமல் இதெல்லாம் சங்கடமாக இருந்தது.

'நமக்கெதற்கு இதெல்லாம்?' என்று ஒதுங்கி ஓடிவிடத்தான் முயன்றான். ஆனால் முதலியார் ஒரே தீவிரமாக கலியாண ஏற்பாடுகளில் ஈடுபட்டு விட்டார். துரைசாமி முதலியார் வீட்டில் இருந்து சுந்தரவள்ளியை முதல் காரியமாக வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். 'வடிவு, நீ கூப்பிடறேன்னு சொன்ன ஒடனே சுந்தரவள்ளி கூடவே வந்திருச்சி..' என்று பெருமைப்பட்டார்.

'வாடி என் கண்ணே...' என்று வடிவு அவளைக் கட்டியணைத்துக் கொண்டாள்.

சண்முகத்திற்கும் சுந்தரவள்ளிக்கும் முதலியார்தான் தன் செலவில் கலியாணம் பண்ணி வைத்தார். ஊர்க் கோயிலில் கலியாணம் தடபுடலாக நடந்தேறிற்று.

சண்முகத்திற்கு தனக்கேன் இந்த திடீர் அதிர்ஷ்டத்தை ஆண்டவன் கொடுத்தான் என்பது புரியவில்லை. 'எனக்கும் இப்படி ஒரு நல்ல காலம் வருமா?' என்று பிரமித்துக் கொண்டிருந்தான். எத்தனையோ உறவு முறையெல்லாம் விட்டுவிட்டு முன்பின் தெரியாத இந்த ஏழையிடம் வடிவாம்பாள் இவ்வளவு பாசம் வைப்பானேன். 'கடவுளே, ஏன் இந்தக் கருணை!' என்று கலங்கினான். பைசா காசுக்குக் கூட ஒருவனை நம்பாத முதலியார் தன்னிடம் இவ்வளவு நம்பிக்கையும் பாசமும் வைப்பதற்கும் வடிவாம்பாள் தான் காரணம் என்று அவனுக்குத்தான் தெரியும். ஆகவே, கலியாணமெல்லாம் முடிந்த பிறகு முதலியார்-வடிவாம்பாள் இருவரையும் நிற்க வைத்து காலில் விழுந்து கும்பிட்டான் அவன்.

'என் மகனா நினச்சு உனக்கு செஞ்சு வச்சேன் கலியாணத்தை. இப்பதான் மனசு பூர்த்தியாச்சு...' என்றார் முதலியார்.

'சுந்தரவள்ளி என் ஆசையை நிறைவேத்தும்மா..' என்றாள் வடிவாம்பாள்

***


அப்படியெல்லாம் அகமகிழ்ந்த வடிவாம்பாள்தான் ஒருவாரம் முடியும் முன்பே படுக்கையில் முனகிக் கொண்டு கிடந்தாள். முதலியாரின் முகம் செத்துக் கிடந்தது. 'ஏன் மாமா, வண்டியக் கட்டட்டுமா?' என்று கேட்டான் சண்முகம். ஆனால் முதலியார் பதில் பேசவில்லை. ஜிப்பாவை எடுத்து மாட்டிக் கொண்டார். விசிறி அங்கவஸ்திரத்தை எடுத்துப் போட்டுக் கொண்டார். சண்முகம் பதில் எதிர்பார்க்காமலேயே வண்டியைப் பூட்டினான். அவன் தலைக்கயிற்றை இழுத்துப் பிடிப்பதற்கும் முதலியார் செருப்பை மாட்டிக் கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது. வந்ததும் முதலியாரே தலைக்கயிற்றை வாங்கிக் கொண்டார். 'நான் வர வேண்டாமா' என்றான் சண்முகம். வண்டி நகர்ந்து போய் விட்டது.

வடிவாம்பாளின் தலைமாட்டில் நின்று கொண்டிருந்த சுந்தரவள்ளி 'உடம்புக்கு எப்படிங்கம்மா?..' என்று பரிதாபமாகக் கேட்டாள். வடிவாம்பாளும் பதில் பேச வில்லை. 'சூள்' மட்டும் கொட்டினாள். இதற்குள் கூடத்திற்கு வந்து நின்ற சண்முகம் விட்டத்தைப் பார்க்கலானான். காரணம் இல்லாமல் ஏதோ கலவரமாக இருந்தது 'ஏம்மா, கஞ்சி வக்கச் சொல்லட்டுமா அவளை..' என்று கேட்டு வைத்தான்.

'வேணாம்பா வேணாம்.. '

'உடம்புக்கு என்ன செய்யுது'

'......'

