Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
நேர்காணல்
குழந்தை எழுத்தாளர் ரேவதி
- கேடிஸ்ரீ|மார்ச் 2007|
Share:
Click Here Enlarge'ரேவதி' என்ற புனைபெயரில் எழுதும் டாக்டர் ஈ.எஸ். ஹரிஹரன் குழந்தைகளைத் தம் கதைகளால் கட்டிப்போட வைக்கும் அற்புத சக்தி படைத்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் கதைகளும், நாவல்களும் எழுதியுள்ள ரேவதி குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா தொடங்கிய குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் துணைச்செயலர், பொதுச்செயலர், பொருளாளர் ஆகிய பொறுப்புகளைத் தொடர்ந்து வகித்த பெருமை கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.·பில். பட்டத்துக்காக இவரது நூல்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இவரது சிறுகதை தமிழ்நாடு அரசு பாடநூலில் இடம் பெற்றுள்ளது.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 30வது சென்னை புத்தகக் காட்சியில் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான விருதைத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் ரேவதிக்கு வழங்கினார்கள். ரேவதியை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடிய போது...

தென்றல்: விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

ரேவதி: இது ஒரு குறிப்பிட்ட ஒரு புத்தகத்துக்காகக் கொடுக்கப்பட்ட விருது அல்ல. குழந்தை இலக்கியத் துறைக்கு இதுவரை நான் ஆற்றியுள்ள பணிக்காகக் கொடுக்கப்பட்ட விருது. எனக்கு இது மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னைவிடச் சிறப்பாக, அருமையாக எழுதக்கூடியவர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்தததால் என் புத்தகங்கள் அதிகம் வெளிவந்தன, பேசப்பட்டன, விருது கிடைத்தது.

தெ: எழுத்தே உங்கள் முழுநேரப் பணியா?

ரே: இல்லை. நான் மின்சார வாரியத்தில் தமிழ் வளர்ச்சி அதிகாரியாக இருந்தேன். என்னுடைய மாணவப் பருவத்தில் இருந்தே எழுதிக் கொண்டிருக்கிறேன். குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாதான் எனக்கு எழுதுவதற்கான வாய்ப்புகள் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தியவர். கல்கண்டு, பூஞ்சோலை ஆகிய இதழ்களில் நிறைய எழுத ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக எழுத்தை வைத்துக் கொண்டிருந்தாலும், இப்போது ஒரு வாழ்நாள் பணியாக எழுத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

தெ: குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவை எப்போது சந்தித்தீர்கள்?

ரே: அந்தக் காலத்தில் வள்ளியப்பாவை ஆசிரியராகக் கொண்டு 'டமாரம்', 'பாலர் மலர்', 'பூஞ்சோலை' போன்ற பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. அவற்றைப் படித்தபொழுது எனக்கும் எழுத வேண்டும் என்கிற ஆர்வம் தோன்றியது. அந்த நேரத்தில் குழந்தை எழுத்தாளர்கள் டாக்டர் பூவண்ணன், எத்திராஜன் ஆகியோரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவர்கள் மூலமாக வள்ளியப்பாவைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.

அதே நேரத்தில் குழந்தை இலக்கிய சங்கத்தில் சிறுகதைப் போட்டி ஒன்றை வைத்திருந்தார்கள். அதில் கலந்து கொண்ட எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. அந்த நாளில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி காலங்களில் பத்து நாட்களுக்கு விழா ஒன்றை நடத்துவார்கள். அப்போது குழந்தைகளுக்கான புத்தகக் காட்சியை அழ. வள்ளியப்பா அவர்கள் ஏற்பாடு செய்வார்கள். அதன் தொடக்கவிழாவில் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். 'பாட்டு வாத்தியார்' என்ற என் சிறுகதைக்கு அப்போது பரிசு கிடைத்திருந்தது. அது 1952ஆம் ஆண்டு. அப்போது பிரபலமாக இருந்த 'பூஞ்சோலை' பத்திரிகையில் அட்டைப்படக் கதையாக வெளிவந்தது. அது பெரிய அளவில் எனக்குப் பெயர் வாங்கிக் கொடுத்து, அடையாளத்தைக் கொடுத்தது.

தெ: 'பாட்டு வாத்தியார்'தான் உங்கள் முதல் கதையா?

