Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நிதி அறிவோம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | இலக்கியம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
'ஒரு பட்டு வியாபாரி என்று சொல்வதையே விரும்புகின்றேன்': நல்லி குப்புசாமி செட்டி
- கேடிஸ்ரீ|அக்டோபர் 2006|
Share:
Click Here Enlargeகலைமாமணி டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் வெற்றிகரமான வணிகர், எழுத்தாளர், இசைப் புரவலர், சமூகப் பணி செய்பவர், பக்திமான் என்று பன்முகங்களைக் கொண்டவர். இவரது நூல்கள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என்று பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆனாலும் தான் ஒரு பட்டு வியாபாரி என்று அழைக்கப்படுவதையே பெருமையாகக் கருதுகிறார். தள்ளுபடி, இலவசம் என்று எத்தகைய வணிக உத்தியும் இல்லாமலே பட்டுப் புடவை வணிகத்தில் இவர்தான் முதல் என்பது இவர் கூறும் ஆச்சரியமான செய்தி.

இதை எப்படிச் சாதித்தார்? வணிகத்தைப் பற்றிய இவரது பார்வை என்ன? இவையும் இன்னும் பலவும் சுவையாக நல்லி அவர்களாலேயே விவரிக்கப்படுகிறது இந்த நேர்காணலில்...

தென்றல்: நல்லி என்பது என்ன?

நல்லி: அது எங்கள் குடும்பப் பெயர். மார்க்கண்டேய மகரிஷி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். நூற்றுக்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் கொண்ட இதில் ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்துக் காட்டத் தனிப்பெயர்கள் இருந்தன. அந்த வகையில் ஒரு குடும்பப் பெயர்தான் நல்லி. என் தாத்தா நல்லி சின்னசாமிச் செட்டி இந்தக் கடைக்குத் தன் பெயரையே வைத்தார். ஆனால் எங்கள் கடையையும், என்னையும் நல்லி என்றுதான் அழைக்கிறார்கள். நல்லி என்றால் பட்டு என்று நினைவிற்கு வரும் அளவிற்குப் பிரபலமாகிவிட்டது.

கே: உங்கள் பூர்வீகம் எது? இந்த நெசவுத் தொழிலுக்கு வந்தது எப்படி?

ப: எங்களது பூர்வீகம் ஆந்திரா. ஆனால் எங்கள் மூதாதையர்கள் தமிழகத்தில் குடியேறினார்கள். நெசவுத் தொழில் எங்கள் பரம்பரைத் தொழில். என் தாத்தா இந்தக் கடையைத் தொடங்கிய காலத்தில் காஞ்சிபுரத்தில் வசித்து வந்தார். அவர் நெசவுத் தொழிலாளியாகத்தான் இருந்தார். அந்த அனுபவத்தில் பட்டு ஜவுளி வியாபாரத்தைத் தொடங்கினார்.

முதலில் சென்னைக்கு மாதமிருமுறை வந்து புடவை வியாபாரம் செய்தார். விற்பனை அதிகரிக்கவே அது வாரம் இருமுறை ஆனது. பிறகு சென்னையிலேயே தியாகராய நகரில் நிரந்தரமாகக் குடியேறினார். அந்த அடித்தளம்தான் இன்று செழித்து வளர்ந்துள்ளது.

கே: சிறு வயதிலேயே இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகக் கேள்விப்பட்டுள்ளோம். எப்படிச் சமாளித்தீர்கள்?