பதிலேதும் வராததால் சண்முகம் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான். அரைமணிப் பொழுது நகர்வதற்கு அரை யுகம் ஆயிற்று. கண்டபடி பயங்கரமாக தோன்றிக் கொண்டிருந்தது. காரணம் தெரியாமல் வயிற்றைக் குழப்பிக் கொண்டிருந்தது. நிம்மதியில்லை.

வாசலில் வண்டிச்சத்தம் வந்து நின்றபோது தான் சண்முகம் நிமிர்ந்தான். முதலியார் முன்னால் வந்தார். பின்னால் பையைத் தூக்கிக் கொண்டு டாக்டர் வந்தார். அவர் பரிசோதனை செய்து மருந்து எழுதும் போது முதலியார் ஆயிரம் கேள்விகள், சந்தேகங்கள் கேட்டார்.

டாக்டர் போன பிறகு மருந்துச் சீட்டை எடுத்துக் கொண்ட முதலியாரை சண்முகம் மறித்தான். 'கொடுங்க மாமா, நான் வாங்கியாரேன்..'

'வேணாம்பா...' முதலியார் இந்த பதிலை சண்முகத்தின் முகத்தைப் பார்த்துக் கூடச் சொல்லவில்லை. அது அவனுக்கு முகத்தில் அறைந்தாற்போல இருந்தது. 'என்ன நடந்து விட்டது இப்போது? என்மேல் என்ன கோபம்?'

வடிவாம்பாளின் தலைமாட்டில் இன்னும் ஒன்றும் புரியாதவளாய் சுந்தரவள்ளி நின்று கொண்டிருந்தாள். 'ஏம்மா, நான் சோறு சமைக்கட்டுமா?' என்று சன்னமாகக் கேட்டாள் முடிவில்.

வடிவாம்பாள் முனகிக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தாள். 'நாந்தான் இருக்கிறேனே.. நீ எதுக்கு நீ சும்மா குந்திக்க..'

'இல்லேம்மா.. நான் நல்லா சமைப்பேன்.. உங்களுக்குத்தான் மேலுக்கு முடியலியே..'

'ஐய... எனக்கு என்ன கேடுடி வந்திருச்சி இப்ப...' வடிவாம்பாளின் முகத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

சண்முகம் மென்று விழுங்கிக் கொண்டிருந்தான். அன்று இரவு வரை முதலியாரும் சரி, வடிவாம்பாளும் சரி அவன் கேள்விகளுக்கு பதிலும் சொல்லவில்லை... அவனை லட்சியமும் செய்யவில்லை. முதலியார் பார்த்த பார்வை என்னவோ 'நீ ஏண்டா இங்க உட்கார்ந்து கழுத்தை அறுக்கிறாய்' என்பது போல இருந்தது.'என்ன காரணமாக இருக்கும்?' என்று சண்முகம் மண்டையைக் குழப்பிக் கொண்டான்.

இரவு வாசல் திண்ணையில் வந்து பாயை விரித்தபோது முதலியார் வந்து அருகில் நின்றார். 'சம்முகம், இனிமே நீ ஒரு நல்ல வீடாப் பார்த்து குடித்தனம் வக்கிற வளியைப் பாரு. கலியாணம் கட்டியாயிருச்சு என்ன.. என்னாலே முடிஞ்ச அளவுக்கு நான் செஞ்சுட்டேன் என்ன... கலியாணத்த நானே நடத்தி வச்சிட்டேன். நீயும் அவளும் சந்தோஷமா எங்கனாச்சும் போய் நல்லா இருக்கணும் என்ன...'

'சரிங்க மாமா..'

'ஆமாம், ஆண்டவன் காப்பாத்துவாரு. நான் செய்யறதை செஞ்சாயிருச்சி. இனிமேலும் எதிர்பார்க்கறதுல பிரயோசனம் இல்லே.. என்ன...?'

'சரிங்க மாமா'

'அதனாலே காலையிலே பெட்டி சாமான் எல்லாம் எடுத்துக்கிட்டு கிளம்பி நல்லூர் போனீங்கன்னா பஸ்சைப் பிடிச்சு திருச்சி போய்ச் சேறலாம். அங்கே வேங்கிடசாமி செட்டியார் கடையிலே போய் நான் சொன்னேன்னு சொல்லு... ஒரு வேலை போட்டுக் கொடுப்பாரு.. பொழைச்சுக்க..'

'நாளைக்குக் காலையிலயா மாமா...'

'ஆமாம். நான் நாளைக்கு வரச் சொல்லுறேன்னு செட்டியார் கிட்ட சொல்லியிருக்கேன் நேத்து..'

'சரிங்க மாமா'

'சண்முகம், இரவெல்லாம் தூங்கவில்லை. அதிகாலையில் அவனும் சுந்தரவள்ளியும் முதலியார் வடிவாம்பாள் இருவர் காலிலும் விழுந்து எழுந்தார்கள். பெட்டி சாமான்கள் தயாராகி விட்டன. இரண்டு பெட்டிகள், ஒரு கூடை, பாய், பாத்திரச் சாக்கு. வாசலில் வாடகை மாட்டு வண்டி வந்து நின்றது.