ரே: அதற்கு முன்னாலேயே எத்திராஜனும், பூவண்ணனும் 'குழந்தை இலக்கியக் கழகம்' என்ற அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் குழந்தை எழுத்தாளர்களுக்குப் பயிற்சி கொடுத்து வந்தார்கள். அதில் எனது இரண்டு கதைகளுக்குப் பரிசு கிடைத்தது. இது 1950ம் ஆண்டு நடந்தது. பரிசு பெற்ற கதை பூவண்ணன் அவர்கள் 'கரும்பு' இதழுக்கு ஆசிரியரான நேரத்தில்தான் வெளிவந்தது. ஆனால் முதன்முதலாக வெளிவந்த என் கதை 'பாட்டுவாத்தியார்'தான். 1950க்கும் 52க்கும் இடையில் நிறைய நான் கதைகள் எழுதியிருக்கிறேன். தமிழ்வாணன் அவர்கள் 'கல்கண்டு' இதழில் அட்டைப்படக் கதைகளாகவே நிறைய வாய்ப்புகள் கொடுத்தார். என்னுடைய 16ஆவது வயதிலேயே சிறந்த குழந்தை எழுத்தாளர் என்கிற பெயர் எனக்கு வந்துவிட்டது.

தெ: ஹரிஹரன் என்ற பெயரில் எழுதிவந்த நீங்கள் 'ரேவதி' என்ற புனைபெயரில் எப்போது எழுதத் தொடங்கினீர்கள்?

ரே: நான் குழந்தைகளுக்கான கதைகள்தான் எழுதியிருக்கிறேன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியவர்களுக்கான கதைகளும் நிறைய எழுதியிருக்கிறேன். கல்கி, கலைமகள் போன்ற பத்திரிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய பரிசுகளை நான் வாங்கியிருக்கிறேன். குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகளில் பெரியவர்களுக்கான என்னுடைய கதைகள் நிறைய வந்திருக்கின்றன.

என் திருமணத்துக்கு வள்ளியப்பாவை அழைத்திருந்தேன். அவர் எங்களை வாழ்த்திவிட்டு, 'பெரியவர்களுக்கு எழுத நிறையப் பேர் இருக்கிறார்கள். குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் ரொம்பவும் குறைச்சல். நீ இனிமேல் குழந்தைகளுக்கு மட்டுமே எழுதுவதில் அதிக கவனம் செலுத்து' என்று கூறினார். இனிமேல் 'ரேவதி' என்ற பெயரில் குழந்தைகளுக்காக மட்டுமே எழுதுகிறேன் பெரியவர்களுக்கு வேறு பெயரில் எழுதுகிறேன் என்று நான் அவருக்கு வாக்குறுதி அளித்தேன். ரேவதி என்பது நான் பிறந்த நட்சத்திரம். அந்தப் பெயர்கூட வள்ளியப்பா தேர்வு செய்ததுதான். அவரது பூஞ்சோலையில் என்னுடைய பரிசுபெற்ற கதையோடு இன்னொரு கதையும் வந்தது. அந்தக் கதையை எந்தப் பெயரில் போடுவது என்று பிரச்னை ஏற்பட்டது. பரிசுபெற்ற கதைக்கும் ஹரிஹரன் என்றும், மற்றொன்றுக்கு ரேவதி என்றும் பெயர் போடப்பட்டது. இதுதான் ஹரிஹரன் ரேவதி ஆன கதை.

தெ: குழந்தைகளுக்கு எழுதுவதில் உங்களுக்கு நிறைவு கிடைத்ததா?

ரே: கண்டிப்பாக எனக்குக் குழந்தைகளுக்கு எழுதுவதில் மிகுந்த ஆத்மதிருப்தி கிடைத்தது. எழுதுவதைவிட, அவர்களுக்குக் கதை சொல்வதில் மிகுந்த திருப்தி ஏற்பட்டது. அப்போதெல்லாம் தொலைக்காட்சி கிடையாது. நிறைய ஊடகங்களும் கிடையா. ஆகவே, குழந்தைகளுக்குப் பொழுதுபோக்கு என்றால் பத்திரிகைகள்தாம். நிறையக் குழந்தைகள் கதை கேட்க என்னிடம் வருவார்கள். இதற்காக அழ. வள்ளியப்பா தன் வீட்டில் வாராவாரம் ஒரு கதை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் போய்க் கதை கேட்போம். அப்போது தெய்வசிகாமணி, எத்திராஜ், பூவண்ணன் போன்றோர் அங்கு வந்து கதை சொல்வார்கள். அவர்கள் கதைகள் சொல்லும் விதத்தைப் பார்த்து எனக்கும் கதை சொல்லவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அப்படித்தான் தொடங்கினேன்.

பள்ளி நாட்களில் ஆசிரியர் யாராவது வகுப்புக்கு வரவில்லை என்றால் என்னை அங்கு சென்று கதை சொல்லச் சொல்வார்கள். எனக்குத் தோன்றிய கதைகளைக் கற்பனை வளத்தோடு சொல்லுவேன். நான் கதை சொல்கிற போது என்னுடைய கதைக்கு என்ன வரவேற்பு என்பதை நேரிடையாகப் பார்க்க முடிந்தது.

தெ: குழந்தைகள் அன்றும் இன்றும்... ஒப்பிடுங்கள்.

ரே: அன்றைக்கு இருந்த குழந்தைகளின் மனநிலை வேறு. இன்றைய குழந்தைகளின் மனநிலை வேறு. அன்றைய குழந்தைகள் வளர்ந்த விதம், சூழல் எல்லாமே தற்போதைய குழந்தைகளின் நிலைக்கு மாறுபட்டது. அன்று டூத் பிரஷ்ஷில் பல் விளக்கினாலோ, பத்திரிகைகள் வாங்கிப் படித்தாலோ, பிரஷ் இல்லாமல் பல் விளக்கமுடியாதோ, பேப்பர் படிக்காமல் இருக்க முடியாதோ என்று ஏளனம் சொல்வார்கள். ஆனால் இன்று அவைகள் நம் வாழ்வில் தவிர்க்கமுடியாதன ஆகிவிட்டது. அதுபோல் சில வசதிகள் எல்லாம் குழந்தைகளுக்கு நாமே செய்து கொடுக்கிறோம். இன்று நாமே குழந்தைகளுக்கு வானொலி வாங்கிக் கொடுத்து கேள் என்றும், பத்திரிகைகள் வாங்கிக் கொடுத்துப் படி என்றும் சொல்கிறோம். ஆக நம்முடைய மனப்போக்கிலேயே நிறைய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் குழந்தைகள் எதிர்பார்ப்பிலும் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்றைய சூழலில் படிப்பதைவிடப் பார்ப்பதுதான் மிகச் சிறந்ததாக இருக்கிறது.

எனக்கு நினைவு தெரிந்து காஞ்சிபுரத்தில் கிட்டத்தட்ட 20 பள்ளிகள் ஒன்று சேர்ந்து பொதுவான நிகழ்ச்சி ஒன்றுக்குப் பணம் திரட்டுவதற்காக என்னைக் கதைசொல்ல அழைத்தார்கள். காஞ்சிப் பெரியவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட 5,000 ரூபாய் அன்று வசூலாகியது. மூன்று மணி நேரம் குழந்தைகள் மிகப் பொறுமையாக அன்று கதை கேட்டார்கள். ஆனால் இப்போது குழந்தைகளுக்குக் கதை கேட்க நேரம் கிடைப்பதில்லை. இதற்கு நான் குழந்தைகளைக் குறைசொல்ல மாட்டேன்.

சங்க காலத்தைப் பற்றிப் படிக்கிற போது இப்படி ஒரு காலம் இருந்ததா என்று ஏங்குகிறோம். அன்று மார்க்கோ போலோ தமிழகத்துக்கு வந்திருந்தபோது கதவுகள் எல்லாம் திறந்து கிடந்தன என்று சொல்வார்கள். அதையெல்லாம் கேட்கிற போது நமக்குப் பெருமையாக இருக்கிறது. அதுபோல் சில விஷயங்களுக்கு நாம் ஆசைப்படலாமே தவிர, அது நம் கண்முன்னால் நடந்தால், அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலைமையில் நாம் இல்லை. நான் என்ன சொல்கிறேன் என்றால் தற்போது குழந்தைகள் போக்கில் நிறைய மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
தெ: புதுக்கோட்டை குழந்தை எழுத்தாளர்களின் பிறப்பிடம் என்று ஒரு கருத்து நிலவுகிறதே, அது உண்மைதானா...

ரே: பழனியப்பா பிரதர்ஸ் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். வள்ளியப்பா, அவரை ஆளாக்கிய ரத்னம் ஆகியோர் புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள். இப்படி நிறைய சொல்லிக் கொண்டு போகலாம். பதிப்புத்துறையில் நகரத்தார்கள் அதிகம் இருக்கிறார்கள். புத்தக வியாபாரம் என்று பார்த்தால் புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை என்று செட்டிநாட்டைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். அதனால் அங்கு தமிழ் வளர்ச்சி அதிகம் இருந்தது. அவர்கள் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். அதற்கு அவர்களிடம் அச்சகமும் இருந்ததால், ஆங்காங்கே குழந்தைகளுக்கான பத்திரிகைகள் வெளிவர ஆரம்பித்தன. இன்னும் சொல்லப்போனால் பதிப்புத்துறையின் தந்தை என்று சொல்லக்கூடிய வை. கோவிந்தன் அவர்கள்கூட புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்தான். ஆகையால் பதிப்புத்துறையில் அவர்கள் தான் முன்னோடியாக இருந்தார்கள். இந்தக் காரணங்களால் புதுக்கோட்டை குழந்தை எழுத்தாளர்கள் நிறைந்த இடம் என்று சொல்லலாம்.

தெ: எழுத்துப் பணியில் இருக்கும் போதே சில இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு பெற்றீர்கள். எழுத்து பணி, ஆசிரியப் பணி இரண்டும் சமமான ஒன்றா?

ரே: நான் 'பூந்தளிர்' என்ற இதழில் வாண்டுமாமாவுக்கு உதவியாசிரியராக இருந்தேன். பின்னர் 'கோகுல'த்துக்குச் சென்றேன். ஒன்பதரை வருடம் கோகுலத்திலும், மூன்று வருடம் வாண்டுமாமாவிலும் இருந்தேன். தினமணியில் எனக்குப் பெரிய பொறுப்பு ஒன்றை கொடுத்தார்கள். தீபாவளி மலரில் 'சிறுவர் இலக்கிய விருந்து' என்கிற பகுதியை நான் விரும்பி செய்தேன். எனக்கு தினமணியில் பூரண சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். வாரவாரம் சிறுவர் மணியில் தலையங்கத்தை மூன்று வருடங்கள் நான் தொடர்ந்து எழுதினேன்.

பல பள்ளிக்கூடங்களில் திங்கள் கிழமைதோறும் சிறுவர் மணியில் வரும் தலையங்கத்தை காலைக் கூட்டத்தில் படிப்பார்கள். பல பள்ளிகளிலிருந்து அதைப் பாராட்டிக் கடிதங்கள் வரும்.

சிறுவர் இதழ் ஆசிரியப் பணி எனக்கு சந்தோஷத்தையும், திருப்தியையும் கொடுத்தது. விரும்பி ஏற்றுக் கொண்ட பணி அது. குழந்தைகள் எப்படி ஒரு விஷயத்தைப் பார்க்கிறார்கள் என்பத அதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது; வாரவாரம் நூற்றுக்கணக்கான கதைகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு கதையைத் திருத்தும் போது, அதை எழுதியவர் எப்படி எழுதியிருக்கிறாரோ அதே நடையில்தான் திருத்த வேண்டும் என்பது ஆசிரியப் பணியில் நான் அறிந்து கொண்ட ஒன்று. இப்பணி எனக்கு அருமையான, மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

தெ: அந்நாளில் உங்களின் 'கொடி காட்ட வந்தவன்' நாவல் குழந்தைகளிடையே மிகப் பிரச்சித்தி பெற்று இருந்தது. அந்த நாவலைப் பற்றி...

ரே: அது விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. நான் எழுதிய நாவல்களில் எனக்கு மிகப் பிடித்த நாவல் இது. காந்தியடிகள் அரிஜன இயக்கத்துக்காக ஒவ்வொரு மாநிலமாகச் சென்று நிதி திரட்டுகிறார். அவரது நிகழ்ச்சி நிரலில் தமிழகத்தில் குற்றாலத்துக்கு வந்து நீராடிவிட்டுச் செல்வதும் இருந்தது. காந்தியடிகளின் முக்கியமான கொள்கைகளில் ஒன்று அரிஜனர்களுக்கு கிடைக்காத எந்த ஒன்றையும் தான் அனுபவிக்க மாட்டேன் என்பது. ஆனால் குற்றால அருவி தனிப்பட்ட ஒருவரின் உரிமையாக இருந்தது. அதில் அரிஜனர்களுக்கு கால்கழுவக்கூட உரிமை இல்லாமல் இருந்தது. அந்த நிலையில் காந்தியடிகள் குற்றாலத்தில் குளிக்க வரும் செய்தியைக் கேட்டுவிட்டு, அங்கிருக்கும் சில பேர் இவர் எப்படி அங்கு குளிக்கிறார் என்று பார்க்கலாம் என்று கூறி, கையில் கருப்புக் கொடியுடன் வழியில் நிற்கிறார்கள். அப்போது காந்தி அங்கு வருகிறார். குற்றால அருவியின் பெருமைகளை அவருக்கு சொல்லுகிறார்கள். அப்படி சொல்லிக் கொண்டு வருகையில், ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் பலர் நின்றுவிடுகிறார்கள். இதை கவனித்த காந்தியடிகள் அவர்களிடம் 'ஏன் நின்றுவிட்டீர்கள்? வாருங்கள்' என்று அழைக்க, அவர்கள் 'இல்லை, இதற்கு மேல் நாங்கள் வருவதற்கு அனுமதி இல்லை. ஆகையால் நீங்கள் போய் குளித்து விட்டு வாருங்கள்' என்று கூறுகிறார்கள். அதைக் கேட்ட காந்தி 'அப்படியா?' என்று கூறிக் கொண்டே உள்ளே போகிறார். எல்லோரும் அவர் குளிக்கப் போகிறார் என்று நினைத்திருக்கிறார்கள். அவர் அங்கு விழும் பெரிய அருவி, அந்த இயற்கை சூழலைப் பார்த்து, இயற்கை கொடுத்த இந்த அழகைக்கூட மனிதர்கள் தங்களது உரிமையாக்கிக் கொண்டிருக்கிறார்களே என்று எண்ணுகிறார். 'என்று என் அரிஜன சகோதரர்களுக்கு இந்த அருவியில் குளிப்பதற்கான உரிமை கிடைக்கிறதோ, அன்றுதான் நான் இந்த அருவியில் குளிப்பேன்' என்று சொல்லிவிட்டுத் திரும்பி வந்துவிடுகிறார். அப்போது அவருக்குக் கருப்புக் கொடி காட்ட வந்தவர்கள் எல்லாம் கொடிகளைக் கீழே போட்டுவிடுகிறார்கள். இதுதான் இந்த கதையின் சுருக்கம்.

கதையில் கருப்பு கொடி காட்டுபவன் ஒரு சிறுவன். அவனுடைய தந்தையார் ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகச் சிறையில் இருக்கிறார். ஆனால் அந்த விஷயம் சிறுவனுக்குத் தெரியக்கூடாது என்று அவனது தாத்தா வெளியுலகமே தெரியாமல் அவனை வளர்க்கிறார். இப்படிப் போகிறது 'கொடி காட்ட வந்தவன்' கதை. இக்கதை 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது முக்கியமானது.

பெரியசாமி தூரன் ராமகிருஷ்ணா வித்யாலயத்தில் இருந்தபோது அவரது நண்பராக இருந்தவர் மதுரை காந்தி நினைவு நிதி பப்ளிகேஷனில் பொறுப்பாளராக இருந்தவர். மதுரையில் ஒருமுறை இக்கதையை நான் ஓரிடத்தில் சொன்னேன். அப்போது அவர் அங்கு வந்திருந்தார். அவர் என்னிடம் முதலில் இக்கதையை நீங்கள் எழுதி கொடுங்கள். நான் பதிப்பிக்கிறேன் என்று சொல்ல, அங்கேயே நான் கதையை எழுதி அவரிடம் கொடுத்தேன். அங்குதான் இக்கதை புத்தகமாக வெளிவந்தது. ஆனால் சிறுவர் இலக்கியத்தைப் பற்றி எழுதக்கூடிய எல்லோருமே இந்த நூலைப் பற்றியும், இந்த நிகழ்ச்சியைப் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறார்கள். முக்கியமாக வள்ளியப்பா, தூரன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். மதுரை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கில் இதைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். கோயம்புத்தூரில் நடந்த ஒரு கருத்தரங்கிலும் இதைப் பற்றி பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு பதிப்புப் பிரிவு, குழந்தைகள் இலக்கியத்தைப் பற்றிய ஒரு கட்டுரையில் இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். ஆகையால் யார் யாருக்கெல்லாம் இது தெரியவேண்டுமோ அவர்களுக்கெல்லாம் இது போய்ச் சேர்ந்துவிட்டது. ஆனால் எந்த ஊடகத்துக்கும் இது போய்ச் சேரவில்லை. இந்தியாவில் இருக்கும் எல்லா முஸ்லீம்களும் பயங்கரவாதிகளோ, தீவிரவாதிகளோ அல்லர், நமது கலாசாரத்தை, பண்பாட்டை நேசிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் ஒரு புத்தகத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

தெ: நிறைய பயிலரங்கங்கள் நடத்தியிருக்கிறீர்கள். எந்த மாதிரியான பயிலரங்கம்?

ரே: கிறிஸ்தவ இலக்கிய சங்கம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் ஆகியோர் சார்பாகக் கதை சொல்லும் பயிலரங்கங்களை நடத்தியுள்ளேன். 1993 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசின் அழைப்பை ஏற்று அங்கு குழந்தைகளுக்குப் பாடல்கள், நாவல், கதை கூறும் பயிலரங்குகளை நடத்தினேன். குறிப்பாகச் சொன்னால், தொலைக்காட்சியின் தாக்கம் ஏற்படுவதற்கு முன்பு தமிழ்நாட்டின் பல ஊர்களிலும், 500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான கதை கூறும் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன்.

தெ: வெளிநாடுகளில் இருக்கும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழை எளிதாகக் கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக கதைகள், பாட்டுகள் போன்றவற்றைக் குறுந்தகடுகளாக வெளியிடுவதற்கான முயற்சிகள் ஏதாவது செய்கிறீர்களா?

சமீபத்தில் நான் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தேன். அப்போது பல இடங்களில் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. Baron என்ற புத்தகசாலையை பார்க்க நேரிட்டது. அமெரிக்கா முழுவதும் இருக்கும் இந்தப் புத்தகசாலை 24 மணி நேரமும் திறந்து இருக்கும். அங்கு குழந்தைகளுக்குக் கதை சொல்லக் கற்றுக் கொள்வதற்காகப் பெற்றோர்கள் வருகிறார்கள். வாரவாரம் சனி, ஞாயிறுகளில் கதை சொல்லல் நடைபெறுகிறது. அங்கு உங்களுக்கு தெரிந்த கதையை சொல்லலாம். பெரிய பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் எல்லாம் அங்கு வந்து குழந்தைகளுக்கான கதைகளை சொல்கிறார்கள்.

அங்கே, கதைகேட்க வருகிற குழந்தைகளைவிட, கதைகளைக் குழந்தைகள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதைப் பார்க்க வருகிற ஆசிரியர்கள் அதிகம். ஒருநாள் கதை சொல்கிற வகுப்பை நான் பார்த்தேன். கதை சொல்லிக் கொண்டு வருகையில் பாதியிலேயே அந்தக் கதையை நிறுத்திவிடுகிறார்கள். கதையின் மீதியைக் கேட்பதற்காகவே மறுநாள் குழந்தைகள் நிறையப் பேர் அங்கு வருகிறார்கள். இது என்னை ஆச்சர்யப்பட வைத்தது. குழந்தைகளுக்கு எதிர்பார்ப்புடன் கதை சொன்னால்தான் அந்த கதை வெற்றி பெறும்.

தெ: குழந்தைகளுக்கிடையே வாசிப்புப் பழக்கம் தற்போது எப்படி இருக்கிறது?

ரே: இன்றைய குழந்தைகள் விஷ¤வல் மீடியாவுக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கார்ட்டூன் படங்களும், குழநதைகளுக்கான தொலைக்காட்சிகளுமே அவர்களை ஆக்கிரமித்திருக்கிறது. வாசிப்புப் பழக்கத்தைக் குழந்தைகளிடையே பெற்றோர்கள்தான் ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளுக்கான புத்தகங்கள் இன்றும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கோகுலம் வருகிறது. அதுபோல் சில பெரிய பத்திரிகைகளும் சனி, ஞாயிறுகளில் குழந்தைகளுக்கான விஷயங்களை தனி பக்கமாகவே போடுகிறார்கள். 'சம்பத்' என்னும் பத்திரிக்கை ஒன்று தில்லியில் இருந்து வருகிறது. அது இந்தியில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இதழாகும். அதுபோல் 'துளிர்' குழந்தைகளுக்கு விஞ்ஞான விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிறது.

இன்றைய பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளை ஆங்கில வகுப்புகளில் படிக்க வைக்கிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலப் புத்தகங்களையே வாங்கிக் கொடுக்கிறார்கள். பிழைப்புக்காக ஆங்கிலம் கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் வீட்டில் குழந்தைகளுடன் பேசும்போது தமிழிலேயே அதிகம் பேசி, தாய்மொழியின் பெருமைகளை அவர்கள் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக நிறைய தமிழ் புத்தகங்களை, குறிப்பாக அம்புலிமாமா, கோகுலம் போன்ற புத்தகங்களை, பெற்றோர்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

சந்திப்பு: கேடிஸ்ரீ
தொகுப்பு: மதுரபாரதி
Share: 




© Copyright 2020 Tamilonline