ப: ஆரம்ப காலத்தில் சென்னை விற்பனையை தாத்தா ஆரம்பித்து வைத்தாலும் அவரால் முழுநேரமும் அதில் ஈடுபடமுடியவில்லை. அவர் காஞ்சிபுரத்தில் தங்கி உற்பத்தியைக் கவனிக்க வேண்டியிருந்தது. அதனால்தான் தரம் காப்பாற்றப்பட்டது. ஆரம்பத்தில் அவர் ஒரே தறியிலேயே நெய்து வாடிக்கையாளர்கள் விருப்பதிற்கேற்பப் புடவைகளைக் கொடுத்தார். பின்னாளில் பல தறிகளுக்குச் சொந்தக்காரராகி, மொத்த வியாபாரியாக வளர்ந்தார். இதனால் தொழிலை உறவினர்களிடம் விட்டுவிட்டுப் பட்டுச் சேலை உற்பத்தியில் அவர் கவனம் செலுத்தத் தொடங்கினார். அந்த நேரத்தில் எனது அப்பா நல்லி நாராயணசாமிச் செட்டியார் பம்பாயில் ஜவுளிக் கடை ஒன்றின் ஊழியர்களுக்குப் புடவைகளை எப்படிப் பராமரிப்பது என்ற பயிற்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தார். சென்னையில் வியாபாரம் நன்றாக வளரத் தொடங்கியவுடன், அப்பா தியாகராய நகர் கடையின் நிர்வாகத்தை கவனிக்கத் தொடங்கினார். அவர் எதிர்பாராத வண்ணம் 42வது வயதில் அகால மரணமடைந்தார். அப்போது எனக்கு வயது 12. பள்ளிக்கூடம் போய்ப் படிக்க ஆசை இருந்தது. வசதியும் இருந்தது. ஆனால் கடைப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம்.

அந்த வயதில் எனக்குப் பெரிதும் உதவியவர் என் சித்தப்பா நல்லி ரெங்கசாமிச் செட்டியார்தான். எனக்கு ஜவுளித் தொழில் தொடர்பான சகல நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தார்.

கே: நல்லியின் இத்தகைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று எதைக் கூறுகிறீர்கள்?

ப: எங்கள் தாத்தா காலத்தில் இருந்தே எங்கள் தாரக மந்திரம் 'தரம்' என்பதுதான். அதை இன்றும் கட்டிக்காத்து வருகிறோம். எங்களுக்குத் தேவையான அனைத்துச் சேலை ரகங்களையும் உற்பத்தி செய்வதுடன் சிறப்பு ரகங்களுக்குத் தனியாக ஆர்டர் கொடுத்து விற்பனை செய்கிறோம். எந்த நிலையிலும் தரம் குறையாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறோம். நேர்மை, தரம், நம்பிக்கை, நாணயம் - இது எங்கள் கொள்கை.

ஒரு புடவையின் எடை 420 கிராம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கிராம் குறைந்தாலும் தாத்தா ஒத்துக்கொள்ள மாட்டார். 5 கிராம் ஜாஸ்தியாய் இருந்தால் அதற்கு உண்டான விலையைச் சேர்த்துப் போட்டுக் கொள் என்பார். உயர்ந்த பட்டு, உயர்தர ஜரிகைதான் உபயோகப்படுத்துவோம்.

80 வருடத்திற்கு முன்பு நாங்கள் வந்தபோது வெறும் கைத்தறி மற்றும் பட்டுப் புடவைகள் தாம் இருந்தன. இப்போது இருப்பது போல் செயற்கையிழைப் புடவைகள் கிடையாது. வெறும் பருத்தி, கம்பளித் துணிகள்தாம். இப்போது ரெடிமேட் ஆடைகள் வந்துவிட்டன.

குழந்தைகள், ஆண்கள் ஆடைகள் விஷயத்தில் வேண்டுமானால் மற்றக் கடைகள் எங்களுக்குப் போட்டியாக இருக்கலாம். எங்களைவிட முன்னால்கூட இருக்கலாம். ஆனால் பட்டுப் புடவைகள் விஷயத்தில் இதுவரைக்கும், இந்த நிமிடம் வரைக்கும் நாங்கள்தான் முதலிடத்தில் இருக்கிறோம்.

கே: ரசாயனச் சாயம் உபயோகிக்கும் பழக்கம் எப்போது ஏற்பட்டது?

ப: 1926ல் கெமிக்கல் டைகளைச் சிபா என்ற நிறுவனமும் மற்றொரு நிறுவனமும் சேர்ந்து தயார் செய்தார்கள். அதில் சிபா நிறுவனம் பட்டிற்கான புதிய டை ஒன்றைத் தயாரித்தது. அன்று பட்டுத் தயாரிப்பு இந்தியாவில், அதுவும் சென்னையில்தான், அதிகம் இருந்தது. அந்நிறுவனத்தின் இயக்குநர், கெமிக்கல் இயக்குநர் ஆகியோர் காஞ்சிபுரம் வந்தார்கள். அப்போதெல்லாம் பட்டிற்கு தாவரச் சாயத்தை அதிகம் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். (மீண்டும் இயற்கை வண்ணங்களை உபயோகப்படுத்த வேண்டும் என்று கலாக்ஷேத்திரா போன்றவர்கள் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.) அன்றைய காலகட்டத்தில் காஞ்சிபுரத்தில் பி.எஸ். கந்தசாமி, ஆளுவூர் துரைசாமி ஐயங்கார், கிருஷ்ணசாமி முதலியார் என்று மூன்று பெரிய பட்டுத் தயாரிப்பாளர்கள் இருந்தனர். அவர்களிடம் ரசாயன சாயத் தயாரிப்பாளர்கள் போயிருக்கிறார்கள். அப்போது அவர்கள் மூவரும் சின்னசாமி என்ற ஒருவர் இருக்கிறார், இதுபோன்றவைகளை ஆர்வமாகச் செய்வார் என்று கூறி அனுப்பி வைத்தார்கள். சின்னசாமி செட்டியார் அவர்களுடன் கலந்து நம்முடைய பழைய முறையில் டையை செய்யச் சொல்லி, இறுதியில் திருப்தி ஏற்பட, எல்லோரும் அதனை ஏற்றுக் கொண்டனர். இந்தியாவிலேயே முதன்முதலாக வேதிய
சாயத்தைக் கொண்டுவந்ததும் நாங்கள்தான்.

கே: இன்று பல நிறுவனங்கள் ஆடி மாதத் தள்ளுபடி அறிவிக்கின்றன. நல்லி நிறுவனம் ஏன் செய்வதில்லை?

ப: தள்ளுபடிச் சலுகைகள், பரிசுத் திட்டங்கள் போன்ற எதுவும் இல்லாமல் வியாபாரம் வியாபாரமாகவே நடத்தப்பட வேண்டும் என்பது முக்கியம். நான் தள்ளுபடி செய்பவர்களைக் குறை கூறவில்லை. சிலருக்குப் பேரம் பேசி வாங்கினால்தான் திருப்தி. சொன்ன விலையைக் கொடுத்து வாங்கிவிட்டால் அதில் அவர்களுக்குச் சுவாரஸ்யம் குறைந்துவிடுவதாக நினைப்பார்கள். உதாரணமாக, 10 ரூபாய் மதிப்புள்ள ஒன்றை 15 ரூபாய்க்கு ஏற்றி பேரம் பேசி கடைசியில் 12 ரூபாய்க்குத் தந்தாலும் வாங்குவார்கள். அப்படி இல்லாமல் ஒரே விலை கறார் விலை பத்து ரூபாய்தான் என்று சொன்னால் பலர் அந்தப் பொருளை வாங்கத் தயங்குவார்கள். கறார் விலை என்பது எல்லா இடத்திலும் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை அது வியாபார ஒழுக்கம் என்று சொல்வேன்.

வாங்குபவர்கள் மனமறிந்து அவர்கள் நோக்கம் அறிந்து அவர்களுக்குப் பிடித்தமான சரக்கைக் கறார் விலையிலேயே விற்பது ஒரு கலைதான். ஆனாலும் தள்ளுபடியில் மக்களுக்கு மயக்கம் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.

தமிழ்நாட்டில் ஆடி மாதத்தில் திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற நல்ல காரியங்கள் நடத்துவது இல்லை. எல்லாவிதமான வியாபாரமும் குறைந்து போகும். இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இப்படிப் பண்டிகை இல்லாத மாதங்கள் உண்டு. மும்பையில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் விற்பனை குறைந்த பொருட்களை, குறைந்த விலைக்கு, அதாவது இலாப சதவீதம் குறைந்த விலைக்கு, பெரிய வியாபாரிகள் விற்கின்றனர். அந்தப் பொருள்களை இங்குள்ளவர்கள் போய் வாங்கி வந்து ஆடி மாதத்தில் குறைந்த விலையில் விற்கின்றனர்.

வியாபாரிகள் தங்களது லாபத்தைக் கூட்டி, பின்னர் தள்ளுபடி என்ற பெயரில் சற்றுக் குறைத்து விற்பனை செய்வது எனக்கு சரியாகப்படவில்லை. இது வியாபாரிக்கும், பொருள் வாங்க வந்தவருக்கும் அலுப்பூட்டும் விஷயம். இதனால் நேர விரயம் ஆகிறது. என் குடும்பத்தினரை அழைத்துத் தள்ளுபடி முறையையே நீக்கிவிட்டுக் கறார் விலையை அறிமுகம் செய்வதைப்பற்றிக் கேட்டேன். வாடிக்கையாளர்கள் என்ன நினைப்பார்களோ, இதனால் வியாபாரம் குறைந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்தார்கள். ஆனால் அந்த ஆண்டே நல்லியில் இனிக் கறார் விலைதான், பேரம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்தோம். வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது.

எந்தச் சூழ்நிலையிலும் கடன் வாங்கக்கூடாது என்பதை என் தாத்தா நல்லி சின்னசாமி செட்டியார் கொள்கையாகக் கடைப்பிடித்துவந்தார். எங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் வற்புறுத்தியும் தொழில் வளர்ச்சிக்கு என்று நான் கடன் வாங்கியதில்லை.
Click Here Enlargeகே: நன்கு வளர்ந்த நிலையிலும் நீங்கள் நேரிடையாக வியாபாரத்தைக் கவனித்து வருகிறீர்கள் என்று கேள்விப்படுகிறோம். உங்கள் வியாபார வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாமா?

ப: அப்பா இருக்கும்வரை அவர் தினமும் காலை கடைக்கு வந்தால் இரவுவரை வாசலிலேயே நின்று கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை உபசரித்து, அவர்களுக்கு வேண்டியதைச் செய்து தருவார். வாடிக்கையாளர்களுக்குக் கடை முதலாளியே வரவேற்று உபசரிப்பது சந்தோஷத்தைக் கொடுப்பது மட்டுமல்லாமல், அவர்கள் வேறு கடைக்குப் போவதற்கும் தயங்குவார்கள். அப்பா இருக்கும் காலத்தில் இப்போது இருப்பதுபோல் ஆபீஸ் எல்லாம் கிடையாது. வாடிக்கையாளர்களை பெயர், விலாசத்துடன் கூப்பிடுவார். அவர்கள் கடையைவிட்டுப் போகும்வரை, வேண்டியவற்றை அருகில் இருந்து செய்து கொடுப்பார்.

நானும் நேரடியாகவே வியாபாரத்தை கவனிக்கிறேன். எப்போதும் முதலாளியின் பார்வை கடைமேல் இருந்தே ஆக வேண்டும். அதனால்தான் நாங்கள் ரொம்ப நாள்வரை கிளைகள் ஆரம்பிக்கவில்லை.

கே: கடை நிறையப் பொருள் இருந்தாலும், அவற்றை விற்பது எப்படி?

ப: எந்த வியாபாரத்திலுமே விற்பனை பெருகுவதும் வாடிக்கையாளர்கள் ஆதரவு கூடுவதும் விற்பனையாளரின் திறமையைப் பொறுத்ததுதான். இதற்காக மேல்நாடுகளில் தனியாகப் பயிற்சி அளிக்கிறார்கள், நிறையப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். நான் படித்திருக்கிறேன். வரவேற்பு, உபசரிப்பு என்று ஒவ்வொன்றையும் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். வருகிற வாடிக்கையாளருக்குப் பொருளை எடுத்துக் காட்டும்போது எப்படியாவது பொருளைத் தலையில் கட்டிவிட வேண்டும் என்று நினைக்காமல் அவர்கள் மனநிலையை அறிந்து செயல்பட வேண்டும். வருபவர்கள் பொருட்கள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பதைப் பற்றி எண்ணக்கூடாது. அவர்கள் ஆயிரத்துக்கு வாங்கினாலும் சரி. இல்லை ஐந்து ரூபாய், பத்து ரூபாய்க்கு வாங்கினாலும் சரி அவர்கள் தேவையை அறிந்து செயல்பட்டால் வியாபாரம் பெருகும்.

நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும். தேவையை முன்பே சிந்தித்துத் தயார்செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் வியாபாரம் கண்டிப்பாக பெருகும்.

கே: உங்கள் பணியாளர்கள் பற்றி...

ப: தொடக்க நாளில் அப்பாவைச் சேர்த்து நான்கு பேர் கடையில் இருந்தார்கள். அப்பாவே சைக்கிளில் பல இடங்களுக்குக் பணம் வசூலிக்கச் செல்வார். அந்த நாளில் முகூர்த்தப் புடவைகளை சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு நேரிடையாக எடுத்துச் செல்வார். முகூர்த்தப் புடவை மட்டும் வீட்டிலேயே தேர்ந்தெடுப்பார்கள். மற்றப் புடவைகள் வாங்கக் கடைக்கு வருவார்கள்.

பிறகு படிப்படியாக நிறையப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். எங்கள் நிறுவனம் தொடங்கிய நாளிலிருந்து இங்கு தொடர்ந்து பணியாற்றுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முதலாளிகளுடன் நெருக்கமும், இணக்கமும் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் உழைப்பிற்கும் முதலுக்கும் அடுத்தபடியாகத் தொழில் வளரத் தேவையான மூலதனம் இதுவே. பணியாளர்களின் குழந்தைகளுக்கான படிப்புச் செலவிலிருந்து, குடும்பத்திற்கான மருத்துவச் செலவு மற்றும் பல்வேறு செலவுகளை எங்கள் நிறுவனம் ஏற்கிறது.

இங்கு ஒன்றை சொல்லவேண்டும். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு என் மகன் வியாபார நிமித்தமாக ஜப்பானுக்கு மிட்சுபிஷி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வதற்காகச் சென்றார். அங்கே யாருக்கும் தனி அறை இல்லை. நிர்வாக இயக்குநர் முதல் கணக்காளர், பணியாளர்வரை எல்லோரும் ஒரு பெரிய ஹாலில் இருந்தார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான நாற்காலி. அழைப்பு மணி கிடையாது. இது ஆச்சர்யத்தை அளித்தது. இதனால் ஊழியர்களிடையே பணிச்சோர்வு இருந்தால் அதைக் களைந்து அவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்த முடிகிறது. இந்த அணுகுமுறை பணியாளர்-முதலாளி இடையே நெருக்கம் அதிகரிக்க வழி செய்கிறது.

கே: இத்துணை பணிகளுக்கிடையே சமூகப் பணி, இசை, இலக்கியம் போன்ற பல துறைகளிலும் ஈடுபட உங்களால் எப்படி முடிகிறது?

ப: நான் பெரிய சங்கீத ஞானம் உள்ளவன் அல்ல. ஆனால் சங்கீத ரசிகன். அப்போதெல்லாம் மயிலாப்பூரில் உள்ள லஸ்ஸில் உள்ள நவசக்தி விநாயகர் கோவிலில் ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் மாலையில் நடைபெறும் கச்சேரியைக் கேட்கச் செல்வேன். என் பக்கத்தில் ஈஸ்வர ஐயர் உட்கார்ந்திருப்பார். நான் என் நண்பர்களுடன் செல்வேன். அவர் கச்சேரியில் பாடகர் பாடும் ராகம் என்ன என்று கேட்பார். அவர்கள் சொல்லும் பதில் சரியாக இருக்கும்.

பின்னாளில் நான் பல்வேறு சபாக்களில் தலைவராகவும், நிர்வாகக்குழு உறுப்பினராகவும் இருப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா, ஸ்ரீ கிருஷ்ண கான சபா, பிரம்ம கான சபா, நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாடமி என்று பல்வேறு அமைப்புகளுக்குத் தலைவராக இருந்திருக்கிறேன். இப்போதும் இருக்கிறேன். மகிழ்ச்சியும், மனநிம்மதியும் இசையால் பெருகுகிறது என்றால் அது மிகையல்ல.

பாரதியின் கவிதைகளில் எனக்கு ஈடுபாடு அதிகம். 'மகாகவி பாரதியின் மணிமொழிகள்', 'பாரதி அறுபது', 'தமிழ்நாட்டு மாதருக்குப் பாரதியார்', 'நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்', 'பாரதி யார்?', 'மானுடத்தின் மகாகவி' என்று பல நூல்களை பாரதியியல் தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறேன். என்னுடைய நூல்கள் சில தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

எங்கள் நிறுவனத்தின் மூலம் பல்வேறு சமூகப் பணிகளையும் ஆற்றிவருகிறோம். ஏழை மாணவர்களைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுவதற்கு நானே நேரிடையாகச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அந்த மாணவனின் கல்வி வளர்ச்சியையும் தொடர்ந்து கண்காணித்து அவனுக்கு உதவுகிறோம். அதுபோல் பாலிடெக்னிக் படிக்க விரும்பும் வசதியில்லாத மாணவ, மாணவிகளுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். திருமண உதவிகள் கூடச் செய்திருக்கிறோம்.

கே: நீங்கள் எப்போதிலிருந்து எழுத ஆரம்பித்தீர்கள்?

ப: அப்போது நான் ஜவுளித்துறையில் காலடி எடுத்து வைத்து 25 வருடம் முடிவடைந்த தருணம். வியாபார நுணுக்கங்கள் பலவற்றை நன்கு உணர்ந்து இருந்தேன். அப்போது என் நண்பர்கள் பலர் என் அனுபவங்களை எழுதுமாறு கூறினார்கள். நண்பர்கள் தூண்டுதலால் 'வெற்றின் வரலாறு' என்ற தலைப்பில் என் அனுபவங்களை எழுதினேன். அதை எழுத எனக்குப் பெரிதும் உதவியவர் முன்னாள் தொலைக்காட்சி நிலைய இயக்குநர் ஏ. நடராஜன். அந்த நூலை அருணோதயம் அருணன் பதிப்பித்தார். அந்தப் புத்தகம் வாசகர் பெற்ற வரவேற்பு எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து 'வியாபாரத்தைப் பெருக்குவது எப்படி?' என்ற நூலை எழுதினேன். இந்நூல் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசை பெற்றது.

நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வற்புறுத்தலால் தொடர்ந்து எழுதினேன். படிக்கும் ஆர்வத்தின் காரணமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் தொழில், வணிகத்துறை நூல்களை நிறையப் படித்தேன். அதன் விளைவாக 'நிர்வாகச் சிந்தனைகள்' என்ற நூலை எழுதினேன்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் உறவு பற்றி எனக்கு நேர்ந்த அனுபவங்கள் மற்றும் நண்பர்கள் சொல்லும் செய்திகளை வைத்து 'உறவு காக்கும் வணிகம்' என்ற நூலை எழுதினேன். இதுவும் தமிழ் வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்றது. என்னுடைய வாசகர்கள் வட்டம் பெருகிறது. கல்லூரிப் பேராசிரியர்கள், முதல்வர்கள் என்று நிறையப் பேர் என் எழுத்தைப் பாராட்டினார்கள். இதற்கிடையில் நமது பழமொழிகள், கர்ணபரம்பரைக் கதைகள், நீதி நூல்கள் இவற்றில் காணப்படுகிற பொதுக் கருத்துக்களை வணிக உலக அனுபவங்களோடு பொருத்தி 'அனுபவம் பேசுகிறது' என்ற நூலை எழுதினேன். அதுபோல் வள்ளுவரது எண்ணங்களைப் பற்றி 'வள்ளுவர் வகுத்த வாணிபம்' என்பதை எழுதினேன்.

கே: வெளிநாட்டு பயண அனுபவங்களைச் சொல்லுங்களேன்...

ப: எங்கள் துணி வகைகள் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் தேவையைப் பூர்த்தி செய்தாலும், நாங்கள் உள்ளூர் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வந்தோம். வெளிநாட்டு விற்பனையில் அதிக கவனம் செலுத்தவில்லை. என் முதல் பயணத்தில் நான் கற்றுக் கொண்ட பாடத்தின் விளைவாக அமெரிக்கா தவிர கனடாவில் இரண்டு, சிங்கப்பூரில் ஒன்று என்று கிளைகள் உருவாக்கினோம்.

எனது இரண்டாவது வெளிநாட்டுப் பயணத்தில் வியாபாரமென்பது வெறும் தொழில் அல்ல, அது ஒரு கலை என்பதை அனுபவ பூர்வமாகப் புரிந்துக் கொண்டேன். பொருட்களை விளம்பரப்படுத்துவது, அறிமுகப்படுத்துவது எல்லாமே அங்கே ஒரு கலையாக இருந்தது. பல பொருட்கள் ஒரே இடத்தில் விற்கப்படுவதை பார்த்தேன். இதனால் வாடிக்கையாளர்களுக்கு அலைச்சல் குறைவு. மேலும் தரமான, சீராக அடுக்கி வைத்த, குறித்த விலையுடன், பேரம் பேச இடமின்றி, விற்பனை செய்ய ஆட்களைப் போடாமல் தாங்களே எடுத்துக் கொள்ளும் முறை என்னைக் கவர்ந்தது. இது நான் இரண்டாவது பிரயாணத்தில் கற்றுக் கொண்டது.

கே: உங்களுப் பல பட்டங்கள் வழங்கியிருக்கிறார்களே...

ப: ஆமாம். உழைப்பின் சிகரம், உடை வணிகச் சக்கரவர்த்தி, வர்த்தக ரத்னா, அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம், தமிழக அரசின் கலைமாமணி விருது என்று பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறேன். ஆனாலும் நல்லி ஒரு பட்டு வியாபாரி என்று சொல்வதையே அதிகம் விரும்புகிறேன்.


பெட்டிச் செய்தி:

வாடிக்கையாளரின் துயரம்...

பத்மா நடராஜன் என்ற பெண்மணி விருதுநகரைச் சேர்ந்தவர். விருதுநகரில் இருந்து சென்னை வந்தால் அவர் காமராஜர் வீட்டில்தான் தங்குவார். ஒவ்வொரு முறையும் எங்கள் கடைக்கு வந்து துணிகளை வாங்கிச் செல்வார். அப்படி ஒருமுறை அவர் எங்கள் கடைக்குத் துணி வாங்க வந்தார். கடை வாசலில் உள்ள படியில் காலடி எடுத்து வைத்தவர் கடை ஹாலில் அப்பா படத்திற்கு மாலை போட்டிருப்பதைப் பார்த்தார். அப்பா மறைந்த செய்தியைக் கேட்டதும் கடைக்குள் வராமல் அப்படியே சென்றுவிட்டார். அதன்பின்பு அவர் எங்கள் கடைக்கு சுமார் 16 வருடங்கள் கழித்து 1969ஆம் ஆண்டு மகள் திருமணத்திற்குத் துணி வாங்க வந்தார். அப்போதுதான் அவர் அதை என்னிடம் சொன்னார். அந்த அளவுக்கு அப்பா வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தார்.


புடவைக்கு ஏன் சினிமாப் பெயர்?

இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக இது நடக்கிறது. இது ஒரு வியாபார யுக்தி. அந்த நாளிலேயே மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டுவிழாவின் போது தர்பார் பார்டர் என்பது பிரபலமாக இருந்தது. 50 வருடங்களுக்கு முன்பே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த பவளக்கொடி, தியாகபூமி, பாலும் பழமும் போன்ற திரைப்படங்களின் பெயர்கள் புடவைகளுக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. புடவைகளுக்குப் பெயர் இருப்பது ஓர் அடையாளம். இப்போது பார்த்தீர்கள் என்றால், 'சார் எங்க பக்கத்து வீட்டுக்கார அம்மா ஒரு சேலை நேத்து இங்க வாங்கினாங்க. மயில் கழுத்துக் கலர். கோபுர பார்டர்' என்று சொல்வதற்கு பதிலாக அந்தச் சேலையின் பெயரைச் சொன்னால் விற்பனையாளர்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள். இதற்காகத்தான் புடவைகளுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

இதெல்லாம் ஒரு வியாபார யுக்திதான். ஆனால் தரமும் தொழில்நுட்பமும் சரி இல்லையென்றால் எந்தப் பெயர் வைத்தாலும் விற்காது.

சந்திப்பு: கேடிஸ்ரீ
தொகுப்பு: மதுரபாரதி
Share: 
© Copyright 2020 Tamilonline