'வரேங்க மாமா!'

'வண்டிக்காரன் கிட்ட கூலி பேசிக்கிட்டியா?'

'பேசிக்கிட்டேங்க.. வரட்டுங்களா.. அம்மா, வரட்டுங்களா.. நீங்க எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்கீங்க.. நான் எப்படி திருப்பிச் செய்யப் போறேன்னு புரியல்லே..'

'நாங்க எதுவும் எதிர்பார்க்கல்லே.. நீங்க நல்லா இருங்க போதும்' என்றாள் வடிவாம்பாள்.

'வர்ரேங்கம்மா..' என்று தடுமாறினாள் சுந்தரவள்ளி

'வண்டி நகர்ந்து தெருக்கோடி தாண்டிற்று. அப்பால் முதலியாரின் தென்னந்தோப்பு நீண்டு கிடக்கிறது. வரிசையாய் தென்னை மரங்கள் ஆற்றங்கரையோரமாய் அணிவகுத்து நிற்கின்றன. சண்முகம் அந்த அழகை சாவகாசமாக ரசித்துக் கொண்டிருந்தான்.

'என்னய்யா.. சம்முகமாடா அது.. என்ன பொண்சாதியக் கூட்டிக்கிட்டு கிளம்பிட்ட?.. கோயிலுக்கு எங்கியாணும் போறியா.. டேய்.. யோகசாலிடா நீ.. முதலியார் சொத்து பூரா வந்திருச்சே...' கணக்குப் பிள்ளை செல்லப்பையர் சைக்கிளை தள்ளிக் கொண்டு பின்னால் வந்து கொண்டிருந்தார்.

'போய் வாரேன் சாமி..'

'முதலியார் மாதிரி ஒரு ஆசாமி கிடைக்கமாட்டார். ஆசாமி தங்கக்கட்டி. உனக்கு கல்யாணம் செஞ்சு வச்ச பலன் அவருக்கு. அதை விட பெரிசு ஒண்ணும் கிடையாதுடாப்பா.. ஒரு கல்யாணம் செஞ்சு வக்கிறதுங்கறது
பெரிய புண்ணியம் தெரியுமா?'

'ஆமாங்க, வரட்டுங்களா!'

'அவர்கிட்ட விசுவாசமா இருந்துக்கடா.. ஆனா, ஒனக்கு அதெல்லாம் சொல்லவே வேணாம்..'

'நான் மறக்கமாட்டேன் சாமி' என்று கும்பிடு போட்டான் சண்முகம்.

அவன் கண் முன்னால் அந்தத் தென்னை மரங்கள் ஒவ்வொன்றாய் நகர்ந்து சென்று கொண்டிருந்தன.

முதலியாரை முதன்முதலாய்ச் சந்தித்த அந்த நாள் நினைவுக்கு வந்தது. தென்னை மரங்களில் அன்று தேங்காய்களை அவன் பறித்துக் குவித்தது... முதலியார் வீட்டில் சுடச்சுடச் சோறு தின்றது... எல்லாம் இன்று போல் நினைவில் நிற்கின்றன. அன்று முதல் முதலியாரும் வடிவாம்பாளும் காலால் இட்டதை தலையால் செய்ய அவன் தவறியதில்லை. தன்னந்தனியாக சுற்றித் திரிந்து, கிடைத்த வேலைக்கு கிடைத்த கூலி வாங்கிக் கொண்டு கவலையில்லாமல் இருந்த காலம் போய் விட்டது.

திடீரென்று ஒரு குடும்பப் பாரத்தைக் கொண்டு வந்து வைத்து விட்டார்களே.. இனி வேலை தேட வேண்டும்.. எந்த வேலைக்குப் போவது?...

'திடீரென்று என்னை இந்த பாரத்தோடு நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்களே, கல்யாணம் செய்து வைத்து புண்ணியம் சேர்த்துக் கொண்டவர்கள்...'

சுந்தரவள்ளி அவன் தோளைத் தொட்டாள். 'இந்தாங்க.. என்ன யோசனை...'

'எதுவுமில்லே வள்ளி...'

'எனக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு' என்று அவள் புன்னகை புரிந்தாள்.

'ஆமாமா... எனக்குந்தான் இப்ப ரொம்ப நிம்மதியா இருக்கு..' என்று கவலையையெல்லாம் தன் புன்னகையில் மறைத்துக் கொண்டான் சண்முகம். தொலைவில் தென்னந்தோப்பு கண் பார்வையிலிருந்து மறைந்து கொண்டிருந்தது.

பூரம் சத்தியமூர்த்தி
Share: